எசேக்கியேல்
11 கடவுளுடைய சக்தி* அங்கிருந்து என்னைத் தூக்கிக்கொண்டு போய் யெகோவாவுடைய ஆலயத்தின் கிழக்கு நுழைவாசலில் விட்டது.+ அங்கே மக்களின் தலைவர்களான 25 பேரைப் பார்த்தேன். அவர்கள் நடுவே ஆசூரின் மகன் யசினியாவும் பெனாயாவின் மகன் பெலத்தியாவும் இருந்தார்கள்.+ 2 அப்போது கடவுள் என்னிடம், “மனிதகுமாரனே, இந்த ஆட்கள் அக்கிரமம் செய்யத் திட்டம் போடுகிறார்கள். இந்த நகரத்தில் இருக்கிறவர்களுக்குக் கெட்ட ஆலோசனை கொடுக்கிறார்கள். 3 ‘வீடுகளைக் கட்டுவதற்கு இதுதான் நேரம்.+ இந்த நகரம் ஒரு பானை,+ நாம் அதிலுள்ள* இறைச்சி’ என்று சொல்கிறார்கள்.
4 அதனால், அவர்களுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல். மனிதகுமாரனே, தீர்க்கதரிசனம் சொல்”+ என்றார்.
5 அப்போது யெகோவாவின் சக்தியால் நான் நிரப்பப்பட்டேன்.+ அவர் என்னிடம், “நீ இப்படிச் சொல்: ‘யெகோவா சொல்வது இதுதான்: “இஸ்ரவேல் ஜனங்களே, நீங்கள் சொன்னது சரிதான். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். 6 நீங்கள் இந்த நகரத்தில் நிறைய பேரைச் சாகடித்திருக்கிறீர்கள். எல்லா வீதிகளிலும் ஆட்களைக் கொன்று குவித்திருக்கிறீர்கள்”’”+ என்று சொன்னார். 7 “அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் நகரத்தில் குவித்திருக்கிற பிணங்கள்தான் இறைச்சி, இந்த நகரம்தான் பானை.+ ஆனால், நீங்கள் அதிலிருந்து வெளியே எடுக்கப்படுவீர்கள்.’”
8 “‘நீங்கள் எந்த வாளை நினைத்துப் பயப்பட்டீர்களோ+ அதே வாளை உங்களுக்கு எதிராக அனுப்புவேன்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார். 9 ‘உங்களை நகரத்திலிருந்து வெளியே கொண்டுவந்து, மற்ற தேசத்து ஜனங்களின் கையில் கொடுத்து, தண்டிப்பேன்.+ 10 நீங்கள் வாளால் வெட்டிச் சாய்க்கப்படுவீர்கள்.+ இஸ்ரவேலின் எல்லையில் நான் உங்களைத் தண்டிப்பேன்.+ நான் யெகோவா என்று நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.+ 11 அப்போது இந்த நகரம் உங்களுக்கு ஒரு பானையாக இருக்காது, நீங்கள் அதிலுள்ள இறைச்சியாக இருக்க மாட்டீர்கள். இஸ்ரவேலின் எல்லையில் நான் உங்களைத் தண்டிப்பேன். 12 அப்போது, நான் யெகோவா என்று நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். நீங்கள் என்னுடைய விதிமுறைகளின்படி நடக்கவில்லை. என்னுடைய நீதித்தீர்ப்புகளைக் கடைப்பிடிக்காமல்,+ சுற்றியுள்ள தேசங்களுடைய நீதித்தீர்ப்புகளைக் கடைப்பிடித்தீர்கள்.’”+
13 நான் இந்தத் தீர்க்கதரிசனத்தைச் சொன்னவுடனே, பெனாயாவின் மகன் பெலத்தியா இறந்துபோனான். அதனால் நான் சாஷ்டாங்கமாக விழுந்து, “ஐயோ, உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, இஸ்ரவேலில் மீதியாக இருக்கிறவர்களை நீங்கள் அழிக்கப்போகிறீர்களா?”+ என்று கதறினேன்.
14 அப்போது யெகோவா மறுபடியும் என்னிடம், 15 “மனிதகுமாரனே, எருசலேம் ஜனங்கள் இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரிடமும், மீட்கும் உரிமையுள்ள உன்னுடைய சகோதரர்களிடமும், ‘யெகோவாவைவிட்டுத் தூரமாகப் போய்விடுங்கள். தேசம் எங்களுடையது, எங்களுக்குத்தான் சொத்தாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்று சொல்கிறார்கள். 16 அதனால் நீ இப்படிச் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நான் அவர்களைத் தூர தேசங்களுக்குச் சிதறிப்போக வைத்தாலும்+ கொஞ்சக் காலத்துக்கு அங்கே நான் அவர்களுடைய ஆலயமாக இருப்பேன்.”’+
17 “அதனால், நீ இப்படிச் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நீங்கள் சிதறிப்போன தேசங்களிலிருந்து நான் உங்களை மறுபடியும் கூட்டிச் சேர்ப்பேன். உங்களுக்கு இஸ்ரவேல் தேசத்தைக் கொடுப்பேன்.+ 18 நீங்கள் திரும்பி வந்து, அருவருப்பான எல்லா சிலைகளையும் அருவருப்பான எல்லா பழக்கவழக்கங்களையும் ஒழித்துக்கட்டுவீர்கள்.+ 19 நான் உங்களுக்கு ஒரே இதயத்தையும்+ புதிய மனதையும்* கொடுப்பேன்.+ கல் போன்ற இதயத்தை எடுத்துவிட்டு,+ மென்மையான இதயத்தை* உங்களுக்குக் கொடுப்பேன்.+ 20 அப்போது, நீங்கள் என்னுடைய சட்டதிட்டங்களையும் நீதித்தீர்ப்புகளையும் கடைப்பிடிப்பீர்கள். நீங்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பீர்கள், நான் உங்களுடைய கடவுளாக இருப்பேன்.”’
21 ‘“ஆனால், அருவருப்பான சிலைகளையும் அருவருப்பான பழக்கவழக்கங்களையும் விடுவதற்கு மனமில்லாதவர்கள் அதன் விளைவுகளைச் சந்தித்தே தீர வேண்டும்” என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.’”
22 கேருபீன்கள் தங்களுடைய சிறகுகளை விரித்து எழுந்தபோது, சக்கரங்களும் அவர்களோடு எழுந்தன.+ இஸ்ரவேலின் கடவுளுடைய மகிமை அவர்களுக்கு மேலாக இருந்தது.+ 23 பின்பு, யெகோவாவின் மகிமை+ நகரத்தைவிட்டு எழும்பி, நகரத்தின் கிழக்கே இருந்த மலைமேல் போய் நின்றது.+ 24 கடவுளுடைய சக்தியால் நான் பார்த்த தரிசனத்தில், அவருடைய சக்தி* என்னைத் தூக்கிக்கொண்டு போய் கல்தேயாவில் சிறையிருப்பிலிருந்த ஜனங்களிடம் விட்டது. பின்பு, நான் பார்த்துக்கொண்டிருந்த தரிசனம் முடிவுக்கு வந்தது. 25 யெகோவா எனக்குக் காட்டிய எல்லாவற்றையும் சிறையிருப்பிலிருந்த ஜனங்களிடம் சொன்னேன்.