தெசலோனிக்கேயருக்கு இரண்டாம் கடிதம்
3 கடைசியாக, சகோதரர்களே, எங்கள் மூலம் யெகோவாவின்* வார்த்தை உங்கள் மத்தியில் வேகமாகப் பரவி+ மகிமையடைந்து வருவதுபோல் எல்லா இடங்களிலும் பரவி மகிமையடைய வேண்டும் என்று ஜெபம் செய்யுங்கள்.+ 2 தீமை செய்கிறவர்களிடமிருந்தும் கெட்ட ஆட்களிடமிருந்தும் நாங்கள் காப்பாற்றப்பட வேண்டும்+ என்று ஜெபம் செய்யுங்கள். ஏனென்றால், எல்லாரிடமும் விசுவாசம் இல்லை.+ 3 ஆனால், நம் எஜமான் நம்பகமானவர்; அவர் உங்களைப் பலப்படுத்துவார், பொல்லாதவனிடமிருந்து பாதுகாப்பார். 4 நாங்கள் கொடுத்த அறிவுரைகளின்படி இப்போது நீங்கள் நடப்பது போலவே இனிமேலும் நடப்பீர்கள் என்று நம் எஜமானுடைய ஊழியர்களான நாங்கள் உங்கள்மீது நம்பிக்கையோடு இருக்கிறோம். 5 கடவுள்மேல் அன்பும்,+ கிறிஸ்துவின் சேவையில் சகிப்புத்தன்மையும் காட்டுவதற்கு+ நம் எஜமான் உங்கள் இதயங்களைத் தொடர்ந்து வழிநடத்தட்டும்.
6 சகோதரர்களே, உங்களுக்கு* நாங்கள் கொடுத்த அறிவுரைகளின்படி நடக்காமல்+ ஒழுங்கீனமாக நடக்கிற எந்தச் சகோதரனையும்விட்டு நீங்கள் விலக வேண்டுமென்று+ நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் இப்போது உங்களுக்குக் கட்டளை கொடுக்கிறோம். 7 எந்த விதத்தில் எங்களுடைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டுமென்று உங்களுக்கே தெரியும்;+ உங்கள் மத்தியில் நாங்கள் ஒழுங்கீனமாக நடக்கவில்லை. 8 அதோடு, யாரிடமும் இலவசமாக* சாப்பிடவில்லை;+ உங்களில் யாருக்கும் அதிக பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக இரவும் பகலும் பாடுபட்டு வேலை செய்தோம்.+ 9 உங்களுடைய உதவியைப் பெற்றுக்கொள்ள எங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதால் நாங்கள் அப்படிச் செய்யவில்லை;+ நீங்கள் பின்பற்றுவதற்கு நாங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்+ என்பதற்காகத்தான் அப்படிச் செய்தோம். 10 சொல்லப்போனால், நாங்கள் உங்களோடு இருந்தபோது, “வேலை செய்ய ஒருவனுக்கு இஷ்டம் இல்லை என்றால், அவன் சாப்பிடவும் கூடாது”+ என்று கட்டளை கொடுத்துவந்தோம். 11 ஆனால், சிலர் எந்த வேலையும் செய்யாமல், மற்றவர்களுடைய விஷயத்தில் அநாவசியமாகத் தலையிடுவதாகவும், ஒழுங்கீனமாக நடப்பதாகவும் கேள்விப்படுகிறோம்.+ 12 இப்படிப்பட்டவர்கள் அமைதியாக அவரவர் வேலையை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்றும், தாங்களே உழைத்துச் சாப்பிட வேண்டும்+ என்றும் நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்களான நாங்கள் உங்களுக்குக் கட்டளை கொடுக்கிறோம், கெஞ்சியும் கேட்டுக்கொள்கிறோம்.
13 சகோதரர்களே, நல்ல காரியங்கள் செய்வதை விட்டுவிடாதீர்கள். 14 இந்தக் கடிதத்தில் இருக்கிற எங்கள் வார்த்தைக்கு யாராவது கீழ்ப்படியாமல்போனால், அவன் வெட்கப்படும்படி அவனைக் குறித்து வைத்துக்கொண்டு, அவனோடு பழகுவதை நிறுத்திவிடுங்கள்.+ 15 இருந்தாலும், அவனை எதிரியாக நினைக்காமல், சகோதரனாக நினைத்து அவனுக்குத் தொடர்ந்து புத்திசொல்லுங்கள்.+
16 சமாதானத்தின் எஜமான் எப்போதும் எல்லாவற்றிலும் உங்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்.+ நம் எஜமான் உங்கள் எல்லாரோடும் இருக்கட்டும்.
17 பவுலாகிய நானே கைப்பட எழுதி உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறேன்.+ இதுதான் என்னுடைய ஒவ்வொரு கடிதத்துக்கும் அடையாளம், இதுதான் என் கையெழுத்து.
18 நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் அளவற்ற கருணை உங்கள் எல்லார்மீதும் இருக்கட்டும்.