லேவியராகமம்
24 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “விளக்குகள் தொடர்ந்து எரிவதற்காக, இடித்துப் பிழிந்த சுத்தமான ஒலிவ எண்ணெயை உன்னிடம் கொண்டுவரும்படி இஸ்ரவேலர்களுக்கு நீ கட்டளை கொடு.+ 3 சந்திப்புக் கூடாரத்தில் சாட்சிப் பெட்டிக்குப் பக்கத்திலுள்ள திரைச்சீலைக்கு வெளியே இருக்கிற விளக்குகளை ஆரோன் ஏற்றிவைக்க வேண்டும். அவை எப்போதும் சாயங்காலத்திலிருந்து காலைவரை யெகோவாவின் முன்னிலையில் எரிந்துகொண்டிருக்க வேண்டும். தலைமுறை தலைமுறைக்கும் இது உங்களுக்குக் கொடுக்கப்படும் சட்டம். 4 சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்ட விளக்குத்தண்டின்+ மேலுள்ள அகல் விளக்குகளை யெகோவாவின் முன்னிலையில் ஆரோன் எப்போதும் வரிசைப்படி ஏற்றி வைக்க வேண்டும்.
5 நீ நைசான மாவை எடுத்து அதில் 12 வட்ட ரொட்டிகள் சுட வேண்டும். ஒவ்வொரு ரொட்டியையும், ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு* மாவில் செய்ய வேண்டும். 6 சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டு யெகோவாவின் முன்னிலையில் வைக்கப்பட்டிருக்கிற மேஜையின்+ மேல் அவற்றை இரண்டு அடுக்காக அடுக்கிவைக்க வேண்டும். ஒவ்வொரு அடுக்கிலும் ஆறு ரொட்டிகளை வைக்க வேண்டும்.+ 7 ஒவ்வொரு அடுக்கின்மேலும் சுத்தமான சாம்பிராணியை வைக்க வேண்டும். ரொட்டிகளை யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்துவதற்கு அடையாளமாக+ அது இருக்கும். 8 ஒவ்வொரு ஓய்வுநாளிலும் யெகோவாவின் முன்னிலையில் அவை அடுக்கி வைக்கப்பட வேண்டும்.+ இது இஸ்ரவேலர்களோடு நான் செய்திருக்கிற நிரந்தர ஒப்பந்தம். 9 அந்த ரொட்டிகள் ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் சேர வேண்டிய பங்கு.+ யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகன பலிகளில் அவை மகா பரிசுத்தமானவையாக இருப்பதால் அவற்றைப் பரிசுத்த இடத்தில் அவர்கள் சாப்பிட வேண்டும்.+ இது நிரந்தரக் கட்டளை” என்றார்.
10 இஸ்ரவேலைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் ஒரு எகிப்தியனுக்கும் பிறந்த ஒருவன் இஸ்ரவேலர்களோடு வாழ்ந்துவந்தான்.+ ஒருநாள் அவனும் இன்னொரு இஸ்ரவேலனும் முகாமில் சண்டை போட்டார்கள். 11 அப்போது அவன், கடவுளுடைய பெயரைப் பழித்தும் சபித்தும் பேசினான்.+ உடனே அவனை மோசேயிடம் கொண்டுவந்தார்கள்.+ அவனுடைய அம்மாவின் பெயர் செலோமித். அவள் தாண் கோத்திரத்தைச் சேர்ந்த திப்ரியின் மகள். 12 அவனை என்ன செய்ய வேண்டுமென்று யெகோவா சொல்லும்வரை அவனைக் காவலில் வைத்தார்கள்.+
13 யெகோவா மோசேயிடம், 14 “சபித்துப் பேசியவனை முகாமுக்கு வெளியில் கொண்டுபோ. அவன் சபித்துப் பேசியதைக் கேட்டவர்கள் எல்லாரும் அவன் தலையில் கை வைக்க வேண்டும். பின்பு, ஜனங்கள் எல்லாரும் அவன்மேல் கல்லெறிய வேண்டும்.+ 15 அதன்பின், நீ இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொல்: ‘யாராவது கடவுளைச் சபித்துப் பேசினால், அந்தப் பாவத்துக்கு அவன் தண்டிக்கப்பட வேண்டும். 16 யெகோவாவின் பெயரைப் பழித்துப் பேசுகிறவன் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+ ஜனங்கள் எல்லாரும் அவன்மேல் கண்டிப்பாகக் கல்லெறிய வேண்டும். கடவுளுடைய பெயரைப் பழிப்பவன் இஸ்ரவேலனாக இருந்தாலும் சரி, இஸ்ரவேலர்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி, அவன் கொல்லப்பட வேண்டும்.
17 ஒருவன் யாரையாவது கொலை செய்தால், அவன் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+ 18 ஒருவருடைய வீட்டு விலங்கை ஒருவன் கொன்றால், அதேபோன்ற இன்னொரு விலங்கை ஈடாகக் கொடுக்க வேண்டும். 19 ஒருவன் யாரையாவது காயப்படுத்தினால், அவனுக்கும் அதுபோலவே செய்யப்பட வேண்டும்.+ 20 எலும்புக்கு எலும்பு, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் கொடுக்கப்பட வேண்டும். அவன் காயப்படுத்தியது போலவே அவனும் காயப்படுத்தப்பட வேண்டும்.+ 21 மிருகத்தைக் கொன்றவன் அதற்கு ஈடு கொடுக்க வேண்டும்.+ ஆனால் மனுஷனைக் கொன்றவன் கொல்லப்பட வேண்டும்.+
22 உங்களுக்கும் சரி, உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்து ஆட்களுக்கும் சரி, ஒரே நியாயம்தான்* இருக்க வேண்டும்.+ ஏனென்றால், நான் உங்கள் கடவுளாகிய யெகோவா’” என்றார்.
23 மோசே இவற்றை இஸ்ரவேலர்களுக்குச் சொன்னார். சபித்துப் பேசியவனை முகாமுக்கு வெளியில் கொண்டுபோய் அவர்கள் கல்லெறிந்தார்கள்.+ யெகோவா மோசேக்குக் கட்டளை கொடுத்தபடியே இஸ்ரவேலர்கள் செய்தார்கள்.