ஞாயிறு, அக்டோபர் 11
கணவர்களே, உங்கள் மனைவிமேல் எப்போதும் அன்பு காட்டுங்கள்.—கொலோ. 3:19.
கொடூரமாக நடந்துகொள்கிறவர்களை யெகோவா வெறுக்கிறார். (சங். 11:5) அதுவும் மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்தி, முரட்டுத்தனமாக நடத்துகிற கணவரை யெகோவாவுக்குச் சுத்தமாகப் பிடிக்காது. (மல். 2:16) ஒரு கணவர் மனைவியைச் சரியாக நடத்தவில்லை என்றால் யெகோவாவோடு அவருக்கு இருக்கும் நட்பு பாதிக்கப்படும். சொல்லப்போனால், அவர் செய்கிற ஜெபத்தைக்கூட யெகோவா கேட்க மாட்டார். (1 பே. 3:7) சில கணவர்கள், மனைவியிடம் கோபமாகப் பேசுகிறார்கள், மனதைக் குத்திக் கிழிக்கும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் யெகோவா, “சினத்தையும், கடும் கோபத்தையும், கூச்சலையும், பழிப்பேச்சையும்” வெறுக்கிறார். (எபே. 4:31, 32) எப்போதும் மனைவியிடம் கடுகடுப்பாகப் பேசுகிற ஒரு கணவர் அவருடைய கல்யாண வாழ்க்கையை மட்டுமல்ல, யெகோவாவோடு அவருக்கு இருக்கும் நட்பையும் கெடுத்துக்கொள்கிறார். (யாக். 1:26) அதே போல், அசிங்கமான படங்களைப் பார்க்கிற ஒரு கணவர் யெகோவாவோடு அவருக்கு இருக்கும் நட்பையும் கெடுத்துக்கொள்கிறார்; அவருடைய மனைவியையும் கேவலப்படுத்துகிறார். கணவர், தன் மனைவிக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். மனைவிக்கு உண்மையாக இருக்கிற ஒரு கணவர், வேறு பெண்ணோடு தப்பான உறவு வைத்துக்கொள்ள மாட்டார்; அதைப் பற்றி யோசித்துக்கூட பார்க்க மாட்டார். ஒரு பெண்ணைக் காம உணர்வோடு பார்த்துக்கொண்டே இருக்கும் ஒருவர் அவளோடு ஏற்கெனவே தன் “இதயத்தில்” முறைகேடான உறவுகொண்டுவிடுகிறார் என்று இயேசு சொன்னார்.—மத். 5:28, 29. w25.01 9 ¶6-8
திங்கள், அக்டோபர் 12
கிறிஸ்து இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தால்தான் ஒருவன் நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்படுகிறான்.—கலா. 2:16.
ஒருவரை நீதிமானாக ஏற்றுக்கொள்வது என்றால், அவர் செய்த பாவத்தை ரத்து செய்து, அந்தப் பாவத்தைத் துடைத்தழிப்பதைக் குறிக்கிறது. இப்படிச் செய்வதால், யெகோவா தன்னுடைய நீதியான தராதரத்தை விட்டு இறங்கிவிடுகிறார் என்று அர்த்தம் கிடையாது. ஏனென்றால், நாம் ஏதோ நீதிமான்களாக நடந்துகொண்டதாலோ அல்லது நம்முடைய பாவங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாலோ அவர் இப்படிச் செய்யவில்லை. பாவ பரிகார ஏற்பாட்டிலும், மீட்புவிலையிலும் நாம் விசுவாசம் வைத்ததால்தான் யெகோவா நம்முடைய பாவங்களை ரத்து செய்கிறார். (ரோ. 3:24) யெகோவா நம்மை நீதிமான்களாக ஏற்றுக்கொள்வதால் என்ன நன்மை கிடைக்கிறது? இயேசுவோடு பரலோகத்தில் ஆட்சி செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறவர்கள் ஏற்கெனவே நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் கடவுளுடைய பிள்ளைகளாக இருக்கிறார்கள். (தீத். 3:7; 1 யோ. 3:1) அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கின்றன. சொல்லப்போனால், அவர்கள் பாவமே செய்யாத மாதிரி யெகோவா அவர்களைப் பார்க்கிறார். அதனால், கடவுளுடைய அரசாங்கத்தில் இருப்பதற்கு அவர்கள் தகுதி பெற்றிருக்கிறார்கள். (ரோ. 8:1, 2, 30) பூமியில் வாழ்கிற நம்பிக்கை இருக்கிறவர்களையும் கடவுள் நீதிமான்களாக ஏற்றுக்கொண்டு தன்னுடைய நண்பர்களாக பார்க்கிறார். அவர்களுடைய பாவங்களையும் மன்னிக்கிறார்.—யாக். 2:21-23. w25.02 5 ¶17; 7 ¶18
செவ்வாய், அக்டோபர் 13
நீ கடவுளைப் போல் யோசிக்காமல் மனுஷர்களைப் போல் யோசிக்கிறாய்.—மத். 16:23.
இயேசு தன்னுடைய அப்போஸ்தலர்களிடம், தான் எருசலேமுக்குப் போவார் என்றும், மதத் தலைவர்களிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும், பிறகு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவார் என்றும் சொன்னார். (மத். 16:21) இதைக் கேட்டு பேதுரு அதிர்ச்சி அடைந்தார். ஏனென்றால், இயேசுதான் இஸ்ரவேலுடைய நம்பிக்கை நட்சத்திரம்; வாக்குக் கொடுக்கப்பட்ட மேசியா! அவருக்கு இப்படியொரு நிலைமை வருவதற்கு யெகோவா எப்படி விடுவார் என்று பேதுரு யோசித்தார். (மத். 16:16) அதனால், இயேசுவைத் தனியாகக் கூட்டிக்கொண்டுபோய், “எஜமானே, இந்தக் கஷ்டங்கள் உங்களுக்கு வேண்டாம்! இதெல்லாம் உங்களுக்கு நடக்கவே நடக்காது” என்றார். (மத். 16:22) இந்தச் சமயத்தில், பேதுரு யெகோவாவைப் போல யோசிக்கத் தவறிவிட்டார். அதனால், பேதுருவின் யோசனைகள் இயேசுவின் யோசனைகளோடு ஒத்துப்போகவில்லை. யெகோவாவுடைய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால், கஷ்டங்களை அனுபவித்து கடைசியில் தன்னுடைய உயிரையும் கொடுக்க வேண்டியிருக்கும் என்பது இயேசுவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதனால், பேதுரு நல்ல எண்ணத்தோடு சொல்லியிருந்தாலும் இயேசு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சம்பவத்திலிருந்து பேதுரு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டார். எப்போதுமே தன்னுடைய யோசனைகள் யெகோவாவுடைய யோசனைகளோடு ஒத்துப்போக வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டார். இது நமக்கும் ஒரு நல்ல பாடம்! w25.03 9 ¶5-6