உபாகமம்
7 பின்பு அவர், “நீங்கள் சொந்தமாக்கப்போகும் தேசத்துக்கு உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை இப்போது கூட்டிக்கொண்டு போகும்போது,+ உங்களைவிட பெரியதாகவும் பலம்படைத்ததாகவும்+ இருக்கிற ஏழு தேசங்களை உங்கள் கண் முன்னால் துரத்தியடிப்பார்.+ அதாவது ஏத்தியர்கள், கிர்காசியர்கள், எமோரியர்கள்,+ கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள்+ ஆகியவர்களைத் துரத்தியடிப்பார். 2 உங்கள் கடவுளாகிய யெகோவா அவர்களை உங்கள் கையில் கொடுப்பார். அவர்களை நீங்கள் தோற்கடித்து,+ கண்டிப்பாக அழித்துவிட வேண்டும்.+ அவர்களோடு எந்த ஒப்பந்தமும் செய்யக் கூடாது, அவர்களுக்குக் கருணையே காட்டக் கூடாது.+ 3 அவர்களோடு சம்பந்தம் பண்ணக் கூடாது. அவர்களுடைய மகன்களுக்கு உங்கள் மகள்களைக் கல்யாணம் செய்துவைக்கக் கூடாது. உங்களுடைய மகன்களுக்கு அவர்களுடைய மகள்களைக் கல்யாணம் செய்துவைக்கக் கூடாது.+ 4 ஏனென்றால், உங்கள் மகன்கள் என்னை விட்டுவிட்டு மற்ற தெய்வங்களை வணங்கும்படி அவர்கள் செய்துவிடுவார்கள்.+ அப்போது யெகோவாவின் கோபம் உங்கள்மேல் பற்றியெரியும். அவர் உங்களை ஒரு நொடியில் அழித்துவிடுவார்.+
5 அதனால், நீங்கள் அவர்களுடைய பலிபீடங்களை இடித்துப்போட வேண்டும், பூஜைத் தூண்களை உடைத்துப்போட வேண்டும்,+ பூஜைக் கம்பங்களை* வெட்டிச் சாய்க்க வேண்டும்,+ உருவச் சிலைகளை எரித்துப்போட வேண்டும்.+ 6 உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு நீங்கள் பரிசுத்தமான ஜனங்கள். உங்கள் கடவுளாகிய யெகோவா இந்தப் பூமியிலுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களைத்தான் தன்னுடைய ஜனமாகவும் விசேஷ சொத்தாகவும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+
7 மற்ற எல்லா ஜனங்களையும்விட நீங்கள் ஏராளமாக இருந்தீர்கள் என்பதற்காக யெகோவா உங்கள்மேல் பாசம் காட்டவோ உங்களைத் தேர்ந்தெடுக்கவோ இல்லை.+ சொல்லப்போனால், மற்ற எல்லா ஜனங்களையும்விட நீங்கள் கொஞ்சம் பேராகத்தான் இருந்தீர்கள்.+ 8 யெகோவா உங்களை நேசித்ததாலும் உங்கள் முன்னோர்களுக்குக் கொடுத்த உறுதிமொழியைக் காப்பாற்ற நினைத்ததாலும்,+ எகிப்தில் அடிமைகளாக இருந்த உங்களை விடுவித்தார்.+ யெகோவா தன்னுடைய கைபலத்தால் உங்களை எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் பிடியிலிருந்து காப்பாற்றினார். 9 உங்கள் கடவுளாகிய யெகோவாதான் உண்மைக் கடவுள். அவர் நம்பகமானவர். தன்னை நேசித்து தன்னுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களிடம் ஆயிரம் தலைமுறை வரைக்கும் மாறாத அன்பைக் காட்டி, ஒப்பந்தத்தைக் காப்பவர்.+ இதெல்லாம் உங்களுக்கே நன்றாகத் தெரியும். 10 ஆனால், அவரைப் பகைக்கிறவர்களுக்கு அவர் நேருக்கு நேர் பதிலடி கொடுத்து, அவர்களை ஒழித்துக்கட்டுவார்.+ தாமதிக்காமல் அவர்களைத் தண்டிப்பார். அவர்களை நேரடியாகப் பழிவாங்குவார். 11 அதனால், நான் இன்று உங்களுக்குக் கொடுக்கிற கட்டளைகளையும் விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் கண்ணும் கருத்துமாகக் கடைப்பிடியுங்கள்.
12 நீங்கள் இந்த நீதித்தீர்ப்புகளைக் காதுகொடுத்துக் கேட்டு அவற்றைக் கடைப்பிடித்து வந்தால், உங்கள் கடவுளாகிய யெகோவா நம் முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்தபடியே, தன்னுடைய ஒப்பந்தத்தைக் காப்பார், மாறாத அன்பைக் காட்டுவார். 13 அவர் உங்களை நேசிப்பார், ஆசீர்வதிப்பார், பெருக வைப்பார். உங்கள் முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்த தேசத்தில்+ உங்களுக்குப் பிள்ளைகளையும், கன்றுக்குட்டிகளையும், ஆட்டுக்குட்டிகளையும், தானியங்களையும், புதிய திராட்சமதுவையும், எண்ணெயையும் ஏராளமாகக் கொடுத்து ஆசீர்வதிப்பார்.+ 14 எல்லா ஜனங்களையும்விட நீங்கள்தான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட ஜனமாக இருப்பீர்கள்.+ உங்களில் எந்தவொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் குழந்தை பாக்கியம் இல்லாமல் போகாது, உங்கள் கால்நடைகள் குட்டி போடாமல் இருக்காது.+ 15 யெகோவா உங்களுடைய எல்லா நோய்களையும் தீர்ப்பார், எகிப்தியர்களுக்கு வந்த கொடிய நோய்கள் எதுவும் உங்களுக்கு வராமல் பார்த்துக்கொள்வார்.+ ஆனால், உங்களை வெறுக்கிறவர்களுக்கு அதையெல்லாம் வரச் செய்வார். 16 உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் கையில் கொடுக்கிற எல்லா ஜனங்களையும் நீங்கள் அழித்துவிட வேண்டும்.+ அவர்களுக்காகப் பரிதாபப்படக் கூடாது.+ அவர்களுடைய தெய்வங்களை வணங்கக் கூடாது,+ அப்படி வணங்கினால் ஆபத்தில் சிக்கிக்கொள்வீர்கள்.+
17 நீங்கள் உங்களுடைய உள்ளத்தில், ‘இந்த ஜனங்கள் எல்லாரும் நம்மைவிட ஏராளமாக இருக்கிறார்களே. அவர்களை நாம் எப்படித் துரத்துவோம்?’ என்று நினைக்காதீர்கள்.+ 18 அவர்களைப் பார்த்து நீங்கள் பயப்படக் கூடாது.+ பார்வோனுக்கும் எகிப்திலுள்ள எல்லாருக்கும் உங்கள் கடவுளாகிய யெகோவா செய்த எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.+ 19 அங்கே உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுடைய கண் முன்னால் கொடிய தண்டனைகளைக் கொடுத்து, அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்து,+ தன்னுடைய கைபலத்தாலும் மகா வல்லமையாலும் உங்களைக் கூட்டிக்கொண்டு வந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.+ நீங்கள் பார்த்துப் பயப்படுகிற ஜனங்களுக்கெல்லாம் உங்கள் கடவுளாகிய யெகோவா அப்படித்தான் செய்வார்.+ 20 உங்கள் கடவுளாகிய யெகோவா அவர்களை விரக்தியடைய* செய்வார். அவர்களில் மீதி இருக்கிறவர்களும்+ உங்களிடமிருந்து ஒளிந்துகொள்கிறவர்களும் அழிந்துபோகும்வரை அப்படிச் செய்வார். 21 அவர்களைப் பார்த்து நடுநடுங்காதீர்கள். உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களோடு இருக்கிறார்,+ அவர் அதிசயமும் அற்புதமுமானவர்.+
22 உங்கள் கடவுளாகிய யெகோவா அந்தத் தேசத்தாரைக் கொஞ்சம் கொஞ்சமாக உங்களைவிட்டுத் துரத்துவார்.+ ஆனால், அவர்களை ஒரேயடியாக அழித்துப்போட உங்களை விட மாட்டார். அப்படி விட்டுவிட்டால், அங்கே காட்டு மிருகங்கள் பெருகி பெரிய அச்சுறுத்தலாக ஆகிவிடும். 23 உங்கள் கடவுளாகிய யெகோவா அவர்களை உங்கள் கையில் கொடுப்பார். அவர்கள் அடியோடு அழிந்துபோகும்வரை அவர்களுக்குத் தோல்விமேல் தோல்வியைக் கொடுப்பார்.+ 24 அவர்களுடைய ராஜாக்களை உங்கள் கையில் கொடுப்பார்,+ நீங்கள் அவர்களுடைய பெயர்களை இந்த மண்ணிலிருந்தே மறைந்துபோகச் செய்வீர்கள்.+ நீங்கள் அவர்களை அடியோடு அழிக்கும்வரை+ யாருமே உங்களை எதிர்த்து நிற்க முடியாது.+ 25 அவர்களுடைய தெய்வச் சிலைகளை நீங்கள் நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.+ அவற்றிலுள்ள வெள்ளிக்கும் தங்கத்துக்கும் ஆசைப்பட்டு அவற்றை எடுத்துக்கொள்ளாதீர்கள்.+ அப்படிச் செய்தால் ஆபத்தில்* சிக்கிக்கொள்வீர்கள். ஏனென்றால், அவை உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவை.+ 26 அருவருப்பான சிலைகளை உங்கள் வீட்டுக்குள் கொண்டுவராதீர்கள். அப்படிக் கொண்டுவந்தால், அவற்றைப் போலவே நீங்களும் அழிக்கப்படுவீர்கள். நீங்கள் அவற்றை ‘சீ’ என்று வெறுத்து, அருவருக்க வேண்டும். ஏனென்றால், அவை அழியப்போவது உறுதி” என்றார்.