1 சாமுவேல்
24 சவுல் பெலிஸ்தியர்களைத் துரத்தியடித்துவிட்டுத் திரும்பியவுடன் அவருடைய ஆட்கள் அவரிடம், “தாவீது என்-கேதி வனாந்தரத்தில் ஒளிந்திருக்கிறான்”+ என்று சொன்னார்கள்.
2 அதனால், இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து 3,000 வீரர்களை சவுல் தேர்ந்தெடுத்து, வரையாடுகள் திரிகிற செங்குத்தான பாறைகளின் நடுவே தாவீதையும் அவருடைய ஆட்களையும் தேடிக்கொண்டு போனார். 3 வழியோரத்தில் ஆட்டுத் தொழுவங்கள்* இருந்த இடத்துக்கு வந்தார். இயற்கைக் கடன் கழிக்க அங்கிருந்த ஒரு குகைக்குள் போனார். அப்போது, தாவீதும் அவருடைய ஆட்களும் அந்தக் குகையின் உள்ளே இருந்த பொந்துகளில் பதுங்கியிருந்தார்கள்.+ 4 தாவீதின் ஆட்கள் அவரிடம், “இன்றைக்கு யெகோவா உங்களிடம், ‘நான் உன்னுடைய எதிரியை உன் கையில் கொடுக்கிறேன்,+ நீ அவனை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்’ என்று சொல்கிறார்” என்றார்கள். அதனால், தாவீது எழுந்து சத்தமில்லாமல் போய், சவுல் போட்டிருந்த கையில்லாத அங்கியின் ஓரத்தை வெட்டி எடுத்தார். 5 ஆனால், அதற்குப் பின்பு தாவீதின் நெஞ்சம் அடித்துக்கொண்டே* இருந்தது.+ ஏனென்றால், சவுல் போட்டிருந்த கையில்லாத அங்கியின் ஓரத்தை அவர் வெட்டி எடுத்திருந்தார். 6 அவர் தன்னுடைய ஆட்களிடம், “யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிற* என் எஜமான்மேல் கை வைப்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. யெகோவாவின் பார்வையில் இப்படிப்பட்ட பாவத்தை நான் செய்யவே மாட்டேன். ஏனென்றால், இவரை யெகோவாவே தேர்ந்தெடுத்திருக்கிறார்”+ என்றார். 7 இப்படிச் சொல்லி தாவீது தன் ஆட்களைத் தடுத்தார்,* சவுலைத் தாக்க அவர்களை அனுமதிக்கவில்லை. சவுலோ குகையிலிருந்து எழுந்து வெளியே போனார்.
8 அப்போது, தாவீதும் அந்தக் குகையிலிருந்து வெளியே போய், “என் எஜமானே, ராஜாவே”+ என்று சொல்லி சவுலைக் கூப்பிட்டார். சவுல் திரும்பிப் பார்த்தபோது, தாவீது அவர்முன் சாஷ்டாங்கமாக விழுந்தார். 9 பின்பு அவர் சவுலிடம், “நான் உங்களைக் கொல்லத் துடிப்பதாக மற்றவர்கள் சொல்வதை நீங்கள் நம்பலாமா?+ 10 நீங்கள் குகையில் இருந்தபோது யெகோவா உங்களை எப்படி என் கையில் கொடுத்தார் என்பதை இன்றைக்கு நீங்களே பார்த்தீர்கள். உங்களைக் கொல்லச் சொல்லி ஒருவன் என்னிடம் சொன்னான்.+ ஆனால், நான் உங்களைப் பார்த்து இரக்கப்பட்டு, ‘என்னுடைய எஜமான்மேல் கை வைக்க மாட்டேன், ஏனென்றால் அவர் யெகோவாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்’+ என்று சொன்னேன். 11 என் தகப்பனே, இதோ பாருங்கள். உங்களுடைய கையில்லாத அங்கியின் ஓரத்தை வெட்டி எடுத்துக்கொண்டேன். நான் இதை மட்டும்தான் வெட்டி எடுத்தேன், உங்களைக் கொல்லவில்லை. நான் உங்களுக்குக் கெடுதல் செய்யவோ உங்களுக்கு எதிராகக் கலகம் செய்யவோ நினைக்கவில்லை என்று இதிலிருந்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம். நான் உங்களுக்கு எந்தப் பாவமும் செய்யவில்லை.+ ஆனால், நீங்கள் என் உயிரை வேட்டையாடுகிறீர்கள்.+ 12 உங்களுக்கும் எனக்கும் நடுவில் நின்று யெகோவாவே தீர்ப்பு கொடுக்கட்டும்,+ எனக்காக யெகோவாவே உங்களைப் பழிவாங்கட்டும்.+ ஆனால், நான் உங்கள்மேல் கை வைக்க மாட்டேன்.+ 13 ‘கெட்டவனிடமிருந்தே கெட்டது பிறக்கும்’ என்ற பழமொழி உங்களுக்கே தெரியும், அதனால் நான் உங்களுக்கு எந்தக் கெடுதலும் செய்ய மாட்டேன். 14 இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடி அலைகிறார்? யாரைத் துரத்திக்கொண்டு வருகிறார்? இந்தச் செத்த நாயையா? இந்தச் சாதாரண பூச்சியையா?+ 15 யெகோவாவே நியாயாதிபதியாக இருந்து, உங்களுக்கும் எனக்கும் நடுவில் நின்று தீர்ப்பு கொடுக்கட்டும். அவர் எல்லாவற்றையும் பார்த்து எனக்காக வழக்காடுவார்,+ எனக்குத் தீர்ப்பு கொடுப்பார், உங்கள் கையிலிருந்து என்னைக் காப்பாற்றுவார்” என்று சொன்னார்.
16 தாவீது பேசி முடித்தவுடன் சவுல் அவரிடம், “என் மகன் தாவீதே, இது உன் குரல்தானே?” என்று கேட்டார்.+ பின்பு கதறி அழுதபடி, 17 “நீ என்னைவிட நல்லவன்.* நீ எனக்கு நல்லது செய்தாய், நான்தான் உனக்குக் கெடுதல் செய்துவிட்டேன்.+ 18 இன்றைக்கு யெகோவா என்னை உன் கையில் கொடுத்தும் நீ என்னைக் கொல்லவில்லை. நீ செய்த இந்த நல்ல காரியத்தை உன் வாயாலேயே தெரிந்துகொண்டேன்.+ 19 வசமாக மாட்டிக்கொள்ளும் எதிரியை யாராவது சும்மா விடுவார்களா? இன்று நீ எனக்கு நல்லது செய்ததற்காக யெகோவா உனக்கு நல்லது செய்வார்.+ 20 நீ நிச்சயம் ராஜாவாக ஆவாய்,+ இஸ்ரவேல் ராஜ்யத்தைக் காலம்காலமாகக் கட்டிக்காப்பாய். 21 இப்போது, நீ என் வம்சத்தாரை ஒழித்துக்கட்ட மாட்டாய் என்றும், என் அப்பாவின் குடும்பத்திலிருந்து என்னுடைய பெயரை அழித்துவிட மாட்டாய்+ என்றும் யெகோவாவின் பெயரில் எனக்குச் சத்தியம் செய்து கொடு”+ என்றார். 22 அதனால், தாவீது சவுலுக்குச் சத்தியம் செய்து கொடுத்தார். அதன்பின், சவுல் தன் வீட்டுக்குப் போனார்.+ தாவீதும் அவருடைய ஆட்களும் தாங்கள் தங்கியிருந்த பாதுகாப்பான இடத்துக்குப் போனார்கள்.+