எஜமானரின் இரவு விருந்து ஏன் முக்கியம்?
“என் நினைவாக இதைச் செய்துகொண்டிருங்கள்.” —1 கொ. 11:24.
1, 2. நிசான் மாதம் 14-ஆம் தேதி ராத்திரி, இயேசு என்ன செய்தார்? (ஆரம்பப் படம்)
கி.பி. 33-ஆம் வருடம். நிசான் மாதம் 14-ஆம் தேதி ராத்திரி. அன்று எருசலேமில் முழு நிலா ஒளி வீசிக்கொண்டு இருந்தது. இயேசுவும் அவருடைய சீடர்களும் அப்போதுதான் பஸ்கா பண்டிகையை கொண்டாடினார்கள். 1,500 வருடங்களுக்கு முன் இதே நாளில்தான், இஸ்ரவேலர்களை யெகோவா எகிப்திலிருந்து விடுதலை செய்து கொண்டுவந்தார். அதை நினைத்துப் பார்க்கத்தான் இஸ்ரவேலர்கள் பஸ்கா பண்டிகையை கொண்டாடினார்கள். பஸ்கா பண்டிகையை கொண்டாடியதற்கு பிறகு, இயேசுவும் அவருடைய 11 சீடர்களும் ஒரு விசேஷ விருந்தை சாப்பிட்டார்கள். இயேசுவின் மரணத்திற்குப் பிறகு, அவருடைய இறந்த நாளை நினைத்துப் பார்ப்பதற்காக இதை அவர்கள் வருடா வருடம் செய்ய வேண்டியிருந்தது.—மத். 26:1, 2.
2 அந்த விசேஷ விருந்தின்போது, இயேசு ரொட்டியை எடுத்து ஜெபம் செய்து அதை சீடர்களுக்கு கொடுத்து, “இதைச் சாப்பிடுங்கள்” என்று சொன்னார். அதேபோல், திராட்சமதுவை எடுத்து ஜெபம் செய்து அதை அவர்களிடம் கொடுத்து, “நீங்கள் எல்லாரும் இதிலிருந்து குடியுங்கள்” என்று சொன்னார். (மத். 26:26, 27) அந்த ரொட்டியும் திராட்சமதுவும் முக்கியமான அடையாளச் சின்னங்களாக இருந்தன. சீடர்கள் அன்று ராத்திரி இயேசுவிடம் இருந்து நிறைய விஷயங்களை தெரிந்துகொண்டார்கள்.
3. இந்த கட்டுரையில் நாம் என்ன கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள போகிறோம்?
3 தம்முடைய மரணத்தை ஒவ்வொரு வருடமும் சீடர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று இயேசு விரும்பினார். இதைத்தான் ‘எஜமானரின் இரவு விருந்து,’ அல்லது இயேசுவின் நினைவுநாள் என்று நாம் சொல்கிறோம். (1 கொ. 11:20) நினைவு நாள் நிகழ்ச்சி பற்றிய சில கேள்விகளுக்கு இப்போது நாம் பதில் தெரிந்துகொள்ள போகிறோம்: இயேசுவின் இறந்த நாளை நாம் ஏன் நினைத்துப் பார்க்க வேண்டும்? ரொட்டியும் திராட்சமதுவும் எதை அர்த்தப்படுத்துகிறது? அந்த நாளுக்காக நாம் எப்படி தயாராகலாம்? யாரெல்லாம் அந்த ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிடலாம்? நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிற நம்பிக்கையை உயர்வாக மதிக்கிறோம் என்று எப்படி காட்டலாம்?
இயேசுவின் இறந்த நாளை நாம் ஏன் நினைத்துப் பார்க்க வேண்டும்?
4. இயேசு அவருடைய உயிரை தியாகம் செய்ததால் நமக்கு என்ன நன்மை?
4 ஆதாமும் ஏவாளும் கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்தார்கள். அதனால்தான், நமக்கு பாவமும் மரணமும் வந்தது. (ரோ. 5:12) பாவியாக இருக்கிற மனிதர்களால், பாவத்தில் இருந்தும் மரணத்தில் இருந்தும் யாரையும் காப்பாற்ற முடியாது. (சங். 49:6-9) அதனால்தான், பாவமே செய்யாத இயேசு, நமக்காக அவருடைய உயிரை தியாகம் செய்தார். தம்முடைய உயிரை மீட்பு விலையாக யெகோவாவிடம் கொடுத்தார். அதனால், நாம் பாவமும் மரணமும் இல்லாமல் என்றென்றும் வாழ்வோம்.—ரோ. 6:23; 1 கொ. 15:21, 22.
5. (அ) யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் நம்மீது அன்பு இருக்கிறது என்று எப்படி சொல்லலாம்? (ஆ) இயேசுவின் நினைவுநாள் நிகழ்ச்சியில் நாம் ஏன் கலந்துகொள்ள வேண்டும்?
5 யெகோவா அவருடைய ஒரே மகனையே நமக்காக தியாகம் செய்திருக்கிறார். இதன் மூலம், அவருக்கு நம்மீது எவ்வளவு அன்பு இருக்கிறது என்று காட்டியிருக்கிறார். (யோவா. 3:16) இயேசுவும் அவருடைய உயிரையே நமக்காக தியாகம் செய்திருக்கிறார். இதன் மூலம், அவருக்கும் நம்மீது எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதை காட்டியிருக்கிறார். பூமிக்கு வருவதற்கு முன் இயேசுவுக்கு மனிதர்கள் மீது அதிக அன்பு இருந்தது. (நீதி. 8:30, 31) யெகோவாவும் இயேசுவும் நம்மீது காட்டிய அன்புக்கு நாம் எப்படி நன்றி காட்டுகிறோம்? “என் நினைவாக இதைச் செய்துகொண்டிருங்கள்” என்று இயேசு சொன்ன வார்த்தைகளுக்கு கீழ்ப்படிகிறோம்; அவருடைய நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறோம்.—1 கொ. 11:23-25.
அடையாளச் சின்னங்களின் அர்த்தம் என்ன?
6. இயேசு ரொட்டியையும் திராட்சமதுவையும் அவருடைய உடலாகவும் இரத்தமாகவும் மாற்றினாரா?
6 இயேசு இரவு விருந்தின்போது, ரொட்டியை அவருடைய உடலாகவோ திராட்சமதுவை அவருடைய இரத்தமாகவோ மாற்றினாரா? இல்லை. இயேசு ரொட்டியை எடுத்து, “இது என் உடலைக் குறிக்கிறது” என்று சொன்னார். திராட்சமதுவை எடுத்து, “இது ‘ஒப்பந்தத்திற்குரிய என் இரத்தத்தைக்’ குறிக்கிறது; என் இரத்தம் அநேகருக்காகச் சிந்தப்படப்போகிறது” என்று சொன்னார். (மாற். 14:22-24) அதனால், ரொட்டியையும் திராட்சமதுவையும் இயேசு வெறுமனே அடையாளச் சின்னங்களாகத்தான் பயன்படுத்தினார் என்று தெளிவாகத் தெரிகிறது.
7. புளிப்பில்லாத ரொட்டி எதை அர்த்தப்படுத்துகிறது?
7 பஸ்கா பண்டிகையில் பயன்படுத்தின புளிப்பில்லாத ரொட்டியைத்தான் இயேசு அந்த விசேஷ விருந்திலும் பயன்படுத்தினார். (யாத். 12:8) பைபிளில், புளிப்பு என்ற வார்த்தை சிலசமயம் பாவத்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. (மத். 16:6, 11, 12; லூக். 12:1) இயேசு பயன்படுத்தின புளிப்பில்லாத ரொட்டி, பாவம் இல்லாத அவருடைய உடலை அர்த்தப்படுத்துகிறது. (எபி. 7:26) அதனால்தான், நாம் இயேசுவின் நினைவுநாள் அன்று புளிப்பில்லாத ரொட்டியை பயன்படுத்துகிறோம்.
8. திராட்சமது எதை அர்த்தப்படுத்துகிறது?
8 இயேசு பயன்படுத்தின திராட்சமது அவருடைய இரத்தத்தை, அதாவது அவருடைய உயிரை, அர்த்தப்படுத்துகிறது. அதனால்தான், இயேசுவின் நினைவுநாள் நிகழ்ச்சியின்போது நாமும் திராட்சமதுவை பயன்படுத்துகிறோம். நம்முடைய பாவங்களை கடவுள் மன்னிப்பதற்காக இயேசு அவருடைய உயிரையே தியாகம் செய்தார். எருசலேமிற்கு வெளியில் இருந்த கொல்கொதா என்ற இடத்தில், இயேசு நம் எல்லாருக்காகவும் உயிரை கொடுத்தார். (மத். 26:28; 27:33) இயேசு செய்த இந்த தியாகத்தை நாம் உயர்வாக மதித்தால் அவருடைய நினைவுநாள் நிகழ்ச்சிக்கு நாம் ஒவ்வொருவரும் தயாராவோம். நாம் எப்படி தயாராகலாம் என்று இப்போது பார்க்கலாம்.
நினைவு நாளுக்கு எப்படி தயாராகலாம்?
9. (அ) நினைவுநாள் சமயத்தில் படிக்க வேண்டிய பைபிள் வசனங்களை நாம் ஏன் படிக்க வேண்டும்? (ஆ) மீட்பு பலியை பற்றி நினைத்துப் பார்க்கும்போது நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
9 நினைவு நாளுக்கு நாம் தயாராக வேண்டும் என்றால், இயேசுவின் மரணத்திற்கு முன்பும் பின்பும் நடந்த சம்பவங்களைப் பற்றி பைபிளில் படிக்க வேண்டும். எந்த வசனங்களை படிக்க வேண்டும் என்பது சிந்திக்க தினம் ஒரு வசனம் (தினந்தோறும் வேதவசனங்களை ஆராய்தல்) என்ற சிறுபுத்தகத்தில் இருக்கிறது. இந்த வசனங்களைப் படிக்கும்போது, இயேசுவின் மரணத்திற்கு முன்பு நடந்த சம்பவங்களை ஆழமாக யோசித்துப் பார்க்க முடியும்.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) இயேசுவின் தியாகத்தினால் ‘எனக்கு என்ன நன்மை’ என்று நாம் ஒவ்வொருவரும் யோசித்துப் பார்த்தோம் என்றால் அந்த நாளுக்காக நாம் தயாராக முடியும். இதற்கு ஒரு சகோதரியின் அனுபவத்தை கவனியுங்கள். ‘இயேசுவோட நினைவு நாளுக்காக நான் ஒவ்வொரு வருஷமும் காத்துக்கிட்டு இருப்பேன். என்னோட அப்பா இறந்தப்பதான், இயேசுவோட மீட்பு பலி நமக்கு எவ்ளோ முக்கியம்னு புரிஞ்சுக்கிட்டேன். இது சம்பந்தமா இருக்கிற பைபிள் வசனங்கள் எல்லாம் எனக்கு நல்லா தெரியும். இருந்தாலும், எங்க அப்பா இறந்தப்பதான் சாவு எவ்வளவு கொடுமையானதுனு என்னால உணர முடிஞ்சது. அந்த வசனங்களோட ஆழமான அர்த்தத்தையும் புரிஞ்சுக்க முடிஞ்சது. மீட்பு பலியினால நம்ம எல்லாருக்கும் கிடைக்கப் போற ஆசீர்வாதத்த நினைச்சு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு’ என்று அந்த சகோதரி சொன்னார்.
10. நினைவு நாளுக்கு தயாராக நாம் வேறு என்ன செய்யலாம்?
10 நினைவு நாளுக்கு தயாராக, வேறு என்ன செய்யலாம்? ஊழியத்தில் அதிக நேரம் செலவு செய்யலாம். நினைவுநாள் நிகழ்ச்சிக்காக, நிறையப் பேரை கூப்பிடலாம். துணைப் பயனியர் ஊழியமும் செய்யலாம். கடவுளைப் பற்றியும், இயேசுவைப் பற்றியும், முடிவில்லா வாழ்க்கையைப் பற்றியும் மற்றவர்களிடம் பேசும்போது கடவுள் சொல்வதை செய்கிறோம் என்ற திருப்தி நமக்கு கிடைக்கும்.—சங். 148:12, 13.
11. கொரிந்து நகரத்தில் இருந்த சிலர் தகுதியில்லாத விதத்தில் சாப்பிட்டார்கள் என்று பவுல் ஏன் சொன்னார்?
11 கொரிந்து நகரத்தில் இருந்த பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு பவுல் ஒரு கடிதம் எழுதினார். பவுல் அவர்களுக்கு சொன்ன விஷயங்களைப் பற்றி நன்றாக யோசித்துப் பார்த்தால் நினைவு நாளுக்கு நம்மால் தயாராக முடியும். (1 கொரிந்தியர் 11:27-34-ஐ வாசியுங்கள்.) பரலோக நம்பிக்கை இருக்கிற ஒருவர், ‘தகுதியில்லாத’ விதத்தில், அதாவது மரியாதை கொடுக்காத விதத்தில் ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிடக் கூடாது என்று பவுல் சொல்லியிருந்தார். அப்படி மதிக்காமல் சாப்பிட்டால் என்ன ஆகும்? அவர் ‘எஜமானருடைய உடலையும் இரத்தத்தையும் குறித்து குற்றமுள்ளவராக இருப்பார்.’ அதுமட்டுமல்ல, அவர் ‘தனக்கே நியாயத்தீர்ப்பை வரவழைத்துக் கொள்கிறார்’ என்று பவுல் சொன்னார். பவுல் வாழ்ந்த காலத்தில் கொரிந்து சபையில் இருந்தவர்கள் அந்த நிகழ்ச்சியின் புனிதத் தன்மையை கெடுக்கும் விதத்தில் நடந்துகொண்டார்கள். அவர்களில் சிலர், நினைவுநாள் நிகழ்ச்சி நடந்தபோதோ அதற்கு முன்போ நிறைய சாப்பிட்டும், குடித்தும் இருந்திருக்கலாம். அந்த மயக்கத்திலேயே நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கலாம். அதனால்தான், அவர்கள் தகுதியில்லாத விதத்தில் சாப்பிட்டார்கள் என்று பவுல் சொன்னார். இப்படி அந்த நிகழ்ச்சிக்கு அவர்கள் கொஞ்சம்கூட மரியாதை காட்டாததால் அவர்கள் ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிட்டபோது கடவுள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
12. (அ) இயேசுவின் நினைவு நாளை பவுல் எதனுடன் ஒப்பிட்டார்? ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிடுகிறவர்களுக்கு என்ன எச்சரிப்பை கொடுத்தார்? (ஆ) அவர்கள் பெரிய பாவம் செய்தால் என்ன செய்ய வேண்டும்?
12 இயேசுவின் நினைவு நாளை பவுல், சாப்பிடுவதோடு ஒப்பிட்டார். அதனால் ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிட்டவர்களிடம், “யெகோவாவின் கிண்ணத்திலும் பேய்களின் கிண்ணத்திலும் நீங்கள் குடிக்க முடியாதே; ‘யெகோவாவின் மேஜையிலும்’ பேய்களின் மேஜையிலும் நீங்கள் சாப்பிட முடியாதே” என்று பவுல் எச்சரித்தார். (1 கொ. 10:16-21) ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிடும் ஒருவர் ஒரு பெரிய பாவத்தை செய்தால், அதை பற்றி மூப்பர்களிடம் சொல்ல வேண்டும். (யாக்கோபு 5:14-16-ஐ வாசியுங்கள்.) அந்த நபர், உண்மையிலேயே மனந்திரும்பியதை செயலில் காட்டினார் என்றால் அந்த ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிடும்போது இயேசுவின் மீட்பு பலியை அவர் அவமதிக்கவில்லை என்று சொல்லலாம்.—லூக். 3:8.
13. கடவுள் நமக்கு கொடுத்த நம்பிக்கையை பற்றி ஏன் ஜெபம் செய்ய வேண்டும்?
13 நினைவு நாளுக்கு தயாராக வேண்டும் என்றால் கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கிற நம்பிக்கையை பற்றி ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும். நமக்கு பரலோக நம்பிக்கை இருக்கிறது என்று தெளிவாக தெரிந்தால் மட்டும்தான் ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிட வேண்டும். இல்லையென்றால், நாம் இயேசுவின் மீட்பு பலியை அவமதிக்கிறோம் என்று அர்த்தம். அப்படியென்றால், நாம் ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிடலாமா வேண்டாமா என்று எப்படி தெரிந்துகொள்ளலாம்?
யார் சாப்பிடலாம்?
14. புதிய ஒப்பந்தத்தில் ஒருவராக இருக்கிறவர், நினைவுநாள் நிகழ்ச்சியில் என்ன செய்வார்?
14 இரவு விருந்தின்போது இயேசு திராட்சமதுவை எடுத்து, “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தின் அடிப்படையிலான புதிய ஒப்பந்தத்தைக் குறிக்கிறது” என்று சொன்னார். (1 கொ. 11:25) புதிய ஒப்பந்தம் என்றால் என்ன? யெகோவா, ஆரம்பத்தில் இஸ்ரவேலர்களோடு திருச்சட்ட ஒப்பந்தத்தை செய்தார். ஆனால், கொஞ்ச காலத்திற்கு பிறகு, திருச்சட்ட ஒப்பந்தத்திற்கு பதிலாக புதிய ஒப்பந்தத்தை செய்யப்போவதாக சொல்லியிருந்தார். (எரேமியா 31:31-34-ஐ வாசியுங்கள்.) பரலோக நம்பிக்கை உள்ளவர்களோடு யெகோவா செய்த ஒப்பந்தம்தான் அந்த புதிய ஒப்பந்தம். (கலா. 6:15, 16) இயேசுவின் தியாக மரணம் மூலமாகத்தான், யெகோவா செய்த இந்த புதிய ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. (லூக். 22:20) இயேசுதான், இந்த புதிய ஒப்பந்தத்திற்கு மத்தியஸ்தராக இருக்கிறார். இந்த புதிய ஒப்பந்தத்தில் ஒருவராக இருக்கிறவர், கடைசிவரை கடவுளுக்கு உண்மையாக நிலைத்திருந்தால்தான் இயேசுவோடு பரலோகத்தில் இருப்பார். (எபி. 8:6; 9:15) அப்படியென்றால், ‘புதிய ஒப்பந்தத்தில்’ இருக்கிறவர்கள் மட்டும்தான், அதாவது பரலோக நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும்தான், ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிடுவார்கள். ஏனென்றால், அவர்கள் அந்த ஒப்பந்தத்தில் இருக்கிறார்கள் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும்.
15. யார் அரசாங்கத்திற்கான ஒப்பந்தத்தின் பாகமாக இருக்கிறார்கள்? அவர்கள் உண்மையோடு நிலைத்திருந்தால், என்ன பலன் கிடைக்கும்?
15 பரலோக நம்பிக்கை உள்ளவர்களோடு இயேசுவும் ஒரு ஒப்பந்தம் செய்தார்; அதுதான் அரசாங்கத்திற்கான ஒப்பந்தம். பரலோக நம்பிக்கை இருந்தவர்கள், புதிய ஒப்பந்தத்தின் பாகமாக இருப்பதோடு அரசாங்கத்திற்கான ஒப்பந்தத்தின் பாகமாகவும் இருந்தார்கள். (லூக்கா 12:32-ஐ வாசியுங்கள்.) இவர்கள் இயேசுவை போலவே ‘பல பாடுகளை’ அனுபவித்தார்கள். (பிலி. 3:10) நம் காலத்தில் இருக்கிற பரலோக நம்பிக்கை உள்ளவர்களும் இந்த அரசாங்கத்திற்கான ஒப்பந்தத்தின் பாகமாக இருக்கிறார்கள். இவர்கள் கடைசிவரை உண்மையோடு நிலைத்திருந்தால் இயேசுவோடு சேர்ந்து பரலோகத்தில் எப்போதுமே ராஜாக்களாக ஆட்சி செய்வார்கள். (வெளி. 22:5) இவர்கள்தான், நினைவுநாள் நிகழ்ச்சியில் ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிடுவார்கள்.
16. ரோமர் 8:15–17-ன் அர்த்தத்தை சுருக்கமாக சொல்லுங்கள்.
16 பரலோக நம்பிக்கை உள்ளவர்களுக்கு, அவர்கள் கடவுளுடைய பிள்ளைகள் என்பதில் எந்த சந்தேகமும் இருக்காது. அதனால், அவர்கள் மட்டும்தான் ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிடுவார்கள். (ரோமர் 8:15-17-ஐ வாசியுங்கள்.) பரலோக நம்பிக்கை உள்ளவர்கள், யெகோவாவை, “அபா,” அதாவது, “அப்பா” என்று கூப்பிடுவார்கள் என்று பவுல் சொன்னார். அரமேயிக் மொழியில் அப்பாவை பாசமாகவும் மரியாதையாகவும் கூப்பிடுவதற்கு “அபா” என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். யெகோவாவின் சக்தி அவர்களை அவருடைய ‘மகன்களாகத் தத்தெடுப்பதால்’ யெகோவாவை “அப்பா” என்று கூப்பிடுகிறார்கள். அவர்கள் கடவுளுடைய பிள்ளைகள்தான் என்பதை அந்த சக்தி அவர்களுடைய மனதில் ‘ஊர்ஜிதப்படுத்துகிறது,’ அதாவது உறுதிப்படுத்துகிறது. அவர்களுக்கு பூமியில் வாழ்கிற ஆசை இல்லாததால் அவர்கள் பரலோகத்திற்கு போவார்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் சாகும்வரை உண்மையாக இருந்தால், இயேசுவோடு பரலோகத்தில் ராஜாக்களாக ஆட்சி செய்வார்கள் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். ‘பரிசுத்தமானவரால் [அதாவது, யெகோவா தேவனால்] தேர்ந்தெடுக்கப்பட்ட’ 1,44,000 பேரில் கொஞ்சம் பேர்தான் இன்று பூமியில் இருக்கிறார்கள். (1 யோ. 2:20; வெளி. 14:1) அவர்களும் யெகோவாவோடு அவ்வளவு நெருக்கமாக உணருவதால்தான் அவரை “அபா,” அதாவது, “அப்பா” என்று கூப்பிடுகிறார்கள்.
உங்கள் நம்பிக்கையை உயர்வாக மதியுங்கள்
17. ஒருவருக்கு பரலோக நம்பிக்கை இருக்கிறது என்று எப்படி தெரியும்?
17 உங்களுக்கு பரலோக நம்பிக்கை இருந்தால் அதை பற்றி யெகோவாவிடம் அடிக்கடி ஜெபத்தில் பேசுவீர்கள். சில பைபிள் வசனங்களை படிக்கும்போது அது உங்களுக்காகவே எழுதப்பட்டிருக்கிறது என்று புரிந்துகொள்வீர்கள். உதாரணத்திற்கு, பரலோகத்தில் இயேசுவுக்கும் ‘மணமகளுக்கும்’ நடக்கப் போகிற கல்யாணத்தை பற்றி பைபிளில் படிக்கும்போது, ‘இது என்னை பத்திதான் சொல்லுது’ என்று நினைப்பீர்கள், அந்த நாளுக்காக ஆசை ஆசையாக காத்துக்கொண்டு இருப்பீர்கள். (யோவா. 3:27-29; 2 கொ. 11:2; வெளி. 21:2, 9-14) பரலோக நம்பிக்கை உள்ளவர்கள்மீது யெகோவா காட்டுகிற அன்பை பற்றி படிக்கும்போது யெகோவாவே உங்களிடம் நேரடியாக பேசுவது போல் உணருவீர்கள். பரலோகத்திற்கு போகிறவர்களுக்காக பைபிளில் சொல்லியிருக்கிற அறிவுரைகளை பற்றி படிக்கும்போது அதற்கு கீழ்ப்படிய வேண்டும் என்று கடவுளுடைய சக்தி உங்களை தூண்டும். அந்த சக்திதான் நீங்கள் பரலோகத்திற்கு போவீர்கள் என்று உங்கள் மனதில் ‘ஊர்ஜிதப்படுத்தும்.’
18. ‘வேறே ஆடுகளுக்கு’ என்ன நம்பிக்கை இருக்கிறது? இந்த நம்பிக்கையை யோசித்துப் பார்க்கும்போது நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
18 ‘வேறே ஆடுகளை’ சேர்ந்த ‘திரள் கூட்டமான’ மக்களில் நீங்களும் ஒருவரா? அப்படியென்றால், பூஞ்சோலை பூமியில் முடிவில்லாமல் வாழ்கிற வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. (வெளி. 7:9; யோவா. 10:16) பூஞ்சோலை பூமியை பற்றி கற்பனை செய்யும்போது உங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும் இல்லையா! உங்கள் நண்பர்களோடும் குடும்பத்தோடும் அங்கு வாழ நீங்கள் ரொம்ப ஆசையாக இருப்பீர்கள். பசி, பட்டினி, வறுமை, நோய், கஷ்டம், மரணம் எதுவுமே இல்லாத காலத்திற்காக ஏங்கிக்கொண்டு இருப்பீர்கள். (சங். 37:10, 11, 29; 67:6; 72:7, 16; ஏசா. 33:24) உங்களுக்கு பிடித்தவர்கள் மறுபடியும் உயிரோடு வரப்போகிற அந்த நாளுக்காக ஆர்வமாக காத்துக்கொண்டு இருப்பீர்கள். (யோவா. 5:28, 29) யெகோவா தரப்போகிற அந்த அருமையான வாழ்க்கைக்காக அவருக்கு நன்றியோடு இருங்கள்! ரொட்டியையும் திராட்சமதுவையும் நீங்கள் சாப்பிடவில்லை என்றாலும் இயேசுவின் மீட்பு பலியை நீங்கள் உயர்வாக மதிக்கிறீர்கள் என்றால் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வீர்கள்.
அந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் வருவீர்களா?
19, 20. (அ) முடிவில்லா வாழ்வை அனுபவிக்க வேண்டும் என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? (ஆ) நீங்கள் ஏன் இயேசுவின் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிறீர்கள்?
19 யெகோவாமீதும், இயேசுமீதும், மீட்பு பலிமீதும் விசுவாசம் வையுங்கள். அப்போதுதான் நீங்கள் பரலோகத்திலோ பூமியிலோ முடிவில்லா வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். இயேசுவின் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது, உங்களுக்கு இருக்கிற நம்பிக்கையை பற்றியும் இயேசுவின் மரணம் எவ்வளவு முக்கியம் என்பதை பற்றியும் ஆழமாக யோசித்துப் பாருங்கள். இந்த வருடம் ஏப்ரல் 3-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, சூரியன் மறைந்ததற்கு பின்பு இயேசுவின் நினைவுநாள் நிகழ்ச்சி உலகம் முழுவதும் நடக்கும். இதற்கு லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள். நீங்களும் வருவீர்களா?
20 இந்த கட்டுரையில் பார்த்தபடி, நினைவு நாளுக்காக நாம் தயாராக இருந்தால் இயேசு செய்த தியாகத்திற்கு ரொம்ப நன்றியோடு இருப்போம். அன்று கொடுக்கப்படுகிற பேச்சை நன்றாக கவனித்து கேட்டோம் என்றால் மற்றவர்கள்மீது அன்புகாட்ட நாம் இன்னும் தூண்டப்படுவோம். அதுமட்டுமல்ல, யெகோவாவுக்கு நம்மீது இருக்கும் அன்பை பற்றியும் அவர் நமக்காக செய்திருக்கிற விஷயங்களை பற்றியும் எல்லாரிடமும் சொல்வோம். (மத். 22:34-40) அப்படியென்றால், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
a பைபிள் கையேடு சிறுபுத்தகத்தில் பகுதி 16-ஐ பாருங்கள்.