திருமண பந்தத்தை பலப்படுத்துங்கள், சந்தோஷமாக இருங்கள்!
“யெகோவா வீட்டைக் கட்டவில்லை என்றால், அதைக் கட்டுகிறவர்களின் முயற்சி வீண்.”—சங். 127:1, NW.
1-3. கணவனும் மனைவியும் என்னென்ன பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கிறது? (ஆரம்பப் படம்)
“உங்க திருமண வாழ்க்கை சந்தோஷமா இருக்கிறதுக்கு உங்களால முடிஞ்ச எல்லாத்தையும் செய்யுங்க. உங்க முயற்சிகள யெகோவா கண்டிப்பா ஆசீர்வதிப்பார்” என்று 38 வருடம் சந்தோஷமாக குடும்பம் நடத்திக்கொண்டு வருகிற ஒரு கணவர் சொல்கிறார். அப்படியென்றால், கணவனும் மனைவியும் சந்தோஷமாக, ஒற்றுமையாக வாழ முடியும் என்று இது காட்டுகிறது. என்ன கஷ்டம் வந்தாலும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க முடியும் என்றும் காட்டுகிறது.—நீதி. 18:22.
2 திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் வருவது சகஜம்தான். கல்யாணம் செய்கிறவர்களுக்கு “வாழ்க்கையில் உபத்திரவங்கள் வரும்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொ. 7:28) தினம்தினம் வருகிற பிரச்சினையால் திருமண வாழ்க்கையே கசந்துவிடலாம். கணவன்-மனைவி இரண்டு பேருமே தவறு செய்கிறவர்களாக இருப்பதால் ஒருவருடைய மனதை இன்னொருவர் காயப்படுத்திவிடலாம். அவர்களுடைய உணர்ச்சிகளை தெளிவாக சொல்லாததாலும் பிரச்சினைகள் வரலாம். (யாக். 3:2, 5, 8) இன்று நிறைய குடும்பங்களில் கணவன் மனைவி இரண்டு பேருமே அதிக நேரம் வேலை செய்கிறார்கள். இன்னொரு பக்கம், பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு வளர்க்கிறார்கள். அவர்களுடைய நேரம், சக்தி எல்லாம் இதற்கே செலவாகிவிடுவதால் அவர்கள் ரொம்ப சோர்ந்து போய்விடுகிறார்கள். மனம்விட்டு பேசுவதற்குக்கூட அவர்களுக்கு நேரம் இல்லாமல் போய்விடுகிறது. சிலசமயம் வீட்டில் யாருக்காவது வியாதி வந்துவிடலாம், பணக் கஷ்டமும் மற்ற பிரச்சினைகளும் கழுத்தை நெரிக்கலாம். இதனால், ஒருவர்மீது ஒருவருக்கு இருக்கிற அன்பும் மரியாதையும் குறைய ஆரம்பித்துவிடலாம். அதுமட்டுமல்ல “பாவ இயல்புக்குரிய செயல்கள்,” அதாவது பாலியல் முறைகேடு, வெட்கங்கெட்ட நடத்தை, பகை, சண்டை சச்சரவு, பொறாமை, கோபாவேசம், வாக்குவாதம் இதெல்லாம் சந்தோஷமான திருமண வாழ்க்கையை நாசமாக்கிவிடலாம்.—கலா. 5:19-21.
3 அதோடு, “கடைசி நாட்களில்” வாழ்கிற மக்கள் சுயநலக்காரர்களாக, கடவுள் பயம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இந்த மாதிரி குணங்கள் திருமண பந்தத்தை கெடுத்துவிடும். (2 தீ. 3:1-4) சாத்தானும், திருமண பந்தத்தை கெடுத்துப்போட வேண்டுமென்று தீவிரமாக இருக்கிறான். அதனால்தான், “உங்கள் எதிரியான பிசாசு கர்ஜிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று அலைந்து திரிகிறான்” என்று அப்போஸ்தலன் பேதுரு சொல்கிறார்.—1 பே. 5:8; வெளி. 12:12.
4. திருமண பந்தம் பலமாகவும் சந்தோஷமாகவும் இருக்க என்ன செய்ய வேண்டும்?
4 ஜப்பானில் இருக்கிற ஒரு கணவர் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள். “ஒரு சமயம், பண நெருக்கடினால நான் ரொம்ப கஷ்டத்துல இருந்தேன். அப்போ என் மனைவிகிட்ட சரியா பேசாததுனால அவளுக்கும் ரொம்ப கஷ்டமாயிடுச்சு. அவளுக்கு உடம்பு வேற சரியில்லாம போயிடுச்சு. இந்த மாதிரி பிரச்சினைகள் இருந்ததுனால, எங்க ரெண்டு பேருக்கும் அப்பப்போ சண்டை வரும்” என்று சொல்கிறார். திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும், ஆனால் அதையெல்லாம் நம்மால் வெற்றிகரமாக சமாளிக்க முடியும். யெகோவா சொல்கிற மாதிரி செய்தால்தான் திருமண பந்தத்தைப் பலப்படுத்த முடியும், எப்போதும் சந்தோஷமாக இருக்க முடியும். (சங்கீதம் 127:1-ஐ வாசியுங்கள்.) இதற்கு உதவுகிற 5 வழிகளை இப்போது பார்க்கலாம். திருமண பந்தம் உறுதியாக இருப்பதற்கு அன்பு என்ற குணம் ஏன் முக்கியம் என்றும் பார்க்கலாம்.
யெகோவாவுக்கு முதலிடம் கொடுங்கள்
5, 6. கணவனும் மனைவியும் எப்படி யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்கலாம்?
5 கணவனும் மனைவியும் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டும், அவருக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இது திருமண வாழ்க்கைக்கு நல்ல அஸ்திவாரமாக அமையும். (பிரசங்கி 4:12-ஐ வாசியுங்கள்.) திருமண வாழ்க்கையில், இரண்டு பேரும் கடவுளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும், அதாவது அவர் சொல்கிறபடி நடக்க வேண்டும். “நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்” என்று பைபிள் சொல்கிறது. (ஏசா. 30:20, 21) கணவனும் மனைவியும் சேர்ந்து பைபிளை வாசிக்கிறபோது, யெகோவா பேசுவதை நன்றாகக் ‘கேட்க’ முடியும். (சங். 1:1-3) ஒவ்வொரு வாரமும் உற்சாகமாக, சுவாரஸ்யமாக குடும்ப வழிபாட்டை நடத்தினால், திருமண பந்தத்தை பலப்படுத்த முடியும். ஒவ்வொரு நாளும், இரண்டு பேரும் சேர்ந்து யெகோவாவிடம் ஜெபம் செய்தால், சாத்தானுடைய உலகத்தில் இருந்து வருகிற பிரச்சினைகளை எதிர்த்து நிற்க முடியும்.
6 ஜெர்மனியில் இருக்கிற கெர்ஹாட் என்ற சகோதரர் சொல்கிறார்: “எங்களுக்குள்ள ஏதாவது பிரச்சினையோ கருத்து வேறுபாடோ வரும்போது நாங்க பொறுமையா இருக்கவும் ஒருத்தர ஒருத்தர் மன்னிக்கவும் பைபிள்தான் எங்களுக்கு உதவி செஞ்சது.” திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்கு பொறுமையாக இருப்பதும் மன்னிப்பதும் ரொம்ப முக்கியம் என்று அந்த சகோதரர் சொல்கிறார். யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்க, கணவனும் மனைவியும் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். அப்போது, கடவுளிடம் அவர்கள் நெருங்கியிருக்க முடியும், திருமண பந்தத்தையும் பலப்படுத்த முடியும்.
அன்பு காட்டும் கணவன்
7. கணவன் தன்னுடைய மனைவியை எப்படி நடத்த வேண்டும்?
7 திருமண பந்தத்தை பலப்படுத்த, திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க, கணவர்கள் நல்ல குடும்பத் தலைவர்களாக இருக்க வேண்டும். “ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண் தலையாக இருக்கிறான்; ஆணுக்குக் கிறிஸ்து தலையாக இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொ. 11:3) இதற்கு என்ன அர்த்தம்? இயேசு, சீடர்களிடம் எப்படி நடந்துகொண்டாரோ அதேபோல், கணவனும் மனைவியிடம் நடந்துகொள்ள வேண்டும். இயேசு, அவருடைய சீடர்களிடம் கடுகடுப்பாகவோ கொடூரமாகவோ நடந்துகொள்ளவில்லை. அவர்களை நன்றாகப் புரிந்து கொண்டார்; அவர்களிடம் அன்பாக, சாந்தமாக, கனிவாக, மனத்தாழ்மையாக நடந்துகொண்டார்.—மத். 11:28-30.
8. கணவன் தன்னுடைய மனைவியிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
8 கணவர்களே, உங்கள் மனைவி உங்களுக்கு மரியாதை தர வேண்டுமென்று கட்டாயப்படுத்தாதீர்கள். அவர்களே உங்களுக்கு மரியாதை தருகிற விதத்தில் நடந்துகொள்ளுங்கள். ‘மனைவியை நன்கு புரிந்துகொள்ளுங்கள்; பெண்ணானவள் உங்களைவிடப் பலவீனமாக இருப்பதால், அவளுக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுங்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (1 பே. 3:7) தனியாக இருக்கும்போதும் சரி மற்றவர்களோடு இருக்கும்போதும் சரி, மனைவியிடம் அன்பாக, மரியாதையாக பேசுங்கள், கரிசனையாக நடந்துகொள்ளுங்கள். நீங்கள் பேசுகிற விதத்திலும், நடந்துகொள்கிற விதத்திலும் உங்கள் மனைவியை உயர்வாக நினைக்கிறீர்கள் என்பதை காட்டுங்கள். (நீதி. 31:28) இப்படி செய்தால் உங்கள் மனைவி உங்களை நேசிப்பாள், உங்களுக்கு மரியாதை கொடுப்பாள். யெகோவாவும் உங்களுடைய திருமண வாழ்க்கையை ஆசீர்வதிப்பார்.
கட்டுப்பட்டு நடக்கும் மனைவி
9. மனைவி தன்னுடைய கணவருக்கு எப்படி கட்டுப்பட்டு நடக்கலாம்?
9 மனைவிகளே, யெகோவாமீது சுயநலம் இல்லாத அன்பை காட்டி ‘அவருடைய பலத்த கைக்குள் உங்களைத் தாழ்த்திக்கொள்ளுங்கள்.’ (1 பே. 5:6) நீங்கள் யெகோவாவுடைய பலத்த கைக்குள் அடங்கி இருக்கிறீர்கள் என்று, அதாவது அவருடைய அதிகாரத்திற்கு மதிப்பு காட்டுகிறீர்கள் என்று எப்படி சொல்லலாம்? உங்கள் கணவர் எடுக்கிற தீர்மானத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதன் மூலமாக யெகோவாவுடைய அதிகாரத்திற்கு மதிப்பு காட்டுகிறீர்கள் என்று சொல்லலாம். “உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; இதுவே நம் எஜமானரைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஏற்றது” என்று பைபிள் சொல்கிறது. (கொலோ. 3:18) உங்கள் கணவர் எடுக்கிற எல்லா தீர்மானங்களுக்கும் ஒத்துப்போவது கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், அவர் எடுக்கிற தீர்மானங்கள் கடவுளுடைய சட்டங்களை மீறாதவரைக்கும், அதற்கு நீங்கள் முழு ஆதரவு தர வேண்டும். அப்போதுதான், நீங்கள் கணவருக்கு கட்டுப்பட்டு நடக்கிறீர்கள் என்று சொல்ல முடியும்.—1 பே. 3:1.
10. கணவருக்கு கட்டுப்பட்டு நடப்பது ஏன் ரொம்ப முக்கியம்?
10 குடும்பத்தில் ஒரு முக்கியமான பொறுப்பை, மனைவிகளுக்கு யெகோவா தந்திருக்கிறார். மனைவிதான் கணவனுக்கு ஒரு நல்ல ‘தோழியாக’ இருக்க முடியும். (மல். 2:14) ஒரு விஷயத்தைப் பற்றி தீர்மானம் எடுக்கும்போது உங்கள் அபிப்பிராயத்தை பற்றி கணவரிடம் மரியாதையோடு சொல்லலாம். இருந்தாலும், அவர் எடுக்கிற தீர்மானத்திற்குத்தான் நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அதேசமயம், மனைவி என்ன சொல்ல நினைக்கிறாள் என்பதை கணவரும் காதுகொடுத்து கேட்க வேண்டும். (நீதி. 31:10-31) கணவருக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடக்கும்போது உங்கள் திருமண வாழ்க்கை சந்தோஷமாக, சமாதானமாக இருக்கும். நீங்கள் இரண்டு பேரும் எப்போதும் ஒற்றுமையாக இருப்பீர்கள். அதோடு, யெகோவாவுக்கு பிடித்த மாதிரி நடந்துகொள்கிறீர்கள் என்ற திருப்தியும் உங்களுக்கு இருக்கும்.—எபே. 5:22.
ஒருவரையொருவர் மன்னியுங்கள்
11. கணவனும் மனைவியும் ஏன் ஒருவரையொருவர் மன்னிக்க வேண்டும்?
11 திருமண வாழ்க்கை நிலைத்திருக்க வேண்டுமென்றால், கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் மன்னிக்க வேண்டும். “ஒருவர்மீது ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால், ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னியுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. இப்படி செய்தால், திருமண பந்தம் பலப்படும். (கொலோ. 3:13) பழைய பிரச்சினைகளை மனதில் வைத்துக்கொண்டு ஒருவரையொருவர் குத்திக்காட்டக் கூடாது. மனதில் வருத்தமும் கோபமும் இருந்தால் ஒற்றுமையாக இருப்பதும், ஒருவரையொருவர் மன்னிப்பதும் கஷ்டமாகி விடும். கட்டடத்தில் ஏற்படுகிற விரிசல் அந்த கட்டடத்தை பாதிப்பதுபோல், மனவருத்தமும் கோபமும் உங்கள் திருமண பந்தத்தை பாதிக்கும். ஆனால், யெகோவா தாராளமாக மன்னிப்பது போல், கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் மன்னித்தால் திருமண பந்தம் பலப்படும்.—மீ. 7:18, 19.
12. அன்பு எப்படி “திரளான பாவங்களை மூடும்”?
12 உண்மையான அன்பு, “தீங்கைக் கணக்கு வைக்காது,” “திரளான பாவங்களை மூடும்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொ. 13:4, 5; 1 பேதுரு 4:8-ஐ வாசியுங்கள்.) ஒருவர்மீது ஒருவர் உண்மையிலேயே அன்பு வைத்திருந்தால், அவரை எத்தனை தடவை வேண்டுமானாலும் மன்னிப்போம். ஒரு சமயம் பேதுரு இயேசுவிடம், ஒருவரை எத்தனை தடவை மன்னிக்கலாம் என்று கேட்டபோது, “எழுபத்தேழு தடவை” மன்னிக்க வேண்டுமென்று இயேசு சொன்னார். (மத். 18:21, 22) அதாவது, ஒருவரை மன்னிப்பதற்கு அளவே இல்லை என்று சொன்னார்.—நீதி. 10:12.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
13. உங்கள் மணத்துணையை மன்னிப்பது எப்போது கஷ்டமாக இருக்காது?
13 ஜெர்மனியில் இருக்கும் ஆனட் என்ற சகோதரி சொல்கிறார்: “கணவனும் மனைவியும் ஒருத்தர ஒருத்தர் மன்னிச்சா திருமண பந்தம் பலப்படும், அவங்களுக்குள்ள இருக்கிற நெருக்கமும் அதிகமாகும். அப்படி மன்னிக்கலனா அவங்க மேல இருக்கிற கோபமும் சந்தேகமும் வளர்ந்துக்கிட்டே போகும்.” மணத்துணை உங்களுக்காக செய்கிற எல்லாவற்றிற்கும் நன்றியோடு இருங்கள். அவர்களை மனதார பாராட்டுங்கள். இப்படி செய்தால், உங்கள் துணையை மன்னிப்பது கஷ்டமாக இருக்காது. (கொலோ. 3:15) இதனால், நீங்கள் இரண்டு பேரும் ஒற்றுமையாக இருப்பீர்கள், மனநிம்மதியோடும் வாழ்வீர்கள், கடவுளுடைய மனதையும் சந்தோஷப்படுத்துவீர்கள்.—ரோ. 14:19.
பொன்மொழியைப் பின்பற்றுங்கள்
14, 15. பொன்மொழி என்பது என்ன, திருமண பந்தத்தைப் பலப்படுத்த அது எப்படி உதவும்?
14 எல்லாரும் உங்களை மதிப்போடும் மரியாதையோடும் நடத்த வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பீர்கள். நீங்கள் சொல்வதை மற்றவர்கள் காதுகொடுத்து கேட்க வேண்டும், உங்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று ஆசைப்படுவீர்கள். ஆனால் யாராவது இப்படி சொல்லியதை கேட்டிருக்கிறீர்களா: “அவன் எனக்கு செஞ்சதுக்கு எல்லாம் நான் பதிலடி கொடுத்தே தீருவேன்.” சிலநேரம் கோபத்தில் அவர்கள் இப்படி சொல்லிவிடலாம். ஆனால், ‘அவன் எனக்குச் செய்தபிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன் என்று நீ சொல்லாதே’ என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 24:29) கஷ்டமான சூழ்நிலையை சமாளிப்பதற்கு, இயேசு நமக்கு சொன்ன பொன்மொழியின்படி நடக்க வேண்டும். அது என்னவென்றால்: “மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அவ்விதமாகவே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” (லூக். 6:31) மற்றவர்கள் நம்மை எப்படி நடத்த வேண்டுமென்று நாம் விரும்புகிறோமோ அப்படியே அவர்களையும் நடத்த வேண்டும் என்று இயேசு சொன்னார். அப்படியென்றால், உங்கள் மணத்துணை உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களோ அதையே நீங்களும் அவர்களுக்கு செய்யுங்கள்.
15 உங்கள் மணத்துணையின் உணர்ச்சிகளைப் புரிந்து நடக்கும்போது திருமண பந்தம் பலப்படும். தென் ஆப்பிரிக்காவில் இருக்கிற ஒரு கணவர் இப்படி சொல்கிறார்: “இயேசு சொன்ன பொன்மொழியின்படி நடக்க நாங்க முயற்சி செய்வோம். சிலநேரத்துல, எங்க ரெண்டு பேருக்குள்ள ஏதாவது பிரச்சினை வரும்போது ஒருத்தர ஒருத்தர் மரியாதையோடு நடத்துறது அவ்ளோ சுலபமா இருக்காது. ஆனா, அந்த சமயத்துல இயேசு சொன்னபடி நடக்க நாங்க ரெண்டு பேருமே ரொம்ப முயற்சி செய்வோம்.”
16. கணவன்-மனைவி இரண்டு பேரும் என்ன செய்யக் கூடாது?
16 உங்கள் மணத்துணையின் குறைகளைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லாதீர்கள். அவர்களிடம் இருக்கிற ஏதாவது ஒரு குணம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதைப் பற்றி குறை சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள். விளையாட்டிற்குக்கூட அப்படி சொல்லாதீர்கள். கல்யாண வாழ்க்கையில் “நீயா, நானா” என்று போட்டி போட்டுக்கொண்டு இருக்கக் கூடாது. யார் ரொம்ப பலசாலி, யாரால் அதிகமாக கத்தி கூச்சல் போட முடியும், யாரால் ரொம்ப காயப்படுத்துகிற மாதிரி பேச முடியும் என்று போட்டி போட்டுக்கொண்டு இருக்கக் கூடாது. நாம் எல்லாரும் இயல்பாகவே தவறு செய்கிறவர்கள்தான். அதனால், மற்றவர்களை கஷ்டப்படுத்துகிற மாதிரி சிலநேரத்தில் நடந்துகொள்ளலாம். எது எப்படி இருந்தாலும் உங்கள் மணத்துணையின் மனதை காயப்படுத்துகிற மாதிரி பேசவோ, அவர்களை அவமானப்படுத்தவோ, அடிக்கவோ கூடாது.—நீதிமொழிகள் 17:27; 31:26-ஐ வாசியுங்கள்.
17. கணவர்கள் எப்படி பொன்மொழியின்படி நடக்கலாம்?
17 சில ஊர்களில் கணவர்கள், அவர்களை பலசாலிகள் என்று காட்டிக்கொள்வதற்காக மனைவிகளை அடிக்கிறார்கள், கொடுமைப்படுத்துகிறார்கள். ஆனால், “பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 16:32) இயேசுவைப் போல் சுயக்கட்டுப்பாட்டை காட்ட வேண்டுமென்றால் அதிக மனஉறுதி தேவை. அதனால், மனைவியை அடித்து கொடுமைப்படுத்துகிற யாரும் பலசாலி இல்லை; சொல்லப்போனால் அவர்கள்தான் பலவீனமானவர்கள். யெகோவாவிடம் இருக்கிற நட்பையும் அவர்கள் இழந்துவிடுவார்கள். பலசாலியாகவும் தைரியசாலியாகவும் இருந்த தாவீது சொல்கிறார்: “நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள்.”—சங். 4:4.
அன்பு காட்டுங்கள்
18. தொடர்ந்து அன்பு காட்டுவது ஏன் முக்கியம்?
18 ஒன்று கொரிந்தியர் 13:4-7-ஐ வாசியுங்கள். திருமண வாழ்க்கையில் அன்பு என்ற குணம்தான் ரொம்ப ரொம்ப முக்கியம். ‘கனிவான பாசத்தையும் கரிசனையையும் கருணையையும் மனத்தாழ்மையையும் சாந்தத்தையும் நீடிய பொறுமையையும் காட்டுங்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக அன்பைக் காட்டுங்கள்; எல்லாரையும் பரிபூரணமாகப் பிணைப்பது அன்பு’ என்று பைபிள் சொல்கிறது. (கொலோ. 3:12, 14) இயேசு கிறிஸ்து, சுயநலம் இல்லாத அன்பை காட்டினார்; மக்களுக்காக தம்முடைய உயிரையே தியாகம் செய்தார். அதேபோல், கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் சுயநலம் இல்லாத அன்பை காட்ட வேண்டும், தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும். அன்பு என்ற குணம் இருந்தால், உங்கள் மணவாழ்க்கை சந்தோஷமாக இருக்கும், திருமண பந்தம் பலமாகவும் இருக்கும். அதேசமயம், மணத்துணையிடம் உங்களுக்கு பிடிக்காத குணம்... மணத்துணையின் குடும்பத்தில் இருக்கிறவர்களால் வரும் பிரச்சினை... மோசமான வியாதி... பணக் கஷ்டம்... இது எதுவுமே உங்களுக்கு ஒரு பெரிய விஷயமாக இருக்காது.
19, 20. (அ) கல்யாண வாழ்க்கையை சந்தோஷமாகவும் பலமாகவும் வைத்துக்கொள்வதற்கு கணவன்-மனைவி என்ன செய்யலாம்? (ஆ) அடுத்த கட்டுரையில் எதை பற்றி பார்க்கப் போகிறோம்?
19 கல்யாண வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால் இரண்டு பேரும் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும், ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்ட வேண்டும். கல்யாண வாழ்க்கையில் ஏதாவது பிரச்சினை வந்தால் பிரிந்துபோக வேண்டுமென்று நினைக்காதீர்கள். தொடர்ந்து அன்பு காட்டுங்கள், அப்போது உங்களுக்குள் இருக்கிற நெருக்கம் அதிகமாகும். “அன்பு ஒருக்காலும் ஒழியாது” என்று பைபிள் சொல்கிறது. அதனால், உங்கள் இரண்டு பேருக்கும் யெகோவாமீது அன்பு இருந்தால், நீங்கள் ஒருவரையொருவர் நேசித்தால், பிரச்சினைகளை நீங்களே தீர்த்துக்கொள்வீர்கள்.—1 கொ. 13:8; மத். 19:5, 6; எபி. 13:4.
20 இந்த “கடைசி நாட்களில்,” மணவாழ்க்கையை சந்தோஷமாகவும் பலமாகவும் வைத்துக்கொள்வது ரொம்ப கஷ்டம்தான். (2 தீ. 3:1) இருந்தாலும், யெகோவாவின் உதவியுடன் உங்கள் திருமண பந்தத்தை நிச்சயம் பலப்படுத்த முடியும். இன்று நாம் ஒழுக்கங்கெட்ட உலகத்தில் வாழ்கிறோம். அதனால், கணவனும் மனைவியும் அவர்களுடைய திருமண பந்தத்தை கட்டிக் காப்பாற்ற கடினமாக முயற்சி செய்ய வேண்டும். இதை எப்படி செய்யலாம் என்று அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
a ஒருவர் தன்னுடைய மணத்துணைக்கு துரோகம் செய்யும்போது, அவரை மன்னித்து ஏற்றுக்கொள்வதா, இல்லை அவரை விவாகரத்து செய்வதா என்று தவறு செய்யாத மணத்துணை முடிவு செய்யலாம். (மத். 19:9) ஆகஸ்ட் 8, 1995, விழித்தெழு!-வில் வந்த “பைபிளின் கருத்து: விபசாரம்—மன்னிப்பதா மன்னிக்காமல் இருப்பதா?” என்ற கட்டுரையை பாருங்கள்.