யோசுவா
5 இஸ்ரவேலர்கள் யோர்தானைக் கடப்பதற்காக யெகோவா அதன் தண்ணீரை வற்றிப்போக வைத்ததைப் பற்றி யோர்தானின் மேற்குப் பகுதியிலிருந்த எமோரிய+ ராஜாக்களும் கடலுக்குப் பக்கத்திலிருந்த கானானிய ராஜாக்களும்+ கேள்விப்பட்டார்கள். அதைக் கேள்விப்பட்டவுடன் வெலவெலத்துப்போனார்கள்.+ இஸ்ரவேலர்களை எதிர்க்க அவர்கள் யாருக்குமே தைரியம் இல்லாமல் போய்விட்டது.+
2 அப்போது யெகோவா யோசுவாவிடம், “நீ கருங்கல்லால்* கத்திகள் செய்து, இரண்டாவது தடவை இஸ்ரவேல் ஆண்களுக்கு விருத்தசேதனம் செய்”+ என்று சொன்னார். 3 அதனால், யோசுவா கருங்கல்லால் கத்திகள் செய்து கிபியாத்-ஆர்லோத்* என்ற இடத்தில் இஸ்ரவேல் ஆண்களுக்கு விருத்தசேதனம் செய்தார்.+ 4 அந்த ஆண்கள் விருத்தசேதனம் செய்யப்பட்டதற்கு ஒரு காரணம் இருந்தது. எகிப்திலிருந்து வந்த ஆண்கள் எல்லாரும், அதாவது போர்வீரர்கள்* எல்லாரும், வழியில் வனாந்தரத்திலேயே இறந்துபோனார்கள்.+ 5 எகிப்திலிருந்து வந்த ஆண்கள் எல்லாருக்கும் ஏற்கெனவே விருத்தசேதனம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், எகிப்திலிருந்து வந்தபின் வனாந்தரத்தில் பிறந்த ஆண்கள் யாருக்குமே விருத்தசேதனம் செய்யப்படவில்லை. 6 எகிப்திலிருந்து வந்த அந்தப் போர்வீரர்கள் எல்லாரும், அதாவது யெகோவாவின் பேச்சைக் கேட்காத எல்லாரும், 40 வருஷங்களாக+ வனாந்தரத்தில் அலைந்து திரிந்து கடைசியில் இறந்துபோனார்கள்.+ முன்னோர்களுக்கு யெகோவா வாக்குக் கொடுத்த தேசமாகிய+ பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை+ அந்த ஆட்கள் பார்க்கவே மாட்டார்கள் என்று யெகோவா உறுதியாகச் சொல்லியிருந்தார்.+ 7 அவர்களுக்குப் பதிலாக அவர்களுடைய பிள்ளைகளைக் கடவுள் இந்தத் தேசத்துக்குக் கொண்டுவந்தார்.+ இவர்களுக்கு யோசுவா விருத்தசேதனம் செய்தார். ஏனென்றால், வழியில் இவர்களுக்கு விருத்தசேதனம் செய்யப்படவில்லை.
8 இஸ்ரவேல் ஆண்கள் எல்லாருக்கும் விருத்தசேதனம் செய்து முடிக்கப்பட்டது. அவர்கள் குணமாகும்வரை, முகாம்போட்டிருந்த இடத்திலேயே தங்கியிருந்தார்கள்.
9 பின்பு யெகோவா யோசுவாவிடம், “எகிப்தியர்கள் உங்களுக்கு எதிராகப் பேசிய பழிப்பேச்சுக்கு இன்று நான் முடிவுகட்டிவிட்டேன்”* என்று சொன்னார். அதனால், அந்த இடம் கில்கால்*+ என்று இந்த நாள்வரை அழைக்கப்படுகிறது.
10 இஸ்ரவேலர்கள் தொடர்ந்து கில்காலிலேயே முகாம்போட்டிருந்தார்கள். அந்த மாதம் 14-ஆம் நாள்+ சாயங்காலத்தில், எரிகோ பாலைநிலத்தில் பஸ்காவைக் கொண்டாடினார்கள். 11 கானான் தேசத்தின் விளைச்சலை, அதாவது புளிப்பில்லாத ரொட்டிகளையும்+ வறுத்த தானியங்களையும், பஸ்காவுக்கு அடுத்த நாளே சாப்பிட ஆரம்பித்தார்கள். 12 அவர்கள் அவற்றைச் சாப்பிட்ட அதே நாளில் மன்னா கிடைப்பது நின்றுபோனது. அதன்பின், இஸ்ரவேலர்களுக்கு மன்னா கிடைக்கவில்லை,+ அந்த வருஷத்திலிருந்து கானான் தேசத்தின் விளைச்சலைச் சாப்பிட ஆரம்பித்தார்கள்.+
13 யோசுவா எரிகோவுக்குப் பக்கத்தில் இருந்தபோது, உருவிய வாளுடன் ஒரு மனிதர்+ தனக்கு முன்னால் நிற்பதைப் பார்த்தார்.+ யோசுவா அவரிடம் நடந்துபோய், “நீங்கள் எங்கள் பக்கமா, எதிரிகள் பக்கமா?” என்று கேட்டார். 14 அதற்கு அவர், “அப்படியில்லை, நான் யெகோவாவுடைய படையின் அதிபதியாக+ வந்திருக்கிறேன்” என்றார். அதைக் கேட்டவுடன் யோசுவா சாஷ்டாங்கமாக விழுந்து, “எஜமானே, அடியேனிடம் என்ன சொல்ல வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். 15 அதற்கு யெகோவாவுடைய படையின் அதிபதி, “உன் செருப்பைக் கழற்று. ஏனென்றால், நீ நிற்கிற இடம் பரிசுத்தமான இடம்” என்றார். அவர் சொன்னபடியே யோசுவா உடனடியாகச் செய்தார்.+