1 ராஜாக்கள்
8 அந்தச் சமயத்தில், இஸ்ரவேல் பெரியோர்களை,* அதாவது எல்லா கோத்திரத் தலைவர்களையும் இஸ்ரவேலில் உள்ள தந்தைவழிக் குடும்பத் தலைவர்களையும், சாலொமோன் ஒன்றுகூடி வரச் சொன்னார்.+ ‘தாவீதின் நகரத்திலிருந்து,’+ அதாவது சீயோனிலிருந்து,+ யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைக் கொண்டுபோவதற்காக எருசலேமில் இருந்த சாலொமோன் ராஜாவிடம் அவர்கள் வந்தார்கள். 2 ஏழாம் மாதமான ஏத்தானீம்* மாதத்தில் நடக்கிற பண்டிகையின்போது*+ இஸ்ரவேல் ஆண்கள் எல்லாரும் சாலொமோன் ராஜா முன்னால் ஒன்றுகூடினார்கள். 3 இஸ்ரவேல் பெரியோர்கள் எல்லாரும் வந்தபோது, கடவுளுடைய பெட்டியைக் குருமார்கள் தூக்கினார்கள்.+ 4 யெகோவாவின் பெட்டி, சந்திப்புக் கூடாரம்,+ அதிலிருந்த பரிசுத்த பொருள்கள் ஆகிய எல்லாவற்றையும் குருமார்களும் லேவியர்களும் சுமந்துகொண்டு போனார்கள்.* 5 சாலொமோன் ராஜாவும் அவரால் அழைக்கப்பட்ட இஸ்ரவேலர்கள் எல்லாரும் கடவுளின் பெட்டிக்கு முன்னால் கூடியிருந்தார்கள். அப்போது, எண்ண முடியாதளவுக்கு ஏராளமான ஆடுமாடுகளைப் பலி கொடுத்தார்கள்.+
6 பின்பு, குருமார்கள் யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைக் கொண்டுவந்து அதற்குரிய இடத்தில் வைத்தார்கள்,+ அதாவது ஆலயத்தின் உட்புறத்தில் இருந்த மகா பரிசுத்த அறையில் கேருபீன்களுடைய சிறகுகளின்கீழ் வைத்தார்கள்.+
7 பெட்டி வைக்கப்பட்டிருந்த இடத்தின் மேல் கேருபீன்கள் சிறகுகளை விரித்தபடி இருந்தன; அதனால், அவற்றின் நிழல் அந்தப் பெட்டியின் மீதும் அதன் கம்புகளின் மீதும் விழுந்தது.+ 8 அந்தக் கம்புகள்+ நீளமாக இருந்ததால், மகா பரிசுத்த அறைக்கு முன்னால் இருந்த பரிசுத்த அறையிலிருந்து அவற்றின் முனைகளைப் பார்க்க முடிந்தது, ஆனால் வெளியிலிருந்து அவற்றைப் பார்க்க முடியாது. இந்நாள்வரை அவை அங்கேதான் இருக்கின்றன. 9 மோசே ஓரேபில் இருந்தபோது வைத்த+ இரண்டு கற்பலகைகளைத்+ தவிர வேறெதுவும் அந்தப் பெட்டியில் இருக்கவில்லை. எகிப்து தேசத்திலிருந்து வந்த+ இஸ்ரவேலர்களோடு ஓரேபில் யெகோவா ஒப்பந்தம் செய்த+ சமயத்தில் இந்தக் கற்பலகைகள் அதில் வைக்கப்பட்டன.
10 பரிசுத்த இடத்திலிருந்து குருமார்கள் வெளியே வந்தபோது, மேகம்+ யெகோவாவின் ஆலயத்தைச் சூழ்ந்துகொண்டது.+ 11 யெகோவாவின் ஆலயம் யெகோவாவின் மகிமையால் நிறைந்தது. மேகம் சூழ்ந்துகொண்டதால் அங்கே நின்று சேவை செய்ய குருமார்களால் முடியவில்லை.+ 12 அப்போது சாலொமோன், “யெகோவாவே, கார்மேகத்தில் குடியிருப்பேன் என்று சொன்னீர்களே.+ 13 நான் உங்களுக்காகப் பிரமாண்டமான ஒரு ஆலயத்தைக் கட்டி முடித்திருக்கிறேன்; நீங்கள் என்றென்றும் குடியிருப்பதற்காக நிலையான ஒரு இடத்தைத் தயார் செய்திருக்கிறேன்”+ என்று சொன்னார்.
14 பின்பு ராஜா திரும்பி, அங்கே நின்றுகொண்டிருந்த இஸ்ரவேல் சபையார் எல்லாரையும் பார்த்து அவர்களை ஆசீர்வதித்தார்.+ 15 அப்போது அவர், “இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவைப் புகழ்கிறேன். அவர் தன்னுடைய வாய் திறந்து என் அப்பா தாவீதுக்கு வாக்குக் கொடுத்து, அதைத் தன்னுடைய கையால் நிறைவேற்றியும் இருக்கிறார். 16 அவர் என் அப்பாவிடம், ‘என் மக்களான இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டுவந்தேன். அதுமுதல், என் பெயர் நிலைத்திருப்பதற்காக ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு இஸ்ரவேல் கோத்திரங்கள் நடுவே நான் எந்த நகரத்தையும் தேர்ந்தெடுக்கவில்லை.+ ஆனால், என்னுடைய மக்களான இஸ்ரவேலர்களுக்குத் தலைவனாக தாவீதைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்’ என்று சொல்லியிருந்தார். 17 இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவின் பெயருக்காக ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டுமென்று என் அப்பா தாவீது மனதார ஆசைப்பட்டார்.+ 18 ஆனால் யெகோவா என் அப்பா தாவீதிடம், ‘என் பெயருக்காக ஒரு ஆலயத்தைக் கட்ட நீ மனதார ஆசைப்பட்டாய், அப்படி ஆசைப்பட்டது நல்லதுதான். 19 இருந்தாலும், ஆலயத்தை நீ கட்ட மாட்டாய். உனக்குப் பிறக்கப்போகிற உன் மகன்தான் என் பெயருக்காக ஒரு ஆலயத்தைக் கட்டுவான்’+ என்று சொன்னார். 20 கொடுத்த வாக்கை யெகோவா நிறைவேற்றிவிட்டார். யெகோவா வாக்குக் கொடுத்தபடியே, என் அப்பா தாவீதுக்குப் பிறகு இஸ்ரவேலின் சிம்மாசனத்தில் நான் ராஜாவாக உட்கார்ந்திருக்கிறேன். அதோடு, இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவின் பெயருக்காக ஒரு ஆலயத்தையும் கட்டி முடித்திருக்கிறேன்.+ 21 யெகோவா நம் முன்னோர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தபோது செய்திருந்த ஒப்பந்தம் அடங்கிய பெட்டியை வைப்பதற்காகவும்+ அங்கே ஒரு இடத்தைத் தயார் செய்திருக்கிறேன்” என்று சொன்னார்.
22 பின்பு, யெகோவாவுடைய பலிபீடத்தின் முன்னால் சாலொமோன் நின்றார், இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அவருக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தார்கள். அப்போது அவர் தன்னுடைய கைகளை வானத்துக்கு நேராக விரித்து,+ 23 “இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவே, மேலே வானத்திலோ கீழே பூமியிலோ உங்களைப் போல் வேறெந்தக் கடவுளும் இல்லை.+ நீங்கள் செய்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியிருக்கிறீர்கள், உங்களுடைய வழியில் முழு இதயத்தோடு நடக்கிற ஊழியர்களுக்கு+ மாறாத அன்பைக் காட்டியிருக்கிறீர்கள்.+ 24 உங்களுடைய ஊழியரான என் அப்பா தாவீதுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றியிருக்கிறீர்கள். நீங்கள் வாய் திறந்து சொன்ன வாக்கை இன்றைக்கு உங்கள் கையால் நிறைவேற்றியிருக்கிறீர்கள்.+ 25 இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவே, உங்களுடைய ஊழியரான என் அப்பா தாவீதிடம், ‘நீ என் வழியில் நடந்ததுபோல் உன் வாரிசுகளும் எனக்குக் கீழ்ப்படிந்து என் வழியில் நடந்தால், இஸ்ரவேலின் சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆட்சி செய்ய உனக்கு வாரிசு இல்லாமல் போவதில்லை’+ என்று நீங்கள் கொடுத்திருந்த வாக்கை இப்போது நிறைவேற்றுங்கள். 26 இஸ்ரவேலின் கடவுளே, உங்கள் ஊழியரான என் அப்பா தாவீதுக்குக் கொடுத்த வாக்கு தயவுசெய்து நிறைவேறுவதாக!
27 கடவுளே, நீங்கள் உண்மையிலேயே இந்தப் பூமியில் குடியிருப்பீர்களா?+ வானங்கள், ஏன் வானாதி வானங்கள்கூட, நீங்கள் குடியிருப்பதற்குப் போதாதே!+ அப்படியிருக்கும்போது நான் கட்டிய இந்த ஆலயம் உங்களுக்கு முன்னால் ஒன்றுமே இல்லை!+ 28 யெகோவாவே, என் கடவுளே, இந்த அடியேனின் ஜெபத்தைக் காதுகொடுத்துக் கேளுங்கள், கருணை காட்டச் சொல்லி நான் உங்களிடம் செய்யும் மன்றாட்டைக் கேளுங்கள், உதவி கேட்டு நான் கெஞ்சுவதைக் கேளுங்கள், இன்று உங்கள் முன்னால் இந்த அடியேன் செய்யும் ஜெபத்தைக் கேளுங்கள். 29 ‘என் பெயர் தாங்கிய இடம்’+ என்று இந்த ஆலயத்தைப் பற்றிச் சொன்னீர்களே. அதனால், இந்த இடத்தை நோக்கி உங்களுடைய ஊழியன் செய்கிற ஜெபத்தைக் கேட்பதற்காக இரவும் பகலும் உங்களுடைய கண்கள் இந்த ஆலயத்தின் மேல் இருக்கட்டும்.+ 30 உங்களுடைய கருணைக்காக இந்த அடியேன் கெஞ்சுவதைக் கேளுங்கள். இந்த இடத்தை நோக்கி உங்களுடைய மக்களான இஸ்ரவேலர்கள் செய்யும் வேண்டுதலைக் கேளுங்கள். பரலோகத்திலுள்ள உங்கள் குடியிருப்பிலிருந்து+ கேட்டு எங்களை மன்னியுங்கள்.+
31 தனக்கு எதிராகப் பாவம் செய்ததாக ஒருவன் இன்னொருவன்மீது குற்றம்சாட்டி, ‘நீ பாவம் செய்யவில்லை என்று எனக்குச் சத்தியம்* செய்து கொடு’ என்று கேட்கும் பட்சத்தில், சத்தியம் செய்து கொடுத்தவன் இந்த ஆலயத்திலுள்ள பலிபீடத்துக்கு முன்னால் வரும்போது,+ 32 நீங்கள் பரலோகத்திலிருந்து கேட்டு நீதி வழங்குங்கள். தவறு செய்தவனைக் குற்றவாளி* என்று தீர்ப்பளியுங்கள், அவன் செய்த பாவத்துக்குத் தக்க தண்டனை கொடுங்கள். தவறு செய்யாதவனை நிரபராதி* என்று தீர்ப்பளித்து, அவன் செய்த நீதியான செயல்களுக்காக அவனை ஆசீர்வதியுங்கள்.+
33 உங்களுக்கு எதிராகப் பாவம் செய்துவந்த இஸ்ரவேலர்கள் எதிரியிடம் தோற்றுப்போன பின்பு மனம் திருந்தி உங்களிடம் வந்தால்,+ உங்களுடைய பெயரை மகிமைப்படுத்தி இந்த ஆலயத்தில் ஜெபம் செய்தால், கருணை காட்டச் சொல்லி உங்களிடம் கெஞ்சி மன்றாடினால்,+ 34 அதை நீங்கள் பரலோகத்திலிருந்து கேட்டு உங்களுடைய மக்களான இஸ்ரவேலர்கள் செய்த பாவத்தை மன்னியுங்கள், அவர்களுடைய முன்னோர்களுக்குத் தந்த தேசத்துக்கு அவர்களை மறுபடியும் கொண்டுவாருங்கள்.+
35 அவர்கள் உங்களுக்கு எதிராகத் தொடர்ந்து பாவம் செய்ததால்+ வானம் அடைபட்டு மழை பெய்யாமல் போகும்போது,+ அவர்கள் இந்த இடத்தை நோக்கி ஜெபம் செய்தால், உங்கள் பெயரை மகிமைப்படுத்தினால், அவர்களை நீங்கள் தாழ்த்தியதன்* காரணமாகத் தங்களுடைய பாவத்தைவிட்டுத் திருந்தினால்,+ 36 நீங்கள் பரலோகத்திலிருந்து கேட்டு உங்களுடைய ஊழியர்களும் உங்களுடைய மக்களுமான இஸ்ரவேலர்கள் செய்த பாவத்தை மன்னியுங்கள். அவர்கள் நடக்க வேண்டிய நல்ல வழியைக் கற்றுக்கொடுங்கள்;+ உங்களுடைய மக்களுக்குச் சொத்தாகக் கொடுத்த உங்கள் தேசத்தில் மழை பெய்யப் பண்ணுங்கள்.+
37 தேசத்தில் பஞ்சமோ கொள்ளைநோயோ வரும்போது,+ கடும் வெப்பக் காற்றால் பயிர்கள் கருகிப்போகும்போது, பூஞ்சணம் தொற்றும்போது,+ படையெடுத்துவருகிற வெட்டுக்கிளிகளும் அகோரப் பசிகொண்ட வெட்டுக்கிளிகளும் தாக்கும்போது, இஸ்ரவேல் நகரம் ஒன்றை எதிரி சுற்றிவளைக்கும்போது, கொடிய வியாதியோ வேறு ஏதாவது நோயோ வரும்போது,+ 38 இந்த ஆலயத்துக்கு நேராக தனிநபர்களோ இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்தோ தங்களுடைய கைகளை விரித்து என்ன வேண்டுதல் செய்தாலும்,+ கருணை காட்டச் சொல்லி கெஞ்சினாலும்+ (அவரவருடைய இதயத்தில் இருக்கும் வேதனை அவரவருக்குத்தான் தெரியும்), 39 நீங்கள் குடியிருக்கிற பரலோகத்திலிருந்து+ அவர்களுடைய மன்றாட்டைக் கேளுங்கள், அவர்களை மன்னித்து+ உதவி செய்யுங்கள். ஒவ்வொருவருடைய செயல்களுக்கும் தகுந்த வெகுமதியைக் கொடுங்கள்.+ ஏனென்றால், அவர்களுடைய இதயத்தில் இருப்பது உங்களுக்குத் தெரியும் (ஒவ்வொரு மனிதனுடைய இதயத்தில் இருப்பது உங்களுக்கு மட்டும்தான் நன்றாகத் தெரியும்);+ 40 அப்போது, எங்களுடைய முன்னோர்களுக்கு நீங்கள் கொடுத்த தேசத்தில் காலமெல்லாம் அவர்கள் உங்களுக்குப் பயந்து நடப்பார்கள்.
41 வெகு தூரத்திலுள்ள தேசத்தில் குடியிருக்கிற இஸ்ரவேலர் அல்லாத ஒருவர் உங்களுடைய பெயரை* கேள்விப்பட்டு இங்கே வந்து+ 42 (உங்களுடைய மகத்தான பெயரையும்+ கைபலத்தையும் மகா வல்லமையையும் பற்றி அவர்கள் கேள்விப்படுவார்கள்) இந்த ஆலயத்தை நோக்கி ஜெபம் செய்தால், 43 நீங்கள் குடியிருக்கிற பரலோகத்திலிருந்து+ கேளுங்கள். அந்த நபர் கேட்பதையெல்லாம் கொடுங்கள். அப்போது, உலகத்திலிருக்கிற எல்லா மக்களும் இஸ்ரவேலர்களைப் போலவே உங்களுடைய பெயரைத் தெரிந்துகொண்டு உங்களுக்குப் பயப்படுவார்கள்.+ நான் கட்டிய இந்த ஆலயம் உங்கள் பெயரைத் தாங்கியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வார்கள்.
44 யெகோவாவே, எதிரியோடு போர் செய்ய உங்களுடைய மக்களை நீங்கள் எங்கே அனுப்பினாலும்+ சரி, நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கிற இந்த நகரத்தை நோக்கி,+ உங்கள் பெயருக்காக நான் கட்டிய இந்த ஆலயத்தை நோக்கி,+ அவர்கள் உங்களிடம் ஜெபம் செய்தால்,+ 45 அவர்கள் செய்கிற ஜெபத்தையும் கருணை காட்டச் சொல்லி அவர்கள் செய்கிற மன்றாட்டையும் பரலோகத்திலிருந்து கேட்டு அவர்களுக்கு நீதி வழங்குங்கள்.
46 ஒருவேளை, அவர்கள் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்யும்போது (பாவம் செய்யாத மனிதன் யாருமில்லையே)+ நீங்கள் பயங்கர கோபம்கொண்டு எதிரியின் கையில் அவர்களைச் சிக்க வைத்தால், பக்கத்திலோ தூரத்திலோ இருக்கிற எதிரி தேசத்துக்கு அவர்கள் பிடித்துக்கொண்டு போகப்பட்டால்,+ 47 அந்தத் தேசத்தில் இருக்கும்போது அவர்களுக்குப் புத்திவந்து,+ ‘நாங்கள் பாவம் செய்துவிட்டோம், தப்பு செய்துவிட்டோம், மோசமாக நடந்துவிட்டோம்’+ என்று சொல்லி உங்களிடம் திரும்பி வந்தால்,+ கருணை கேட்டுக் கெஞ்சினால்,+ 48 தங்களைப் பிடித்துக்கொண்டு போன எதிரிகளின் தேசத்தில் இருக்கும்போது முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் உங்களிடம் திரும்பி வந்தால்,+ முன்னோர்களுக்கு நீங்கள் கொடுத்த தேசத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்த நகரத்தையும் உங்கள் பெயருக்காக நான் கட்டிய இந்த ஆலயத்தையும் நோக்கி ஜெபம் செய்தால்,+ 49 அவர்கள் செய்கிற ஜெபத்தையும் கருணை காட்டச் சொல்லி உங்களிடம் செய்கிற மன்றாட்டையும் நீங்கள் குடியிருக்கிற பரலோகத்திலிருந்து+ கேட்டு அவர்களுக்கு நீதி வழங்குங்கள். 50 உங்களுக்கு எதிராகப் பாவம் செய்த உங்களுடைய மக்களை மன்னியுங்கள். உங்களுக்கு விரோதமாக அவர்கள் செய்த எல்லா குற்றங்களையும் மன்னியுங்கள். அவர்களைப் பிடித்துக்கொண்டு போனவர்கள் அவர்களுக்குக் கருணை காட்டும்படி செய்யுங்கள், அப்போது உங்கள் மக்களுக்கு அவர்கள் கருணை காட்டுவார்கள்+ 51 (அவர்கள் உங்களுடைய மக்கள், உங்களுடைய சொத்து.+ நீங்கள் அவர்களை எகிப்திலிருந்து, இரும்பு உலையிலிருந்து,+ வெளியே கொண்டுவந்தீர்கள்).+ 52 உதவி கேட்டு உங்களுடைய ஊழியன் ஜெபம் செய்யும்போது கண்ணோக்கிப் பாருங்கள், கருணை காட்டச் சொல்லி+ இஸ்ரவேல் மக்கள் ஜெபம் செய்யும்போதெல்லாம்* கவனித்துக் கேளுங்கள்.+ 53 உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, எங்களுடைய முன்னோர்களை எகிப்திலிருந்து நீங்கள் கூட்டிக்கொண்டு வந்தபோது உங்களுடைய ஊழியரான மோசேயிடம் சொன்னபடியே, உலகத்திலுள்ள எல்லா மக்களிலிருந்தும் அவர்களைப் பிரித்து உங்களுடைய சொத்தாக ஆக்கியிருக்கிறீர்கள்”+ என்று சொன்னார்.
54 வானத்துக்கு நேராக கைகளை விரித்தபடி யெகோவாவின் பலிபீடத்துக்கு முன்னால் மண்டிபோட்டு சாலொமோன் இந்த முழு ஜெபத்தையும் செய்தார். கருணை காட்டச் சொல்லி யெகோவாவிடம் மன்றாடி முடித்தவுடனே எழுந்து நின்றார்.+ 55 பின்பு இஸ்ரவேல் சபையார் எல்லாரையும் உரத்த குரலில் ஆசீர்வதித்து, 56 “யெகோவாவைப் போற்றிப் புகழ்கிறேன்; அவர் தன்னுடைய மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி அவர்களை நிம்மதியாக வாழ வைத்திருக்கிறார்.+ தன்னுடைய ஊழியரான மோசே மூலம் அவர் கொடுத்த நல்ல வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேறாமல் போகவில்லை.+ 57 நம்முடைய கடவுளான யெகோவா நம் முன்னோர்களுக்குத் துணையாக இருந்ததுபோல் நமக்கும் துணையாய் இருப்பாராக!+ அவர் நம்மைவிட்டுப் போகாமலும் நம்மைக் கைவிடாமலும் இருப்பாராக!+ 58 அவர் நம்மைத் தன்னுடைய பாதையில் நடக்க வைப்பாராக!+ நம்முடைய முன்னோர்களுக்குக் கொடுத்த கட்டளைகளுக்கும் விதிமுறைகளுக்கும் நீதித்தீர்ப்புகளுக்கும் முழு இதயத்தோடு கீழ்ப்படிய நமக்கு உதவி செய்வாராக! 59 கருணை காட்டச் சொல்லி யெகோவாவிடம் நான் செய்த இந்த ஜெபத்தை இரவும் பகலும் நினைவில் வைப்பாராக! அவருடைய ஊழியனான எனக்கும் அவருடைய மக்களான இஸ்ரவேலர்களுக்கும் தேவைக்கேற்ப ஒவ்வொரு நாளும் யெகோவா நீதி வழங்குவாராக! 60 அப்போது, யெகோவாதான் உண்மையான கடவுள், அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை+ என்பதை உலகத்திலுள்ள எல்லா மக்களும் தெரிந்துகொள்வார்கள்.+ 61 அதனால், நீங்கள் இன்றுபோல் என்றும் யெகோவாவுடைய விதிமுறைகளின்படி நடப்பதற்காகவும் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதற்காகவும் நம்முடைய கடவுளுக்கு உங்களுடைய இதயத்தை முழுவதுமாக அர்ப்பணித்துவிடுங்கள்”+ என்று சொன்னார்.
62 பின்பு, ராஜாவும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் சேர்ந்து யெகோவாவுக்கு முன்னால் ஏராளமான பலிகளைக் கொடுத்தார்கள்.+ 63 சாலொமோன் 22,000 மாடுகளையும் 1,20,000 ஆடுகளையும் சமாதான பலியாக+ யெகோவாவுக்குக் கொடுத்தார். இப்படி, ராஜாவும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் யெகோவாவுடைய ஆலயத்தின் அர்ப்பண விழாவை நடத்தினார்கள்.+ 64 இத்தனை தகன பலிகளையும் உணவுக் காணிக்கைகளையும் சமாதான பலிகளின் கொழுப்பையும் கொள்ள முடியாதளவுக்கு யெகோவாவின் சன்னிதியில் இருந்த செம்புப் பலிபீடம்+ சிறியதாக இருந்தது. அதனால், தகன பலிகளையும் உணவுக் காணிக்கைகளையும் சமாதான பலிகளின் கொழுப்பையும்+ கொடுப்பதற்காக யெகோவாவுடைய ஆலயத்தின் முன்னாலிருந்த பிரகாரத்தின் நடுப்பகுதியை ராஜா அன்றைக்குப் புனிதப்படுத்த வேண்டியிருந்தது. 65 லெபோ-காமாத்* தொடங்கி எகிப்தின் பள்ளத்தாக்குவரை* குடியிருந்த இஸ்ரவேல்+ சபையார் எல்லாரும் பெரிய கூட்டமாக அங்கே கூடிவந்திருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து சாலொமோன் ராஜா நம்முடைய கடவுளான யெகோவாவுக்கு முன்னால் மொத்தம் 14 நாட்கள் பண்டிகை கொண்டாடினார், அதாவது முதலில் 7 நாட்களும் அதைத் தொடர்ந்து 7 நாட்களும் கொண்டாடினார்.+ 66 அதற்கு அடுத்த நாள் மக்களை அனுப்பி வைத்தார். அவர்களும் ராஜாவை வாழ்த்திவிட்டு தங்களுடைய வீடுகளுக்கு மிகவும் சந்தோஷமாகத் திரும்பிப் போனார்கள். யெகோவா தன்னுடைய ஊழியரான தாவீதுக்கும் அவருடைய மக்களான இஸ்ரவேலர்களுக்கும் செய்த எல்லா நன்மைகளையும்+ நினைத்து மனமகிழ்ச்சி அடைந்தார்கள்.