யெகோவா நம்மீது எப்படியெல்லாம் அன்பு காட்டுகிறார்?
“பரலோகத் தகப்பன் நம்மீது எந்தளவுக்கு அன்பு காட்டியிருக்கிறார், பாருங்கள்!”—1 யோ. 3:1.
1. நாம் எதை யோசித்துப் பார்க்க வேண்டும் என்று யோவான் சொல்கிறார், ஏன்?
யெகோவா நம்மீது எந்தளவு அன்பு வைத்திருக்கிறார் என்று யோசித்துப் பார்க்கும்படி யோவான் நம்மை உற்சாகப்படுத்துகிறார். “பரலோகத் தகப்பன் நம்மீது எந்தளவுக்கு அன்பு காட்டியிருக்கிறார், பாருங்கள்!” என்று அவர் சொல்கிறார். (1 யோ. 3:1) யெகோவா நம்மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார், அதை எப்படியெல்லாம் காட்டியிருக்கிறார் என்று நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். அப்படி யோசிக்கும்போது, நாம் அவருடைய நெருங்கிய நண்பர்களாக ஆக முடியும். அவர்மீது இன்னும் அதிகமாக அன்பு காட்டவும் முடியும்.
2. சிலருக்குக் கடவுள் அவர்கள்மீது அன்பு வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வது ஏன் கஷ்டமாக இருக்கிறது?
2 கடவுளுக்கு மக்கள்மீது அன்பே இல்லை என்று சிலர் நினைக்கிறார்கள். கடவுள் சட்டங்களை மட்டுமே போடுகிறார், அவருக்குக் கீழ்ப்படியாதவர்களை அவர் தண்டிக்கிறார் என்றும் நினைக்கிறார்கள். கடவுளைப் பற்றி சில மதங்கள் தவறாக சொல்லிக்கொடுப்பதால் கடவுள் ரொம்ப கொடூரமானவர் என்றும் அவர்மீது நாம் அன்பு காட்டவே முடியாது என்றும் சிலர் நினைக்கிறார்கள். மக்கள் என்ன செய்தாலும் கடவுள் அவர்கள்மீது அன்பு காட்டுவார் என்று இன்னும் சிலர் நினைக்கிறார்கள். ஆனால், நீங்கள் பைபிளைப் படிப்பதால் யெகோவாவைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்திருக்கிறீர்கள். அன்புதான் கடவுளுடைய மிக முக்கியமான குணம் என்பதும் அவருடைய மகனையே உங்களுக்காகப் பலியாகக் கொடுத்திருக்கிறார் என்பதும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். (யோவா. 3:16; 1 யோ. 4:8) இருந்தாலும், வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளால் கடவுள் உங்கள்மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம்.
3. யெகோவா நம்மீது அன்பு வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?
3 யெகோவாதான் நமக்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வது ரொம்ப முக்கியம். அப்படிப் புரிந்துகொண்டால்தான் அவர் நம்மீது அன்பு வைத்திருக்கிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். (சங்கீதம் 100:3-5-ஐ வாசியுங்கள்.) யெகோவா மனிதனைப் படைத்ததால்தான், முதல் மனிதன் ஆதாமை “கடவுளின் மகன்” என்று பைபிள் சொல்கிறது. (லூக். 3:38) யெகோவாவை, “பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே” என்று சொல்லும்படி இயேசு நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார். (மத். 6:9) யெகோவா ஒரு அன்பான அப்பாவைப்போல் இருக்கிறார். ஒரு அன்பான அப்பா பிள்ளைகள்மீது அன்பு காட்டுவதுபோல் யெகோவா நம்மீது அன்பு காட்டுகிறார்.
4. (அ) யெகோவா எப்படிப்பட்ட அப்பாவாக இருக்கிறார்? (ஆ) இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் நாம் எதைப் பற்றி பார்க்கப் போகிறோம்?
4 சிலருக்கு அவர்களுடைய அப்பாவை அன்பானவராக யோசித்துப் பார்ப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கலாம். ஏனென்றால், சிறு வயதில் அவர்களுடைய அப்பா அவர்களிடம் கொடூரமாக நடந்திருக்கலாம். ஆனால், யெகோவா அப்பா அவருடைய பிள்ளைகளிடம் அப்படி நடந்துகொள்வதில்லை. அவரைப் போல ஒரு நல்ல அப்பா வேறு யாருமே இருக்க முடியாது! (சங். 27:10) அவர் நம்மீது ரொம்ப அன்பு வைத்திருக்கிறார். அவருடைய அன்பைப் பல வழிகளில் காட்டியிருக்கிறார். யெகோவா நம்மீது எந்தளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டால்தான் நாம் அவர்மீது இன்னும் அதிகமாக அன்பு காட்டுவோம். (யாக். 4:8) யெகோவா நம்மீது அன்பு காட்டும் 4 வழிகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். நாம் அவர்மீது அன்பு காட்டுவதற்கான 4 வழிகளைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
யெகோவா அன்பானவர், தாராளமானவர்
5. கடவுளைப் பற்றி அத்தேனே பட்டணத்தில் இருந்தவர்களுக்கு பவுல் என்ன சொன்னார்?
5 பவுல் கிரேக்க நாட்டில் உள்ள அத்தேனே பட்டணத்தில் இருந்தபோது அங்கிருந்த மக்கள் சிலைகளை வைத்து வணங்கியதைப் பார்த்தார். அந்தப் பட்டணத்தில் இருந்த மக்கள், அவர்களுடைய கடவுள்கள்தான் அவர்களுக்கு உயிர் கொடுத்ததாக நினைத்தார்கள். அதனால், “உலகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்த” கடவுளைப் பற்றி பவுல் அவர்களுக்கு சொன்னார். அந்தக் கடவுள்தான், “எல்லாருக்கும் உயிரையும் சுவாசத்தையும் மற்ற எல்லாவற்றையும் கொடுக்கிறார்;” “அவராலேயே நாம் வாழ்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்” என்றும் சொன்னார். (அப். 17:24, 25, 28) யெகோவா நம்மீது அன்பு வைத்திருப்பதால்தான் நாம் சந்தோஷமாக வாழ்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார். அவர் நமக்கு எதையெல்லாம் கொடுத்திருக்கிறார் என்று யோசித்துப் பாருங்கள்!
6. எப்படிப்பட்ட வீட்டை யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார்? (ஆரம்பப் படம்)
6 யெகோவா நமக்கு ஒரு அழகான வீட்டைக் கொடுத்திருக்கிறார். (சங். 115:15, 16) யெகோவா படைத்த எல்லா கோள்களையும்விட பூமி ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. விஞ்ஞானிகள் விண்வெளியைப் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள், நிறைய கோள்களையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஆனால், மனிதர்கள் வாழ்வதற்குத் தேவையான எல்லா விஷயங்களும் இருக்கிற ஒரு கோளை அவர்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. நாம் வெறுமனே உயிர் வாழ வேண்டும் என்பதற்காக யெகோவா இந்த அழகான பூமியை நமக்குக் கொடுக்கவில்லை. நாம் சந்தோஷமாக, வசதியாக, பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதற்காகவே அதைக் கொடுத்திருக்கிறார். (ஏசா. 45:18) நம் அன்பான அப்பா கொடுத்திருக்கிற இந்த அழகான வீட்டைப் பற்றி யோசித்துப் பார்க்கும்போது அவர் நம்மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை நம்மால் உணர முடிகிறது.—யோபு 38:4, 7; சங்கீதம் 8:3-5-ஐ வாசியுங்கள்.
7. யெகோவா நம்மை படைத்திருக்கிற விதத்திலிருந்து அவர் நம்மீது அன்பு வைத்திருக்கிறார் என்று எப்படி சொல்லலாம்?
7 நாம் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்க அழகான வீடு இருந்தால் மட்டும் போதாது என்பது யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். அப்பா-அம்மா அன்பு காட்டுவதைப் பிள்ளைகள் உணரும்போது அவர்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அதோடு, அவர்கள் பாதுகாப்பாகவும் உணர்வார்கள். யெகோவா, மனிதர்களை அவரைப் போலவே படைத்திருக்கிறார். அதனால், அவர் நம்மீது எந்தளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது; அவர்மீது அன்பு காட்டவும் முடிகிறது. (ஆதி. 1:27) “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்” என்று இயேசுவும் சொன்னார். (மத். 5:3) நாம் சந்தோஷமாக வாழ்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் யெகோவா தாராளமாகக் கொடுத்திருக்கிறார். அவரோடு நெருங்கிய நட்பை வளர்த்துக்கொள்வதற்குத் தேவையானவற்றையும் கொடுத்திருக்கிறார்.—1 தீ. 6:17; சங். 145:16.
யெகோவா அன்பாகக் கற்றுக்கொடுக்கிறார்
8. யெகோவா நமக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நாம் ஏன் விரும்புகிறோம்?
8 ஒரு அன்பான அப்பா பிள்ளைகள்மீது அன்பு வைத்திருப்பதால் அவர்கள் வழிதவறி போய்விடக் கூடாது என்று நினைப்பார். இன்று நிறைய பெற்றோர்கள் பைபிளில் இருக்கும் விஷயங்களை ஏற்றுக்கொள்ளாததால் அவர்களுடைய பிள்ளைகளுக்கு எது சரி, எது தவறு என்று அவர்களால் சொல்லிக்கொடுக்க முடிவதில்லை. அதனால், குடும்பத்தில் நிறைய பிரச்சினைகளும் குழப்பங்களும் வருகின்றன. (நீதி. 14:12) யெகோவா, ‘சத்தியத்தின் கடவுளாக’ இருக்கிறார். (சங். 31:5, NW) அவருடைய பிள்ளைகள்மீது அவர் அன்பு வைத்திருப்பதால் அவர்களுக்கு நிறைய உண்மைகளைக் கற்றுக்கொடுக்கிறார். அவரைப் பற்றியும் அவரை எப்படி வணங்க வேண்டும் என்பதைப் பற்றியும் சொல்லிக்கொடுக்கிறார். வாழ்க்கையை மிகச் சிறந்த விதத்தில் வாழவும் கற்றுக்கொடுக்கிறார். (சங்கீதம் 43:3-ஐ வாசியுங்கள்.) யெகோவா நமக்கு என்ன உண்மைகளை எல்லாம் கற்றுக்கொடுத்திருக்கிறார்? அதிலிருந்து அவர் நம்மீது அன்பு வைத்திருக்கிறார் என்று எப்படி சொல்லலாம்?
9, 10. (அ) யெகோவா ஏன் நமக்கு அவரைப் பற்றி கற்றுக்கொடுத்திருக்கிறார்? (ஆ) என்ன நோக்கத்திற்காக மனிதர்களைப் படைத்ததாக யெகோவா சொல்கிறார்?
9 யெகோவா அவரைப் பற்றிய உண்மைகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். (யாக். 4:8) அதனால், அவரைப் பற்றி நமக்கு கற்றுக்கொடுக்கிறார். அவருடைய பெயரையும் அவர் எப்படிப்பட்டவர் என்பதையும் நமக்கு சொல்கிறார். பைபிளில் எந்தப் பெயரையும்விட யெகோவாவுடைய பெயர்தான் நிறைய முறை இருக்கிறது. யெகோவா அவரைப் பற்றி சொல்வதன் மூலம் நம்மிடம் நெருங்கி வருகிறார். யெகோவா படைத்திருக்கும் எல்லாவற்றையும் பார்க்கும்போது அவருக்கு எவ்வளவு சக்தியும் ஞானமும் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. (ரோ. 1:20) பைபிளைப் படிக்கும்போது யெகோவா எவ்வளவு நியாயமாக நடந்துகொள்கிறார், அவர் நம்மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை எல்லாம் தெரிந்துகொள்ள முடிகிறது. யெகோவாவுக்கு இருக்கிற அருமையான குணங்களை எல்லாம் தெரிந்துகொள்ளும்போது அவருடைய நெருங்கிய நண்பர்களாக இருக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுவோம்.
10 மனிதர்களை என்ன நோக்கத்திற்காகப் படைத்திருக்கிறார் என்பதை யெகோவா நமக்கு சொல்கிறார். அவருடைய குடும்பத்தில் நாமும் ஒருவராக இருக்கிறோம் என்றும் சொல்கிறார். ஒரு குடும்பமாக நாம் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று நமக்கு கற்றுக்கொடுக்கிறார். எது நல்லது, எது கெட்டது என்பதைத் தீர்மானிக்கும் உரிமையோடு கடவுள் நம்மை படைக்கவில்லை. (எரே. 10:23) நமக்கு எது சிறந்தது என்று யெகோவாவுக்கு மட்டும்தான் தெரியும். அவருக்குத்தான் எல்லா அதிகாரமும் இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும், அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அப்படி செய்யும்போது, நாம் சமாதானமாகவும் திருப்தியாகவும் வாழ்வோம். யெகோவாவுக்கு நம்மீது அன்பு இருப்பதால்தான் இந்த முக்கியமான உண்மைகளை எல்லாம் நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.
11. யெகோவாவுக்கு நம்மீது அன்பும் அக்கறையும் இருக்கிறது என்று எப்படி சொல்லலாம்?
11 ஒரு அன்பான அப்பா பிள்ளைகளுடைய எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார். அவர்கள் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவார். இன்று நிறைய பேர் எதிர்காலத்தை நினைத்து ரொம்ப கவலைப்படுகிறார்கள். வாழ்க்கையின் லட்சியங்களை நோக்கியே நிறைய பேர் போய்க்கொண்டிருக்கிறார்கள்; ஆனால், அது எதுவுமே அவர்களுக்கு நிரந்தர பலனைக் கொடுப்பதில்லை. (சங். 90:10) ஆனால் நம்முடைய அன்பான அப்பா யெகோவா, அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழவும் திருப்தியாக இருக்கவும் நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார். அதோடு, ஒரு அருமையான எதிர்காலத்தைக் கொடுப்பதாகவும் வாக்குக் கொடுத்திருக்கிறார். அவர் நம்மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்!
யெகோவா வழிநடத்துகிறார், கண்டித்துத் திருத்துகிறார்
12. காயீனுக்கும் பாருக்குக்கும் யெகோவா எப்படி உதவி செய்தார்?
12 காயீன் ஒரு பெரிய தவறை செய்யப்போகிறான் என்று தெரிந்து, யெகோவா அவனுக்கு உதவி செய்ய நினைத்தார். அதனால் அவனிடம் இப்படி சொன்னார்: “உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ?” (ஆதி. 4:6, 7) காயீன் யெகோவா கொடுத்த ஆலோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், மோசமான விளைவுகளை சந்தித்தான். (ஆதி. 4:11-13) எரேமியாவின் செயலரான பாருக்கும் ஒருசமயம் தவறாக யோசித்தார்; அதனால் சோர்ந்து போனார். அவர் யோசிப்பது தவறு என்றும் அவருடைய எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் யெகோவா அவரிடம் சொன்னார். யெகோவா கொடுத்த ஆலோசனையை பாருக் ஏற்றுக்கொண்டார். அதனால், பாருக் அவருடைய உயிரைக் காப்பாற்றிக்கொண்டார்.—எரே. 45:2-5.
13. யெகோவா அவருடைய ஊழியர்கள் கஷ்டப்பட ஏன் அனுமதித்தார்?
13 “யெகோவா யார்மீது அன்பு வைத்திருக்கிறாரோ அவர்களைக் கண்டித்துத் திருத்துகிறார்; சொல்லப்போனால், யாரையெல்லாம் தம் பிள்ளைகளாக ஏற்றுக்கொள்கிறாரோ அவர்களையெல்லாம் அவர் தண்டிக்கிறார்” என்று பவுல் சொன்னார். (எபி. 12:6) யெகோவாவுடைய ஊழியர்கள் இன்னும் சிறந்த நபர்களாக ஆவதற்கு யெகோவா அவர்களை எப்படிக் கண்டித்துத் திருத்தினார் என்று பைபிளில் வாசிக்கிறோம். அதோடு அவர்களுக்கு எப்படிப் பயிற்சி கொடுத்தார் என்றும் வாசிக்கிறோம். உதாரணத்துக்கு யோசேப்பு, மோசே, தாவீது பயங்கரமான கஷ்டங்களை சந்திக்க யெகோவா அனுமதித்தார். யெகோவா அவர்களோடு இருந்ததால் அந்தக் கஷ்டங்களை எல்லாம் அவர்களால் சமாளிக்க முடிந்தது. அந்த சமயத்தில் கிடைத்த பயிற்சிதான், யெகோவா கொடுத்த பெரிய பெரிய பொறுப்புகளை நன்றாக செய்து முடிக்க அவர்களுக்கு உதவி செய்தது. யெகோவா அவருடைய மக்களுக்கு எப்படிப் பயிற்சி கொடுத்திருக்கிறார், அவர்களை எப்படி வழிநடத்தியிருக்கிறார் என்பதை எல்லாம் பைபிளில் படிக்கிறோம். அப்படிப் படிக்கும்போது, யெகோவாவுக்கு நம்மீது எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.—நீதிமொழிகள் 3:11, 12-ஐ வாசியுங்கள்.
14. நாம் தவறு செய்தால்கூட யெகோவா நம்மீது அன்பு காட்டுகிறார் என்று எப்படி சொல்லலாம்?
14 நாம் ஏதாவது தவறு செய்தால்கூட யெகோவா நம்மீது தொடர்ந்து அன்பு காட்டுகிறார். அவர் நம்மை கண்டித்துத் திருத்தும்போது நாம் மனந்திரும்ப வேண்டும். அப்படி செய்தால், அவர் நம்மை “தாராளமாக” மன்னிப்பார். (ஏசா. 55:7, NW) யெகோவா நம்மை எந்தளவு மன்னிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள தாவீது சொன்ன விஷயங்களைக் கவனியுங்கள்: “அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்.” (சங். 103:3, 4, 12) யெகோவாவுக்கு நம்மீது அன்பு இருப்பதால்தான் அவர் நம்மை நிறைய வழிகளில் கண்டித்துத் திருத்துகிறார், வழிநடத்துகிறார். அவர் திருத்தும்போது நாம் உடனே மாற்றங்கள் செய்கிறோமா?—சங். 30:5.
யெகோவா பாதுகாக்கிறார்
15. யெகோவா நம்மீது அன்பு வைத்திருக்கிறார் என்பதை எப்படிக் காட்டுகிறார்?
15 ஒரு அன்பான அப்பா அவருடைய குடும்பத்தை ஆபத்திலிருந்து பாதுகாப்பது போல யெகோவாவும் நம்மை ஆபத்திலிருந்து பாதுகாக்கிறார். “அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (சங். 97:10) இந்த உதாரணத்தைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: உங்களுடைய கண்கள் உங்களுக்கு ரொம்ப முக்கியம். உங்கள் கண்களுக்கு ஏதாவது ஆபத்து வரும்போது அதை உடனே பாதுகாப்பீர்கள். அதேபோல், யெகோவாவுக்கு அவருடைய மக்கள் ரொம்ப முக்கியம். அவர்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் அவர்களை உடனே பாதுகாப்பார்.—சகரியா 2:8-ஐ வாசியுங்கள்.
16, 17. அன்றும் இன்றும் யெகோவா அவருடைய மக்களை எப்படிப் பாதுகாத்து வருகிறார்?
16 அன்றும், இன்றும் யெகோவா அவருடைய மக்களைத் தேவதூதர்கள் மூலமாகப் பாதுகாத்து வருகிறார். (சங். 91:11) ஒரு தேவதூதர் 1,85,000 அசீரிய வீரர்களை ஒரே ராத்திரியில் கொன்றுபோட்டு, கடவுளுடைய மக்களைக் காப்பாற்றினார். (2 இரா. 19:35) முதல் நூற்றாண்டில், பேதுருவையும் பவுலையும் இன்னும் சிலரையும் தேவதூதர்கள் சிறையிலிருந்து காப்பாற்றினார்கள். (அப். 5:18-20; 12:6-11) சமீபத்தில், ஆப்பிரிக்காவில் ஒரு பயங்கரமான போர் நடந்தது. சண்டை, திருட்டு, கற்பழிப்பு, கொலை என்று நாடு முழுவதும் கலவரமாக இருந்தது. அந்தப் போரில் சகோதரர்கள் யாரும் சாகவில்லை என்றாலும் நிறைய பேர் அவர்களிடம் இருந்ததை எல்லாம் இழந்துவிட்டார்கள். இருந்தாலும், யெகோவாவுடைய அன்பையும் அரவணைப்பையும் அவர்களால் உணர முடிந்தது. அவர்கள் கஷ்டப்பட்டாலும் சந்தோஷமாக இருந்தார்கள். அங்கிருந்த சகோதர சகோதரிகளை தலைமை அலுவலக பிரதிநிதி பார்க்கப் போயிருந்தார். அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டதற்கு, “நாங்க ரொம்ப நல்லா இருக்கோம். அதுக்கு யெகோவாவுக்குத்தான் நன்றி சொல்லணும்” என்று சொன்னார்கள்.
17 ஸ்தேவான் போன்ற உண்மையுள்ள ஊழியர்கள் எதிரிகளின் கைகளில் சாவதற்கு யெகோவா சில சமயங்களில் அனுமதித்திருக்கிறார். இருந்தாலும், சாத்தான் எப்படித் தந்திரமாக ஏமாற்றுகிறான் என்பதை எச்சரிப்பதன் மூலம் யெகோவா அவருடைய மக்களை ஒரு தொகுதியாகப் பாதுகாக்கிறார். (எபே. 6:10-12) பைபிள் மூலமாகவும் அவருடைய அமைப்பு வெளியிடும் பிரசுரங்கள் மூலமாகவும் அவர் இந்த எச்சரிப்புகளைக் கொடுக்கிறார். உதாரணத்துக்கு இன்டர்நெட்டை தவறாகப் பயன்படுத்தினால்... பண ஆசை இருந்தால்... என்ன ஆபத்து இருக்கிறது என்று யெகோவா எச்சரிக்கிறார். அதோடு ஒழுக்கங்கெட்ட மற்றும் வன்முறையான படங்கள், புத்தகங்கள், விளையாட்டுகளில் என்ன ஆபத்து இருக்கிறது என்றும் எச்சரிக்கிறார். இதிலிருந்து நம் அன்பான அப்பா யெகோவா நம்மீது எந்தளவு அன்பு வைத்திருக்கிறார்... நம்மை பாதுகாக்க எந்தளவு ஆசைப்படுகிறார்... என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
நமக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்
18. யெகோவாவுக்கு உங்கள்மீது இருக்கும் அன்பைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
18 மோசே யெகோவாவுக்குப் பல வருடங்களாக சேவை செய்தார். யெகோவா அவர்மீது அன்பு வைத்திருந்தார் என்பதை மோசே உறுதியாக நம்பினார். அதைப் பற்றி மோசே என்ன சொன்னார் என்று கவனியுங்கள்: “ஒவ்வொரு காலையிலும் உமது அன்பால் எங்களை நிரப்பும். நாங்கள் மகிழ்ந்து எங்கள் வாழ்க்கையில் களிகூரச் செய்யும்.” (சங். 90:14, ஈஸி டு ரீட் வர்ஷன்) யெகோவாவுக்கு நம்மீது அன்பு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது, அவருடைய அன்பை உணர்ந்துகொள்ளவும் முடிகிறது. இது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். இது ஒரு பெரிய ஆசீர்வாதமும்கூட! “பரலோகத் தகப்பன் நம்மீது எந்தளவுக்கு அன்பு காட்டியிருக்கிறார், பாருங்கள்!” என்று யோவான் சொன்னது போலவே நாமும் சொல்வோம்.—1 யோ. 3:1.