எஸ்றா
4 சிறைபிடிக்கப்பட்டுப் போன யூதா, பென்யமீன் ஜனங்கள் திரும்பி வந்து+ இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவுக்கு ஆலயம் கட்டிக்கொண்டிருந்ததை எதிரிகள்+ கேள்விப்பட்டார்கள். 2 உடனே அவர்கள் செருபாபேலிடமும் தந்தைவழிக் குடும்பத் தலைவர்களிடமும் போய், “உங்களோடு சேர்ந்து நாங்களும் ஆலயத்தைக் கட்ட விரும்புகிறோம். உங்களுடைய கடவுளைத்தான் நாங்களும் வணங்குகிறோம்.+ எங்களை இங்கு கொண்டுவந்த+ அசீரிய ராஜா எசரத்தோனின்+ காலத்திலிருந்தே உங்கள் கடவுளுக்குப் பலி செலுத்திவருகிறோம்” என்றார்கள். 3 அதற்கு செருபாபேலும் யெசுவாவும் இஸ்ரவேலின் தந்தைவழிக் குடும்பத் தலைவர்களும், “எங்களோடு சேர்ந்து எங்கள் கடவுளுக்கு ஆலயத்தைக் கட்ட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.+ பெர்சிய ராஜா கோரேஸ் எங்களுக்கு ஆணை கொடுத்தபடி,+ இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவுக்கு நாங்கள் மட்டும்தான் ஆலயம் கட்டுவோம்” என்று சொன்னார்கள்.
4 அதனால் சுற்றியிருந்த தேசத்தார், யூதா ஜனங்களைச் சோர்ந்துபோக வைத்து கட்டுமான வேலையை நிறுத்துவதற்காக முயற்சி செய்துகொண்டே இருந்தார்கள்.+ 5 யூதர்களுடைய திட்டங்களை முறியடிப்பதற்காக+ ஆலோசகர்களுக்குக் கூலி கொடுத்தார்கள். பெர்சிய ராஜாக்களான கோரேசின் ஆட்சிக்காலம் முதல் தரியுவின் ஆட்சிக்காலம் வரைக்கும்+ இப்படித்தான் செய்துவந்தார்கள். 6 அகாஸ்வேரு ராஜா ஆட்சிசெய்ய ஆரம்பித்த சமயத்தில், அவர்கள் யூதா ஜனங்களையும் எருசலேம் ஜனங்களையும் குற்றம்சாட்டி ஒரு கடிதம் எழுதினார்கள். 7 பின்பு பெர்சிய ராஜா அர்தசஷ்டாவின் ஆட்சிக்காலத்தில், பிஸ்லாமும் மித்திரேதாத்தும் தபேயாலும் அவனோடு சேர்ந்தவர்களும் அர்தசஷ்டாவுக்குக் கடிதம் எழுதினார்கள். அதை அரமேயிக் பாஷையில் மொழிபெயர்த்து,+ அரமேயிக் எழுத்துக்களில் எழுதினார்கள்.*
8 * தலைமை அரசதிகாரி ரெகூமும் எழுத்தர் சிம்சாயும் எருசலேம் ஜனங்களைக் குற்றம்சாட்டி அர்தசஷ்டா ராஜாவுக்குக் கடிதம் எழுதினார்கள். அதில், 9 “(தலைமை அரசதிகாரி ரெகூம், எழுத்தர் சிம்சாய், அவர்களோடு சேர்ந்த நீதிபதிகள், துணை ஆளுநர்கள், செயலாளர்கள், ஏரேக்+ நகரவாசிகள், பாபிலோனியர்கள், ஏலாமியர்களான+ சூசா+ நகரவாசிகள்,* 10 மாண்பும் மதிப்பும் உள்ள அஸ்னாப்பார் ராஜா சமாரியாவின் நகரங்களிலும் ஆற்றுக்கு அப்பாலுள்ள* பிரதேசத்திலும் குடிவைத்த மற்ற ஜனங்கள்+ ஆகிய எல்லாரும் 11 எழுதி அனுப்பும் கடிதம்.)
ஆற்றுக்கு அப்பால் வாழ்கிற ஊழியர்கள் அர்தசஷ்டா ராஜாவுக்கு எழுதுவதாவது: 12 ராஜாவே, யூதர்கள் உங்களிடமிருந்து எருசலேமுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். அந்த நகரம் கலகக்காரர்களின் நகரம், அக்கிரமக்காரர்களின் நகரம். அப்படிப்பட்ட நகரத்தை அவர்கள் திரும்பக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதன் மதில்களைக் கட்டி முடிக்கப்போகிறார்கள்,+ அஸ்திவாரங்களைப் பழுதுபார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 13 ராஜாவே, அவர்கள் அந்த நகரத்தையும் அதன் மதில்களையும் திரும்பக் கட்டிவிட்டால் எந்த வரியையும்*+ செலுத்த மாட்டார்கள். அதனால் ராஜாக்களின் கஜானாவுக்கு வருமானம் குறைந்துவிடும். 14 நாங்கள் அரண்மனை உப்பைச் சாப்பிடுவதால்,* ராஜாவுக்குப் பாதிப்பு ஏற்படுவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. அதனால்தான் ராஜாவுக்கு இந்தக் கடிதத்தை அனுப்புகிறோம். 15 உங்களுடைய முன்னோர்களின் வரலாற்றுப் பதிவுகளைத்+ தயவுசெய்து அலசி ஆராயும்படி கேட்டுக்கொள்கிறோம். அப்போது நீங்களே உண்மையைத் தெரிந்துகொள்வீர்கள். அந்த நகரம் கலகக்காரர்களின் நகரம், ராஜாக்களுக்கும் மாகாணங்களுக்கும் கேடு உண்டாக்குகிற நகரம், பூர்வ காலத்திலிருந்தே தேசத் துரோகம் செய்துவருகிற நகரம். அதனால்தான் அது அழிக்கப்பட்டது.+ 16 ராஜாவே, அந்த நகரமும் அதன் மதில்களும் கட்டி முடிக்கப்பட்டால், ஆற்றுக்கு+ அப்பாலுள்ள பிரதேசம் உங்கள் கைவிட்டுப் போய்விடும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று எழுதி அனுப்பினார்கள்.
17 சமாரியாவிலும் ஆற்றுக்கு அப்பாலுள்ள பிரதேசத்திலும் வாழ்ந்துவந்த தலைமை அரசதிகாரி ரெகூமுக்கும் எழுத்தர் சிம்சாயுக்கும் அவர்களோடு சேர்ந்தவர்களுக்கும் ராஜா இப்படிப் பதில் அனுப்பினார்:
“வாழ்த்துக்கள்! 18 நீங்கள் அனுப்பிய கடிதம் எனக்குத் தெளிவாக வாசித்துக் காட்டப்பட்டது.* 19 என் ஆணைப்படி பதிவுகள் அலசி ஆராயப்பட்டன. ஆரம்பத்திலிருந்தே எருசலேமில் கலகங்களும் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்துவந்திருப்பதைத் தெரிந்துகொண்டேன்.+ 20 அந்த நகரத்தில் பெரிய பெரிய ராஜாக்கள் இருந்திருக்கிறார்கள், ஆற்றுக்கு அப்பாலுள்ள பிரதேசம் முழுவதையும் ஆட்சி செய்திருக்கிறார்கள், எல்லா விதமான வரிகளையும்* வசூலித்திருக்கிறார்கள். 21 அதனால், கட்டுமான வேலையை நிறுத்தும்படி அவர்களுக்கு இப்போதே ஆணை கொடுங்கள். நான் உத்தரவு கொடுக்கும்வரை அவர்கள் அந்த நகரத்தைத் திரும்பக் கட்டக் கூடாது. 22 கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள்! உடனடியாகப் போய் வேலையை நிறுத்துங்கள்! இனி ராஜாவுக்கு எந்தப் பாதிப்பும் வரக் கூடாது.”+
23 அர்தசஷ்டா ராஜா அனுப்பிய கடிதம், ரெகூமுக்கும் எழுத்தர் சிம்சாயுக்கும் அவர்களோடு சேர்ந்தவர்களுக்கும் வாசித்துக் காட்டப்பட்டவுடன், அவர்கள் அவசர அவசரமாக எருசலேமுக்குப் போய், கட்டுமான வேலையைப் பலவந்தமாகத் தடுத்து நிறுத்தினார்கள். 24 இப்படி, எருசலேமிலிருந்த ஆலயத்தின் கட்டுமான வேலை தடைபட்டது. பெர்சிய ராஜா தரியு ஆட்சி செய்த இரண்டாம் வருஷம்வரை அது நிறுத்தி வைக்கப்பட்டது.+