பைபிள் புத்தக எண் 15—எஸ்றா
எழுத்தாளர்: எஸ்றா
எழுதப்பட்ட இடம்: எருசலேம்
எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச.மு. 460
காலப்பகுதி: பொ.ச.மு. 537-ஏ. 467
தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டபடியே எருசலேம் பாபிலோனிய சிறையிருப்பில் இருந்தது. இப்பொழுது அந்தச் சிறையிருப்பின் 70 ஆண்டுகள் முடியும் தறுவாயில் இருந்தன. பாபிலோன் தன் கைதிகளை ஒருபோதும் விடுவிக்காது என்பதற்கு பெயர் பெற்றிருந்தது. ஆனாலும் பாபிலோனிய வல்லமையைப் பார்க்கிலும் யெகோவாவின் வார்த்தை வல்லமை வாய்ந்ததாக நிரூபிக்கும். யெகோவாவின் ஜனங்கள் வெகு சீக்கிரத்தில் விடுதலை பெறப் போகின்றனர். தகர்க்கப்பட்டிருந்த யெகோவாவின் ஆலயம் திரும்ப கட்டப்படும். யெகோவாவின் பலிபீடத்தில் பிராயச்சித்த பலிகள் மறுபடியும் செலுத்தப்படும். யெகோவாவின் உண்மையான வணக்கத்தாரின் ஆரவாரமும் துதியும் எருசலேமில் மீண்டும் கேட்கும். அந்தப் பாழ்க்கடிப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என எரேமியா தீர்க்கதரிசனம் உரைத்திருந்தார். சிறைப்பட்டவர்கள் எப்படி விடுதலை பெறுவர் என்பதை ஏசாயா முன்னுரைத்திருந்தார். பெர்சியனாகிய கோரேசை ‘யெகோவாவின் மேய்ப்பன்’ என ஏசாயா பெயர் சொல்லி அழைத்தார். பைபிள் சரித்திரத்தின் மூன்றாவது உலக வல்லரசான அகந்தையுள்ள பாபிலோனை அவரே கவிழ்த்துப்போடுவார்.—ஏசா. 44:28, தி.மொ.; 45:1, 2; எரே. 25:12, தி.மொ.
2 அக்டோபர் 5, பொ.ச.மு. 539-ன் (கிரகோரியன் காலண்டர்) இரவில் பாபிலோனிய அரசன் பெல்ஷாத்சாரும் அவனுடைய பிரபுக்களும் தங்கள் பேய் தெய்வங்களைப் புகழ்ந்து குடித்து கும்மாளமிட்டு கொண்டிருந்தனர். அன்று இரவே பாபிலோன்மீது திடீரென பேராபத்து வந்தது. ஒழுக்கக்கேடான புறமத களியாட்டத்தில் மூழ்கியிருந்த அவர்கள் யெகோவாவின் ஆலயத்திலிருந்து எடுத்துவந்த பரிசுத்த பாத்திரங்களை குடிப்பதற்காக பயன்படுத்தினர்! அன்று இரவே, தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றும் வண்ணமாக கோரேசு பாபிலோனின் மதில்களுக்கு வெளியே வந்துநின்றது எவ்வளவு பொருத்தமாய் இருந்தது!
3 பொ.ச.மு. 539 முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வருடம். ஏனென்றால், உலக சரித்திரத்தோடும் பைபிள் சரித்திரத்தோடும் அந்த வருடம் ஒத்திருக்கலாம். கோரேசு, பாபிலோனின் அரசனாக ஆன முதல் வருடத்தில் யெகோவாவின் ஆலயத்தைத் திரும்ப புதுப்பித்து கட்டுவதற்காக எருசலேமுக்கு போகும்படி யூதருக்கு அதிகாரமளித்து “தன் ராஜ்யமெங்கும் விளம்பரம் பண்ணினான்.” இந்தக் கட்டளையை அவர் பொ.ச.மு. 538-ன் முடிவில் அல்லது பொ.ச.மு. 537-ன் ஆரம்பத்தில் பிறப்பித்ததாக தோன்றுகிறது.a அப்போது உண்மையுள்ள மீதியானோர் சிலர் எருசலேமுக்கு திரும்பினர். பொ.ச.மு. 537-ம் ஆண்டு, ‘ஏழாம் மாதத்தில்’ (திஷ்ரி, செப்டம்பர்-அக்டோபருக்கு ஒத்தது) பலிபீடத்தைக் கட்டி முதல் பலிகளைச் செலுத்தினர். நேபுகாத்நேச்சார் யூதாவையும் எருசலேமையும் பாழாக்கிய மாதத்திலிருந்து இந்த மாதம்வரை துல்லியமாக 70 ஆண்டுகள் நிறைவேறின.—எஸ்றா 1:1-3; 3:1-6.
4 திரும்ப நிலைநாட்டப்படுதல்! இதுவே எஸ்றா புத்தகத்தின் பின்னணி. இந்தப் புத்தகத்தில் 7-ம் அதிகாரம் 27-ம் வசனத்திலிருந்து 9-ம் அதிகாரம் வரை ‘நான்’ ‘எனக்கு’ என்ற தன்மை சுட்டுப்பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதால் எஸ்றாவே இதை எழுதினார் என்பது தெளிவாக உள்ளது. நாளாகம புத்தகங்களை எழுதிய எஸ்றா, இந்தச் சரித்திரத்தை எழுதவும் தகுதிபெற்றவராக இருந்தார். ஏனெனில், அவர் ‘மோசேயின் நியாயப்பிரமாணத்திலே கைத்தேர்ந்த நகல் எடுப்பவராகவும்,’ ‘யெகோவாவின் நியாயப்பிரமாணத்தை ஆராய்ந்து, அதின்படி செய்யவும் உபதேசிக்கவும் தன் இருதயத்தைத் தயார்படுத்தியிருந்த,’ விசுவாசத்தை செயலில் காட்டின ஒரு மனிதனாகவும் இருந்தார். (எஸ்றா 7:6, 10, NW) எஸ்றா புத்தகம் நாளாகமத்தின் தொடர்ச்சியாக இருப்பதால் இதுவும் அதே சமயத்தில், அதாவது ஏறக்குறைய பொ.ச.மு. 460-ல் எழுதப்பட்டதென நம்பப்படுகிறது. இந்தப் புத்தகத்தில் 70 ஆண்டுகளில் நிகழ்ந்த சம்பவங்கள் அடங்கியுள்ளன. அதாவது, யூதர்கள் முறியடிக்கப்பட்டு சிதறடிக்கப்பட்ட ஜனமாக ‘மரணத்துக்குரிய குமாரர்களாக’ குறிக்கப்பட்டிருந்த சமயத்திலிருந்து இரண்டாம் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு எஸ்றா எருசலேமுக்கு திரும்பிவந்த பின் ஆசாரியத்துவம் சுத்திகரிக்கப்படுவது வரையான காலமாகும்.—எஸ்றா 1:1; 7:7; 10:17; சங். 102:20, NW அடிக்குறிப்பு.
5 எஸ்றா என்ற எபிரெய பெயரின் அர்த்தம் “உதவி” என்பதாகும். எஸ்றா, நெகேமியா புத்தகங்கள் தொடக்கத்தில் ஒரே சுருளாக இருந்தன. (நெ. 3:32, NW அடிக்குறிப்பு) பின்னால் யூதர்கள் இந்தச் சுருளை இரண்டாக பிரித்து அதை முதலாம், இரண்டாம் எஸ்றா என அழைத்தனர். தற்கால எபிரெய பைபிள்கள், நவீனகால மற்ற பைபிள்களைப் போலவே இந்த இரண்டு புத்தகங்களையும் எஸ்றா, நெகேமியா என்று அழைக்கின்றன. எஸ்றா புத்தகத்தின் ஒரு பகுதி (4:8-6:18 மற்றும் 7:12-26) அரமிய மொழியிலும் மற்றவை எபிரெயுவிலும் எழுதப்பட்டன. எஸ்றா இந்த இரண்டு மொழிகளிலுமே புலமை பெற்றவராக இருந்தார்.
6 இன்று கல்விமான்களில் பெரும்பான்மையர் எஸ்றா புத்தகத்தின் திருத்தமான தன்மையை ஒப்புக்கொள்கின்றனர். எஸ்றா, அதிகாரப்பூர்வ பட்டியலில் இருப்பதைக் குறித்து டபிள்யூ. எஃப். ஆல்பிரைட், இருபது வருட தொல்பொருள் ஆராய்ச்சிக்குப் பின் பைபிள் (ஆங்கிலம்) என்ற தன் ஆய்வுக் கட்டுரையில் பின்வருமாறு எழுதுகிறார்: “எரேமியா, எசேக்கியேல், எஸ்றா, நெகேமியா ஆகிய புத்தகங்கள் முற்றிலும் உண்மையானவையே என்பதை தொல்பொருள் ஆராய்ச்சியின் அத்தாட்சிகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளன. அதோடு, சம்பவங்களையும் அவற்றின் வரிசைமுறையையும் பற்றிய பாரம்பரிய கருத்தையும் அவை உறுதிப்படுத்தியுள்ளன.”
7 கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் எழுத்தாளர்கள் எஸ்றா புத்தகத்திலிருந்து நேரடியாக மேற்கோள் காட்டவோ அதைப் பற்றி குறிப்பிடவோ இல்லை என்றாலும் அது பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலைச் சேர்ந்ததே என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. எபிரெய புத்தகங்களின் பட்டியல் தொகுக்கப்படும் காலம் வரை யெகோவா யூதர்களுடன் கொண்டிருந்த தொடர்பு பற்றிய பதிவு இதில் அடங்கியுள்ளது. யூத பாரம்பரியத்தின்படி இந்தத் தொகுக்கும் வேலையில் பெரும்பகுதியை எஸ்றாவே செய்தார். மேலும் திரும்ப நிலைநாட்டப்படுதல் பற்றிய எல்லா தீர்க்கதரிசனங்களையும் எஸ்றா புத்தகம் ஆதரிக்கிறது. இவ்வாறு அது ஏவப்பட்ட பதிவின் ஒரு பாகம் என நிரூபிக்கிறது; பைபிளோடு முற்றிலும் இசைந்தும் உள்ளது. மேலுமாக அது தூய்மையான வணக்கத்தை மேன்மைப்படுத்துகிறது, யெகோவா தேவனின் உன்னதமான பெயரை பரிசுத்தப்படுத்துகிறது.
எஸ்றாவின் பொருளடக்கம்
8 மீதியானோர் திரும்புகின்றனர் (1:1–3:6). பெர்சிய அரசனான கோரேசை யெகோவாவின் ஆவி தூண்டியதால் யூதர்கள் திரும்பிச் சென்று எருசலேமிலுள்ள யெகோவாவின் ஆலயத்தைக் கட்டும்படி கட்டளை பிறப்பிக்கிறான். பாபிலோனிலேயே தங்கிவிட தீர்மானித்த யூதர்கள் அந்த வேலைக்காக தாராளமாய் நன்கொடை கொடுக்கும்படி அவன் உந்துவிக்கிறான். திரும்பிச்செல்லும் யூதர்களிடம் முந்தின ஆலயத்தின் பாத்திரங்களையும் கொடுத்து அனுப்புகிறான். விடுதலை செய்யப்பட்டவர்களை வழிநடத்துவதற்காக யூதாவின் அரச பரம்பரையையும் தாவீது ராஜாவின் வம்சத்தையும் சேர்ந்த தலைவனாகிய செருபாபேல் (சேஸ்பாத்சார்) தேசாதிபதியாக நியமிக்கப்படுகிறார், யெசுவா (யோசுவா) பிரதான ஆசாரியராக இருக்கிறார். (எஸ்றா 1:8; 5:2; சக. 3:1) ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் உட்பட யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் ஏறக்குறைய 2,00,000 மீதியானோர் அந்த நீண்ட பயணத்தை மேற்கொள்கின்றனர். யூத நாட்காட்டியின்படி ஏழாவது மாதத்தில் அவர்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறுகின்றனர். பின்பு ஆலய பலிபீடம் இருந்த இடத்தில் பலிகளைச் செலுத்தவும் கூடார பண்டிகையை ஆசரிக்கவும் பொ.ச.மு. 537-ன் இலையுதிர் காலத்தின்போது எருசலேமில் கூடிவருகின்றனர். இவ்வாறு 70 ஆண்டுகால பாழ்க்கடிப்பு துல்லியமான காலத்தில் முடிவடைகிறது!b
9 ஆலயத்தைத் திரும்ப கட்டுதல் (3:7–6:22). அவர்கள் திரும்பிவந்த இரண்டாம் ஆண்டில் பொருட்களை ஒன்றுசேர்த்து யெகோவாவுடைய ஆலயத்தின் அஸ்திவாரத்தைப் போடுகின்றனர். அப்போது ஒருபுறம் மகிழ்ச்சியின் ஆரவாரம் கேட்க மறுபுறம் முந்தின ஆலயத்தைப் பார்த்திருந்த முதிர்வயதானோர் ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர். அவர்களைச் சுற்றிலுமிருந்த சத்துருக்கள், தாங்களும் அதே கடவுளை வணங்குவதாக கூறி ஆலயம் கட்டுவதில் உதவி செய்ய முன்வருகின்றனர்; ஆனால் யூத மீதியானோர் அவர்களோடு எந்த உறவும் வேண்டாமென கண்டிப்பாய் மறுத்துவிடுகின்றனர். சத்துருக்களோ விடுவதாக இல்லை. அவர்கள் கோரேசின் ஆட்சிகாலம் முதல் தரியுவின் காலம்வரை, யூதர்களை சங்கடப்படுத்தி மனச்சோர்வுறச்செய்து அவர்களுடைய வேலையைத் தடுக்க தொடர்ந்து முயற்சி செய்கின்றனர். கடைசியாக, “அர்தசஷ்டாவின்” (பார்டியா அல்லது கெளமாட்டா என அறியப்பட்ட மேகியன், பொ.ச.மு. 522) நாட்களில், அரச கட்டளையால் அந்த வேலையை வலுக்கட்டாயமாக நிறுத்திப்போடுகின்றனர். இந்தத் தடையுத்தரவு, “பெர்சியாவின் ராஜாவாகிய தரியு ராஜ்யபாரம் பண்ணின இரண்டாம் வருஷமட்டும்” (பொ.ச.மு. 520) தொடர்கிறது; அதாவது அஸ்திவாரம் போடப்பட்ட பின் 15-க்கும் அதிகமான வருடங்கள் நீடிக்கிறது.—4:4-7, 24.
10 இப்போது செருபாபேலையும் யெசுவாவையும் தூண்டியெழுப்புவதற்காக யெகோவா தம்முடைய தீர்க்கதரிசிகளான ஆகாயையும் சகரியாவையும் அனுப்புகிறார்; அதன் காரணமாக கட்டட வேலை புதுத் தெம்போடு ஆரம்பமாகிறது. சத்துருக்கள் அரசனிடம் மறுபடியும் முறையிடுகின்றனர், ஆனால் வேலையோ தளரா ஊக்கத்துடன் முன்னேறுகிறது. கோரேசின் கட்டளையை தேடி எடுத்துப் பார்த்த முதலாம் தரியு (ஹிஸ்டாஸ்பிஸ்) அந்த வேலை தடையில்லாமல் தொடர கட்டளையிடுகிறான். அதோடு, கட்டட வேலை முன்னேறுவதற்கு பொருட்களைக் கொடுத்து உதவும்படி எதிரிகளுக்கும் கட்டளையிடுகிறான். யெகோவாவின் தீர்க்கதரிசிகள் தொடர்ந்து கொடுத்த உற்சாகத்தால் அந்த ஆலயத்தை ஐந்து வருடங்களுக்குள் கட்டி முடிக்கின்றனர். இது தரியுவின் ஆறாம் ஆண்டின் ஆதார் மாதம் அல்லது பொ.ச.மு. 515-ன் வசந்த காலமாகும். அந்த கட்டட வேலை முழுவதும் ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டுவிட்டது. (6:14, 15) மிகுந்த மகிழ்ச்சியுடனும் பொருத்தமான பலிகளுடனும் கடவுளுடைய ஆலயம் இப்போது பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பின்பு ஜனங்கள் பஸ்காவை ஆசரித்து “புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாளாகச் சந்தோஷத்துடனே” ஆசரிக்கிறார்கள். (6:22) யெகோவாவுக்கு துதியுண்டாக இந்த இரண்டாம் ஆலயம் பிரதிஷ்டை செய்யப்படுகையில் மகிழ்ச்சியும் களிகூருதலும் நிரம்பிவழிகின்றன.
11 எஸ்றா எருசலேமுக்கு திரும்புகிறார் (7:1–8:36). ஏறக்குறைய 50 ஆண்டுகள் கடந்துவிடுகின்றன. இப்போது நாம், பெர்சிய அரசன் அர்தசஷ்டாவின் (இவனுடைய வலது கை இடது கையைப் பார்க்கிலும் நீண்டதாக இருந்ததனால் லாங்கிமேனஸ் எனவும் அறியப்பட்டான்) ஏழாம் ஆண்டாகிய பொ.ச.மு. 468-க்கு வருகிறோம். திறம்பட்ட நகல் எடுப்பவராகிய எஸ்றா “கேட்டவைகளையெல்லாம்” அரசன் அவருக்கு கொடுத்தான். (7:6) எருசலேமில் அதிகம் தேவைப்பட்ட உதவியை அளிப்பதற்காக அங்கு பயணம்செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளும் அதில் உட்பட்டிருந்தது. அவருக்கு அதிகாரம் கொடுக்கையில் யூதர்களும் அவரோடு செல்லும்படி அரசன் கூறுகிறான். ஆலய உபயோகத்திற்காக வெள்ளி, பொன் பாத்திரங்களையும் அவற்றோடு கோதுமை, திராட்ச ரசம், எண்ணெய், உப்பு போன்ற உணவுப்பொருட்களையும் அளிக்கிறான். ஆசாரியர்களுக்கும் ஆலய ஊழியக்காரர்களுக்கும் வரிவிலக்கு அளிக்கிறான். ராஜா, ஜனங்களுக்கு போதிக்கும்படி எஸ்றாவை நியமிக்கிறான்; யெகோவாவின் சட்டத்திற்கும் அரசனின் சட்டத்திற்கும் கீழ்ப்படியாதவர்களுக்கு மரண தண்டனை என்று அறிவிக்கிறான். அரசன் மூலமாக யெகோவா காட்டின அன்புள்ள தயவிற்கு நன்றியுள்ளவராக எஸ்றா அந்த நியமிப்புக்கிணங்க உடனடியாக செயல்படுகிறார்.
12 இந்தச் சமயத்திலிருந்து எஸ்றா தான் கண்கூடாக கண்டவற்றை தன்மை சுட்டுப்பெயரில் எழுத ஆரம்பிக்கிறார். திரும்பிச் செல்லும் யூதர்களுக்கு இறுதியான கட்டளைகள் கொடுப்பதற்காக அவர்களை அகாவா நதியண்டையில் கூடிவர செய்கிறார். ஏற்கெனவே கூடியிருந்த சுமார் 1,500 ஆண்களோடுகூட மேலும் சில லேவியரையும் சேர்த்துக்கொள்கிறார். தாங்கள் செல்ல வேண்டிய வழியில் ஆபத்து ஏற்படலாம் என்று எஸ்றா அறிந்திருந்தாலும் பாதுகாவலர்களுக்காக அரசனிடம் கேட்கவில்லை. அது யெகோவாவில் விசுவாச குறைவைக் காட்டுவதாக இருக்குமல்லவா? ஆகவே, எஸ்றாவின் தலைமையில் அவர்கள் அனைவரும் உபவாசமிருந்து கடவுளிடம் வேண்டிக்கொள்கின்றனர். இந்த விண்ணப்பத்திற்கு பதில் கிடைக்கிறது, அந்த நீண்ட பயணம் முழுவதிலும் யெகோவாவின் கரம் அவர்களைப் பாதுகாக்கிறது. இவ்வாறாக அவர்கள் தங்கள் பொக்கிஷங்களை (தற்கால மதிப்பின்படி 4,30,00,000 டாலருக்கும் அதிகம்) எருசலேமிலுள்ள யெகோவாவின் ஆலயத்திற்கு பத்திரமாய் கொண்டுவந்து சேர்க்கின்றனர்.—8:26, 27, NW மற்றும் அடிக்குறிப்புகள்.
13 ஆசாரியத்துவத்தைச் சுத்திகரித்தல் (9:1–10:44). யூதர்கள் தங்கள் தேசத்திற்கு திரும்பிவந்து 69 வருடங்கள் ஆகியிருந்தும் இன்னும் அநேக தவறுகள் நடந்துகொண்டிருந்தன. ஜனங்களும் ஆசாரியர்களும் லேவியரும்கூட புறமத கானானியரோடு கலப்பு திருமணம் செய்திருந்தனர் என்ற வருத்தகரமான உண்மையை அறிய வருகிறார். உண்மையுள்ள எஸ்றா அதிர்ச்சியடைகிறார். ஜெபத்தில் யெகோவாவிடம் இந்தக் காரியத்தை தெரிவிக்கிறார். ஜனங்கள் தங்கள் தவறை அறிக்கை செய்து, ‘திடன்கொண்டு செயல்படும்படி’ எஸ்றாவிடம் கூறுகின்றனர். (10:4) கடவுளுடைய சட்டத்திற்கு விரோதமாக மணந்திருந்த அந்நிய மனைவிகளை யூதர்கள் விலக்கும்படி அவர் செய்விக்கிறார்; ஏறக்குறைய மூன்று மாதத்திற்குள் அந்த தூய்மைக்கேடு நீக்கப்படுகிறது.—10:10-12, 16, 17.
ஏன் பயனுள்ளது
14 முதலாவதாக, யெகோவாவின் தீர்க்கதரிசனங்கள் கொஞ்சமும் தவறாமல் துல்லியமாய் நிறைவேறும் என்பதைக் காட்டுவதால் எஸ்றாவின் புத்தகம் பயனுள்ளது. எருசலேமின் அழிவை வெகு திருத்தமாய் முன்னுரைத்த எரேமியா, 70 ஆண்டுகளுக்கு பின் அது திரும்ப நிலைநாட்டப்படும் என்பதையும் முன்னறிவித்தார். (எரே. 29:10) உண்மை வணக்கத்தைத் தொடருவதற்காக, யெகோவா சரியான சமயத்தில் தம்முடைய ஜனமாகிய உண்மையுள்ள மீதியானோரை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு திரும்ப கொண்டுவந்தார். அதன் மூலம் தம்முடைய பற்றுமாறா அன்பைக் காட்டினார்.
15 திரும்ப புதுப்பிக்கப்பட்ட ஆலயம் யெகோவாவின் வணக்கத்தை அவருடைய மக்கள் மத்தியில் மறுபடியுமாக உயர்த்தியது. மேலும் உண்மை வணக்கத்திற்கான ஆவலுடன் தம்மிடம் திரும்புவோரை அவர் அற்புதமாகவும் இரக்கத்தோடும் ஆசீர்வதிக்கிறார் என்பதற்கு அத்தாட்சியாகவும் விளங்கியது. சாலொமோன் கட்டின ஆலயத்தின் மகிமை இதற்கு இல்லாதபோதிலும் தெய்வீக சித்தத்திற்கு இசைவாக அதன் நோக்கத்தை நிறைவேற்றியது. பொருள் சம்பந்தமான பகட்டில் அது மிளிரவில்லை. உடன்படிக்கை பெட்டி போன்றவை அதில் இல்லை என்பதால் ஆவிக்குரிய பொக்கிஷங்களிலும் அது குறைவுபட்டது.c செருபாபேல் கட்டின ஆலயத்தின் பிரதிஷ்டையும்கூட சாலொமோன் நாளிலிருந்த ஆலயத்தின் பிரதிஷ்டைக்கு ஒப்பாக இல்லை. சாலொமோனின் ஆலயத்தில் செலுத்தப்பட்ட ஆடுமாடுகளின் பலிகளில் ஒரு சதவிகிதம்கூட இதில் செலுத்தப்படவில்லை. முந்தின ஆலயத்தை மேகம்போன்ற மகிமை நிரப்பினதுபோல் இந்த ஆலயத்தை நிரப்பவில்லை; அதேபோல் தகனபலிகளை பட்சிப்பதற்காக யெகோவாவிடமிருந்து அக்கினியும் இறங்கவில்லை. என்றாலும் இரண்டு ஆலயங்களுமே உண்மையான கடவுளாகிய யெகோவாவின் வணக்கத்தை உயர்த்தும் முக்கிய நோக்கத்தை சேவித்தன.
16 செருபாபேல் கட்டின ஆலயம், மோசே அமைத்த ஆசரிப்பு கூடாரம், சாலொமோனும் ஏரோதும் கட்டின ஆலயங்கள் ஆகியவை அவற்றின் மற்ற எல்லா அம்சங்களோடும்கூட மாதிரிகளாக அமைகின்றன. அவை, “மனுஷரால் அல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்”தைப் பிரதிநிதித்துவம் செய்தன. (எபி. 8:2) கிறிஸ்துவின் கிரய பலியின் அடிப்படையில் யெகோவாவை வணங்குவதற்கான ஓர் ஏற்பாடே இந்த ஆவிக்குரிய ஆலயமாகும். (எபி. 9:2-10, 23) யெகோவாவின் பெரிய ஆவிக்குரிய ஆலயம் மகிமையில் மிகவும் மேன்மையானது, அழகிலும் விரும்பத்தக்க தன்மையிலும் ஒப்பற்றது. அதன் சிறப்பு மங்காதது, எந்தக் கட்டடத்தைக் காட்டிலும் உயர்ந்தது.
17 இன்று கிறிஸ்தவர்களுக்கு அதிக மதிப்புமிக்க பாடங்கள் எஸ்றா புத்தகத்தில் அடங்கியுள்ளன. யெகோவாவின் ஜனங்கள் அவருடைய வேலைக்காக மனமுவந்து காணிக்கைகள் செலுத்துவதைப் பற்றி அதில் வாசிக்கிறோம். (எஸ்றா 2:68; 2 கொ. 9:7) யெகோவா தம்மை துதிப்பதற்காக மக்கள் தவறாமல் கூடிவருவதற்கு ஏற்பாடு செய்திருந்ததையும் அதை ஆசீர்வதித்ததையும் பற்றி வாசிக்கையில் நாம் உற்சாகம் அடைகிறோம். (எஸ்றா 6:16, 22) நிதனீமியரும் விசுவாசமுள்ள மற்ற அந்நியரும் யெகோவாவின் வணக்கத்தை இருதயப்பூர்வமாய் ஆதரிப்பதற்காக மீதியானோரோடு சேர்ந்துகொள்வதில் ஒரு சிறந்த முன்மாதிரியைக் காண்கிறோம். (2:43, 55) மேலும், புறமத அயலாருடன் கலப்பு திருமணம் செய்திருந்த ஜனங்களுடைய தவறான போக்கை சுட்டிக்காட்டியபோது அவர்கள் மனத்தாழ்மையுடன் மனந்திரும்பியதையும் கவனியுங்கள். (10:2-4) கெட்ட கூட்டுறவுகள் கடவுளுடைய அங்கீகாரத்தை இழக்கும்படி செய்தன. (9:14, 15) மகிழ்ச்சியோடு அவருடைய வேலைக்கு வைராக்கியம் காட்டியபோது அவருடைய அங்கீகாரமும் ஆசீர்வாதமும் கிடைத்தன.—6:14, 21, 22.
18 எருசலேமில் இருந்த யெகோவாவின் சிங்காசனத்திலிருந்து அதற்கு பிறகு எந்தவொரு அரசனும் ஆட்சி செய்யவில்லை என்றாலும், யெகோவா ஏற்ற காலத்தில் தாவீதின் வம்சாவளியில் தம்முடைய வாக்குப்பண்ணப்பட்ட அரசரை எழுப்புவார் என்ற எதிர்பார்ப்பை இந்தத் திரும்ப நிலைநாட்டுதல் ஏற்படுத்தியது. திரும்ப நிலைநாட்டப்பட்ட இந்த ஜனம், மேசியா தோன்றும் வரை பரிசுத்த எழுத்துக்களையும் கடவுளுடைய வணக்கத்தையும் பாதுகாப்பதற்கான நிலையில் இப்பொழுது இருந்தது. இந்த மீதியானோர் விசுவாசத்துடன் தங்கள் தேசத்திற்கு திரும்பிவரவில்லை என்றால் மேசியாவை வரவேற்க யார் இருந்திருப்பர்? எஸ்றா புத்தகத்திலுள்ள சம்பவங்கள் மேசியாவும் அரசருமானவர் தோன்றுவதற்கு வழிநடத்தும் சரித்திரத்தின் ஒரு முக்கிய பாகமாக உள்ளன! இவை இன்று நம்முடைய ஆராய்ச்சிக்கு அதிக பயனுள்ளவை.
[அடிக்குறிப்புகள்]
a வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கங்கள் 452-4, 458.
b வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கம் 332.
c வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கம் 1079.
[கேள்விகள்]
1. எருசலேம் திரும்ப நிலைநாட்டப்படுவதைப் பற்றி எந்தத் தீர்க்கதரிசனங்கள் உறுதியளித்தன?
2. எப்போது மற்றும் என்ன சூழ்நிலைமைகளில் பாபிலோன் வீழ்ச்சியடைந்தது?
3. எருசலேம் பாழாக்கப்பட்டு சரியாக 70 ஆண்டுகளுக்கு பின் யெகோவாவின் வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுவதை கோரேசு பிறப்பித்த என்ன கட்டளை சாத்தியமாக்கியது?
4. (அ) எஸ்றா புத்தகத்தின் சூழமைவு என்ன, அதை எழுதியது யார்? (ஆ) எஸ்றா எப்போது எழுதப்பட்டது, எந்தக் காலப்பகுதியின் சம்பவங்கள் அதில் அடங்கியுள்ளன?
5. எஸ்றா புத்தகத்திற்கும் நெகேமியா புத்தகத்திற்கும் என்ன சம்பந்தம், அது என்ன மொழிகளில் எழுதப்பட்டது?
6. எஸ்றா புத்தகத்தின் திருத்தமான தன்மைக்கு எது சான்றளிக்கிறது?
7. எஸ்றா புத்தகம் உண்மையில் ஏவப்பட்ட பதிவின் ஒரு பாகம் என்பது எவ்வாறு காட்டப்படுகிறது?
8. 70 வருட பாழ்க்கடிப்பின் முடிவிற்கு வழிநடத்திய சம்பவங்களை வரிசையாக விவரியுங்கள்.
9. ஆலய வேலை எவ்வாறு தொடங்குகிறது, ஆனால் பின்வரும் வருடங்களில் என்ன நடக்கிறது?
10. (அ) கடவுளுடைய தீர்க்கதரிசிகளின் உற்சாகமும் அரசனின் கட்டளையும் சேர்ந்து வேலை முடிவடைய எவ்வாறு உதவின? (ஆ) இரண்டாம் ஆலயத்தின் பிரதிஷ்டைபோது என்ன சந்தோஷம் ஏற்படுகிறது?
11. எஸ்றா “கேட்டவைகளையெல்லாம்” அரசன் அவருக்கு எவ்வாறு அளிக்கிறான், எஸ்றாவின் பிரதிபலிப்பு என்ன?
12. எஸ்றாவோடு பயணம் செய்யும் தொகுதியினரை யெகோவா எவ்வாறு பாதுகாக்கிறார்?
13. யூதர்கள் மத்தியிலிருந்து தூய்மைக்கேட்டை நீக்க எஸ்றா எவ்வாறு செயல்படுகிறார்?
14. யெகோவாவின் தீர்க்கதரிசனங்களைப் பற்றி எஸ்றா புத்தகம் என்ன காட்டுகிறது?
15. (அ) திரும்ப புதுப்பிக்கப்பட்ட ஆலயம் எவ்வாறு யெகோவாவின் நோக்கத்தைச் சேவித்தது? (ஆ) மகிமையில் இது எந்த வகைகளில் முதல் ஆலயத்திலிருந்து குறைவுபட்டது?
16. மகிமையில் வேறு எந்த ஆலயம் பூமிக்குரிய ஆலயங்களைப் பார்க்கிலும் மேம்படுகிறது?
17. எஸ்றா புத்தகத்தில் என்ன மதிப்புவாய்ந்த பாடங்கள் காணப்படுகின்றன?
18. யெகோவாவின் ஜனம் திரும்ப நிலைநாட்டப்பட்டது மேசியாவாகிய அரசர் தோன்றுவதற்கு வழிநடத்தும் முக்கியமான ஒரு படியாக ஏன் இருந்தது?