யோவேல்
1 பெத்துயேலின் மகனாகிய யோவேல்* என்பவருக்கு யெகோவாவிடமிருந்து கிடைத்த செய்தி இதுதான்:
உங்கள் வாழ்நாளில் இப்படியொரு காரியம் நடந்திருக்குமா?
உங்கள் முன்னோர்கள் காலத்திலாவது நடந்திருக்குமா?+
3 உங்கள் பிள்ளைகளிடம் இதைப் பற்றிச் சொல்லுங்கள்.
அவர்கள் அவர்களுடைய பிள்ளைகளிடம் சொல்லட்டும்.
அந்தப் பிள்ளைகள் அடுத்த தலைமுறையிடம் சொல்லட்டும்.
4 முதல் வகையான வெட்டுக்கிளிகள்* விட்டுவைத்ததை இரண்டாவது வகையான* வெட்டுக்கிளிகள் தின்றன.+
இரண்டாவது வகையான வெட்டுக்கிளிகள் விட்டுவைத்ததை மூன்றாவது வகையான* வெட்டுக்கிளிகள் தின்றன.
மூன்றாவது வகையான வெட்டுக்கிளிகள் விட்டுவைத்ததை நான்காவது வகையான* வெட்டுக்கிளிகள் தின்றன.+
5 குடிகாரர்களே,+ எழுந்து அழுங்கள்!
திராட்சமது குடிப்பவர்களே, ஒப்பாரி வையுங்கள்!
இனி உங்களுக்குத் தித்திப்பான திராட்சமது கிடைக்காது.+
6 பலம்படைத்த வெட்டுக்கிளிக் கூட்டம் என்னுடைய தேசத்துக்கு வந்தது.+
அதன் பற்கள் சிங்கத்தின் பற்கள்,+ அதன் தாடைகள் சிங்கத்தின் தாடைகள்.
7 என்னுடைய திராட்சைக் கொடியை அது நாசமாக்கியது, அத்தி மரத்தை மொட்டையாக்கியது.
அவற்றின் பட்டைகளை மொத்தமாக உரித்துப் போட்டது.
கிளைகளையும் விட்டுவைக்கவில்லை.
8 மணமகனை இழந்து தவிக்கும் கன்னிப்பெண் போல நீங்கள் புலம்புங்கள்.
அவள் துக்கத் துணி* போட்டுக்கொண்டு கதறுவது போல நீங்கள் கதறுங்கள்.
9 யாருமே யெகோவாவின் ஆலயத்துக்கு உணவையும் திராட்சமதுவையும் காணிக்கையாகக்+ கொண்டுவருவதில்லை.
யெகோவாவுக்குச் சேவை செய்யும் குருமார்கள் அழுது புலம்புகிறார்கள்.
10 வயல்வெளிகள் பாழாய்க் கிடக்கின்றன, நிலங்கள் சோகத்தில் வாடுகின்றன.+
தானியம் நாசமாக்கப்பட்டது, புதிய திராட்சமது தீர்ந்துவிட்டது, எண்ணெயும் காலியாகிவிட்டது.+
11 விவசாயிகள் குழம்பித் தவிக்கிறார்கள், திராட்சைத் தோட்டக்காரர்கள் ஓலமிட்டு அழுகிறார்கள்.
கோதுமையும் பார்லியும் எங்குமே இல்லை.
வயலின் விளைச்சல் எல்லாமே அழிந்துபோனது.
12 திராட்சைக் கொடி வாடிப்போய்விட்டது.
அத்தி மரம் பட்டுப்போய்விட்டது.
மாதுளை, ஆப்பிள், பேரீச்ச மரங்களும் மற்ற எல்லா மரங்களும் காய்ந்துவிட்டன.+
சந்தோஷத்தில் துள்ளிய ஜனங்கள் அவமானப்பட்டு நிற்கிறார்கள்.
13 குருமார்களே! துக்கத் துணியைப் போட்டுக்கொள்ளுங்கள், நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுங்கள்.
பலிபீடத்தில் சேவை செய்கிறவர்களே!+ ஒப்பாரி வையுங்கள்.
என் கடவுளின் ஊழியர்களே! ராத்திரி முழுவதும் துக்கத் துணியை உடுத்தியிருங்கள்.
ஏனென்றால், யாருமே கடவுளுடைய ஆலயத்துக்கு உணவையும் திராட்சமதுவையும் காணிக்கையாகக்+ கொண்டுவருவதில்லை.
14 விரத நாளை அறிவியுங்கள், விசேஷ மாநாட்டுக்கு அழைப்பு கொடுங்கள்.+
பெரியோர்களை வரச் சொல்லுங்கள், தேசத்து ஜனங்களையும் கூப்பிடுங்கள்.
அவர்கள் யெகோவாவின் ஆலயத்துக்கு வரட்டும்,+ உதவி கேட்டு யெகோவாவிடம் கெஞ்சட்டும்.
15 ஐயோ ஆபத்து! யெகோவாவின் நாள் வரப்போகிறது.
அந்த நாள் சீக்கிரத்தில் வரப்போகிறது.+
சர்வவல்லமையுள்ளவர் அந்த நாளில் அழிவைக் கொண்டுவரப்போகிறார்.
16 நம்முடைய கண் முன்னாலிருந்து உணவும்,
நம் கடவுளுடைய ஆலயத்திலிருந்து சந்தோஷமும் காணாமல் போய்விட்டதுதானே?
17 மண்கட்டிகளுக்குக் கீழே* விதைகள்* காய்ந்து கிடக்கின்றன.
சேமிப்புக் கிடங்குகள் காலியாகக் கிடக்கின்றன.
தானியம் இல்லாததால் களஞ்சியங்கள் இடிக்கப்பட்டுக் கிடக்கின்றன.
18 வீட்டு விலங்குகள் முனகுகின்றன.
மேய்ச்சல் நிலம் இல்லாததால் மாடுகள் குழப்பத்தில் திரிகின்றன.
ஆட்டு மந்தைகளும் தண்டனை அனுபவிக்கின்றன.
19 யெகோவாவே, உங்களிடம் நான் வேண்டுகிறேன்.+
வனாந்தரத்தின் மேய்ச்சல் நிலங்கள் நெருப்புக்கு இரையாகிவிட்டன.
மரங்களெல்லாம் தீயில் தீய்ந்துவிட்டன.
20 நீரோடைகள் வற்றிப்போய்விட்டன.
வனாந்தரத்தின் மேய்ச்சல் நிலங்கள் நெருப்புக்கு இரையாகிவிட்டன.
அதனால், காட்டு விலங்குகள்கூட உங்கள் உதவிக்காக ஏங்குகின்றன.”