எசேக்கியேல்
9 பின்பு என் காதுகள் கேட்க அவர் மிகவும் சத்தமாக, “இந்த நகரத்துக்குத் தண்டனை கொடுக்கப்போகிறவர்கள் பயங்கரமான* ஆயுதத்தை எடுத்துக்கொண்டு வரட்டும்!” என்று சொன்னார்.
2 அப்போது, வடக்கே பார்த்தபடி இருந்த உயர்ந்த நுழைவாசலின்+ திசையிலிருந்து ஆறு பேர் வருவதைப் பார்த்தேன். அடித்து நொறுக்குவதற்கான ஆயுதம் அவர்கள் ஒவ்வொருவருடைய கையிலும் இருந்தது. அவர்களோடு இருந்த இன்னொருவர் நாரிழை* உடையை உடுத்தியிருந்தார். செயலாளருடைய* மைப் பெட்டியை* இடுப்பில் வைத்திருந்தார். அவர்கள் எல்லாரும் செம்புப் பலிபீடத்துக்குப்+ பக்கத்தில் வந்து நின்றார்கள்.
3 அப்போது, இஸ்ரவேலின் கடவுளுடைய மகிமை+ கேருபீன்களுக்கு மேலே இருந்து எழும்பி ஆலயத்தின் வாசல் கதவுக்கு வந்தது.+ பின்பு, நாரிழை உடையைப் போட்டுக்கொண்டு இடுப்பில் மைப் பெட்டியை வைத்திருந்தவரைக் கடவுள் கூப்பிட்டார். 4 அவரிடம், “எருசலேம் நகரமெங்கும் போ. அங்கே நடக்கிற எல்லா அருவருப்புகளையும்+ பார்த்துப் பெருமூச்சுவிட்டுக் குமுறுகிற+ ஆட்களின் நெற்றியில் அடையாளம் போடு” என்று யெகோவா சொன்னார்.
5 பின்பு, என் காதுகளில் விழும்படி மற்ற ஆறு பேரிடம், “அவருக்குப் பின்னால் நகரமெங்கும் போய், ஜனங்களைக் கொன்றுபோடுங்கள். அவர்களைப் பார்த்துப் பரிதாபப்படாதீர்கள்; அவர்கள்மேல் கரிசனை காட்டாதீர்கள்.+ 6 வயதானவர்கள், வாலிபர்கள், கன்னிப் பெண்கள், பிள்ளைகள், பெண்கள் என எல்லாரையும் கொன்றுபோடுங்கள்.+ ஆனால், நெற்றியில் அடையாளம் இருக்கிற யார்மேலும் கை வைக்காதீர்கள்.+ என்னுடைய ஆலயத்திலிருந்து ஆரம்பியுங்கள்”+ என்று சொன்னார். அதனால், ஆலயத்துக்குமுன் நின்றுகொண்டிருந்த பெரியோர்களை* அவர்கள் முதலில் கொன்றுபோட்டார்கள்.+ 7 பின்பு கடவுள் அவர்களிடம், “ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, அதன் பிரகாரங்களில் பிணங்களைக் குவியுங்கள்.+ புறப்பட்டுப் போங்கள்!” என்று சொன்னார். அவர்களும் போய், நகரத்தில் இருந்த ஜனங்களைக் கொன்றுபோட்டார்கள்.
8 என்னைத் தவிர எல்லாரையும் அவர்கள் கொன்றுபோட்டார்கள். அதனால் நான் சாஷ்டாங்கமாக விழுந்து, “ஐயோ, உன்னதப் பேரரசராகிய யெகோவாவே! நீங்கள் எருசலேமின் மேல் உங்களுடைய கோபத்தைக் கொட்டும்போது, இஸ்ரவேலில் மீதியாயிருக்கிற எல்லாரையும் அழித்துவிடுவீர்களா?”+ என்று கேட்டேன்.
9 அதற்கு அவர், “இஸ்ரவேல் ஜனங்களும் யூதா வம்சத்தாரும் மகா பெரிய அக்கிரமங்களைச் செய்திருக்கிறார்கள்.+ தேசமெங்கும் இரத்தம் ஓடுகிறது,+ எல்லா இடங்களிலும் ஊழல் நடக்கிறது.+ அவர்கள் எல்லாரும், ‘யெகோவா இந்தத் தேசத்தைக் கைவிட்டுவிட்டார், யெகோவா நம்மைப் பார்ப்பதில்லை’+ என்று சொல்லிக்கொள்கிறார்கள். 10 அவர்களைப் பார்த்து நான் பரிதாபப்பட மாட்டேன். அவர்கள்மேல் கரிசனை காட்ட மாட்டேன்.+ அவர்கள் செய்த குற்றங்களுக்கான விளைவுகளை அவர்களே அனுபவிக்கும்படி செய்வேன்” என்று சொன்னார்.
11 பின்பு, நாரிழை உடையைப் போட்டுக்கொண்டு இடுப்பில் மைப் பெட்டியை வைத்திருந்தவர் திரும்பி வருவதைப் பார்த்தேன். அவர், “நீங்கள் சொன்னபடியே செய்து முடித்துவிட்டேன்” என்றார்.