லேவியராகமம்
4 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “இஸ்ரவேலர்களைப் பார்த்து நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘செய்யக் கூடாதென்று யெகோவா சொன்ன ஒன்றை யாராவது தெரியாத்தனமாகச் செய்யும்போது,+ பின்பற்ற வேண்டிய சட்டங்கள் இவைதான்:
3 அபிஷேகம் செய்யப்பட்ட குருவானவர்*+ பாவம் செய்து+ ஜனங்களைக் குற்றத்துக்கு ஆளாக்கினால், எந்தக் குறையுமில்லாத இளம் காளையைப் பாவப் பரிகார பலியாக யெகோவாவுக்குச் செலுத்த வேண்டும்.+ 4 சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் யெகோவாவின் முன்னிலையில் அந்தக் காளையைக் கொண்டுவந்து+ அதன் தலையில் தன் கையை வைக்க வேண்டும். யெகோவாவின் முன்னிலையில் அதை வெட்ட வேண்டும்.+ 5 அபிஷேகம் செய்யப்பட்ட குருவானவர்+ அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து சந்திப்புக் கூடாரத்துக்குள் கொண்டுவர வேண்டும். 6 அந்த இரத்தத்தை அவர் தன் விரலில் தொட்டு+ பரிசுத்த இடத்தின் திரைச்சீலைக்கு எதிரில், யெகோவாவின் முன்னிலையில் ஏழு தடவை தெளிக்க வேண்டும்.+ 7 அதோடு, இன்னும் கொஞ்சம் இரத்தத்தை எடுத்து சந்திப்புக் கூடாரத்தில் யெகோவாவின் முன்னிலையில் உள்ள தூபபீடத்தின் கொம்புகளில் பூச வேண்டும்.+ மீதமுள்ள இரத்தம் முழுவதையும் சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்குப் பக்கத்திலுள்ள தகன பலிக்கான பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட வேண்டும்.+
8 பின்பு, பாவப் பரிகார பலியாகச் செலுத்தப்படுகிற காளையின் கொழுப்பு முழுவதையும் அவர் எடுக்க வேண்டும். குடல்களின் மேலும் அவற்றைச் சுற்றிலும் உள்ள கொழுப்பையும், 9 இரண்டு சிறுநீரகங்களையும், அவற்றின் மேலுள்ள கொழுப்பையும், அதாவது இடுப்புப் பகுதியிலுள்ள கொழுப்பையும், எடுக்க வேண்டும். சிறுநீரகங்களை எடுக்கும்போது கல்லீரலின் மேலுள்ள சவ்வையும் எடுக்க வேண்டும்.+ 10 சமாதான பலிக்காகச் செலுத்தப்படுகிற காளையிலிருந்து அவற்றை எடுப்பது போலவே இந்தக் காளையிலிருந்தும் எடுக்க வேண்டும்.+ பின்பு, குருவானவர் தகன பலிக்கான பலிபீடத்தில் அவற்றை எரிக்க வேண்டும்.
11 ஆனால், அந்தக் காளையின் தோல், சதை, தலை, கால்கள், குடல்கள், சாணம் ஆகியவற்றையும்+ 12 மீதமுள்ள எல்லாவற்றையும் முகாமுக்கு வெளியே சாம்பல் கொட்டப்படுகிற சுத்தமான இடத்துக்கு அவர் கொண்டுபோக வேண்டும். அந்த இடத்தில் விறகுகளை வைத்து அவற்றை எரிக்க வேண்டும்.+ அதாவது, சாம்பல் கொட்டப்படுகிற இடத்தில் அவற்றை எரிக்க வேண்டும்.
13 இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் தெரியாத்தனமாகப் பாவம் செய்து,+ அதாவது செய்யக் கூடாதென்று யெகோவா சொன்ன ஏதோவொன்றைத் தெரியாமல் செய்து குற்றத்துக்கு ஆளானால்,+ 14 அந்தப் பாவம் பிற்பாடு தெரியவரும்போது சபையார் தங்களுடைய பாவப் பரிகார பலியாக ஒரு இளம் காளையைச் சந்திப்புக் கூடாரத்துக்கு முன்னால் கொண்டுவர வேண்டும். 15 இஸ்ரவேலின் பெரியோர்கள்* யெகோவாவின் முன்னிலையில் அந்தக் காளையின் தலையில் தங்களுடைய கைகளை வைக்க வேண்டும். அதன்பின், அந்தக் காளை யெகோவாவின் முன்னிலையில் வெட்டப்பட வேண்டும்.
16 பின்பு, அபிஷேகம் செய்யப்பட்ட குருவானவர் அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து சந்திப்புக் கூடாரத்துக்குள் கொண்டுவர வேண்டும். 17 அந்த இரத்தத்தை அவர் தன் விரலில் தொட்டு திரைச்சீலைக்கு+ எதிரில் யெகோவாவின் முன்னிலையில் ஏழு தடவை தெளிக்க வேண்டும். 18 அதோடு, இன்னும் கொஞ்சம் இரத்தத்தை எடுத்து, சந்திப்புக் கூடாரத்தில் யெகோவாவின் முன்னிலையில் உள்ள தூபபீடத்தின் கொம்புகளில்+ பூச வேண்டும். மீதமுள்ள இரத்தம் முழுவதையும் சந்திப்புக் கூடார வாசலுக்குப் பக்கத்திலுள்ள தகன பலிக்கான பலிபீடத்தின்+ அடியில் ஊற்றிவிட வேண்டும். 19 அதன் கொழுப்பு முழுவதையும் எடுத்து பலிபீடத்தின் மேல் எரிக்க வேண்டும்.+ 20 பாவப் பரிகார பலியாகச் செலுத்தப்படுகிற காளைக்குச் செய்வது போலவே இந்தக் காளைக்கும் செய்ய வேண்டும். குருவானவர் அப்படியே செய்து, ஜனங்களுடைய பாவத்துக்காகப் பரிகாரம் செய்ய வேண்டும்.+ அப்போது, அவர்கள் மன்னிக்கப்படுவார்கள். 21 பின்பு, அவர் அந்தக் காளையை முகாமுக்கு வெளியே கொண்டுபோய், முந்தின காளையை எரித்தது போலவே இதையும் எரிக்க வேண்டும்.+ இது இஸ்ரவேல் சபையாருக்காகக் கொடுக்கப்படும் பாவப் பரிகார பலி.+
22 செய்யக் கூடாதென்று யெகோவா சொன்ன ஏதோவொன்றைக் கோத்திரத் தலைவர்+ ஒருவர் தெரியாத்தனமாகச் செய்து குற்றத்துக்கு ஆளானால், 23 அல்லது தான் செய்த ஒரு பாவத்தைப் பற்றிப் பிற்பாடு உணர்ந்தால், எந்தக் குறையுமில்லாத ஒரு வெள்ளாட்டுக் கடாக் குட்டியைப் பலியாகக் கொண்டுவர வேண்டும். 24 அதன் தலையில் அவர் தன் கையை வைக்க வேண்டும். பின்பு, தகன பலிக்கான மிருகங்கள் வெட்டப்படும் இடத்தில் அதை யெகோவாவின் முன்னிலையில் வெட்ட வேண்டும்.+ அது பாவப் பரிகார பலி. 25 பாவத்துக்காகச் செலுத்தப்படும் பலியின் இரத்தத்தில் கொஞ்சத்தைக் குருவானவர் தன்னுடைய விரலில் தொட்டு, தகன பலிக்கான பலிபீடத்தின் கொம்புகளில் பூச வேண்டும்.+ மீதமுள்ள இரத்தத்தை அந்தப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட வேண்டும்.+ 26 சமாதான பலியின் கொழுப்பை எரிப்பது போலவே இதன் கொழுப்பு முழுவதையும் பலிபீடத்தில் எரிக்க வேண்டும்.+ இப்படி, கோத்திரத் தலைவர் செய்த பாவத்துக்காகக் குருவானவர் பரிகாரம் செய்ய வேண்டும். அப்போது, அந்தக் கோத்திரத் தலைவருடைய பாவம் மன்னிக்கப்படும்.
27 செய்யக் கூடாதென்று யெகோவா சொன்ன ஏதோவொன்றை ஜனங்களில் ஒருவன் தெரியாத்தனமாகச் செய்து குற்றத்துக்கு ஆளானால்,+ 28 அல்லது தான் செய்த ஒரு பாவத்தைப் பற்றிப் பிற்பாடு உணர்ந்தால், அந்தப் பாவத்துக்காக எந்தக் குறையுமில்லாத ஒரு பெண் வெள்ளாட்டுக் குட்டியைப் பலியாகக் கொண்டுவர வேண்டும். 29 பாவப் பரிகார பலியாகச் செலுத்தப்படுகிற அந்த வெள்ளாட்டுக் குட்டியின் தலையில் அவன் தன் கையை வைக்க வேண்டும். பின்பு, தகன பலிக்கான மிருகங்கள் வெட்டப்படுகிற இடத்தில் அதை வெட்ட வேண்டும்.+ 30 அதன் இரத்தத்தில் கொஞ்சத்தைக் குருவானவர் தன்னுடைய விரலில் தொட்டு, தகன பலிக்கான பலிபீடத்தின் கொம்புகளில் பூச வேண்டும். மீதமுள்ள இரத்தம் முழுவதையும் அந்தப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட வேண்டும்.+ 31 சமாதான பலியின்+ கொழுப்பை எடுப்பது போலவே அதன் கொழுப்பு முழுவதையும் குருவானவர் எடுத்து பலிபீடத்தில் எரிக்க வேண்டும்.+ அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். இப்படி, அவன் செய்த பாவத்துக்காகக் குருவானவர் பரிகாரம் செய்ய வேண்டும். அப்போது அவனுடைய பாவம் மன்னிக்கப்படும்.
32 பாவப் பரிகார பலியாக அவன் ஒரு செம்மறியாட்டுக் குட்டியைக் கொண்டுவந்தால், அது எந்தக் குறையுமில்லாத பெண் ஆட்டுக்குட்டியாக இருக்க வேண்டும். 33 பாவப் பரிகார பலியாகச் செலுத்தப்படும் அந்த ஆட்டுக்குட்டியின் தலையில் அவன் தன் கையை வைக்க வேண்டும். பின்பு, தகன பலிக்காக மிருகங்கள் வெட்டப்படும் இடத்தில் பாவப் பரிகார பலியாக அதை வெட்ட வேண்டும்.+ 34 அதன் இரத்தத்தில் கொஞ்சத்தைக் குருவானவர் தன்னுடைய விரலில் தொட்டு, தகன பலிக்கான பலிபீடத்தின் கொம்புகளில் பூச வேண்டும்.+ மீதமுள்ள இரத்தம் முழுவதையும் அந்தப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட வேண்டும். 35 சமாதான பலியாகச் செலுத்தப்படும் செம்மறியாட்டுக் கடாக் குட்டியின் கொழுப்பை எடுப்பது போலவே இந்தப் பெண் செம்மறியாட்டுக் குட்டியின் கொழுப்பையும் எடுக்க வேண்டும். பலிபீடத்தில் யெகோவாவுக்குச் செலுத்தப்பட்ட தகன பலிமேல் அதை வைத்து குருவானவர் எரிக்க வேண்டும்.+ இப்படி, அவன் செய்த பாவத்துக்காகக் குருவானவர் பரிகாரம் செய்ய வேண்டும். அப்போது, அவனுடைய பாவம் மன்னிக்கப்படும்’”+ என்றார்.