2 சாமுவேல்
21 தாவீதின் ஆட்சிக் காலத்தில் தொடர்ச்சியாக மூன்று வருஷங்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது;+ அதனால் தாவீது யெகோவாவிடம் அதைப் பற்றி விசாரித்தார்; அதற்கு யெகோவா, “கிபியோனியர்களை சவுல் கொன்றுபோட்டதால் அவன்மீதும் அவனுடைய குடும்பத்தார்மீதும் கொலைப்பழி* இருக்கிறது”+ என்று சொன்னார். 2 அதனால், ராஜா கிபியோனியர்களைக்+ கூப்பிட்டுப் பேசினார். (கிபியோனியர்கள் இஸ்ரவேல் வம்சத்தார் அல்ல; எமோரியர்களில்+ மீதியிருந்தவர்கள்; ‘உங்களை அழிக்க மாட்டோம்’ என்று அவர்களுக்கு இஸ்ரவேலர்கள் ஆணையிட்டுக் கொடுத்திருந்தார்கள்.+ ஆனால், இஸ்ரவேலர்களோடும் யூதா கோத்திரத்தாரோடும் அவர்கள் வாழ்வது பொறுக்காமல் சவுல் அவர்களை ஒழித்துக்கட்ட முயற்சி செய்தார்.) 3 தாவீது கிபியோனியர்களைப் பார்த்து, “சொல்லுங்கள், நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும், யெகோவாவின் மக்களை* நீங்கள் ஆசீர்வதிப்பதற்காக நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?” என்று கேட்டார். 4 அதற்கு கிபியோனியர்கள், “சவுலும் அவருடைய குடும்பமும் செய்த பாவத்தைத் தங்கமோ வெள்ளியோ கொடுத்து ஈடுகட்ட முடியாது.+ இஸ்ரவேலில் யாரையும் கொல்வதற்கு எங்களுக்கு உரிமையும் கிடையாது” என்று சொன்னார்கள். அதற்கு தாவீது, “நீங்கள் என்ன சொன்னாலும் நான் செய்கிறேன்” என்றார். 5 அப்போது அவர்கள், “எங்களை ஒழித்துக்கட்டி, இஸ்ரவேல் தேசத்திலிருந்து எங்களைத் துடைத்தழிக்கத் திட்டம் போட்டாரே,+ 6 அவருடைய மகன்களில் ஏழு பேரை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். நாங்கள் அவர்களைக் கொன்று, யெகோவா தேர்ந்தெடுத்த சவுலின்+ ஊராகிய கிபியாவில்+ யெகோவாவின் முன்னால் அவர்களுடைய உடல்களைத் தொங்கவிடுவோம்”*+ என்று ராஜாவிடம் சொன்னார்கள். அதற்கு ராஜா, “சரி, அவர்களை ஒப்படைக்கிறேன்” என்று சொன்னார்.
7 ஆனால், சவுலின் பேரனும் யோனத்தானின் மகனுமான மேவிபோசேத்துக்கு ராஜா கருணை காட்டினார்.+ ஏனென்றால், தாவீதும் சவுலின் மகன் யோனத்தானும் யெகோவாவுக்கு முன்னால் ஒருவருக்கொருவர் உறுதிமொழி கொடுத்திருந்தார்கள்.+ 8 அயாவின் மகளாகிய ரிஸ்பாள்+ சவுலுக்குப் பெற்ற இரண்டு மகன்களான அர்மோனியையும் மேவிபோசேத்தையும், சவுலின் மகளாகிய மீகாள்*+ மெகொல்லாத்தியனான பர்சிலாவின் மகன் ஆதரியேலுக்குப்+ பெற்ற ஐந்து மகன்களையும் கொண்டுபோய், 9 கிபியோனியர்களிடம் ஒப்படைத்தார். கிபியோனியர்கள் அவர்களைக் கொன்று, அவர்களுடைய உடல்களை மலையில் யெகோவாவின் முன்னால் தொங்கவிட்டார்கள்.+ அந்த ஏழு பேரும் ஒரே சமயத்தில் செத்துப்போனார்கள். அறுவடைக் காலத்தின் தொடக்கத்தில், அதாவது பார்லி அறுவடையின் தொடக்கத்தில், அவர்கள் கொல்லப்பட்டார்கள். 10 அயாவின் மகளாகிய ரிஸ்பாள்+ துக்கத் துணியை* எடுத்துக்கொண்டுபோய் கற்பாறையின் மேல் விரித்தாள். அறுவடைக் காலம் தொடங்கியதுமுதல் வானத்திலிருந்து மழை கொட்டும்வரை அங்கேயே இருந்தாள். பகலில் வானத்துப் பறவைகளோ இரவில் காட்டு மிருகங்களோ அவர்களுடைய உடல்களை நெருங்க அவள் விடவே இல்லை.
11 அயாவின் மகளும் சவுலின் மறுமனைவியுமான ரிஸ்பாள் இப்படிச் செய்தது தாவீதின் காதுக்கு எட்டியது. 12 அப்போது, தாவீது போய் யாபேஸ்-கீலேயாத்தின்+ தலைவர்களிடமிருந்து* சவுலின் எலும்புகளையும் யோனத்தானின் எலும்புகளையும் பெற்றுக்கொண்டார். கில்போவாவில் சவுலை வீழ்த்திய பிறகு, அவர்களுடைய உடல்களை பெத்-சானின் பொது சதுக்கத்தில்தான் பெலிஸ்தியர்கள் தொங்கவிட்டிருந்தார்கள்;+ அதனால், இந்தத் தலைவர்கள் அங்கிருந்து அவற்றை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்திருந்தார்கள். 13 தாவீது யாபேஸ்-கீலேயாத்திலிருந்து சவுலின் எலும்புகளையும் யோனத்தானின் எலும்புகளையும் கொண்டுவந்தார். அதோடு, கிபியோனியர்களால் கொல்லப்பட்ட ஆட்களின் எலும்புகளையும்கூட அவருடைய ஊழியர்கள் எடுத்து வந்தார்கள்.+ 14 பின்பு, சவுலின் எலும்புகளையும் அவருடைய மகன் யோனத்தானின் எலும்புகளையும் பென்யமீன் பிரதேசத்தில் உள்ள ஸேலாவில்+ சவுலின் அப்பா கீசுடைய+ கல்லறையில் வைத்தார்கள். ராஜா கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவருடைய ஊழியர்கள் செய்தார்கள். அதன் பின்பு, தேசத்துக்காக அவர்கள் செய்த வேண்டுதல்களைக் கடவுள் கேட்டார்.+
15 பெலிஸ்தியர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் இடையே மறுபடியும் போர் மூண்டது.+ அதனால், தாவீதும் அவருடைய ஊழியர்களும் பெலிஸ்தியர்களுடன் போர் செய்தார்கள். அப்போது, தாவீது களைப்படைந்தார். 16 ரெப்பாயீம் வம்சத்தைச்+ சேர்ந்த இஸ்பி-பெனோப் அங்கே இருந்தான். அவனிடம் 300 சேக்கல்* எடையுள்ள செம்பு ஈட்டி இருந்தது,+ ஒரு புதிய வாளையும் வைத்திருந்தான். அவன் தாவீதைக் கொல்லப்பார்த்தான். 17 உடனே, செருயாவின் மகன் அபிசாய்+ தாவீதின் உதவிக்கு வந்து, அந்தப் பெலிஸ்தியனை வெட்டிக் கொன்றார்.+ அப்போது தாவீதின் ஆட்கள், “இனிமேல் நீங்கள் எங்களோடு போருக்கு வரக் கூடாது.+ இஸ்ரவேலின் விளக்கை நீங்கள் அணைத்துவிடக் கூடாது!”+ என்று ஆணையிட்டுச் சொன்னார்கள்.
18 இதற்குப் பின்பு, கோப் என்ற இடத்தில் இஸ்ரவேலர்களுக்கும் பெலிஸ்தியர்களுக்கும் மறுபடியும் போர் நடந்தது.+ அப்போது, ரெப்பாயீம் வம்சத்தைச்+ சேர்ந்த சாப் என்பவனை உஷாத்தியனான சிபெக்காய்+ வெட்டிக் கொன்றார்.
19 கோப் என்ற இடத்தில் பெலிஸ்தியர்களுடன் மறுபடியும் போர் நடந்தது.+ பெத்லகேமைச் சேர்ந்த யாரெ-யொர்கிமினின் மகன் எல்க்கானான், காத் நகரத்தைச் சேர்ந்த கோலியாத்தை வெட்டிக் கொன்றார். கோலியாத் வைத்திருந்த ஈட்டியின் கம்பு, நெசவாளர்களுடைய தறிக்கட்டையைப் போல் பெரிதாக இருந்தது.+
20 மறுபடியும் காத் நகரத்தில் போர் நடந்தது. அங்கே ரெப்பாயீம் வம்சத்தைச் சேர்ந்த ஒருவன் இருந்தான். அவன் மிக மிக உயரமாக இருந்தான். அவனுடைய கைகள் கால்கள் ஒவ்வொன்றிலும் ஆறாறு விரல்கள் இருந்தன. மொத்தம் 24 விரல்கள் இருந்தன.+ 21 அவன் இஸ்ரவேலர்களைக் கேலி செய்துகொண்டே இருந்தான்.+ அதனால், தாவீதின் அண்ணனாகிய சீமேயியின்+ மகன் யோனத்தான் அவனை வெட்டிச் சாய்த்தான்.
22 ரெப்பாயீம் வம்சத்தாரான இந்த நான்கு பேரும் காத் நகரத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களை தாவீதும் அவருடைய ஊழியர்களும் வெட்டி வீழ்த்தினார்கள்.+