கல்யாணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
பைபிள் தரும் பதில்
எல்லாரும் “பாலியல் முறைகேட்டுக்கு விலகியிருக்க வேண்டும்” என்பது கடவுளுடைய விருப்பம் என்று பைபிள் சொல்கிறது. (1 தெசலோனிக்கேயர் 4:3) பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘பாலியல் முறைகேடு’ என்ற வார்த்தை, விபச்சாரம், ஓரினச்சேர்க்கை, கல்யாணமாகாத ஒரு ஆணும் பெண்ணும் வைத்துக்கொள்ளும் செக்ஸ் போன்றவற்றை அர்த்தப்படுத்தும்.
சேர்ந்து வாழ ஆசைப்படும் ஒரு ஆணும் பெண்ணும் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென்று கடவுள் ஏன் சொல்கிறார்?
கல்யாணம் என்ற ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்ததே கடவுள்தான். ஒரு ஆணையும் பெண்ணையும் படைத்து அவர்கள் கணவன் மனைவியாக வாழ வேண்டும் என்று கடவுள் நினைத்தார். இப்படி, கல்யாண வாழ்க்கை என்ற ஏற்பாட்டை அவர் ஆரம்பித்து வைத்தார். (ஆதியாகமம் 2:22-24) அவர்கள் கொஞ்ச நாட்களுக்குச் சேர்ந்து வாழ்ந்துவிட்டு பிறகு பிரிந்துபோக வேண்டும் என்று அல்ல, கல்யாணமான அவர்கள் காலம் முழுக்க ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.
மனிதர்களுக்கு எது நல்லது என்று கடவுளுக்குத் தெரியும். கல்யாண வாழ்க்கையை என்றென்றும் நிலைத்திருக்கும் ஒரு பந்தமாகத்தான் கடவுள் உருவாக்கினார். அப்போதுதான், குடும்பத்தில் இருக்கிற எல்லாரும் பாதுகாப்பாக, சந்தோஷமாக இருப்பார்கள் என்பது அவருக்குத் தெரியும். இப்போது ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள்: மரத்தால் செய்யப்பட்ட ஒரு டேபிளையோ பீரோவையோ நீங்கள் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அது உங்களுக்குத் தனித்தனி பாகங்களாக கிடைத்திருக்கிறது. அந்தப் பாகங்களை ஒன்றுசேர்ப்பதற்கான வழிமுறைகளை அதை உருவாக்கியவர்கள் உங்களிடம் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் சொல்வதுபோல் செய்தால்தான், அவற்றைச் சரியாக ஒன்றுசேர்க்க முடியும். அதேபோல் ஒரு கல்யாண வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால், அதை உருவாக்கிய கடவுள் கொடுத்திருக்கும் வழிமுறைகள்படி செய்ய வேண்டும். கடவுள் சொல்வதுபோல் செய்பவர்களின் வாழ்க்கை எப்போதுமே நன்றாக இருக்கும்.—ஏசாயா 48:17, 18.
கல்யாணம் ஆகாத ஒரு ஆணும் பெண்ணும் செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது மோசமான பிரச்சினைகள் வரும். உதாரணத்துக்கு, எதிர்பாராமல் கர்ப்பமாகிவிடலாம், பால்வினை நோய்கள் வரலாம் அல்லது தேவையில்லாத வேதனைகள் வரலாம்.
செக்ஸ் வைத்துக்கொள்வது மூலமாக பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் திறனை மனிதர்களுக்குக் கடவுள் தந்திருக்கிறார். உயிரைக் கடவுள் பரிசுத்தமான ஒன்றாகப் பார்க்கிறார். பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் திறனை மனிதர்களுக்குக் கடவுள் பரிசாகக் கொடுத்திருக்கிறார். கல்யாணமான ஒரு ஆணும் பெண்ணும் மட்டும்தான் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கடவுள் நினைக்கிறார். அவருக்குக் கீழ்ப்படியும்போது அவர் தந்த இந்தப் பரிசை மதிக்கிறோம் என்று காட்ட முடியும்.—எபிரெயர் 13:4.
இரண்டு பேருக்கும் ஒத்துப்போகிறதா என்று பார்க்க கல்யாணத்துக்கு முன்பு சேர்ந்து வாழ்வது சரியா?
கொஞ்ச நாட்கள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து பார்ப்பதால் கல்யாண வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அப்படி வாழ்பவர்கள் எந்தக் கடமையுணர்ச்சியும் இல்லாமல், பிரச்சினை வந்தால் எப்போது வேண்டுமானாலும் பிரிந்து போய்விடலாம் என்ற எண்ணத்தில்தான் இருப்பார்கள். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருக்கும் பந்தம் பலமாக இருக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு இடையில் கடமையுணர்வு இருக்க வேண்டும்.a எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் சேர்ந்து சமாளிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்க வேண்டும். கல்யாணம் ஆகும்போதுதான் இந்தக் கடமையுணர்ச்சி வரும்.—மத்தேயு 19:6.
கல்யாண வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்றால் கணவனும் மனைவியும் என்ன செய்ய வேண்டும்?
பிரச்சினை இல்லாத கல்யாண வாழ்க்கையே இல்லை. இருந்தாலும், கணவனும் மனைவியும் பைபிள் சொல்வதுபோல் நடந்துகொண்டால், அவர்களுடைய கல்யாண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். இதோ பைபிள் தரும் சில ஆலோசனைகள்:
உங்களுடைய தேவைகளைவிட உங்கள் துணையின் தேவைகளைப் பற்றி அதிகமாக யோசியுங்கள்.—1 கொரிந்தியர் 7:3-5; பிலிப்பியர் 2:3, 4.
ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுங்கள், ஒருவரை ஒருவர் மதிப்போடு நடத்துங்கள்.—எபேசியர் 5:25, 33.
யோசித்து நிதானமாகப் பேசுங்கள்.—நீதிமொழிகள் 12:18.
பொறுமையாக இருங்கள், உடனே உடனே மன்னியுங்கள்.—கொலோசெயர் 3:13, 14.
a “குடும்ப வாழ்க்கையின் வெற்றிக்கு—கடமையுணர்ச்சி” என்ற கட்டுரையைப் பாருங்கள்.