யோனா
3 அதன்பின், யெகோவா இரண்டாவது தடவையாக யோனாவிடம்,+ 2 “நினிவே மாநகரத்துக்குப்+ புறப்பட்டுப் போ. நான் சொல்கிற செய்தியை அங்கே இருக்கிற ஜனங்களுக்குச் சொல்” என்றார்.
3 யோனாவும் யெகோவாவின் பேச்சுக்குக் கீழ்ப்படிந்து+ நினிவேக்குப்+ போனார். அது மிகப் பெரிய நகரம், அதைச் சுற்றிவருவதற்கு மூன்று நாள் ஆகும். 4 யோனா அங்கே போய் ஒருநாள் முழுவதும் நடந்தபடி,* “இன்னும் நாற்பதே நாளில் நினிவே அழிக்கப்படும்” என்று எல்லாருக்கும் சொன்னார்.
5 அதைக் கேட்டதும் நினிவே ஜனங்கள் கடவுள்மேல் விசுவாசம் வைத்தார்கள்.+ சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாரும் விரதமிருக்க முடிவுசெய்து, துக்கத் துணியை* போட்டுக்கொண்டார்கள். 6 இந்த விஷயம் ராஜாவின் காதுக்கு எட்டியது. உடனே, அவர் சிம்மாசனத்திலிருந்து எழுந்து, ராஜ உடையைக் கழற்றிவிட்டு, துக்கத் துணியைப் போட்டுக்கொண்டார். பின்பு, சாம்பலில் உட்கார்ந்தார். 7 அதுமட்டுமல்ல, நினிவே நகரமெங்கும் ஆட்களை அனுப்பி,
“ராஜாவும் அவருடைய மந்திரிகளும் கட்டளையிடுவது என்னவென்றால், மனிதர்களும் சரி, மிருகங்களும் சரி எதையுமே சாப்பிடக் கூடாது. யாரும் ஆடுமாடுகளுக்குத் தீனி போடக் கூடாது. பச்சைத்தண்ணீர்கூட யார் பல்லிலும் படக் கூடாது. 8 எல்லாரும் துக்கத் துணியைப் போட்டுக்கொள்ள வேண்டும்; மிருகங்களுக்கும் துக்கத் துணியைப் போர்த்த வேண்டும். எல்லாரும் கடவுளிடம் உருக்கமாக வேண்டிக்கொள்ள வேண்டும். வன்முறையையும் மோசமான வழிகளையும் விட்டுவிட வேண்டும். 9 அப்போது, கடவுள் ஒருவேளை அவருடைய முடிவை மாற்றிக்கொள்ளலாம்.* அவருடைய கோபத்தை விட்டுவிட்டு, நமக்கு உயிர்ப்பிச்சை தரலாம்” என்று அறிவிப்பு செய்தார்.
10 உடனே ஜனங்கள் தங்களுடைய மோசமான வழிகளைவிட்டுத் திருந்தினார்கள்;+ அதை உண்மைக் கடவுள் பார்த்தார். அதனால், தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு* அவர்களை அழிக்காமல் விட்டுவிட்டார்.+