யாக்கோபு எழுதிய கடிதம்
2 என் சகோதரர்களே, மகிமையுள்ள நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துமேல் விசுவாசம் வைத்திருப்பதாகச் சொல்லிக்கொண்டு பாரபட்சம் காட்டுகிறீர்களா?+ 2 தங்க மோதிரங்களும் ஆடம்பரமான உடையும் போட்ட ஒரு மனிதனும், அழுக்கு உடை போட்ட ஓர் ஏழை மனிதனும் உங்கள் கூட்டத்துக்கு வந்தால், 3 ஆடம்பரமான உடை போட்டிருப்பவனை விசேஷமாகக் கவனித்து, “நீங்கள் இந்த நல்ல இடத்தில் உட்காருங்கள்” என்று சொல்கிறீர்களா? ஆனால், ஏழை மனிதனைப் பார்த்து, “நீ நின்றுகொண்டே இரு,” அல்லது “நீ தரையில்* உட்கார்” என்று சொல்கிறீர்களா?+ 4 அப்படியென்றால், உங்கள் மத்தியில் பாகுபாடு காட்டி+ அநியாயமான தீர்ப்புகளைக் கொடுக்கும் நீதிபதிகளாக ஆகியிருக்கிறீர்கள் என்றுதானே அர்த்தம்?+
5 என் அன்பான சகோதரர்களே, கேளுங்கள். இந்த உலகத்தில் ஏழைகளாக இருப்பவர்கள் விசுவாசத்தில் செல்வந்தர்களாக+ இருப்பதற்குக் கடவுள் அவர்களைத் தேர்ந்தெடுத்தார், இல்லையா? தன்மீது அன்பு காட்டுகிறவர்களுக்குத் தான் வாக்குக் கொடுத்த அரசாங்கத்தின் வாரிசுகளாக இருப்பதற்கும் தேர்ந்தெடுத்தார், இல்லையா?+ 6 ஆனால், நீங்கள் ஏழைகளை அவமானப்படுத்துகிறீர்கள். பணக்காரர்கள்தானே உங்களை ஒடுக்கி,+ நீதிமன்றங்களுக்கு இழுத்துக்கொண்டு போகிறார்கள்? 7 உங்களுக்குக் கொடுக்கப்பட்ட மதிப்புள்ள பெயரை அவர்கள்தானே நிந்திக்கிறார்கள்? 8 “உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும்* அன்பு காட்ட வேண்டும்” என்று வேதவசனம் சொல்கிறது.+ இந்த ராஜ சட்டத்தை இப்போது நீங்கள் கடைப்பிடித்து வந்தால் மிகவும் நல்லது. 9 ஆனால், தொடர்ந்து பாரபட்சம் காட்டுகிறீர்கள் என்றால்,+ பாவம் செய்கிறீர்கள்; ஏனென்றால், நீங்கள் குற்றவாளிகள் என்று அந்தச் சட்டமே தீர்ப்பு கொடுக்கிறது.*+
10 ஒருவன் திருச்சட்டத்தில் இருக்கிற எல்லா கட்டளைகளையும் கடைப்பிடித்து, ஒரேவொரு கட்டளையை மட்டும் மீறினால், அவன் எல்லா கட்டளைகளையும் மீறியவனாக ஆகிவிடுவான்.+ 11 ஏனென்றால், “மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது”+ என்று சொன்னவர்தான், “கொலை செய்யக் கூடாது”+ என்றும் சொன்னார். அதனால், நீங்கள் மணத்துணைக்குத் துரோகம் செய்யாதபோதிலும் கொலை செய்தால், திருச்சட்டத்தை மீறியவர்களாக இருப்பீர்கள். 12 சுதந்திரமான மக்களுடைய சட்டத்தின்படி*+ நியாயந்தீர்க்கப்படுகிறவர்கள் எப்படிப் பேச வேண்டுமோ அப்படியே பேசுங்கள், எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அப்படியே நடந்துகொள்ளுங்கள். 13 ஏனென்றால், இரக்கம் காட்டாதவன் இரக்கமில்லாமல் நியாயந்தீர்க்கப்படுவான்.+ இரக்கம் நியாயத்தீர்ப்பை ஜெயிக்கும்.
14 என் சகோதரர்களே, ஒருவன் தனக்கு விசுவாசம் இருப்பதாகச் சொல்லிக்கொண்டு அதற்கேற்ற செயல்களைச் செய்யாமலிருந்தால் என்ன பிரயோஜனம்?+ அந்த விசுவாசம் அவனைக் காப்பாற்றாது, இல்லையா?+ 15 ஒரு சகோதரனுக்கோ சகோதரிக்கோ உடையும் அன்றாட உணவும் இல்லாதபோது, 16 உங்களில் ஒருவன் அவரிடம், “சமாதானமாகப் போங்கள், உங்களைக் கதகதப்பாக வைத்துக்கொள்ளுங்கள், வயிறார சாப்பிடுங்கள்” என்று சொல்லிவிட்டு அவருடைய உடலுக்குத் தேவையானவற்றைக் கொடுக்கவில்லை என்றால் என்ன பிரயோஜனம்?+ 17 அதேபோல், விசுவாசத்தைச் செயலில் காட்டவில்லை என்றால், அது செத்ததாக இருக்கும்.+
18 ஆனாலும் ஒருவன், “உன்னிடம் விசுவாசம் இருக்கிறது, என்னிடம் செயல்கள் இருக்கின்றன. செயல்கள் இல்லாமல் உன்னுடைய விசுவாசத்தை எனக்குக் காட்டு, நான் என் விசுவாசத்தைச் செயல்கள் மூலம் உனக்குக் காட்டுகிறேன்” என்று சொல்வான். 19 கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று நீ நம்புகிறாய், இல்லையா? நல்லதுதான். ஆனால், பேய்களும்கூட அப்படி நம்பி, பயந்து நடுங்குகின்றன.+ 20 அறிவில்லாத மனிதனே, செயல்கள் இல்லாத விசுவாசத்தால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதை ஒத்துக்கொள்ள உனக்கு ஆதாரம் வேண்டுமா? 21 நம் தகப்பனான ஆபிரகாம் தன்னுடைய மகன் ஈசாக்கைப் பலிபீடத்தின் மேல் படுக்க வைத்தபோது, செயல்களால்தானே நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்?+ 22 உனக்குத் தெரிந்தபடி, அவருடைய விசுவாசமும் அவருடைய செயல்களும் ஒன்றுசேர்ந்து செயல்பட்டன, அவருடைய செயல்களால் அவருடைய விசுவாசம் முழுமையானது.*+ 23 இப்படி, “ஆபிரகாம் யெகோவாமேல்* விசுவாசம் வைத்தார், அதனால் அவர் நீதிமானாகக் கருதப்பட்டார்” என்ற வேதவசனம் நிறைவேறியது.+ அவர் யெகோவாவின்* நண்பர் என்று அழைக்கப்பட்டார்.+
24 ஒரு மனிதன் விசுவாசத்தால் மட்டுமல்ல, அவனுடைய செயல்களாலும் நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்படுகிறான் என்பது புரிகிறது, இல்லையா? 25 அதேபோல், ராகாப் என்ற விலைமகளும் தூதுவர்களை உபசரித்து வேறு வழியாக அனுப்பி வைத்தபோது, அவளுடைய செயல்களால்தானே நீதியுள்ளவளாக ஏற்றுக்கொள்ளப்பட்டாள்?+ 26 உயிர்* இல்லாத உடல் செத்ததாயிருப்பதுபோல்,+ செயல்கள் இல்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.+