எரேமியா
15 பின்பு யெகோவா என்னிடம், “மோசேயும் சாமுவேலும் என் முன்னால் வந்து நின்றால்கூட+ நான் இந்த ஜனங்களுக்கு இரக்கம் காட்ட மாட்டேன். இவர்களை என் முன்னாலிருந்து துரத்திவிடு. இவர்கள் போகட்டும். 2 ‘எங்கள் நிலைமை என்ன ஆகும்?’ என்று இவர்கள் கேட்டால் நீ இவர்களிடம், ‘யெகோவா சொல்வது இதுதான்:
“உங்களில் சிலர் கொள்ளைநோயினால் சாவீர்கள்!
சிலர் வாளால் வெட்டிக் கொல்லப்படுவீர்கள்!+
சிலர் பஞ்சத்தில் அடிபட்டுச் சாவீர்கள்!
சிலர் சிறைபிடிக்கப்பட்டுப் போவீர்கள்”+
என்று சொல்’ என்றார்.
3 யெகோவா சொல்வது இதுதான்: ‘நான்கு விதமான ஆபத்துகளை* நான் வர வைப்பேன்.+ அவர்களைக் கொன்றுபோடுவதற்கு வாளையும், இழுத்துச் செல்வதற்கு நாய்களையும், கடித்துக் குதறுவதற்கு மிருகங்களையும், தின்றுதீர்ப்பதற்குப் பறவைகளையும் வர வைப்பேன்.+ 4 இந்த ஜனங்களுக்கு வந்த கோரமான முடிவைப் பார்த்து உலகமே கதிகலங்கும்படி செய்வேன்.+ ஏனென்றால், எசேக்கியாவின் மகனாகிய யூதாவின் ராஜா மனாசே, எருசலேமில் பல அக்கிரமங்களைச் செய்தான்.+
5 எருசலேமே, யார் உனக்குக் கரிசனை காட்டுவார்கள்?
யார் உனக்கு அனுதாபம் காட்டுவார்கள்?
யார் உன்னிடம் வந்து நலம் விசாரிப்பார்கள்?’
6 யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ என்னைவிட்டுப் போய்விட்டாய்.+
எனக்கு உன் முதுகைக் காட்டிக்கொண்டே இருக்கிறாய்.*+
அதனால், உனக்கு எதிராக என் கையை ஓங்கி, உன்னை அழித்துப்போடுவேன்.+
உன்மேல் இரக்கம் காட்டிக் காட்டியே சலித்துப்போய்விட்டேன்.
7 தானியங்களைப் புடைப்பது போல நகரவாசலில் நான் அவர்களைப் புடைத்து சிதறிப்போக வைப்பேன்.
பிள்ளைகளை அவர்கள் பறிகொடுக்கும்படி செய்வேன்.+
என் ஜனங்களை அழித்துவிடுவேன்.
ஏனென்றால், கெட்ட வழிகளைவிட்டு அவர்கள் திருந்துவதாகவே இல்லை.+
8 விதவைகளின் எண்ணிக்கை கடற்கரை மணலைவிட அதிகமாக ஆகும்.
பட்டப்பகலில் நான் கொலைகாரனை அனுப்பி தாய்களையும் வாலிபர்களையும் வெட்டிப்போட வைப்பேன்.
திடீரென்று தேசத்தில் பதற்றத்தையும் பீதியையும் உண்டாக்குவேன்.
9 ஏழு பிள்ளைகளைப் பெற்றவள் துவண்டுபோயிருக்கிறாள்.
மூச்சுவிடுவதற்கே சிரமப்படுகிறாள்.
பகலிலேயே அவளுடைய சூரியன் மறைந்துவிட்டது.
அதனால், அவள் அவமானத்தில் கூனிக்குறுகுகிறாள்.’*
யெகோவா சொல்வது இதுதான்: ‘அவர்களில் மிச்சம் மீதி இருப்பவர்களை
எதிரிகளின் வாளுக்குப் பலியாக்குவேன்.’”+
10 என் தாயே, ஏன்தான் என்னைப் பெற்றீர்களோ?+ ஐயோ!
தேசத்திலுள்ள எல்லாரோடும் எனக்கு வழக்கும் வாக்குவாதமும்தான் நடக்கிறது!
நான் கடன் கொடுத்ததும் இல்லை, கடன் வாங்கியதும் இல்லை.
ஆனாலும், எல்லாருமே என்னைச் சபிக்கிறார்கள்.
11 யெகோவா என்னிடம், “நான் நிச்சயமாகவே உனக்குத் துணையாக இருப்பேன்.
ஆபத்து வரும்போது கண்டிப்பாக உன்னைப் பாதுகாப்பேன்.
எதிரிகள் தாக்கும்போது உன்னைக் காப்பாற்றுவேன்.
12 இரும்பை, அதுவும் வடக்கிலிருந்து வந்த இரும்பை, யாராவது துண்டுதுண்டாக்க முடியுமா?
செம்பை யாராவது சுக்குநூறாக்க முடியுமா?
13 தேசமெங்கும் நீங்கள் பாவத்துக்குமேல் பாவம் செய்கிறீர்கள்.
அதனால், உங்களுடைய சொத்துகளையும் செல்வங்களையும் இலவசமாகத் தூக்கிக் கொடுத்துவிடுவேன்.+
14 அவற்றை எதிரிகளின் கையில் கொடுத்துவிடுவேன்.
உங்களுக்குத் தெரியாத தேசங்களுக்கு அவை கொண்டுபோகப்படும்.+
என் கோபம் தீயாய்ப் பற்றியெரிகிறது.
அது உங்களைப் பொசுக்கப்போகிறது”+ என்று சொன்னார்.
15 யெகோவாவே, நான் படுகிற பாடு உங்களுக்கே தெரியும்.
என்னை நினைத்துப் பாருங்கள், என் உதவிக்கு வாருங்கள்.
என்னைத் துன்புறுத்துகிறவர்களை எனக்காகப் பழிவாங்குங்கள்.+
நீங்கள் இன்னும் பொறுமையாக இருந்தால் நான் செத்தே போய்விடுவேன்.
உங்களுக்காகத்தான் எல்லா பழிப்பேச்சையும் சகித்துக்கொண்டு இருக்கிறேன்.+
16 உங்கள் வார்த்தை கிடைத்ததுமே அதை ரசித்து ருசித்தேன்.*+
அதனால், சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போனேன்.
பரலோகப் படைகளின் கடவுளான யெகோவாவே, நான் உங்கள் பெயரால் அழைக்கப்படுவதை நினைத்து உள்ளம் பூரித்துப்போனேன்.
17 கூத்தும் கும்மாளமும் அடிக்கிறவர்களோடு உட்காராமல் தனியாக உட்காருகிறேன்.+
ஏனென்றால், நான் உங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிறேன்.
18 எனக்கு ஏன் தீராத வலி?
என் காயம் ஏன் ஆறுவதே இல்லை?
நம்பி வருகிறவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிற வறண்ட நீரோடை போல
நீங்கள் எனக்கு ஏமாற்றம்தான் அளிப்பீர்களா?
19 யெகோவா சொல்வது இதுதான்:
“நீ உன் எண்ணத்தை மாற்றிக்கொண்டால் நான் உன்னை முந்தின நிலைமைக்குக் கொண்டுவருவேன்.
நீ என் முன்னால் நிற்பாய்.
வீணானவற்றிலிருந்து விலைமதிப்புள்ளதை நீ பிரித்தெடுத்தால்,
என் சார்பில் பேசுகிறவனாக* ஆவாய்.
ஜனங்கள் உன் வழிக்கு வருவார்கள்.
ஆனால், நீ அவர்கள் வழிக்குப் போக மாட்டாய்.”
20 யெகோவா சொல்வது இதுதான்: “இந்த ஜனங்களுக்கு முன்னால் நான் உன்னைப் பலமான செம்புச் சுவர் போல ஆக்குவேன்.+
அவர்கள் உன்னோடு மோதுவார்கள்.
ஆனாலும், ஜெயிக்க மாட்டார்கள்.+
ஏனென்றால், உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் உன்னோடு இருக்கிறேன்.
21 கெட்டவர்களின் கையிலிருந்து நான் உன்னைக் காப்பாற்றுவேன்.
கொடுமைக்காரர்களின் பிடியிலிருந்து உன்னை விடுவிப்பேன்.”