“யுத்தம் யெகோவாவினுடையது”
“நானோ நீ அவமானமாய்ப் பேசின இஸ்ரவேலருடைய அணிகளின் கடவுளாகிய சேனைகளின் யெகோவாவினுடைய திருநாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.” —1 சாமுவேல் 17:45, தி.மொ.
எருசலேமுக்குத் தென் மேற்கிலுள்ள ஏலா பள்ளத்தாக்குக்கு எதிரெதிராக இரண்டு பலமான சேனைகள் சந்திக்கின்றன. ஒரு பக்கத்தில் அச்சந்தருகிற சவுல் அரசன் வழிநடத்திய இஸ்ரவேல் சேனை. மறுபக்கத்தில் அதன் இராட்சத வீரனாகிய கோலியாத். கோலியாத்தின் பெயரின் அர்த்தம், “தெளிவாகத் தெரிகிற” என்பதாகும். அவன் ஒன்பது அடி உயரமும் முழுமையாக ஆயுதந்தாங்கியவனாகவும் இருக்கிறான். கோலியாத் இஸ்ரவேலுக்கு எதிராக உரத்தக் குரலில் தேவதூஷணமாகப் பேசுகிறான்.—1 சாமுவேல் 17:1–11.
2 கோலியாத்தின் சவாலைச் சந்திப்பது யார்? “இஸ்ரவேலர் எல்லாரும் அந்த மனுஷனைக் காணும்போது மிகவும் பயப்பட்டு, அவன் முகத்துக்கு விலகிப் ஓடிப்போவார்கள்.” ஆனால் இதோ!—ஓர் இளம் சிறுவன் தோன்றுகிறான்! அவன் பெயர் தாவீது. “நேசன்” என்பது அதன் பொருள். அவன் யெகோவாவுக்கும் “நேசனாக” நிரூபித்தான், ஏனென்றால் அவனுக்கு நீதியின் பேரில் தைரியத்துடன்கூடிய பக்தி இருந்தது. சாமுவேல் ஏற்கெனவே தாவீதை இஸ்ரவேலின் எதிர்கால அரசனாக அபிஷேகம் செய்துவிட்டார், யெகோவாவின் ஆவி அவன் மீது பலமாகக் கிரியைசெய்கிறது.—1 சாமுவேல் 16:12, 13, 18–21; 17:24; சங்கீதம் 11:7; 108:6.
3 கோலியாத் “ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதைக்” கேட்ட தாவீது அந்த இராட்சதனிடம் போரிட முன்வருகிறான். சவுல் தன்னுடைய ஒப்புதலை வழங்கிய போது, தாவீது சவுலால் கொடுக்கப்பட்ட வழக்கமான போருடைகளுடனும் ஆயுதங்களுடனும் எதிர்ச்செல்லவில்லை. 15 பவுண்டு எடை கொண்ட ஈட்டி முனையையும், 126 பவுண்டு எடையுடைய வெண்கல போர்க்கவசமும் தாங்கிய கோலியாத்துக்கு எதிர்மாறாக தாவீது ஒரு தடியையும், ஒரு கவணையும், ஐந்து கூழாங்கற்களையும் மட்டுமே கொண்டிருக்கிறான்! பராக்கிரமசாலியாகிய கோலியாத்தும் அவனுடைய பரிசைபிடிக்கிறவனும் முன்னேற, அந்தப் ‘பெலிஸ்தன் தன் தேவர்களைக் கொண்டு தாவீதைச் சபித்தான்.’—1 சாமுவேல் 17:12–44.
4 தாவீது எவ்விதம் பதில் கொடுக்கிறான்? அந்த இராட்சதனின் சவாலை தூக்கியெறிகிறவனாய்ப் பின்வருமாறு கூறுகிறான்: “நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், எறிவல்லயத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ அவமானமாய்ப் பேசின இஸ்ரவேலருடைய அணிகளின் கடவுளாகிய சேனைகளின் யெகோவாவினுடைய திருநாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன். இன்றையதினமே யெகோவா உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னைவிட்டு வாங்கிப் பெலிஸ்தியர் பாளையத்துப் பிணங்களை இந்நாளில் ஆகாயத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் கொடுப்பேன்; கடவுள் இஸ்ரவேலரோடே இருக்கிறார் என்று பூலோகத்தார் யாவரும் இதினால் அறிந்தகொள்வார்கள். யெகோவா இரட்சிப்பது பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும்; யுத்தம் யெகோவாவினுடையது. அவர் உங்களை எங்கள் கையிலே ஒப்புக்கொடுப்பார்.”—1 சாமுவேல் 17:45–47, தி.மொ.
5 தாவீது தைரியத்தோடே யுத்தக்களத்தில் முன்செல்கிறான். அவனுடைய கவண் கல் அதன் குறி நோக்கி பறக்கிறது, கோலியாத் தரையில் விழுகிறான். ஆம், அச்சிறிய ஏவுகணையைக் குறிதவறாது இராட்சதனின் நெற்றிக்கு வழிநடத்துவதன் மூலம் யெகோவா தாவீதின் விசுவாசத்துக்கும் தைரியத்துக்கும் பலனளிக்கிறார்! தாவீது முன்னே ஓடுகிறான், கோலியாத்தின் சொந்த பட்டயத்தை அதன் உறையிலிருந்து உருவுகிறான், கொடியவனின் தலையை வெட்டுகிறான். உண்மையிலேயே இப்படிச் சொல்லலாம்: “யுத்தம் யெகோவாவினுடையது”!—1 சாமுவேல் 17:47–51.
6 அந்தப் போர் ஏறக்குறைய 3,000 அண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒன்றாயிருப்பினும், அதைப் பற்றிய விவரமான பதிவை யெகோவா ஏன் பாதுகாத்திருக்கிறார்? அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு கூறுகிறான்: “தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.” (ரோமர் 15:4) இன்று, கடவுளுடைய அநேக உண்மையுள்ள ஊழியர்கள் கோலியாத்துக்கு ஒப்பாயிருக்கும் விரோதிகளின் நிந்தையையும் நேரடியான துன்புறுத்துதலையும் சகித்துவருகிறார்கள். விரோதியின் அழுத்தம் கூடுகையில், “யுத்தம் யெகோவாவினுடையது” என்ற ஆறுதலளிக்கும் உறுதியான வார்த்தைகள் நம் எல்லாருக்கும் அவசியமாயிருக்கிறது.
அரசுரிமைப் பிரச்னை
7 கோலியாத் இஸ்ரவேலின் கடவுளை எதிர்ப்பவனாய் முன்னிலையில் நடந்தான். அதுபோல, சர்வாதிபத்திய அரசியல் முறைகொண்ட ஆட்சி முன்னிலைக்கு வந்து, யெகோவாவின் அரசுரிமைக்கு எதிராக சவால் எழுப்பி, அவருடைய ஊழியர்கள் அரசுக்கு வணக்கத்துக்குரிய கீழ்ப்படிதலைக் காண்பிக்கும்படி வற்புறுத்துகிறது. இந்தப் பிரச்னை எல்லா தேசங்களிலுமிருக்கும் கடவுளுடைய மக்களின் அக்கறைக்குரிய ஒன்றாயிருக்கிறது. ஏன்? ஏனென்றால், தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட “புறஜாதிகளுக்குக் குறிக்கப்பட்ட காலங்கள்” 1914-ல் முடிவடைந்து, “ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணு”மான இன்றைய காலப்பகுதிக்கு வழிவகுத்திருக்கிறது.” (லூக்கா 21:24–26, NW, தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு) புறஜாதிகளின் காலங்கள் பொ.ச.மு. 607-ல் புறஜாதிகள் பூமிக்குரிய எருசலேமை மிதிக்க ஆரம்பித்த போது ஆரம்பமானது. அதுமுதல் யெகோவா பரம எருசலேமில் இயேசுவைத் தம்முடைய மேசியானிய ராஜாவாக சிங்காசனத்தில் அமர்த்திய 1914 முடிய 2,520 ஆண்டுகளை இது உள்ளடக்கியது.—எபிரெயர் 12:22, 28; வெளிப்படுத்துதல் 11:15, 17.a
8 1914-ல் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. இனிமேலும் புறஜாதிகள் தெய்வீக தலையிடுதலின்றி ஆட்சிசெய்ய முடியாது. ஆனால் அந்தச் சமயத்தில் ஆட்சிபுரிந்த “ராஜாக்கள்” புதிதாக ஏற்படுத்தப்பட்ட அவருடைய ராஜாவை ஏற்றுக்கொள்கிறவர்களாய்ப் “பயத்துடனே யெகோவாவை சேவியுங்கள்” என்ற கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்களா? இல்லை! மாறாக, “யெகோவாவுக்கு விரோதமாகவும் அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு [இயேசுவுக்கு] விரோதமாகவும் . . . எழும்பிநின்றார்கள்.” தங்களுடைய சொந்த ஆசைகளைத் தொடருகிறவர்களாய், 1914–18 மகா யுத்தத்தின்போது “கொந்தளித்தார்கள்.” (சங்கீதம் 2:1–6, 10–12) உலக ஆதிக்கம் என்பது இன்றுவரை ஒரு தீவிர பிரச்னையாக அல்லது விவாதமாக இருந்துவருகிறது. சாத்தானின் உலகம் கோலியாத்தின் உறவினராகிய இராட்சதருக்கு ஒப்பான அரசியல் வீரர்களை தொடர்ந்து உருவாக்கிவருகிறது. இந்தச் சர்வாதிகார ஆட்சிமுறைகள் யெகோவாவை நிந்தித்து, அவருடைய சாட்சிகளைக் கொடுமைப்படுத்திக் கீழ்ப்படுத்திட முயலுகிறது, ஆனால், எப்பொழுதும் போல், யுத்தமும் வெற்றியும் யெகோவாவுக்குரியது.—2 சாமுவேல் 21:15–22.
நவீன நாளைய “சவுல்”
9 இந்தப் படத்தில் சவுல் அரசன் எந்த இடத்தில் அமைகிறான்? முன்னதாக, தன்னுடைய கலகப் போக்கினால், யெகோவா ‘அவனிடமிருந்து இஸ்ரவேலின் ராஜ்யத்தைக் கிழித்துப்போட’ தீர்மானித்திருந்தார். (1 சாமுவேல் 15:22, 28) இப்பொழுது, கோலியாத்தின் சவாலுக்கு எதிராக யெகோவாவின் அரசுரிமையை மகிமைப்படுத்தத் தவறினான் சவுல். மேலும், கோலியாத்தை வெற்றிகொண்டவனும், சவுலின் அரச பரம்பரையில் மாற்றம் கொண்டுவரும்வகையில் யெகோவாவால் அபிஷேகம்பண்ணப்பட்டவனுமாகிய தாவீதைத் துன்புறுத்த ஆரம்பித்தான். இந்தச் செயல் முறையில் கிறிஸ்தவமண்டல குருவர்க்கம் எவ்வளவு சிறப்பாகப் பொருந்தியிருக்கிறது! அவர்கள் ‘சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாத’ மகா விசுவாசதுரோகத்தின் பாகமாக இருந்து, பைபிள் சத்தியத்தை எதிர்த்துவந்திருக்கிறார்கள். யெகோவாவின் சர்வலோக அரசுரிமையை விளம்பரப்படுத்த அவர்கள் முழுவதுமாக தவறிவிட்டார்கள். மற்றும் யெகோவாவின் அபிஷேகம்பண்ணப்பட்ட சாட்சிகளையும் அவர்களுடைய தோழர்களாகிய திரள் கூட்டத்தாரையும் கடுமையாக துன்புறுத்தியிருக்கிறார்கள். யெகோவா ‘தம்முடைய உக்கிரத்திலே’ அந்த விசுவாசதுரோகிகளை எடுத்துக்கொள்வார்.—2 தெசலோனிக்கேயர் 1:6–9; 2:3; ஓசியா 13:11.
10 முதல் உலக மகா யுத்தத்தின்போது, கிறிஸ்தவமண்டல குருவர்க்கத்தின் இணங்கிச்செல்லும் வழிகள் தெளிவாகத் தெரிய வந்தது. தெளிவாகவே மத்தேயு 24, 25 அதிகாரங்கள் மற்றும் லூக்கா 21-ம் அதிகாரத்திலுள்ள இயேசுவின் தீர்க்கதரிசனம் நிறைவேறிக்கொண்டிருந்தது. 1918-ல் பாப்டிஸ்ட், காங்கிரிகேஷனல், பிரஸ்பிட்டேரியன், எப்பிஸ்கோப்பல் மற்றும் மெத்தடிஸ்ட் சர்ச்சுகளைப் பிரதிநிதித்துவம் செய்த இங்கிலாந்திலுள்ள லண்டனில் பிரபல குருவர்க்கத் தொகுதி ஒன்று ஓர் அறிக்கை வெளியிட்டது. அது குறிப்பிட்டதாவது: “இன்றைய நெருக்கடி நிலை புறஜாதிகளுடைய காலங்களின் முடிவை நெருங்கியிருப்பதைக் குறிப்பிட்டுக் காண்பிக்கிறது.” ஆனால் அவர்கள் அந்த அறிக்கையின் பேரில் தொடரவும் செயல்படவுமில்லை. ஏற்கெனவே, கிறிஸ்தவமண்டல குருவர்க்கம் முதல் உலக மகா யுத்தத்தின் இரு பக்கத்தினரையும் ஆதரிப்பதில் ஆழ்ந்துவிட்டனர். இயேசு ராஜ்ய ஆட்சியில் வந்திருப்பதை அவர்கள் மதித்துணர்வதற்குப் பதிலாக, உலக தேசங்களின் எண்ணத்திற்கு—கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் மக்கள் ஐக்கியமாவதற்குப் பதிலாக கோலியாத் போன்ற கொடுங்கோலராலும், பிளவுபட்ட புறஜாதிகளின் அரசியல் அதிகாரங்களாலும் ஆதிக்கம் செலுத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்திற்குத் தங்களைக் கீழ்ப்படுத்திக்கொண்டார்கள்.—மத்தேயு 25:31–33.
இணங்கிவிடுவதில்லை!
11 இந்த அரசுரிமைப் பிரச்னையில் கடவுளுடைய பக்திவைராக்கியமுள்ள ஊழியர்கள் இணங்கிவிடுகிறார்களா? பைபிள் பதிவு தெளிவாகக் காண்பிப்பது போல், அப்படிச் செய்வதில்லை! (தானியேல் 3:28; 6:25–27; எபிரெயர் 11:32–38; வெளிப்படுத்துதல் 2:2, 3, 13, 19) நவீன நாள் கோலியாத் கொடுங்கோலன் உத்தமமுள்ள கிறிஸ்தவர்கள் மீது கடுமையான நிந்தைகளையும் துன்புறுத்துதல்களையும் கொண்டுவந்தபோதிலும் அவர்கள் இன்று யெகோவாவின் அரசுரிமையையும் ராஜ்யத்தையும் பற்றியிருக்கின்றனர். இப்படியாக அவர்கள் யெகோவாவின் அரசுரிமை சார்பாக தைரியமாக ஆவிக்குரிய போராட்டம் போராடியவரும், அதே சமயத்தில் உலக போராட்டங்கள் மற்றும் அரசியல்களினிடமாகக் நடுநிலைமையைக் காத்து வந்தவருமான “தாவீதின் குமாரனாகிய” இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகின்றனர். இயேசு தம்முடைய பிதாவிடம் ஜெபம் செய்தபோது, தம்மைப் பின்பற்றுகிறவர்களாகிய, உண்மையான கிறிஸ்தவர்களும் “உலகத்தின் பாகமல்ல” என்று குறிப்பிட்டார்.—மத்தேயு 4:8–10, 17; 21:9; யோவான் 6:15; 17:14, 16; 18:36, 37; 1 பேதுரு 2:21.
12 இன்று தாவீதைப் போன்ற அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் நவீன நாள் கோலியாத்தைச் சாய்த்துவிட்டிருக்கின்றனர். எப்படி? உலக ஆதிக்கம் என்ற விவாதத்தில் தாங்கள் ஒருமனதாக யெகோவாவின் பக்கத்தில் இருப்பதாக அறிக்கைசெய்திருக்கிறார்கள். இதற்கு “(சர்வதேச பைபிள் மாணாக்கர் சங்கம் ஒஹையோவிலுள்ள சீடர் பாய்ன்ட்டில் நடந்த மாநாட்டில் ஞாயிறு, செப்டம்பர் 10, 1922 அன்று நிறைவேற்றப்பட்ட) ஒரு தீர்மானம்” மாதிரியாக அமைகிறது. அது கீழ்க்காண்பவற்றை உட்படுத்தியது:
“10.மேலும் சாத்தானின் காணக்கூடியதும் காணக்கூடாததுமான பேரரசுக்கு எதிராகக் கடவுளுடைய பழிவாங்கும் நாள் இதுவே என்று நாங்கள் நம்புகிறோம், சான்றளிக்கிறோம்;
11.பழைய உலகம் அல்லது ஒழுங்குமுறை மீண்டும் நிலைநாட்டப்படுவது கூடாதகாரியம்; கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுளுடைய ராஜ்யம் ஸ்தாபிக்கப்படுவதற்குக் காலம் வந்திருக்கிறது; கர்த்தருடைய நீதியான ஆட்சிக்குத் தங்களைக் கீழ்ப்படுத்தாத எல்லா அதிகாரங்களும் அமைப்புகளும் அழிக்கப்படும்.”
“தாவீதின் குமாரன்,” கிறிஸ்தவ சபையின் தலைவராக ராஜ்ய சத்தியம் என்ற அந்தக் “கல்” எறியப்படுவதைச் செயல்படுத்தினார் என்பதில் சந்தேகம் இல்லை. (மத்தேயு 12:23; யோவான் 16:33; கொலோசெயர் 1:18) 1922 முதல் 1928 முதல் நடைபெற்ற வருடாந்தர மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இந்நிலையை உறுதிப்படுத்தியது. யெகோவாவின் மக்களுடைய நோக்குநிலையில் “கோலியாத்” மரித்துவிட்டான், தலை இழந்தான். யெகோவாவுடைய அரசுரிமையை தைரியமாக விளம்பரப்படுத்துகிறவர்களை இணங்கச்செய்வதில் சர்வாதிகார மனித ஆட்சிமுறைகள் வல்லமையற்றதாகிவிட்டன.—வெளிப்படுத்துதல் 20:4-ஐ ஒப்பிடவும்.
13 கோலியாத் போன்ற அரசியல் ஆட்சிமுறைகளால் கொடுமைப்படுத்தப்பட்டதற்கு ஒரு நவீன எடுத்துக்காட்டு ஹிட்லரின் ஜெர்மனியில் நடந்ததாகும். பிரதான மதங்களாகிய கத்தோலிக்கரும் புராட்டஸ்டன்ட்டினருமாகிய இருவருமே நாசியத்துக்கு மரியாதைக் காண்பிப்பதிலும், ஜெர்மன் தலைவரை வழிபடுவதிலும், சுவஸ்திக் கொடியை வணங்குவதிலும், அண்மை நாடுகளிலுள்ள தங்களுடைய உடன் விசுவாசிகளைக் கொல்லுவதற்காகப் புறப்பட்ட இராணுவத்தை ஆசீர்வதிப்பதிலும் பரிதாபத்துக்குறிய வகையில் இணங்கிச்சென்றனர். அனைத்து விசுவாசத்திலுமிருந்த பேர் கிறிஸ்தவர்கள்—ஆனால் யெகோவாவின் சாட்சிகள் அல்ல—தேசபற்றின் உணர்ச்சிவேகத்தில் சிக்கியிருந்தார்கள். தந்தைநாட்டுத் தாய்மார்கள் (Mothers in the Fatherland) என்ற புத்தகம் இவ்வாறு அறிக்கை செய்தது: “[யெகோவாவின் சாட்சிகள்] கான்சன்ட்ரேஷன் முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள், அவர்களில் ஆயிரம்பேர் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்கள், இன்னொரு ஆயிரம்பேர் 1933-க்கும் 1945-க்கும் இடையே மரித்தார்கள். . . . ஹிட்லருடன் ஒத்துழைக்கும்படியாகத் தங்களுடைய குருவர்க்கத்தினர் துரிதப்படுத்தியதைக் கத்தோலிக்கரும் புராட்டஸ்டன்ட்டினரும் கேட்டார்கள். அவர்கள் எதிர்த்தார்கள் என்றால், சர்ச் மற்றும் அரசின் ஆணையை மீறி அப்படிச் செய்தார்கள்.” சர்ச்சும் அரசும் ஆகிய இரண்டுமே எவ்வளவாக இரத்தப்பழிக்குள்ளானது!—எரேமியா 2:34.b
14 இயேசு கூறிய விதமாகவே, யெகோவாவின் சாட்சிகள் அநேக நாடுகளில் இன்று வரையுமாகக் கொடூரமாக ஒடுக்கப்பட்டுவருகின்றனர். ஆனால் இந்தக் கிறிஸ்தவர்கள் எல்லா சூழ்நிலைகளிலும் “ராஜ்யத்தின் இந்த நற்செய்தியைத்” தொடர்ந்து வைரக்கியத்துடன் பிரசங்கித்துவருகிறார்கள். (மத்தேயு 24:9, 13, 14) இந்நிலையின் வஞ்சப்புகழ்ச்சி என்னவென்றால், பெரும்பாலான நாடுகளில் சாட்சிகள் நேர்மையானவர்களாக, சுத்தமான வாழ்க்கை நடத்தும் குடிமக்களாக, சட்டம் ஒழுங்கைக் கடைப்பிடிப்பதில் முன்மாதிரியான மக்களாக அறியப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள். (ரோமர் 13:1–7) என்றாலும் அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். ஏன்? வணக்கம் யெகோவாவுக்கு மட்டுமே உரியதாதலால், தேசங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் சின்னங்களுக்குத் தலைவணங்குவதிலிருந்து அல்லது அவற்றை ஆராதனைக்குரிய வகையில் துதிப்பதிலிருந்து அவர்கள் விலகிக்கொள்கிறார்கள். (உபாகமம் 4:23, 24; 5:8–10; 6:13–15) வேறு எதற்கும் இணங்கிவிடாத வகையில் அவர்கள் யெகோவா “ஒருவரையே” வணங்குகிறார்கள், இப்படியாக அவரைத் தங்களுடைய வாழ்க்கையின் பேரரசரும் கர்த்தாவுமாகக் கொள்கிறார்கள். (மத்தேயு 4:8–10; சங்கீதம் 71:5; 73:28) “உலகத்தின் பாகமாக இல்லாத”வர்களாய் அவர்கள் உலக அரசியலிலும் போர்களிலும் கிறிஸ்தவ நடுநிலையைக் காத்துக் கொள்கிறார்கள்.—யோவான் 15:18–21; 16:33.
15 யெகோவாவின் வணக்கத்தை விக்கிரகாரதனைப் பழக்கங்களுக்கு முன்னால் வைக்கும் உத்தமத்தைக் காத்துக்கொள்ளும் இவர்களை நவீன நாள் கோலியாத் அடிக்கடி மிரட்டுகிறான். (வெளிப்படுத்துதல் 13:16, 17-ஐ ஒப்பிடவும்.) ஆனால் சாட்சிகள், இளைஞரும் முதியோரும், சவாலுக்குப் பயமின்றி பதிலளிப்பதில் தாவீதின் முன்மாதிரியைப் பின்பற்றலாம். லத்தீன் அமெரிக்க நாடொன்றில், ஆறு வயது கிறிஸ்தவ சிறுமி குழந்தைப் பருவத்திலிருந்தே வீட்டில் அருமையான பயிற்றுவிப்பைப் பெற்றிருந்தாள். (எபேசியர் 6:4; 2 தீமோத்தேயு 3:14, 15-ஐ ஒப்பிடவும்.) இது அவளை படிப்பில் வகுப்பிலேயே மிகச் சிறந்த மாணவியாக ஆக்கிட துணையாக இருந்தது. ஆனால் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட அவளுடைய மனச்சாட்சி அவளை வகுப்பில் விக்கிரகாராதனை சம்பந்தப்பட்ட சடங்குமுறைகளில் பங்குகொள்வதிலிருந்து விலகியிருக்கச் செய்தது. அவள் தன்னுடைய நிலைநிற்கையை விளக்கியபோது, ஒரு மனச்சாட்சியைக் கொண்டிருப்பதற்கு அவள் மிகச் சிறியவள் என்று ஆசிரியை கூறினாள்! ஓர் அர்த்தமுள்ள சாட்சியைக் கொடுப்பதன் மூலம் ஆசிரியை அப்படி நினைப்பது தவறு என்பதை அந்த ஆறு வயது சிறுமி நிரூபித்தாள்.
16 கோலியாத் போன்ற உலக அதிகாரங்கள் அவர்களை மிரட்டும்போது, சிறு பிள்ளைகள் இளம் தாவீதின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறவர்களாக இருக்க அவர்களைக் கிறிஸ்தவ பெற்றோர் அனைவருமே பயிற்றுவிப்பார்கள் என்று நம்புகிறோம். அவர்கள் உண்மையுள்ள மூன்று எபிரெய பிள்ளைகளைப் போலவும், தானியேலைப் போலவும், பைபிள் பதிவுகள் காண்பிக்கும் மற்ற அநேகரைப் போலவும் தைரியத்துடன் பைபிள் நியமங்களுக்கிசைவாக ‘நல்மனச்சாட்சியைப் பற்றிக்கொண்டவர்களாய்’ இருப்பார்களாக.—1 பேதுரு 2:19; 3:16; தானியேல் 3:16–18.
சரித்திராசிரியர்களின் கண்ணோட்டத்தில்
17 பிரபல ஆங்கில சரித்திராசிரியரான அர்னால்டு டாயின்பீ “பேரரசுக்குரிய தேசிய அரசுகளின் புறமத வணக்கத்தின் ஒரு கடுமையான உருவம்” வளரும் நம்முடைய காலத்தைக் குறித்து எச்சரித்தார். இதை அவர் “மலைவாழ்க்கை என்ற பழைய புட்டிகளிலிருக்கும் ஜனநாயகம் என்ற புதிய திராட்சரசத்தின் புளிப்பு” என்றும் விளக்கினார். தங்களுடைய கொள்கைகள் நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் அவற்றைச் செயல்படுத்துவதற்காகத் தங்களுடைய சொந்த தேசம் மற்ற எல்லாத் தேசங்களையும்விட மேன்மையானது என்று உரிமைபாராட்டி, அதை வணங்கும் அளவுக்குச் சென்றிடச் செய்யும் அவை ஆட்சியாளர்களால் திட்டமிடப்பட்டிருக்கின்றன. இதன் விளைவாக, தாங்கள் பிறந்த தேசத்தை நேசிக்கும், ஆனால் தேசத்தையோ அல்லது அதன் சின்னத்தையோ வணங்க மறுக்கும் கடவுளுடைய மக்களின் உத்தமத்தைப் பரிசோதிக்க கோலியாத் வகுப்பினர் எழுப்பியிருக்கின்றனர்.
18 நாசி ஜெர்மனியில் இருந்ததுபோல, மனச்சாட்சிக்குட்பட்ட கிறிஸ்தவர்கள் பதிலளிக்க வேண்டிய மனம் திறந்திடும் கேள்விகள் இருக்கின்றன. நான் வாழும் தேசம் வேறு எந்தத் தேசத்தையும்விட கடவுளுடைய தயவை அதிகமாக பெற்ற தேசம் என்பதை நான் நம்ப வேண்டுமா? விசேஷமாக இப்பொழுது, மனித சரித்திரத்திலேயே அதிக ஆபத்தான இந்தக் காலக் கட்டத்தில், பூமியின் ஒரு சிறிய பகுதி மற்ற எல்லா பகுதிகளைக் காட்டிலும் மேன்மையானது என்று சொல்லுவது தர்க்கரீதியானதும் அறிவுப்பூர்வமானதுமாக இருக்கிறதா? மனித குடும்பத்தின் ஒரு பகுதியை மற்ற பகுதிகளோடு ஒப்பிடுகையில் மேன்மையானதாக நோக்க வேண்டுமா?
19 அனைத்து சரித்திராசிரியர்களுக்கும் மேலான மிக உயர்ந்த சரித்திராசிரியரும் பைபிளின் ஆசிரியருமான யெகோவாவின் கருத்தை நாம் கவனிப்போமாக. அப்போஸ்தலனாகிய பேதுரு சொல்லுகிறான்: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல, எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ, அவனே அவருக்கு உகந்தவன்.” கடவுள் “மனுஷ ஜாதியான சகல ஜனங்களையும் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியெங்கும் குடியிருக்கச் செய்தார்” என்ற அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளுக்கேற்ப நாம் செயல்படவேண்டும் அல்லவா? அனைத்து தேசங்களிலும் தான்தான் மேன்மையாக இருப்பதாய் ஏன் ஒரு குறிப்பிட்ட தேச மக்கள் உணர வேண்டும்? எல்லா மனிதரையும் குறிப்பிட்டு பேசுகையில், பவுல் சொன்னதாவது: “நாம் அவருடைய சந்ததியார்.”—அப்போஸ்தலர் 10:34, 35; 17:26, 29.
20 யெகோவாவின் புதிய ஒழுங்குமுறையில் நீதியை நேசிப்பவர்கள் கோலியாத் போன்ற சர்வாட்சி அரசியல் முறையால் சவாலுக்கு அழைக்கப்பட மாட்டார்கள், ஏனென்றால் இனப் பெருமையும் பகையும் கடந்த கால காரியங்களாகிவிட்டிருக்கும். (சங்கீதம் 11:5–7) பூமியில் அவர்கள் எங்கு வாழ்ந்தாலும், ‘அவர்களை அவர் நேசித்தது போல, ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும்’ என்ற இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறவர்களாகக் கடவுளுடைய மக்கள் அப்படிப்பட்ட தேசபக்தியை ஏற்கெனவே பின்வைத்துவிட்டார்கள். (யோவான் 13:34, 35; ஏசாயா 2:4) அது எப்படிப்பட்ட அன்பு என்பதை எமது அடுத்த படிப்பு காண்பிக்கும். (w89 1⁄1)
[அடிக்குறிப்புகள்]
a இந்தப் பைபிள் காலக்கணக்கின் பேரில் ஒரு விவரமான கலந்தாராய்வுக்கு, உவாட்ச்டவர் பைபிள் சொஸையிட்டி பிரசுரித்த “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்ற புத்தகத்தில் பக்கங்கள் 129–39-ஐப் பார்க்கவும்.
b நாசி “கோலியாத்தின்” சவாலுக்குப் பதிலளிக்கும் இளைஞரும் முதியோருமடங்கிய யெகோவாவின் சாட்சிகளுடைய உத்தமத்திற்குக் கிளர்ச்சியூட்டும் உதாரணங்களுக்கு 1974 யெகோவாவின் சாட்சிகளின் வருடாந்தர புத்தகம், பக்கங்கள் 117–21, 164–9-ஐ பார்க்கவும்.
விமர்சனக் கேள்விகள்
◻ கொடிய இராட்சதனாகிய கோலியாத் எதற்குப் படமாக இருக்கிறான்?
◻ அரசுரிமைப் பிரச்னையின் பேரில் கடவுளுடைய ஊழியர்கள் எவ்வழிகளில் இணங்கிவிடாதவர்கள் என்பதைக் காண்பிக்கிறார்கள்?
◻ கடவுளுடைய மக்கள் நவீன நாளைய கோலியாத் வீழ்த்தப்பட்டான் என்று ஏன் சொல்லக்கூடும்?
◻ சவுல் அரசனின் செயல்முறையைப் பின்பற்றுவது யார்? எப்படி?
◻ நவீன நாளைய கோலியாத்தின் ஒடுக்குதலின் மத்தியில் யெகோவாவின் மக்கள் எவ்விதம் தாவீதைப் போல செயல்பட்டிருக்கிறார்கள்?
[கேள்விகள்]
1, 2. (எ) சவுல் அரசனின் தலைமையின் கீழ் இஸ்ரவேல் சேனை என்ன சவாலை எதிர்ப்படுகிறது? (பி) இஸ்ரவேல் சேனையின் மக்கள் கோலியாத்தின் சவாலுக்கு எவ்விதம் பிரதிபலிக்கிறார்கள்? இப்பொழுது காட்சியில் வருவது யார்?
3. யுத்தத்துக்குத் தாவீது தன்னை எவ்விதம் ஆயத்தப்படுத்திக்கொள்கிறான்? ஆனால் கோலியாத் எவ்விதம் ஆயத்தப்படுத்தியவனாயிருக்கிறான்?
4. இராட்சதனின் சவாலுக்குத் தாவீது எவ்விதம் பதிலளிக்கிறான்?
5. யுத்தத்தின் விளைவு என்ன? புகழ் யாருக்குச் செல்கிறது?
6. (எ) இந்தப் பூர்வீக யுத்தத்தைப் பற்றிய விவரத்தை யெகோவா ஏன் பாதுகாத்துவைத்திருக்கிறார்? (பி) கோலியாத்துக்கு ஒப்பான விரோதிகளிடமிருந்து வரும் துன்புறுத்துதலைக் கடவுளுடைய ஊழியர்கள் சகித்துவரும்போது அவர்களுக்கு என்ன உறுதி தேவையாயிருக்கிறது?
7. எல்லா தேசங்களிலுமுள்ள கடவுளுடைய மக்களுக்கு அக்கறைக்குரிய பிரச்னையாக அல்லது விவாதமாக இருப்பது எது? ஏன்?
8. (எ) “பயத்துடனே யெகோவாவை சேவியுங்கள்” என்ற தீர்க்கதரிசன கட்டளைக்குப் பூமியின் ராஜாக்கள் எவ்விதம் பிரதிபலித்தார்கள்? (பி) எந்த உலகப்பிரகாரமான வீரர்கள் இன்று யெகோவாவையும் அவருடைய சாட்சிகளையும் நிந்திக்கிறார்கள்?
9. சவுல் அரசனின் செயல்முறையில் அவனுக்கு இன்று இணையாக இருப்பது யார்? எவ்வழிகளில்?
10. (எ) 1918-ல், லண்டனிலிருந்த பிரபல குருவர்க்கத் தொகுதியால் என்ன அறிக்கை வெளியிடப்பட்டது? (பி) 1918-ன் அந்த அறிக்கையின்பேரில் தொடருவதற்கும் செயல்படுவதற்கும் பதிலாக குருவர்க்கம் எந்த ஒரு போக்கைத் தொடர்ந்திருக்கிறது?
11. அரசுரிமைப் பிரச்னையில் யார் இணங்கிவிடுவதில்லை? அவர்கள் யாருடைய முன்மாதிரியை பின்பற்றுகிறார்கள்?
12. (எ) நவீன நாளைய கோலியாத்தை வீழ்த்தியிருப்பது யார்? எப்படி? (பி) “கோலியாத்” மரித்துவிட்டான் என்று அவர்கள் நோக்குவது யெகோவாவின் மக்கள் மீது என்ன பாதிப்பையுடையதாய் இருந்திருக்கிறது?
13. (எ) ஹிட்லர் ஆண்ட ஜெர்மனியில் கிறிஸ்தவமண்டல குருவர்க்கம் எப்படி இணங்கிச்சென்றது? (பி) தந்தைநாட்டுத் தாய்மார்கள் என்ற புத்தகம் இணங்கிவிடாத சாட்சிகளைக் குறித்து என்ன அறிக்கையைக் கொடுத்தது?
14. யெகோவாவின் சாட்சிகள் ஏன் அடிக்கடி துன்புறுத்தப்படுகின்றனர்?
15, 16. (எ) சாட்சிகளை நவீன நாளைய கோலியாத் மிரட்டும்போது அவர்கள் யாருடைய முன்மாதிரியைப் பின்பற்றலாம்? இது ஆறு வயது கிறிஸ்தவ சிறுமியால் எப்படி காட்டப்பட்டது? (பி) தங்களுடைய சிறு பிள்ளைகள் யாரைப் போன்றிருக்க கிறிஸ்தவ பெற்றோர் பயிற்சியளிக்க விரும்புகிறார்கள்?
17. (எ) ஆங்கில சரித்திராசிரியரான டாயின்பீ என்ன காரியம் வளருவதைக் குறித்து எச்சரித்தார்? (பி) நவீன நாளைய கோலியாத் வகுப்பு கடவுளுடைய மக்களின் உத்தமத்தை எப்படி சோதிக்கிறது?
18. மனச்சாட்சிக்குட்பட்ட கிறிஸ்தவன் மனம் திறந்திடும் எந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியவனாய் இருக்கிறான்?
19. ஒரு தேசம் மற்ற ஒவ்வொரு தேசத்தையும்விட மேன்மையாக இருப்பதாய் நினைப்பதும் செயல்படுவதும் குறித்து மிக உயர்ந்த சரித்திராசிரியரான யெகோவா என்ன சொல்லுகிறார்?
20. யெகோவாவின் புதிய ஒழுங்குமுறையில் கடவுளுடைய மக்கள் என்ன சவாலை எதிர்ப்படமாட்டார்கள்? நம்முடைய அடுத்த படிப்பு எது குறித்து கலந்தாராயும்?