பின்குறிப்புகள்
1. மகா பாபிலோன்—அவள் யார்?
“மகா பாபிலோன்” என்ற பெண் எல்லா பொய் மதங்களையும் குறிக்கிறாள். எப்படிச் சொல்லலாம்? (வெளிப்படுத்துதல் 17:5) இந்தக் காரணங்களைக் கவனியுங்கள்:
அவள் உலகம் முழுவதும் செயல்படுகிறாள். மகா பாபிலோன் ‘சமுதாயங்கள்மேலும் தேசங்கள்மேலும்’ உட்கார்ந்திருப்பதாகவும், ‘பூமியின் ராஜாக்கள்மீது ஆட்சி செய்வதாகவும்’ சொல்லப்படுகிறது.—வெளிப்படுத்துதல் 17:15, 18.
அவள் அரசியல் அல்லது வியாபார அமைப்புகளாக இருக்க முடியாது. அவள் அழிந்த பிறகும்கூட “பூமியின் ராஜாக்களும்” ‘வியாபாரிகளும்’ இருப்பார்கள்.—வெளிப்படுத்துதல் 18:9, 15.
அவள் கடவுளை அவமதிக்கிறாள். பணத்துக்காகவும் மற்ற ஆதாயத்துக்காகவும் அரசாங்கங்களோடு அவள் கூட்டுசேருவதால் விபச்சாரி என்று அழைக்கப்படுகிறாள். (வெளிப்படுத்துதல் 17:1, 2) எல்லா தேசத்தாரையும் அவள் ஏமாற்றுகிறாள். நிறைய பேருடைய சாவுக்குக் காரணமாக இருக்கிறாள்.—வெளிப்படுத்துதல் 18:23, 24.
திரும்பவும் பாடம் 13 குறிப்பு 6-க்கு செல்லவும்
2. மேசியா எப்போது வருவார்?
மேசியா 69 வாரங்களுக்குப் பிறகு வருவார் என்று பைபிள் முன்கூட்டியே சொன்னது.—தானியேல் 9:25-ஐ வாசியுங்கள்.
69 வாரங்கள் எப்போது ஆரம்பித்தன? கி.மு. 455-ல் ஆரம்பித்தன. அப்போதுதான் எருசலேமை “புதுப்பித்துக் கட்டுவதற்கு” ஆளுநரான நெகேமியா அங்கு வந்தார்.—தானியேல் 9:25; நெகேமியா 2:1, 5-8.
69 வாரங்கள் என்பது எவ்வளவு காலம்? சில பைபிள் தீர்க்கதரிசனங்களில் ஒரு நாள் என்பது ஒரு வருஷத்தைக் குறிக்கிறது. (எண்ணாகமம் 14:34; எசேக்கியேல் 4:6) அப்படியென்றால், ஒரு வாரம் என்பது ஏழு வருஷங்கள். இந்தத் தீர்க்கதரிசனத்தில், 69 வாரங்கள் என்பது 483 வருஷங்கள்.
69 வாரங்கள் எப்போது முடிந்தன? கி.மு. 455-வது வருஷத்திலிருந்து 483 வருஷங்களைக் கூட்டினால் கி.பி. 29-க்கு வருகிறோம்.a அந்த வருஷத்தில்தான் இயேசு ஞானஸ்நானம் எடுத்து மேசியாவாக ஆனார்!—லூக்கா 3:1, 2, 21, 22.
திரும்பவும் பாடம் 15 குறிப்பு 5-க்கு செல்லவும்
3. இரத்தம் சம்பந்தப்பட்ட சிகிச்சைமுறைகள்
ஒருவருடைய சொந்த இரத்தத்தையே பயன்படுத்திக் கொடுக்கப்படும் சிகிச்சைமுறைகள் இருக்கின்றன. ஆனால், அவை எல்லாவற்றையும் கிறிஸ்தவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. உதாரணமாக, தங்கள் இரத்தத்தைச் சேமித்துவைத்து அதை மற்றவர்களுடைய அறுவை சிகிச்சைக்காக அல்லது தங்களுடைய அறுவை சிகிச்சைக்காகப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.—உபாகமம் 15:23.
ஆனால், சொந்த இரத்தத்தையே பயன்படுத்திக் கொடுக்கப்படும் மற்ற சில சிகிச்சை முறைகளை அல்லது பரிசோதனைகளை ஏற்றுக்கொள்வது ஒருவேளை பிரச்சினையாக இருக்காது. அவற்றில் சில: இரத்தப் பரிசோதனை, இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் சிகிச்சை (hemodialysis), இரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்கும் சிகிச்சை (hemodilution), அறுவை சிகிச்சையின்போது வடியும் இரத்தத்தைச் சுத்திகரிக்கும் சிகிச்சை (cell salvage), இதய-நுரையீரல் இயந்திரத்தை (heart-lung bypass machine) பயன்படுத்தி கொடுக்கப்படும் சிகிச்சை. இதுபோன்ற சிகிச்சைமுறைகளிலோ, அறுவை சிகிச்சைகளிலோ, மருத்துவப் பரிசோதனைகளிலோ நம்முடைய இரத்தம் எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவரும் தீர்மானிக்க வேண்டும். இந்தச் சிகிச்சைமுறைகளைச் செய்யும் விதம் டாக்டருக்கு டாக்டர் கொஞ்சம் மாறுபடலாம். அதனால், சிகிச்சைகள் அல்லது பரிசோதனைகள் சம்பந்தமாக நாம் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு நம் இரத்தத்தை என்ன செய்வார்கள் என்பதை விவரமாகக் கேட்டுத் தெரிந்துகொள்வது முக்கியம். இந்தக் கேள்விகளை யோசித்துப் பாருங்கள்:
என் இரத்தம் என் உடலிலிருந்து ஒரு இயந்திரத்துக்குத் திருப்பிவிடப்பட்டு, கொஞ்ச நேரத்துக்கு ஓடாமல் நிறுத்தி வைக்கப்படுமா? அப்படியென்றால், அது இன்னமும் என் உடலின் பாகமாக இருக்கிறதென்று நினைத்து அதை என்னால் ஏற்றிக்கொள்ள முடியுமா? அல்லது, அதை “தரையில் ஊற்றிவிட” வேண்டுமென்று என் மனசாட்சி சொல்லுமா?—உபாகமம் 12:23, 24.
சிகிச்சை நடக்கும்போது என் இரத்தம் உடலிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு, மாற்றம் செய்யப்பட்டு (உதாரணத்துக்கு, மருந்து கலக்கப்பட்டு), மறுபடியும் என் உடலுக்குள் செலுத்தப்பட்டால் (அல்லது, அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் மருந்தாகத் தடவப்பட்டால்) அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அல்லது, என் மனசாட்சி உறுத்துமா?
திரும்பவும் பாடம் 39 குறிப்பு 3-க்கு செல்லவும்
4. தம்பதிகள் பிரிந்துவாழ்வது
கணவனும் மனைவியும் பிரிந்துபோகக் கூடாது, அப்படியே பிரிந்துபோனாலும் இன்னொரு கல்யாணம் செய்யக் கூடாதென்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 7:10, 11) பின்வரும் சில சூழ்நிலைகளில் கிறிஸ்தவர்கள் சிலர் பிரிந்துவாழ முடிவு செய்திருக்கிறார்கள்.
வேண்டுமென்றே குடும்பத்தைக் கவனிக்காதபோது: கணவர் பொருளாதாரத் தேவைகளைக் கவனிக்க மறுப்பதால் அடிப்படைத் தேவைகள்கூட இல்லாமல் குடும்பம் திண்டாடலாம்.—1 தீமோத்தேயு 5:8.
பயங்கரமாக அடித்துக் கொடுமைப்படுத்தும்போது: உயிருக்கோ உடல்நலத்துக்கோ ஆபத்து வருமளவுக்கு ஒருவர் தன் துணையைக் கொடுமைப்படுத்தலாம்.—கலாத்தியர் 5:19-21.
யெகோவாவை வணங்குவதை முழுமையாகத் தடுக்கும்போது: யெகோவாவை வணங்கவே விடாமல் ஒருவர் தன் துணையைக் கடுமையாக எதிர்க்கலாம்.—அப்போஸ்தலர் 5:29.
5. பண்டிகைகளும் கொண்டாட்டங்களும்
யெகோவாவுக்குப் பிடிக்காத எந்தவொரு கொண்டாட்டத்திலும் கிறிஸ்தவர்கள் கலந்துகொள்வதில்லை. பண்டிகை சமயங்களில் மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று மனசாட்சியைப் பயன்படுத்தி ஒவ்வொருவரும் முடிவு செய்ய வேண்டும். சில சூழ்நிலைகளைக் கவனியுங்கள்.
யாராவது உங்களுக்கு வாழ்த்து சொல்லலாம். நீங்கள் வெறுமனே “நன்றி” என்று சொல்லலாம். நீங்கள் ஏன் அந்தப் பண்டிகையைக் கொண்டாடுவதில்லை என்று அவர் தெரிந்துகொள்ள விரும்பினால் காரணத்தை விளக்கலாம்.
சத்தியத்தில் இல்லாத துணை, பண்டிகை சமயத்தில் சொந்தக்காரர்களோடு சேர்ந்து விருந்து சாப்பிட உங்களைக் கூப்பிடலாம். விருந்துக்குப் போக உங்கள் மனசாட்சி அனுமதித்தால், அங்கு நடக்கும் மத சடங்குகள் எதிலும் கலந்துகொள்ள மாட்டீர்கள் என்பதை முன்கூட்டியே உங்கள் துணையிடம் சொல்லிவிடலாம்.
பண்டிகை காலத்தில் முதலாளி உங்களுக்கு போனஸ் தரலாம். அதை நீங்கள் மறுக்க வேண்டுமா? அவசியம் இல்லை. அதை வாங்கிக்கொண்டால் நீங்களும் அந்தப் பண்டிகையைக் கொண்டாடுவதாக முதலாளி நினைப்பாரா? அல்லது, நீங்கள் செய்யும் நல்ல வேலையைப் பாராட்டுவதற்காக உங்களுக்குக் கொடுக்கும் ஒரு பரிசாக மட்டும் நினைப்பாரா? யோசித்து முடிவு எடுங்கள்.
பண்டிகை சமயத்தில் யாராவது உங்களுக்குப் பரிசு கொடுக்கலாம். “நீங்க இந்த பண்டிகைய கொண்டாட மாட்டீங்கனு எனக்கு தெரியும், ஆனாலும் இதை உங்களுக்கு கொடுக்க ஆசைப்படுறேன்” என்று அவர் சொல்லலாம். உங்கள்மேல் இருக்கும் அன்பினால்தான் அவர் பரிசு கொடுக்கிறாரா? அல்லது, உங்களை அந்தப் பண்டிகையில் கலந்துகொள்ள வைப்பதற்காகவோ உங்கள் விசுவாசத்தை சோதிப்பதற்காகவோ பரிசு கொடுக்கிறாரா? இதை யோசித்துப் பார்த்துவிட்டு, அந்தப் பரிசை ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நாம் என்ன முடிவை எடுத்தாலும் சரி, நம் மனசாட்சி உறுத்தாமல் இருக்க வேண்டும், நாம் யெகோவாவுக்கு உண்மையாகவும் இருக்க வேண்டும்.—அப்போஸ்தலர் 23:1.
திரும்பவும் பாடம் 44 குறிப்பு 1-க்கு செல்லவும்
6. தொற்றுநோய்கள்
நாம் மக்களை நேசிப்பதால், நம்மிடமிருந்து அவர்களுக்கு எந்த நோயும் பரவாமல் இருக்க ரொம்பக் கவனமாக இருக்கிறோம். நமக்குத் தொற்றுநோய் இருந்தாலும் சரி, நமக்குத் தொற்று வந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தாலும் சரி, ரொம்பக் கவனமாக நடந்துகொள்கிறோம். ஏனென்றால், “உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது.—ரோமர் 13:8-10.
இந்தக் கட்டளையை அன்றாட வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடிக்கலாம்? தொற்று இருக்கும் ஒருவர் மற்றவர்களைக் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது, கைகுலுக்குவது போன்ற எதையும் செய்யக் கூடாது. மற்றவர்கள் தன்னை வீட்டுக்குக் கூப்பிடவில்லை என்றால் அவர் தப்பாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால், அவர்கள் தங்களுடைய குடும்பத்தைப் பாதுகாப்பதற்காகவே அவரைக் கூப்பிடாமல் இருக்கலாம். ஒருவருக்குத் தொற்று இருந்தால் ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு அதைப் பற்றி மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளரிடம் சொல்ல வேண்டும். அப்போதுதான், ஞானஸ்நானம் எடுக்கும் மற்றவர்களைப் பாதுகாக்க அவர்கள் ஏற்பாடுகள் செய்ய முடியும். தொற்றுநோய் வருவதற்கான சூழலில் ஒருவர் இருந்திருந்தால், திருமண நோக்கத்தோடு யாருடனாவது பழக ஆரம்பிப்பதற்கு முன்பு இரத்தப் பரிசோதனை செய்துகொள்ள தானாக முன்வர வேண்டும். அப்போதுதான், ‘தன்னுடைய நலனில் மட்டுமே அக்கறை காட்டாமல், மற்றவர்களுடைய நலனிலும் அக்கறை காட்டுகிறார்’ என்று அர்த்தம்.—பிலிப்பியர் 2:4.
திரும்பவும் பாடம் 56 குறிப்பு 2-க்கு செல்லவும்
7. தொழில் மற்றும் சட்ட விஷயங்கள்
பணம் மற்றும் தொழில் சம்பந்தமான விவகாரங்களை எழுதி ஒப்பந்தம் செய்துகொள்வது நிறைய பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். ஒரு கிறிஸ்தவரோடு ஒப்பந்தம் செய்வதாக இருந்தாலும் இது பொருந்தும். (எரேமியா 32:9-12) சிலசமயம், பண விஷயத்திலோ மற்ற விஷயங்களிலோ கிறிஸ்தவர்களுக்கு இடையில் சின்னச் சின்னப் பிரச்சினைகள் வரலாம். உடனடியாக அதையெல்லாம் சமாதானமாகப் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும், அதுவும் அவர்களுக்குள் மட்டும்!
இல்லாததையும் பொல்லாததையும் சொல்வது, மோசடி போன்ற பெரிய தவறை யாராவது நமக்கு எதிராகச் செய்துவிட்டால் என்ன செய்வது? (மத்தேயு 18:15-17-ஐ வாசியுங்கள்.) மூன்று விஷயங்களை இயேசு செய்யச் சொன்னார்:
பிரச்சினையை உங்களுக்குள் பேசித் தீர்க்க முயற்சி செய்யுங்கள்.—வசனம் 15-ஐப் பாருங்கள்.
பிரச்சினை தீராவிட்டால், முதிர்ச்சியுள்ள ஓரிரு கிறிஸ்தவர்களைக் கூட்டிக்கொண்டு போங்கள்.—வசனம் 16-ஐப் பாருங்கள்.
அப்படியும் பிரச்சினை தீராவிட்டால்தான் மூப்பர்களிடம் போக வேண்டும்.—வசனம் 17-ஐப் பாருங்கள்.
முடிந்தவரைக்கும் நம் சகோதர சகோதரிகளை நீதிமன்றத்துக்கு இழுக்கக் கூடாது. ஏனென்றால், யெகோவாவுக்கும் சபைக்கும் கெட்ட பெயர் வந்துவிடும். (1 கொரிந்தியர் 6:1-8) ஆனால், விவாகரத்து, பிள்ளையை வளர்க்கும் உரிமை, ஜீவனாம்சம், காப்பீட்டுத் தொகை, திவால், உயில் போன்ற விஷயங்களை நாம் சட்டப்படிதான் சரிசெய்ய வேண்டியிருக்கும். முடிந்தவரை சமாதானமான முறையில் அதை சரிசெய்ய ஒரு கிறிஸ்தவர் நீதிமன்றத்துக்குப் போனால், அவர் பைபிள் அறிவுரையை மீறுகிறார் என்று சொல்ல முடியாது.
அதேபோல், பாலியல் பலாத்காரம், குழந்தை வன்கொடுமை, தாக்குதல், கொள்ளை, கொலை போன்ற ஏதாவது ஒரு பெரிய குற்றத்தைப் பற்றி ஒரு கிறிஸ்தவர் அதிகாரிகளிடம் புகார் செய்தால், அவர் பைபிள் அறிவுரையை மீறுகிறார் என்று சொல்ல முடியாது.
a கி.மு. 455-லிருந்து கி.மு. 1 வரை 454 வருஷங்கள். கி.மு. 1-லிருந்து கி.பி. 1 வரை ஒரு வருஷம் (பூஜ்யம் என்ற வருஷம் கிடையாது). கி.பி. 1-லிருந்து கி.பி. 29 வரை 28 வருஷங்கள். மொத்தம் 483 வருஷங்கள்.