லேவியராகமம்
25 சீனாய் மலையில் யெகோவா தொடர்ந்து மோசேயிடம், 2 “நீ இஸ்ரவேல் ஜனங்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நான் கொடுக்கும் தேசத்துக்கு நீங்கள் போன பின்பு,+ யெகோவாவின் கட்டளைப்படி ஓய்வு வருஷத்தில் உங்கள் நிலத்துக்கு ஓய்வு தர வேண்டும்.+ 3 ஆறு வருஷங்களுக்கு நிலத்தில் விதை விதைக்க வேண்டும், திராட்சைக் கொடிகளின் கிளைகளை வெட்ட வேண்டும், விளைச்சலைச் சேகரிக்க வேண்டும்.+ 4 ஆனால், ஏழாம் வருஷத்தில் யெகோவாவின் கட்டளைப்படி நிலத்துக்கு முழு ஓய்வு தர வேண்டும். அப்போது, உங்கள் வயலில் விதை விதைக்கவோ திராட்சைக் கொடிகளின் கிளைகளை வெட்டவோ கூடாது. 5 அறுவடையின்போது சிந்திய தானியத்திலிருந்து தானாக விளைவதை நீங்கள் அறுவடை செய்யக் கூடாது. கிளை வெட்டப்படாத திராட்சைக் கொடிகளிலுள்ள பழங்களைச் சேகரிக்கக் கூடாது. அந்த வருஷத்தில் நிலத்துக்கு முழு ஓய்வு தர வேண்டும். 6 ஆனால், ஓய்வு வருஷத்தில் தானாக விளைவதை நீங்களும் உங்களுடைய ஆண் அடிமைகளும் பெண் அடிமைகளும் கூலியாட்களும் உங்கள் தேசத்தில் குடியேறியிருக்கிற வேறு தேசத்து ஜனங்களும் 7 உங்கள் தேசத்திலுள்ள வீட்டு விலங்குகளும் காட்டு மிருகங்களும் சாப்பிடலாம். நிலத்தில் விளைகிற எல்லாவற்றையும் சாப்பிடலாம்.
8 அடுத்தடுத்த ஏழு ஓய்வு வருஷங்களை நீங்கள் கணக்குப் போட வேண்டும். அதாவது, ஏழு வருஷங்களை ஏழு தடவை பெருக்க வேண்டும். அப்போது, 49 வருஷங்கள் வரும். 9 அந்த ஏழாம் மாதம் பத்தாம் நாளில், ஊதுகொம்பைச் சத்தமாக ஊத வேண்டும். பாவப் பரிகார நாளாகிய அந்த நாளில்,+ ஊதுகொம்பின் சத்தம் தேசமெங்கும் கேட்க வேண்டும். 10 50-ஆம் வருஷத்தை நீங்கள் புனிதமாக்கி, தேசத்திலுள்ள எல்லாருக்கும் விடுதலையை* அறிவிக்க வேண்டும்.+ அந்த வருஷம் உங்களுக்கு விடுதலை* வருஷமாக இருக்கும். அவரவர் தங்களுடைய பரம்பரை நிலத்துக்கும் தங்களுடைய குடும்பத்துக்கும் திரும்பிப்போக வேண்டும்.+ 11 50-ஆம் வருஷம் உங்களுக்கு விடுதலை வருஷமாக இருக்கும். அப்போது உங்கள் வயலில் விதைக்கவோ, அறுவடையின்போது சிந்திய தானியத்திலிருந்து தானாக விளைவதை அறுக்கவோ, கிளை வெட்டப்படாத திராட்சைக் கொடிகளிலுள்ள பழங்களைச் சேகரிக்கவோ கூடாது.+ 12 ஏனென்றால் அது விடுதலை வருஷம். அது உங்களுக்குப் பரிசுத்தமான வருஷம். அப்போது, நிலத்தில் தானாக விளைவதை நீங்கள் சாப்பிடலாம்.+
13 அந்த விடுதலை வருஷத்தில் எல்லாரும் தங்களுடைய பரம்பரை நிலத்துக்குத் திரும்பிப்போக வேண்டும்.+ 14 நீங்கள் ஒருவருக்கு எதையாவது விற்றாலோ ஒருவரிடமிருந்து எதையாவது வாங்கினாலோ, அநியாயம் செய்யக் கூடாது.+ 15 ஒருவரிடமிருந்து நிலத்தை வாங்கும்போது, விடுதலை வருஷத்துக்கு அடுத்துவரும் வருஷங்களைக் கணக்குப் போட்டு, அவற்றின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி விலைகொடுத்து வாங்க வேண்டும். விற்பவன், அந்த வருஷங்களில் தன்னுடைய நிலம் எவ்வளவு விளைச்சல் தரும் என்பதைக் கணக்குப் போட்டு, அதற்குத் தகுந்தபடி விற்க வேண்டும்.+ 16 அடுத்த விடுதலை வருஷம் வருவதற்கு இன்னும் நிறைய வருஷங்கள் இருந்தால், அதன் விலையை அதற்குத் தகுந்தபடி அவன் உயர்த்தலாம். கொஞ்ச வருஷங்களே இருந்தால், விலையை அதற்குத் தகுந்தபடி குறைக்கலாம். ஏனென்றால், அந்த நிலத்தில் எவ்வளவு விளையும் என்பதைக் கணக்கு போட்டுத்தான் அவன் அதை விற்கிறான். 17 நீங்கள் யாருமே மற்றவர்களுக்கு அநியாயம் செய்யக் கூடாது.+ உங்கள் கடவுளுக்குப் பயந்து நடக்க வேண்டும்.+ ஏனென்றால், நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.+ 18 நீங்கள் என் சட்டதிட்டங்களுக்கும் நீதித்தீர்ப்புகளுக்கும் கீழ்ப்படிந்தால், தேசத்தில் பாதுகாப்பாகக் குடியிருப்பீர்கள்.+ 19 நிலம் நல்ல விளைச்சல் தரும்.+ நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டுப் பாதுகாப்பாகக் குடியிருப்பீர்கள்.+
20 ஆனால், “ஏழாம் வருஷத்தில் விதைக்காமலும் அறுவடை செய்யாமலும் இருந்தால் நாங்கள் எதைச் சாப்பிடுவோம்?” என்று நீங்கள் கேட்கலாம்.+ 21 ஆறாம் வருஷத்தில் நான் உங்களை ஆசீர்வதிப்பேன். அப்போது, மூன்று வருஷங்களுக்குத் தேவையான விளைச்சல் உங்களுக்குக் கிடைக்கும்.+ 22 பின்பு, எட்டாம் வருஷத்தில் விதை விதைப்பீர்கள். ஏற்கெனவே கிடைத்த விளைச்சலை ஒன்பதாம் வருஷம்வரை சாப்பிடுவீர்கள், அதாவது அந்த வருஷத்தில் விளைச்சல் கிடைக்கும்வரை அதைச் சாப்பிடுவீர்கள்.
23 நிலத்தை யாருக்கும் நிரந்தரமாக விற்கக் கூடாது,+ ஏனென்றால் தேசம் என்னுடையது.+ என்னைப் பொறுத்தவரை, நீங்கள் என் தேசத்தில் குடியேறிய வேறு தேசத்து ஜனங்கள்.+ 24 நீங்கள் குடியிருக்கும் தேசமெங்கும், நிலத்தை மீட்டுக்கொள்ளும் உரிமையை அதன் சொந்தக்காரருக்குக் கொடுக்க வேண்டும்.
25 உங்களுடைய சகோதரன் ஏழையாகி தன்னுடைய நிலத்தில் கொஞ்சத்தை விற்றுவிட்டால், அவனுடைய நெருங்கிய சொந்தக்காரன் வந்து அதை மீட்க வேண்டும்.+ 26 அப்படி மீட்க யாரும் இல்லாவிட்டால், அதை மீட்கும் அளவுக்கு அவனுக்கே வசதி வந்துவிட்டால், 27 நிலத்தை விற்ற வருஷத்திலிருந்து அதில் விளைந்ததன் மதிப்பை அவன் கணக்குப் பார்த்து, அந்தத் தொகையைக் கழித்துவிட்டு மீதி தொகையை மட்டும் விலையாகக் கொடுக்க வேண்டும். பின்பு, அவன் தன்னுடைய நிலத்துக்குத் திரும்பிப்போகலாம்.+
28 வாங்கியவனிடமிருந்து அதை மீட்க ஒருவேளை அவனுக்கு வசதி இல்லையென்றால், விடுதலை வருஷம்வரை அந்த நிலம் அதை வாங்கியவனின் கையில் இருக்கும்.+ விடுதலை வருஷத்தில் அது விற்றவனுக்குக் கைமாறிவிடும். அவன் தன்னுடைய நிலத்துக்குத் திரும்பிப்போவான்.+
29 மதில் சூழ்ந்த நகரத்திலுள்ள வீட்டை ஒருவன் விற்றால், அதை ஒரு வருஷத்துக்குள் மீட்டுக்கொள்ள வேண்டும். அதை மீட்டுக்கொள்ளும் உரிமை+ ஒரு வருஷத்துக்கு மட்டும்தான் இருக்கும். 30 மதில் சூழ்ந்த நகரத்திலுள்ள அந்த வீட்டை ஒரு வருஷத்துக்குள் மீட்டுக்கொள்ளாவிட்டால், தலைமுறை தலைமுறைக்கும் அது வாங்கியவனுடைய நிரந்தர சொத்தாக ஆகிவிடும். விடுதலை வருஷத்திலும்கூட அவன் அதைத் திருப்பித் தரக் கூடாது. 31 ஆனால், மதில் இல்லாத பகுதிகளிலுள்ள வீடுகளைக் கிராமப்புற வயல்நிலத்தைப் போலக் கருத வேண்டும். அவற்றை எப்போது வேண்டுமானாலும் மீட்டுக்கொள்கிற உரிமை அவனுக்கு இருக்கிறது. வாங்கியவன் விடுதலை வருஷத்தில் அவற்றைத் திருப்பித் தர வேண்டும்.
32 லேவியர்களின் நகரங்களிலுள்ள வீடுகளைப் பொறுத்தவரை,+ அவற்றை எப்போது வேண்டுமானாலும் மீட்டுக்கொள்கிற உரிமை லேவியர்களுக்கு இருக்கிறது. 33 ஒரு லேவியன் தன்னுடைய நகரத்திலுள்ள ஒரு வீட்டை விற்றபின் அதை மீட்டுக்கொள்ளாவிட்டால், அந்த வீடு விடுதலை வருஷத்தில் அவனுக்குத் திருப்பித் தரப்படும்.+ ஏனென்றால், இஸ்ரவேலர்களின் தேசத்தில் லேவியர்களின் நகரங்களிலுள்ள வீடுகள் அவர்களுடைய சொத்து.+ 34 அவர்களுடைய நகரங்களைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களை+ விற்கக் கூடாது. ஏனென்றால், அவை அவர்களுடைய நிரந்தர சொத்து.
35 உங்களுக்குப் பக்கத்தில் குடியிருக்கிற உங்கள் சகோதரன் ஏழையாகி வயிற்றுப்பிழைப்புக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டால், உங்கள் தேசத்தில் குடியேறியிருக்கிற வேறு தேசத்து ஜனங்களைக் கவனித்துக்கொள்வது போல+ நீங்கள் அவனைக் கவனித்துக்கொள்ள வேண்டும்.+ அப்போது, உங்களோடு அவனும் பிழைப்பான். 36 அவனிடமிருந்து வட்டி வாங்கக் கூடாது, அவனை வைத்து லாபம் சம்பாதிக்கக் கூடாது.+ உங்கள் கடவுளுக்குப் பயந்து நடக்க வேண்டும்.+ அப்போது, உங்களோடு உங்கள் சகோதரனும் பிழைப்பான். 37 அவனுக்கு உங்கள் பணத்தை வட்டிக்குக் கொடுக்கக் கூடாது,+ உங்கள் உணவுப் பொருளை லாபத்துக்கு விற்கக் கூடாது. 38 உங்கள் கடவுளாகிய யெகோவா நான்தான். உங்களுக்கு கானான் தேசத்தைத் தருவதற்கும், நானே உங்கள் கடவுள்+ என்று நிரூபிப்பதற்கும் உங்களை எகிப்து தேசத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தவர் நான்தான்.+
39 உங்கள் பக்கத்தில் குடியிருக்கிற சகோதரன் ஏழையாகி உங்களிடம் தன்னை விற்றுவிட்டால்,+ அடிமைபோல் அவனிடம் வேலை வாங்கக் கூடாது.+ 40 கூலியாட்களையும் உங்கள் தேசத்தில் குடியேறியிருக்கிற ஆட்களையும் நடத்துவதுபோல் நீங்கள் அவனை நடத்த வேண்டும்.+ விடுதலை வருஷம்வரை அவன் உங்களுக்கு வேலை செய்ய வேண்டும். 41 அதன்பின், பிள்ளைகளோடு அவன் தன் குடும்பத்தாரிடம் திரும்பிப்போக வேண்டும். அவன் தன்னுடைய முன்னோர்களின் நிலத்துக்கே திரும்பிப்போக வேண்டும்.+ 42 ஏனென்றால், எகிப்து தேசத்திலிருந்து நான் கூட்டிக்கொண்டு வந்த இஸ்ரவேலர்கள் என்னுடைய அடிமைகள்.+ அவர்கள் மற்றவர்களுக்குத் தங்களை அடிமையாக விற்கக் கூடாது.* 43 நீங்கள் உங்களுடைய சகோதரனைக் கொடூரமாக நடத்தக் கூடாது,+ உங்கள் கடவுளுக்குப் பயந்து நடக்க வேண்டும்.+ 44 ஒரு ஆணையோ பெண்ணையோ அடிமையாக வாங்க வேண்டுமென்றால் சுற்றியுள்ள தேசங்களிலிருந்து வாங்கலாம். 45 அதோடு, உங்கள் தேசத்தில் குடியேறியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களையும்+ உங்கள் தேசத்தில் அவர்களுக்குப் பிறந்தவர்களையும் அடிமைகளாக வாங்கலாம். அவர்கள் உங்களுடைய சொத்து. 46 உங்களுக்குப்பின் உங்களுடைய பிள்ளைகளுக்கு அவர்களை நிரந்தர சொத்தாகக் கொடுக்கலாம். அவர்களை வேலையாட்களாக வைத்துக்கொள்ளலாம். ஆனால், உங்கள் சகோதரர்களாகிய இஸ்ரவேலர்களைக் கொடூரமாக நடத்தக் கூடாது.+
47 உங்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களில் ஒருவன் பணக்காரனாக இருக்கும்போது, அவனுக்குப் பக்கத்தில் குடியிருக்கிற உங்கள் சகோதரன் ஏழையாகி அவனிடமோ அவன் குடும்பத்தாரில் ஒருவனிடமோ தன்னை விற்றுவிட்டால், 48 தன்னை எப்போது வேண்டுமானாலும் மீட்டுக்கொள்ள அவனுக்கு உரிமை இருக்கிறது. அவனுடைய அண்ணனோ, தம்பியோ, 49 அவனுடைய அப்பாவின் சகோதரனோ, அந்தச் சகோதரனின் மகனோ, அவனுடைய நெருங்கிய சொந்தக்காரர்களில்* வேறொருவனோ அவனை மீட்கலாம்.+
ஒருவேளை அவன் பணக்காரனாக ஆகிவிட்டால், அவனே தன்னை மீட்டுக்கொள்ள வேண்டும்.+ 50 அவன் தன்னை விற்றதுமுதல் விடுதலை வருஷம்வரை உள்ள வருஷங்களைக் கணக்குப் போட வேண்டும்.+ தன்னை விற்ற தொகையைக் கணக்குப் போட்டு, மீதமுள்ள வருஷங்களுக்கான விலையைக் கொடுத்து தன்னை மீட்டுக்கொள்ள வேண்டும்.+ அவன் வேலை செய்த நாட்களுக்கான கூலியை, ஒரு கூலியாளுக்குக் கொடுக்கப்படும் கூலியைப் போலக் கணக்கிட வேண்டும்.+ 51 விடுதலை வருஷத்துக்கு இன்னும் நிறைய வருஷங்கள் இருந்தால், மீதமுள்ள வருஷங்களுக்குத் தகுந்த விலையைக் கொடுத்து தன்னை மீட்டுக்கொள்ள வேண்டும். 52 ஆனால், விடுதலை வருஷத்துக்கு இன்னும் சில வருஷங்களே இருந்தால், மீதமுள்ள வருஷங்களுக்குத் தகுந்த விலையைக் கணக்குப் போட்டுக் கொடுத்து தன்னை மீட்டுக்கொள்ள வேண்டும். 53 அடிமையாக இருக்கும் வருஷங்களில் அவனுடைய எஜமானுக்கு அவன் ஒரு கூலியாள் போல இருக்க வேண்டும். அவனுடைய எஜமான் அவனைக் கொடூரமாக நடத்தாதபடி நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.+ 54 இப்படி அவனால் தன்னை மீட்டுக்கொள்ள முடியாவிட்டால், விடுதலை வருஷத்தில் அவனும் அவன் பிள்ளைகளும் விடுதலையாவார்கள்.+
55 ஏனென்றால், இஸ்ரவேலர்கள் எனக்குச் சொந்தமான அடிமைகள், எகிப்து தேசத்திலிருந்து நான் கூட்டிக்கொண்டுவந்த என் அடிமைகள்.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா’” என்றார்.