இயேசுவின் பலி எப்படி ‘பலருக்கு மீட்புவிலையாக’ இருக்கிறது?
பைபிள் தரும் பதில்
இயேசுவின் பலி மூலமாகத்தான் மனிதகுலத்தைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்து கடவுள் மீட்கிறார், அதாவது காப்பாற்றுகிறார். இயேசு சிந்திய இரத்தத்தை “மீட்புவிலை” என்று பைபிள் குறிப்பிடுகிறது. (எபேசியர் 1:7; 1 பேதுரு 1:18, 19) அதனால்தான் இயேசு, ‘பலருடைய உயிருக்கு ஈடாகத் தன்னுடைய உயிரை மீட்புவிலையாகக் கொடுக்க’ வந்ததாகச் சொன்னார்.—மத்தேயு 20:28.
‘பலருக்கு மீட்புவிலை’ ஏன் தேவைப்பட்டது?
முதல் மனிதனாகிய ஆதாம் பரிபூரணமாக, அதாவது பாவமே இல்லாதவனாக, படைக்கப்பட்டான். என்றென்றும் வாழ்வதற்கான வாய்ப்பு அவனுக்கு இருந்தது; ஆனால், கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனபோது அவன் அந்த வாய்ப்பை இழந்தான். (ஆதியாகமம் 3:17-19) அதனால், பாவம் என்ற குறைபாடு அவனுக்கு வந்தது. அந்தப் பாவத்தையும் அதன் விளைவுகளையும் அவன் தன் பிள்ளைகளுக்குக் கடத்தினான். (ரோமர் 5:12) அதனால்தான், ஆதாம் தன்னையும் தன் பிள்ளைகளையும் பாவம் மற்றும் மரணத்திடம் அடிமையாக ‘விற்றான்’ என்று பைபிள் குறிப்பிடுகிறது. (ரோமர் 7:14) இப்படி எல்லாருமே அபூரணர்களாக ஆனதால், ஆதாம் இழந்த பரிபூரணத்தைத் திரும்ப விலைக்கு வாங்க அவர்கள் யாராலுமே முடியவில்லை.—சங்கீதம் 49:7, 8.
ஆதாமின் சந்ததியாருக்கு ஏற்பட்ட இந்த அவல நிலையைப் பார்த்தபோது கடவுள் மனதுருகினார். (யோவான் 3:16) ஆனாலும், தகுந்த காரணம் எதுவுமில்லாமல் அவர்களுடைய பாவங்களைக் கண்டும்காணாமல் விட்டுவிடுவதற்கோ அவற்றை மன்னிப்பதற்கோ அவருடைய நியாய தராதரம் அனுமதிக்கவில்லை. (சங்கீதம் 89:14; ரோமர் 3:23-26) கடவுள் மனிதகுலத்தை நேசிக்கிறார்; அதனால், அவர்களுடைய பாவங்களை மன்னிப்பதற்கு மட்டுமல்ல, அவற்றை முற்றிலுமாகத் துடைத்தழிப்பதற்குத் தேவையான சட்டப்பூர்வ ஏற்பாட்டைச் செய்தார். (ரோமர் 5:6-8) அந்தச் சட்டப்பூர்வ ஏற்பாடுதான் மீட்புவிலை.
மீட்புவிலை எப்படிச் செயல்படுகிறது?
பைபிளிலுள்ள “மீட்புவிலை” என்ற வார்த்தையில் பின்வரும் மூன்று விஷயங்கள் உட்படுகின்றன:
இது கொடுக்கப்படுகிற ஒரு விலையாக இருக்கிறது.—எண்ணாகமம் 3:46, 47.
விடுதலையை, அதாவது மீட்பை, அளிக்கிறது.—யாத்திராகமம் 21:30.
இழந்த ஒன்றை மீட்பதற்குச் செலுத்தப்படுகிற சரிசமமான மதிப்பாக இருக்கிறது.a
இயேசு கிறிஸ்துவின் மீட்புபலியில் இந்த மூன்று விஷயங்களும் எப்படிப் பொருந்துகின்றன என்று கவனியுங்கள்.
கொடுக்கப்படுகிற விலை. கிறிஸ்தவர்கள் ‘விலைக்கு வாங்கப்பட்டார்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 6:20; 7:23) இயேசுவின் இரத்தம்தான் அந்த விலை; அந்த ‘இரத்தத்தால்தான் எல்லா கோத்திரங்களையும் மொழிகளையும் இனங்களையும் தேசங்களையும் சேர்ந்தவர்களிலிருந்து ஆட்களைக் கடவுளுக்காக [அவர்] விலைகொடுத்து வாங்கினார்.’—வெளிப்படுத்துதல் 5:8, 9.
விடுதலை. இயேசு கொடுத்த ‘மீட்புவிலை நமக்கு விடுதலையை,’ ஆம் பாவத்திலிருந்து விடுதலையை, அளித்திருக்கிறது.—1 கொரிந்தியர் 1:30; கொலோசெயர் 1:14; எபிரெயர் 9:15.
சரிசமமானது. இயேசுவின் பலி, ஆதாம் இழந்த பரிபூரண உயிருக்குச் சரிசமமான மதிப்புடையதாக இருக்கிறது. (1 கொரிந்தியர் 15:21, 22, 45, 46) “ஒரே மனிதன் [ஆதாம்] கீழ்ப்படியாமல் போனதால் நிறைய பேர் பாவிகளாக்கப்பட்டது போல, ஒரே மனிதன் [இயேசு கிறிஸ்து] கீழ்ப்படிந்ததால் நிறைய பேர் நீதிமான்களாக்கப்படுவார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 5:19) ஒரேவொரு மனிதனுடைய மரணம் ஏராளமான பாவிகளுக்கு எப்படி மீட்புவிலையாய் ஆக முடியும் என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகிறது. சொல்லப்போனால், இயேசுவின் பலி ‘எல்லாருக்குமே,’ ஆம், அதிலிருந்து நன்மையடைவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கிற எல்லாருக்குமே, “சரிசமமான மீட்புவிலையாக” இருக்கிறது.—1 தீமோத்தேயு 2:5, 6.
a பைபிளில் உள்ள “மீட்புவிலை” என்பதற்கான எபிரெய வார்த்தைகள், கொடுக்கப்படுகிற ஒரு விலையை, அதாவது கொடுக்கப்படுகிற மதிப்புமிக்க ஏதோவொன்றை, குறிக்கிறது. உதாரணத்திற்கு, காஃபார் என்ற எபிரெய வினைச்சொல், “மூடுவது” என்ற அடிப்படை அர்த்தத்தைத் தருகிறது. (ஆதியாகமம் 6:14, புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கிலம்) பொதுவாக, இது பாவத்தை மூடிவிடுவதைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. (சங்கீதம் 85:2, தமிழ் O.V.) இந்த வார்த்தையோடு சம்பந்தப்பட்ட கோஃபர் என்ற பெயர்ச்சொல், அப்படி மூடுவதற்கு, அதாவது மீட்பதற்கு, கொடுக்கப்படுகிற விலையைக் குறிக்கிறது. (யாத்திராகமம் 21:30) இதுபோலவே, “மீட்புவிலை” என்று பொதுவாக மொழிபெயர்க்கப்படுகிற லீட்ரன் என்ற கிரேக்க வார்த்தை, “மீட்டுக்கொள்வதற்கான விலை” என்றுகூட மொழிபெயர்க்கப்படலாம். (மத்தேயு 20:28 த நியு டெஸ்டமென்ட் இன் மாடர்ன் ஸ்பீச், ஆர். எஃப். வேமௌத் எழுதியது) போர்க் கைதியை அல்லது ஒரு அடிமையை விடுவிப்பதற்குக் கொடுக்கிற பணயத் தொகையைக் குறிப்பிடுவதற்கு கிரேக்க எழுத்தாளர்கள் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்.