அப்போஸ்தலரின் செயல்கள்
12 கிட்டத்தட்ட அதே காலத்தில், சபையிலிருந்த சிலரை ஏரோது ராஜா கொடுமைப்படுத்த ஆரம்பித்தான்.+ 2 யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபை+ வாளால் வெட்டிக் கொன்றான்.+ 3 அது யூதர்களுக்குச் சந்தோஷம் தந்ததைப் பார்த்து, அடுத்தபடியாக பேதுருவையும் கைது செய்ய முடிவெடுத்தான். (இது புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை நாட்களின்போது நடந்தது.)+ 4 பின்பு, அவரைப் பிடித்துச் சிறையில் அடைத்தான்;+ மாறிமாறி அவரைக் காவல்காப்பதற்காக நான்கு படைவீரர்கள் கொண்ட நான்கு குழுக்களை நியமித்தான். பஸ்கா பண்டிகை முடிந்த பின்பு அவரை மக்கள் முன்னால் நிறுத்தலாம்* என நினைத்தான். 5 அதனால், பேதுருவைச் சிறையிலேயே அடைத்து வைத்திருந்தான். அந்தச் சமயத்தில், சபையிலிருந்த எல்லாரும் அவருக்காகக் கடவுளிடம் உருக்கமாக ஜெபம் செய்துவந்தார்கள்.+
6 அவரை மக்கள் முன்னால் நிறுத்த வேண்டுமென்று ஏரோது நினைத்திருந்த நாளுக்கு முந்தின ராத்திரி, பேதுரு இரண்டு சங்கிலிகளால் கட்டப்பட்டு இரண்டு படைவீரர்களுக்கு நடுவே தூங்கிக்கொண்டிருந்தார். கதவுக்கு வெளியே காவலர்கள் சிறைச்சாலையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். 7 அப்போது யெகோவாவின்* தூதர் அங்கே வந்து நின்றார்,+ அறைக்குள் ஒளி பிரகாசித்தது. அவர் பேதுருவின் முதுகில் தட்டி, “சீக்கிரம் எழுந்திரு!” என்று சொன்னார். உடனே, அவருடைய கைகளிலிருந்து சங்கிலிகள் கழன்று விழுந்தன.+ 8 தேவதூதர் அவரிடம், “புறப்படு,* செருப்பைப் போட்டுக்கொள்” என்று சொன்னார். அவர் அப்படியே செய்தார். பின்பு அவரிடம், “உன் மேலங்கியைப் போட்டுக்கொண்டு, என் பின்னால் வா” என்று சொன்னார். 9 பேதுரு வெளியே வந்து அவர் பின்னால் போனார். ஆனால், தேவதூதர் மூலம் நடக்கிற இவையெல்லாம் நிஜம் என்பதை அவர் உணரவில்லை. ஒரு தரிசனத்தைப் பார்ப்பதாகவே நினைத்தார். 10 அவர்கள் முதலாம் காவலையும் இரண்டாம் காவலையும் கடந்து, நகரத்துக்குப் போகிற வாசலின் இரும்புக் கதவுக்குப் பக்கத்தில் வந்தார்கள். அப்போது அது தானாகவே திறந்துகொண்டது. அவர்கள் வெளியே வந்து ஒரு தெரு வழியாக நடந்துபோனார்கள். உடனே, அந்தத் தேவதூதர் அவரைவிட்டுப் போனார். 11 நடந்ததையெல்லாம் பேதுரு உணர்ந்துகொண்டதும், “இப்போது எனக்கு நன்றாகப் புரிகிறது, யெகோவாதான்* தன்னுடைய தூதரை அனுப்பி ஏரோதுவின் கையிலிருந்து என்னை விடுதலை செய்திருக்கிறார், யூதர்கள் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் என்னைக் காப்பாற்றியிருக்கிறார்”+ என்று சொல்லிக்கொண்டார்.
12 அவர் இதைப் புரிந்துகொண்ட பின்பு, மாற்கு+ என்று அழைக்கப்பட்ட யோவானின் அம்மாவான மரியாளுடைய வீட்டுக்குப் போனார். அங்கே நிறைய பேர் ஒன்றுகூடி ஜெபம் செய்துகொண்டிருந்தார்கள். 13 அவர் வாசல் கதவைத் தட்டியபோது, யாரென்று பார்க்க ரோதை என்ற வேலைக்காரப் பெண் வந்தாள். 14 பேதுருவுடைய குரலென்று தெரிந்தவுடன், சந்தோஷத்தில் கதவைக்கூட திறக்காமல் உள்ளே ஓடிப்போய், வாசலில் பேதுரு நின்றுகொண்டிருப்பதாகச் சொன்னாள். 15 அதற்கு அவர்கள், “உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது” என்று சொன்னார்கள். ஆனால், தான் சொல்வது உண்மை என்று அவள் திரும்பத் திரும்பச் சொன்னாள். அப்போது அவர்கள், “அவருடைய தூதராக இருக்கலாம்” என்று சொன்னார்கள். 16 பேதுரு கதவைத் தட்டிக்கொண்டே இருந்தார். அவர்கள் கதவைத் திறந்தபோது, அவரைப் பார்த்துத் திகைத்துப்போனார்கள். 17 ஆனால், அவர்களை அமைதியாக இருக்கும்படி பேதுரு தன் கையால் சைகை காட்டிவிட்டு, சிறையிலிருந்து யெகோவா* தன்னை விடுதலை செய்ததைப் பற்றி அவர்களிடம் விவரமாகச் சொன்னார். பின்பு, “இந்த விஷயங்களை யாக்கோபுக்கும்+ மற்ற சகோதரர்களுக்கும் தெரிவியுங்கள்” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வேறொரு இடத்துக்குப் போனார்.
18 பொழுது விடிந்தபோது, பேதுருவுக்கு என்ன ஆனதென்று தெரியாததால் படைவீரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 19 ஏரோது அவரைத் தீவிரமாகத் தேடினான். ஆனாலும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், காவலர்களை அவன் விசாரித்துவிட்டு, அவர்களை இழுத்துக்கொண்டுபோய்த் தண்டிக்கச் சொல்லி உத்தரவிட்டான்.+ பிறகு, யூதேயாவிலிருந்து செசரியாவுக்குப் போய் அங்கே கொஞ்சக் காலம் தங்கினான்.
20 தீரு மற்றும் சீதோன் மக்கள்மேல் அவன் பயங்கர கோபமாக இருந்தான்.* அதனால், அந்த மக்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து அவனிடம் வந்தார்கள். முதலில் ராஜாவின் அந்தரங்க அதிகாரியான பிலாஸ்துவிடம் பக்குவமாகப் பேசி, ராஜாவோடு சமாதானமாவதற்கு முயற்சி செய்தார்கள். ஏனென்றால், ஏரோதுவின் தேசத்திலிருந்துதான் அவர்களுடைய தேசத்துக்கு உணவுப் பொருள்கள் வந்தன. 21 ஒருநாள் ஏரோது, ராஜ உடை போட்டுக்கொண்டு நியாயத்தீர்ப்பு மேடையில் உட்கார்ந்து மக்கள் முன்னால் பேச ஆரம்பித்தான். 22 அப்போது அங்கே கூடியிருந்த மக்கள், “இது தெய்வக் குரல்! மனுஷக் குரல் அல்ல!” என்று ஆரவாரம் செய்ய ஆரம்பித்தார்கள். 23 கடவுளை அவன் மகிமைப்படுத்தாததால், அந்த நொடியே யெகோவாவின்* தூதர் அவனைத் தாக்கினார். இதனால் அவன் வியாதிப்பட்டுப் புழுபுழுத்துச் செத்தான்.
24 யெகோவாவின்* வார்த்தை அதிகமதிகமாகப் பரவிவந்தது,+ நிறைய பேர் விசுவாசம் வைத்தார்கள்.
25 பர்னபாவும்+ சவுலும் எருசலேமில் நிவாரணப் பணியை முழுமையாக முடித்த பின்பு,+ மாற்கு என்று அழைக்கப்பட்ட யோவானைக் கூட்டிக்கொண்டு+ அந்தியோகியாவுக்குத் திரும்பி வந்தார்கள்.