யோவானின் முதலாம் கடிதம்
3 நாம் கடவுளுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுகிறோம் என்றால், பரலோகத் தகப்பன் எந்தளவுக்கு நம்மேல் அன்பு காட்டியிருக்கிறார் என்று பாருங்கள்!+ நாம் அவருடைய பிள்ளைகளாகவே இருக்கிறோம்.+ இந்த உலகம் அவரைப் பற்றித் தெரியாமல் இருப்பதால்தான்+ நம்மைப் பற்றியும் தெரியாமல் இருக்கிறது.+ 2 அன்புக் கண்மணிகளே, நாம் இப்போது கடவுளுடைய பிள்ளைகளாக இருக்கிறோம்.+ ஆனால், இனி நாம் எந்த விதத்தில் இருப்போம் என்பது இன்னும் நமக்கு வெளிப்படுத்தப்படவில்லை.+ இருந்தாலும், அவர் வெளிப்படும்போது நாம் அவரைப் போலவே இருப்போம் என்பது நமக்குத் தெரியும். ஏனென்றால், அவர் எந்த விதத்தில் இருக்கிறாரோ அந்த விதத்திலேயே அவரைப் பார்ப்போம். 3 இந்த நம்பிக்கையோடு இருக்கிற ஒவ்வொருவனும், அவர் சுத்தமாக இருப்பதைப் போலவே தன்னையும் சுத்தமாக்கிக்கொள்கிறான்.+
4 பாவம் செய்துகொண்டே இருக்கிற ஒவ்வொருவனும் சட்டத்தை மீறி நடக்கிறான். சட்டத்தை மீறுவதுதான் பாவம். 5 நம்முடைய பாவங்களைப் போக்குவதற்காகக் கிறிஸ்து வந்தார்+ என்றும் உங்களுக்குத் தெரியும். அவரிடம் பாவமே இல்லை. 6 அவரோடு ஒன்றுபட்டிருக்கிற யாரும் பாவம் செய்துகொண்டே இருப்பதில்லை;+ பாவம் செய்துகொண்டே இருக்கிற யாரும் அவரைப் பார்த்ததும் இல்லை, அவரைப் பற்றித் தெரிந்துகொண்டதும் இல்லை. 7 சின்னப் பிள்ளைகளே, நீங்கள் யாரிடமும் ஏமாந்துவிடாதீர்கள். நீதியான செயல்களைச் செய்துகொண்டே இருக்கிறவன், அவர் நீதியுள்ளவராக இருப்பதைப் போலவே தானும் நீதியுள்ளவனாக இருக்கிறான். 8 பாவம் செய்துகொண்டே இருக்கிறவன் பிசாசின் பக்கம் இருக்கிறான்; ஏனென்றால், பிசாசு ஆரம்பத்திலிருந்தே பாவம் செய்துவந்திருக்கிறான்.+ பிசாசின் செயல்களை ஒழிப்பதற்காகத்தான் கடவுளுடைய மகன் வந்தார்.+
9 கடவுளுடைய பிள்ளையாக இருக்கிற யாரும் பாவம் செய்துகொண்டே இருப்பதில்லை.+ ஏனென்றால், கடவுளுடைய சக்தி* அப்படிப்பட்டவனில் நிலைத்திருக்கிறது; அவன் கடவுளுடைய பிள்ளையாக+ இருப்பதால் அவனால் பாவம் செய்துகொண்டே இருக்க முடியாது. 10 நீதியான செயல்களைச் செய்துகொண்டே இருக்காத யாரும் கடவுளின் பக்கம் இல்லை. அதேபோல், தன் சகோதரன்மேல் அன்பு காட்டாத யாரும் கடவுளின் பக்கம் இல்லை.+ கடவுளுடைய பிள்ளைகள் யார் என்றும், பிசாசின் பிள்ளைகள் யார் என்றும் இந்த உண்மையிலிருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். 11 நாம் ஒருவருக்கொருவர் அன்பு காட்ட வேண்டும் என்பதுதான் ஆரம்பத்திலிருந்து நீங்கள் கேட்ட செய்தி.+ 12 பொல்லாதவனின் பக்கம் இருந்த காயீனைப் போல் நாம் இருக்கக் கூடாது. அவன் தன்னுடைய சகோதரனைப் படுகொலை செய்தான்.+ ஏன் படுகொலை செய்தான்? ஏனென்றால், அவனுடைய செயல்கள் பொல்லாதவையாக இருந்தன;+ ஆனால், அவனுடைய சகோதரனின் செயல்கள் நீதியானவையாக இருந்தன.+
13 சகோதரர்களே, இந்த உலகம் உங்களை வெறுப்பதைப் பார்த்து ஆச்சரியப்படாதீர்கள்.+ 14 சகோதரர்கள்மேல் நாம் அன்பு காட்டுவதால்,+ இறந்தவர்களைப் போல் இருந்த நாம் இப்போது உயிர் வாழ்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்கிறோம்.+ அன்பு காட்டாதவன் இறந்தவனைப் போல் இருக்கிறான்.+ 15 தன் சகோதரனை வெறுக்கிற ஒவ்வொருவனும் கொலைகாரன்தான்.+ கொலைகாரன் எவனுக்கும் முடிவில்லாத வாழ்வு இல்லை+ என்பது உங்களுக்குத் தெரியும். 16 அவர் நமக்காகத் தன்னுடைய உயிரைக் கொடுத்ததால் அன்பு என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துகொண்டோம்;+ நாமும் நம் சகோதரர்களுக்காக நம்முடைய உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.+ 17 ஆனால், இந்த உலகத்தில் பொருள் வசதிகள் உள்ளவன் தன்னுடைய சகோதரன் வறுமையில் வாடுவதைப் பார்த்தும், அவன்மேல் கரிசனை காட்ட மறுத்தால் கடவுள்மேல் அவனுக்கு அன்பு இருக்கிறதென்று எப்படிச் சொல்ல முடியும்?+ 18 சின்னப் பிள்ளைகளே, உங்களுடைய சொல்லில் மட்டுமல்ல,+ செயலிலும் அன்பு காட்ட வேண்டும்,+ அதை உண்மை மனதோடு காட்ட வேண்டும்.+
19 இதன் மூலம்தான், நாம் சத்தியத்தின் பக்கம் இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்வோம். 20 எந்தக் காரணத்துக்காவது நம்முடைய இதயம் நம்மைக் கண்டனம் செய்யும்போது, கடவுள் நம்மைக் கண்டனம் செய்வதில்லை என்று நம் இதயத்துக்கு உறுதி அளித்துக்கொள்ளலாம்.* ஏனென்றால், கடவுள் நம் இதயத்தைவிட உயர்ந்தவராக இருக்கிறார், எல்லாவற்றையும் தெரிந்தவராகவும் இருக்கிறார்.+ 21 அன்புக் கண்மணிகளே, நம்முடைய இதயம் நம்மைக் கண்டனம் செய்யவில்லை என்றால், கடவுளிடம் நாம் தயக்கமில்லாமல் பேச முடியும்.+ 22 அதோடு, நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குத் தருவார்.+ ஏனென்றால், நாம் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவருக்குப் பிரியமான காரியங்களைச் செய்துவருகிறோம். 23 உண்மையில் இதுதான் அவருடைய கட்டளை: அவருடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் நாம் விசுவாசம் வைத்து,+ அவர் நமக்குக் கட்டளை கொடுத்தபடியே ஒருவருக்கொருவர் அன்பு காட்ட வேண்டும்.+ 24 அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறவன் அவரோடு ஒன்றுபட்டிருக்கிறான். அப்படிப்பட்டவனோடு அவரும் ஒன்றுபட்டிருக்கிறார்.+ அவர் நம்மோடு ஒன்றுபட்டிருக்கிறார்+ என்பதை அவர் நமக்குத் தந்த சக்தியால் தெரிந்துகொள்கிறோம்.