சகரியா
7 தரியு ராஜா ஆட்சி செய்த நான்காம் வருஷம், ஒன்பதாம் மாதமாகிய கிஸ்லே* மாதம், நான்காம் நாள் சகரியாவுக்கு யெகோவாவிடமிருந்து செய்தி கிடைத்தது.+ 2 பெத்தேல் நகரத்தில் இருந்தவர்கள், யெகோவாவின் கருணையைக் கேட்டுக் கெஞ்சுவதற்காக சரேத்சேரையும் ரெகெம்-மெலேகையும் அவருடைய ஆட்களையும் அனுப்பினார்கள். 3 அவர்களைப் பரலோகப் படைகளின் யெகோவாவுடைய ஆலயத்தில் சேவை செய்கிற குருமார்களிடமும் தீர்க்கதரிசிகளிடமும் அனுப்பி, “இத்தனை வருஷங்களாக நாங்கள்* செய்தது போல இந்த வருஷமும் ஐந்தாம் மாதத்தில்+ சாப்பிடாமல் அழுது புலம்ப வேண்டுமா?” என்று கேட்கச் சொன்னார்கள்.
4 பரலோகப் படைகளின் யெகோவாவிடமிருந்து மறுபடியும் எனக்குச் செய்தி கிடைத்தது; அவர் என்னிடம், 5 “தேசத்திலுள்ள எல்லா ஜனங்களிடமும் குருமார்களிடமும் இப்படிக் கேள்: ‘70 வருஷங்களாக+ ஐந்தாம் மாதமும் ஏழாம் மாதமும்+ நீங்கள் சாப்பிடாமல், புலம்பி அழுதீர்களே, எனக்காகவா அப்படிச் செய்தீர்கள்? 6 நீங்கள் சாப்பிட்டபோதும் எனக்காகவா சாப்பிட்டீர்கள்? குடித்தபோதும் எனக்காகவா குடித்தீர்கள்? எல்லாவற்றையும் உங்களுக்காகத்தானே செய்தீர்கள்? 7 நீங்கள் எருசலேமிலும் அதைச் சுற்றியுள்ள நகரங்களிலும் நிம்மதியாகக் குடியிருந்தபோதும் நெகேபிலும் சேப்பெல்லாவிலும் குடியிருந்தபோதும் தீர்க்கதரிசிகள் மூலம் யெகோவா சொன்ன விஷயங்களுக்குக்+ கீழ்ப்படிய வேண்டாமா?’” என்றார்.
8 யெகோவாவிடமிருந்து மறுபடியும் சகரியாவுக்குச் செய்தி கிடைத்தது; அவர், 9 “பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘நீதிநியாயத்தோடு தீர்ப்பு கொடுங்கள்,+ ஒருவருக்கொருவர் மாறாத அன்பையும்+ இரக்கத்தையும் காட்டுங்கள். 10 விதவைகளையும் அப்பா இல்லாத பிள்ளைகளையும்* ஏமாற்றாதீர்கள்.+ மற்ற தேசத்து ஜனங்களையும் ஏழைகளையும் மோசடி செய்யாதீர்கள்;+ யாருக்கும் கெடுதல் செய்யத் திட்டம் தீட்டாதீர்கள்.’+ 11 ஆனால், அவர்கள் அதையெல்லாம் கேட்கவே இல்லை.+ முரட்டுப் பிடிவாதத்தோடு நடந்துகொண்டார்கள்.+ காதை அடைத்துக்கொண்டார்கள்.+ 12 தங்களுடைய இதயத்தை வைரம்போல்* கடினமாக்கினார்கள்.+ பரலோகப் படைகளின் யெகோவா தன்னுடைய சக்தியால் தீர்க்கதரிசிகள் மூலம் சொன்ன வார்த்தைகளுக்கும் சட்டத்துக்கும்* அவர்கள் கீழ்ப்படியவில்லை.+ அதனால், பரலோகப் படைகளின் யெகோவா பயங்கர கோபத்தோடு அவர்களைத் தண்டித்தார்”+ என்றார்.
13 “பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘நான்* கூப்பிட்டபோது அவர்கள் கேட்காததுபோல்+ அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேட்கவில்லை.+ 14 அதனால் நான் ஒரு புயல்காற்றை அனுப்பி, முன்பின் தெரியாத தேசங்களுக்கெல்லாம் அவர்களைச் சிதறிப்போக வைத்தேன்.+ அவர்களுடைய தேசம், யாரும் வந்து போக முடியாதளவுக்குப் பாழாய்ப்போனது.+ அவர்களால் அந்த அழகான தேசம் கோரமாக ஆகிவிட்டது.’”