இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
இந்த டிரஸ் எனக்கு எப்படி இருக்கு?
நீங்கள் எந்த மாதிரி டிரஸ் போடுகிறீர்கள் என்பது முக்கியமா? முக்கியம்தான். ஏனென்றால், நீங்கள் எந்த மாதிரி டிரஸ் போடுகிறீர்கள் என்பதை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர் என்று சொல்லிவிட முடியும். உங்கள் டிரஸ் எப்படி இருக்கிறது?
தவறான மூன்று ஃபேஷன் போக்குகளும் அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிகளும்
தவறு #1: விளம்பரங்களில் வருவதுபோல் டிரஸ் பண்ணுவது.
தரீசா என்ற டீனேஜ் பெண் இப்படிச் சொல்கிறாள்: “ஒரு ஃபேஷனை பத்தி விளம்பரங்கள்ல பார்க்க பார்க்க அதே மாதிரி டிரஸ் போடணும்னு எனக்கும் ஆசை வந்துடும். எல்லாரும் புது ஃபேஷன்படி டிரஸ் பண்றத பார்க்குறப்போ நம்ம மனசுலயும் அது ஆழமா பதிஞ்சுடுது. அதுக்கப்புறம் அத போடாம இருக்க முடியாது.”
பெண்கள் மட்டுமல்ல, பையன்களும் விளம்பரங்களைப் பார்த்து மயங்கிவிடுகிறார்கள். “பையன்களும் லேட்டஸ்ட் ஃபேஷன் என்னவென்று பார்த்துதான் டிரஸ் பண்ணுகிறார்கள். அவர்கள் சிறுவர்களாக இருக்கும்போதே ஃபேஷன் விளம்பரதாரர்கள் அவர்களைக் குறிவைத்துவிடுகிறார்கள்” என்று த எவ்ரிதிங் கைடு டு ரெய்சிங் அடாலஸன்ட் பாய்ஸ் என்ற புத்தகம் சொல்கிறது.
மாற்றி யோசியுங்கள்: “விவரம் தெரியாதவன் யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடுகிறான். ஆனால், சாமர்த்தியமாக நடக்கிறவன் ஒவ்வொரு அடியையும் யோசித்துதான் எடுத்து வைக்கிறான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 14:15) அப்படியென்றால், விளம்பரங்களைப் பார்த்தவுடனேயே டிரஸை வாங்கத் துடிக்காமல், கொஞ்சம் மாற்றி யோசிக்கப் பழகிக்கொள்ளுங்கள். உதாரணத்துக்கு, ஒரு டிரஸ் உங்களை “கவர்ச்சியாக,” “க்ளாமராக,” “செக்ஸியாக” காட்டும் என்று ஒரு விளம்பரம் சொல்லும்போது இப்படி யோசியுங்கள்:
‘நான் இந்த டிரஸ் போடுறதுனால உண்மையிலேயே யாருக்கு லாபம்?’
‘நான் இத போட்டா மத்தவங்க என்னை பத்தி என்ன நினைப்பாங்க?’
‘அவங்க அப்படி நினைக்கணுங்கறதுதான் என் ஆசையா?’
டிப்ஸ்: ஒரு வாரத்துக்கு, துணி விளம்பரங்களைப் பார்க்கும்போதெல்லாம் இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டுமென்று இது சொல்கிறது? ட்ரெண்டில் இருக்கும் டிரஸை நீங்களும் போட்டே ஆக வேண்டும் என்று இந்த விளம்பரம் உங்களை நினைக்க வைக்கிறதா? கரென் என்ற டீனேஜ் பெண் இப்படிச் சொல்கிறாள்: “பார்க்க செம்மையா இருக்கணும், கலக்கலா டிரஸ் பண்ணிக்கணும், ‘சிக்குனு’ தெரியணும் அப்படினெல்லாம்தான் நாங்க ஆசைப்படுறோம். விளம்பரம் செய்றவங்க இளைஞர்களோட இந்த ஆசைய சாதகமா பயன்படுத்திக்கிறாங்க.”
தவறு #2: மற்றவர்களைப் போலவே டிரஸ் பண்ண நினைப்பது.
“எல்லாருமே புது ஃபேஷன்படிதான் டிரஸ் பண்ணுவாங்க. நாம மட்டும் வித்தியாசமா டிரஸ் பண்ணுனா நம்மள ஒரு மாதிரி பார்ப்பாங்க” என்று மான்வெல் என்ற டீனேஜ் பையன் சொல்கிறான். ஆனா என்ற டீனேஜ் பெண்ணும் அப்படித்தான் நினைக்கிறாள். “நாம மட்டும் தனியா தெரியாம இருக்குறதுதான் ரொம்ப முக்கியம்” என்று அவள் சொல்கிறாள்.
மாற்றி யோசியுங்கள்: “இந்த உலகத்தின் பாணியைப் பின்பற்றுவதை நிறுத்துங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 12:2) இதை மனதில் வைத்து, உங்களிடம் இருக்கும் துணிமணிகளைக் கொஞ்சம் பாருங்கள். உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்:
‘நான் ஏன் இந்த டிரஸெல்லாம் போட ஆசைப்படுறேன்?’
‘பிரபலமான ப்ராண்டுல டிரஸ் வாங்குறதுதான் முக்கியம்னு நினைக்கிறேனா?’
‘மத்தவங்கள அசத்துற மாதிரி டிரஸ் பண்ணிக்க விரும்புறேனா?’
டிப்ஸ்: ஒரு டிரஸ் ஃபேஷனில் இருக்கிறதா, ஃபேஷனில் இல்லையா என்பதை மட்டுமே யோசிக்காதீர்கள். மூன்றாவதாக ஒரு விஷயத்தையும் யோசியுங்கள். அதாவது, அந்த டிரஸைப் போடும்போது உங்களுக்கு தன்னம்பிக்கை கிடைக்குமா என்றும் பாருங்கள். அப்படித் தன்னம்பிக்கை கிடைக்கும் என்றால், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள்.
தவறு #3: செக்ஸியாக டிரஸ் பண்ணினால்தான் நன்றாக இருக்கும் என்று நினைப்பது.
”உண்மைய சொல்லணும்னா, சிலசமயம் ரொம்ப குட்டையா, டைட்டா, இல்லனா உடம்பை காட்டுற மாதிரி டிரஸ் பண்ணிக்க ஆசையா இருக்கும்” என்று ஜெனிஃபர் என்ற டீனேஜ் பெண் சொல்கிறாள்.
மாற்றி யோசியுங்கள்: “வெளிப்புற அலங்காரம் உங்களுக்கு அலங்காரமாக இருக்க வேண்டாம். அதற்குப் பதிலாக, இதயத்தில் மறைந்திருக்கிற . . . குணம்தான் உங்களுக்கு அழியாத அலங்காரமாக இருக்க வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது. (1 பேதுரு 3:3, 4) கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: நாம் அழகாகத் தெரிவது முக்கியமா அல்லது அழகான குணங்களைக் காட்டுவது முக்கியமா?
டிப்ஸ்: அடக்கம்தான் உண்மையிலேயே உங்களை அழகாக்கும். உண்மைதான், இன்று யாரும் அதை முக்கியமாக நினைப்பதில்லை. ஆனால், இதை யோசித்துப் பாருங்கள்:
யாராவது ஒருவர் உங்களைப் பேசவிடாமல் அவரே பேசிக்கொண்டு இருந்திருக்கிறாரா அல்லது அவரைப் பற்றியே பேசிக்கொண்டு இருந்திருக்கிறாரா? அப்படிப்பட்டவர்கள், மற்ற எல்லாரும் தங்களை ரசிப்பார்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள். உண்மையில், அப்படிப்பட்டவர்களை யாருக்குமே பிடிப்பதில்லை.
நீங்கள் அடக்கம் இல்லாமல் டிரஸ் பண்ணிக்கொண்டால் அவர்களைப் போலத்தான் இருப்பீர்கள். ஏனென்றால், எல்லாரும் உங்களைப் பார்க்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பதை அது காட்டும். அதனால், உங்களுக்கே உங்கள்மேல் நம்பிக்கை இல்லை என்றோ, உங்களைப் பற்றியேதான் யோசிப்பீர்கள் என்றோ மற்றவர்கள் நினைக்கலாம். அவர்களுடைய கவனத்தை ஈர்ப்பதற்காக நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வீர்கள் என்றுகூட நினைக்கலாம். அதனால், தப்பான ஆட்களிடம் நீங்கள் சிக்கிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது.
இதுபோன்ற பிரச்சினையில் சிக்காமல் இருக்க வேண்டுமென்றால், அடக்கமாக டிரஸ் பண்ணுங்கள். “அடக்கமா டிரஸ் பண்ணனும் அப்படிங்கறதுக்காக உங்க பாட்டி காலத்து டிரஸை போட்டுக்கணும்னு கிடையாது. உங்களயும் மத்தவங்களயும் மதிக்கிற மாதிரி டிரஸ் பண்ணனும், அவ்ளோதான்” என்று மோனிக்கா என்ற டீனேஜ் பெண் சொல்கிறாள்.