1 நாளாகமம்
15 பின்பு, ‘தாவீதின் நகரத்தில்’ தனக்காக நிறைய அரண்மனைகளை தாவீது கட்டினார்; உண்மைக் கடவுளின் பெட்டியை வைக்க இடம் ஒதுக்கி அதற்கு ஒரு கூடாரத்தைப் போட்டார்.+ 2 அப்போது அவர், “லேவியர்களைத் தவிர வேறு யாரும் உண்மைக் கடவுளின் பெட்டியைச் சுமக்கக் கூடாது. யெகோவாவின் பெட்டியைச் சுமப்பதற்கும் அவருக்கு என்றென்றும் சேவை செய்வதற்கும் அவர்களைத்தான் யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறார்”+ என்று சொன்னார். 3 பின்பு, யெகோவாவின் பெட்டிக்காகத் தான் தயார் செய்திருந்த இடத்துக்கு அதைக் கொண்டுவர இஸ்ரவேலர்கள் எல்லாரையும் தாவீது எருசலேமில் ஒன்றுகூட்டினார்.+
4 ஆரோனின் வம்சத்தில் வந்தவர்களையும்+ மற்ற லேவியர்களையும்+ தாவீது ஒன்றுகூட்டினார். 5 கோகாத்தியர்களில் தலைவர் ஊரியேலும் அவருடைய சகோதரர்கள் 120 பேரும் வந்தார்கள்; 6 மெராரியர்களில் தலைவர் அசாயாவும்+ அவருடைய சகோதரர்கள் 220 பேரும் வந்தார்கள்; 7 கெர்சோமியர்களில் தலைவர் யோவேலும்+ அவருடைய சகோதரர்கள் 130 பேரும் வந்தார்கள்; 8 எலிசாப்பான்+ வம்சத்தில் தலைவர் செமாயாவும் அவருடைய சகோதரர்கள் 200 பேரும் வந்தார்கள்; 9 எப்ரோன் வம்சத்தில் தலைவர் ஏலியேலும் அவருடைய சகோதரர்கள் 80 பேரும் வந்தார்கள்; 10 ஊசியேல்+ வம்சத்தில் தலைவர் அம்மினதாபும் அவருடைய சகோதரர்கள் 112 பேரும் வந்தார்கள்; 11 பின்பு, குருமார்களான சாதோக்கையும்+ அபியத்தாரையும்+ லேவியர்களான ஊரியேல், அசாயா, யோவேல், செமாயா, ஏலியேல், அம்மினதாப் ஆகியோரையும் தாவீது வரவழைத்தார். 12 அவர்களிடம், “நீங்கள்தான் லேவி வம்சத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவர்கள்; அதனால், நீங்களும் உங்களுடைய சகோதரர்களும் உங்களைப் புனிதப்படுத்திக்கொண்டு, நான் தயார்செய்த இடத்துக்கு இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் பெட்டியை எடுத்துக்கொண்டு வாருங்கள். 13 முதல் தடவை, அந்தப் பெட்டியை நீங்கள் சுமந்துகொண்டு வராததால்+ நம் கடவுளாகிய யெகோவா பயங்கர கோபமடைந்து நம்மைத் தாக்கினார்.+ ஏனென்றால், நாம் சரியான முறையைத்+ தெரிந்துகொள்ள முயற்சி செய்யாமல் இருந்துவிட்டோம்” என்று சொன்னார். 14 அதனால், இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் பெட்டியை எடுத்துவருவதற்காக, குருமார்களும் லேவியர்களும் தங்களைப் புனிதப்படுத்திக்கொண்டார்கள்.
15 பின்பு, உண்மைக் கடவுளின் பெட்டியில் செருகப்பட்டிருந்த கம்புகளை+ லேவியர்கள் தங்களுடைய தோள்களில் வைத்து அந்தப் பெட்டியைச் சுமந்துகொண்டு போனார்கள். மோசே மூலம் யெகோவா கொடுத்த கட்டளையின்படியே செய்தார்கள். 16 தாவீது லேவியர்களின் தலைவர்களிடம், “யாழ்களையும்+ மற்ற நரம்பிசைக் கருவிகளையும் வாசித்து, ஜால்ராக்களைத்+ தட்டி, சந்தோஷமாகப் பாடுவதற்காக உங்கள் சகோதரர்களான பாடகர்களை நியமியுங்கள்” என்று சொன்னார்.
17 அதனால், யோவேலின் மகன் ஏமானையும்+ அவருடைய சகோதரர்களில் பெரகியாவின் மகன் ஆசாப்பையும்,+ தங்கள் சகோதரர்களான மெராரியர்களில் குஷாயாவின் மகன் ஏத்தானையும்+ லேவியர்கள் நியமித்தார்கள். 18 சகரியா, பென், யாசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், பெனாயா, மாசெயா, மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, வாயிற்காவலர்களான ஓபேத்-ஏதோம், எயியேல் ஆகிய தங்கள் சகோதரர்களை இரண்டாவது பிரிவாக+ நியமித்தார்கள். 19 பாடகர்களான ஏமான்,+ ஆசாப்,+ ஏத்தான் ஆகியோரை செம்பு ஜால்ராக்களைத்+ தட்டி ஓசையெழுப்ப நியமித்தார்கள். 20 சகரியா, ஆஸியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், மாசெயா, பெனாயா ஆகியோர் நரம்பிசைக் கருவிகளை அல்மோத்*+ இசையில் வாசித்தார்கள். 21 மத்தித்தியா,+ எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்-ஏதோம், எயியேல், அசசியா ஆகியோர் செமினீத்* இசையில்+ யாழ் இசைத்தார்கள், இவர்கள் இசைக் குழுவின் தலைவர்களாக இருந்தார்கள். 22 பெட்டியைச் சுமக்கும் பொறுப்பை லேவியர்களின் தலைவரான கெனானியா+ மேற்பார்வை செய்தார்; ஏனென்றால், அந்த வேலையில் அவர் திறமைசாலியாக இருந்தார். 23 பெரகியாவும் எல்க்கானாவும் பெட்டியைக் காவல்காத்தார்கள். 24 குருமார்களான ஷெபனியா, யொஷபாத், நெதனெயேல், அமாசாய், சகரியா, பெனாயா, எலியேசர் ஆகியோர் உண்மைக் கடவுளின் பெட்டிக்கு முன்னால் எக்காளங்களைச் சத்தமாக ஊதினார்கள்;+ ஓபேத்-ஏதோமும் எகியாவும்கூட பெட்டியைக் காவல்காத்தார்கள்.
25 ஓபேத்-ஏதோமின் வீட்டிலிருந்து+ யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைக் கொண்டுவர தாவீதும் இஸ்ரவேல் பெரியோர்களும்* ஆயிரம் வீரர்களுக்குத் தலைவர்களும் சந்தோஷமாகப் போனார்கள்.+ 26 ஒப்பந்தப் பெட்டியைச் சுமந்துவந்த லேவியர்களுக்கு உண்மைக் கடவுளான யெகோவா உதவி செய்ததால் ஏழு இளம் காளைகளையும் ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும் பலியிட்டார்கள்.+ 27 தாவீதும், பெட்டியைச் சுமந்த எல்லா லேவியர்களும், பாடகர்களும், பெட்டியைச் சுமக்கிற பாடகர்களுக்குத் தலைவரான கெனானியாவும் உயர்தர துணியில் நெய்யப்பட்ட கையில்லாத அங்கியைப் போட்டிருந்தார்கள்; தாவீது நாரிழை* ஏபோத்தையும் போட்டிருந்தார்.+ 28 இஸ்ரவேலர்கள் எல்லாரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்துகொண்டும்,+ ஊதுகொம்பை ஊதிக்கொண்டும், எக்காளங்களை முழங்கிக்கொண்டும்,+ ஜால்ராக்களைத் தட்டிக்கொண்டும், நரம்பிசைக் கருவிகள், யாழ்கள் ஆகியவற்றைச் சத்தமாக இசைத்துக்கொண்டும்+ யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைக் கொண்டுவந்தார்கள்.
29 யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியை ‘தாவீதின் நகரத்துக்கு’+ அவர்கள் கொண்டுவந்தபோது சவுலின் மகளான மீகாள்+ ஜன்னல் வழியாகப் பார்த்தாள்; தாவீது ராஜா துள்ளிக் குதித்து நடனமாடுவதையும் கொண்டாடுவதையும் பார்த்து மனதுக்குள் அவரைக் கேவலமாக நினைத்தாள்.+