உபாகமம்
12 பின்பு அவர், “உங்கள் முன்னோர்களின் கடவுளாகிய யெகோவா தருகிற தேசத்தில் நீங்கள் வாழும் காலமெல்லாம் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளும் நீதித்தீர்ப்புகளும் இவைதான். 2 நீங்கள் கைப்பற்றுகிற தேசத்தார் அவர்களுடைய தெய்வங்களை எங்கே வணங்கியிருந்தாலும் சரி, அந்த இடங்களை நீங்கள் அழித்துவிட வேண்டும்.+ உயர்ந்த மலைகளிலோ குன்றுகளிலோ அடர்த்தியான மரங்களின் கீழோ இருக்கிற அந்த இடங்களில் எதையுமே நீங்கள் விட்டுவைக்கக் கூடாது. 3 அவர்களுடைய பலிபீடங்களை இடித்துப்போட வேண்டும், பூஜைத் தூண்களைத் தகர்த்துப்போட வேண்டும்,+ பூஜைக் கம்பங்களை* எரித்துப்போட வேண்டும், தெய்வச் சிலைகளை உடைத்துப்போட வேண்டும்.+ அந்தத் தெய்வங்களின் பெயர்களைக்கூட அங்கிருந்து அழித்துவிட வேண்டும்.+
4 அவர்கள் தங்களுடைய தெய்வங்களை வணங்கும் விதத்தில் நீங்கள் உங்கள் கடவுளாகிய யெகோவாவை வணங்கக் கூடாது.+ 5 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகவும் தான் குடிகொள்வதற்காகவும் உங்கள் கோத்திரங்களின் நடுவில் எந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கிறாரோ அந்த இடத்துக்குப் போய் அவரை வணங்க வேண்டும்.+ 6 உங்களுடைய தகன பலிகளையும்,+ மற்ற பலிகளையும், பத்திலொரு பாகங்களையும்,+ காணிக்கைகளையும்,+ நீங்கள் நேர்ந்துகொண்ட பலிகளையும், நீங்களாகவே விருப்பப்பட்டு செலுத்தும் பலிகளையும்,+ ஆடுமாடுகளின் முதல் குட்டிகளையும் அங்கேதான் கொண்டுவர வேண்டும்.+ 7 அங்கே நீங்களும் உங்களுடைய குடும்பத்தாரும் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் சாப்பிட வேண்டும்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை ஆசீர்வதித்திருப்பதால் எல்லா வேலைகளையும் சந்தோஷமாகச் செய்ய வேண்டும்.+
8 இங்கே நாம் செய்துவருவது போல அங்கே செய்யக் கூடாது. இங்கே அவரவர் இஷ்டப்படி செய்துவருகிறீர்கள். 9 ஏனென்றால், உங்களுடைய கடவுளாகிய யெகோவா உங்களுக்குச் சொத்தாகக் கொடுக்கப்போகிற தேசத்தில்+ நீங்கள் இன்னும் குடியேறவில்லை. 10 நீங்கள் யோர்தானைக் கடந்துபோய்+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கப்போகிற தேசத்தில் குடியேறும்போது, சுற்றியுள்ள எதிரிகளின் தொல்லைகள் எதுவும் இல்லாமல் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் அவர் உங்களை வாழ வைப்பார்.+ 11 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகத் தேர்ந்தெடுக்கிற இடத்துக்கு+ நான் சொல்கிற எல்லாவற்றையும் நீங்கள் கொண்டுவர வேண்டும். அதாவது உங்களுடைய தகன பலிகளையும், மற்ற பலிகளையும், பத்திலொரு பாகங்களையும்,+ காணிக்கைகளையும், நீங்கள் நேர்ந்துகொண்ட எல்லா பலிகளையும் யெகோவாவுக்குக் கொண்டுவர வேண்டும். 12 நீங்களும் உங்களுடைய மகன்களும் மகள்களும், உங்களிடம் அடிமைகளாக இருக்கிற ஆண்களும் பெண்களும் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு முன்னால் சந்தோஷமாக இருக்க வேண்டும்.+ தங்களுக்கென்று எந்தப் பங்கும் சொத்தும் கொடுக்கப்படாமல் உங்கள் நகரங்களில் வாழ்கிற லேவியர்களும்+ அதேபோல் சந்தோஷமாக இருக்க வேண்டும். 13 உங்களுக்கு இஷ்டமான இடங்களிலெல்லாம் தகன பலிகளைச் செலுத்தாதபடி எச்சரிக்கையாக இருங்கள்.+ 14 உங்களுடைய கோத்திரங்களின் நடுவில் யெகோவா எந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கிறாரோ அங்குதான் நீங்கள் தகன பலிகளைச் செலுத்த வேண்டும். நான் சொல்கிற எல்லாவற்றையும் அங்குதான் செய்ய வேண்டும்.+
15 இறைச்சி சாப்பிட வேண்டுமென்று எப்போது ஆசைப்பட்டாலும் அதைச் சாப்பிடலாம்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் நகரங்களில் உங்களுக்கு எந்தளவு இறைச்சியைத் தந்து ஆசீர்வதித்திருக்கிறாரோ அந்தளவு அதைச் சாப்பிடலாம். தீட்டுள்ளவரும் சரி, தீட்டில்லாதவரும் சரி, மான் இறைச்சியை* சாப்பிடுவதுபோல் அதையும் சாப்பிடலாம். 16 ஆனால் நீங்கள் அதன் இரத்தத்தைச் சாப்பிடக் கூடாது,+ தண்ணீரைப் போல அதைத் தரையில் ஊற்றிவிட வேண்டும்.+ 17 தானியம், புதிய திராட்சமது, எண்ணெய், ஆடுமாடுகளின் முதல் குட்டிகள், நீங்கள் நேர்ந்துகொண்ட பலிகள், நீங்களாகவே விருப்பப்பட்டு செலுத்தும் பலிகள், காணிக்கைகள் ஆகியவற்றில் பத்திலொரு பாகத்தை உங்கள் நகரங்களுக்கு உள்ளே சாப்பிடக் கூடாது.+ 18 அவற்றை உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில், உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்தில்தான் சாப்பிட வேண்டும்.+ நீங்களும், உங்கள் மகனும், மகளும், வேலைக்காரனும், வேலைக்காரியும், உங்கள் நகரங்களில் வாழ்கிற லேவியர்களும் அவற்றைச் சாப்பிட வேண்டும். உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் நீங்கள் என்ன வேலை செய்தாலும் அதைச் சந்தோஷமாகச் செய்ய வேண்டும். 19 நீங்கள் அந்தத் தேசத்தில் வாழும் காலமெல்லாம் லேவியர்களை அசட்டை செய்யாதபடி கவனமாக இருக்க வேண்டும்.+
20 உங்கள் கடவுளாகிய யெகோவா வாக்குறுதி தந்தபடி உங்கள் எல்லையை+ விரிவுபடுத்தும் சமயத்தில்,+ நீங்கள் இறைச்சி சாப்பிட ஆசைப்பட்டால் அதைச் சாப்பிடலாம்; ஆசைப்படும்போதெல்லாம் அதைச் சாப்பிடலாம்.+ 21 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகத் தேர்ந்தெடுக்கிற இடம்+ ரொம்பத் தூரத்தில் இருந்தால், யெகோவா கொடுத்திருக்கிற ஆடுமாடுகள் சிலவற்றை வெட்டி நீங்கள் சாப்பிடலாம். நான் உங்களுக்குக் கட்டளை கொடுத்தபடியே, ஆசைப்படும்போதெல்லாம் உங்கள் நகரங்களுக்கு உள்ளே அதைச் சாப்பிடலாம். 22 தீட்டுள்ளவரும் சரி, தீட்டில்லாதவரும் சரி, மான் இறைச்சியை* சாப்பிடுவதுபோல்+ அதையும் சாப்பிடலாம். 23 ஆனால், அதன் இரத்தத்தைச் சாப்பிடக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருங்கள்.+ இரத்தத்தில் உயிர் இருப்பதால்+ இறைச்சியை இரத்தத்தோடு சாப்பிடக் கூடாது. 24 இரத்தத்தை நீங்கள் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது. தண்ணீரைப் போல அதைத் தரையில் ஊற்றிவிட வேண்டும்.+ 25 நீங்கள் அதைச் சாப்பிடவே கூடாது. அப்போதுதான், நீங்களும் உங்களுடைய வம்சத்தாரும் சந்தோஷமாக வாழ்வீர்கள், யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்கிறவர்களாகவும் இருப்பீர்கள். 26 யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்துக்கு நீங்கள் வரும்போது, உங்களுடைய பரிசுத்த பொருள்களையும் நீங்கள் நேர்ந்துகொண்ட பலிகளையும் மட்டுமே கொண்டுவர வேண்டும். 27 அங்கே உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பலிபீடத்தில் இறைச்சியையும் இரத்தத்தையும்+ தகன பலியாகச் செலுத்த வேண்டும். நீங்கள் செலுத்துகிற பலிகளின் இரத்தத்தை உங்கள் கடவுளாகிய யெகோவாவுடைய பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட வேண்டும்.+ ஆனால், இறைச்சியை நீங்கள் சாப்பிடலாம்.
28 நான் உங்களுக்குக் கொடுக்கிற இந்தக் கட்டளைகள் எல்லாவற்றையும் கவனமாகக் கடைப்பிடியுங்கள். அப்போதுதான், நீங்களும் உங்களுடைய வம்சத்தாரும் எப்போதும் சந்தோஷமாக வாழ்வீர்கள். உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பார்வையில் எது நல்லதோ, எது சரியானதோ அதையே செய்கிறவர்களாக இருப்பீர்கள்.
29 உங்கள் கடவுளாகிய யெகோவா, நீங்கள் கைப்பற்றப்போகிற தேசத்திலுள்ள ஜனங்களை அழித்துவிட்டு+ உங்களை அங்கே குடியேற்றும்போது, 30 நீங்கள் படுகுழியில் விழாதபடி எச்சரிக்கையாக இருங்கள். அந்த ஜனங்கள் அவர்களுடைய தெய்வங்களை எப்படியெல்லாம் வணங்கினார்கள் என்று விசாரிக்காதீர்கள். ‘நானும் அப்படியே செய்வேன்’+ என்று சொல்லாதீர்கள். 31 உங்கள் கடவுளாகிய யெகோவாவை நீங்கள் அப்படி வணங்கக் கூடாது. ஏனென்றால், அந்த ஜனங்கள் தங்களுடைய தெய்வங்களை வணங்கும்போது யெகோவா அருவருக்கிற எல்லாவற்றையும் செய்கிறார்கள், தங்கள் மகன்களையும் மகள்களையும்கூட அந்தத் தெய்வங்களுக்காக நெருப்பில் பலி கொடுக்கிறார்கள்.+ 32 நான் கொடுக்கிற எல்லா கட்டளைகளையும் நீங்கள் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.+ அதில் ஒன்றையும் கூட்டவும் கூடாது, குறைக்கவும் கூடாது”+ என்றார்.