உபாகமம்
17 பின்பு அவர், “ஊனமோ வேறெந்தக் குறையோ உள்ள ஒரு மாட்டை அல்லது ஆட்டை உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பலி செலுத்தக் கூடாது. ஏனென்றால், அது உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு அருவருப்பானது.+
2 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற நகரங்களில், ஒரு ஆணோ பெண்ணோ உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்து, அவருடைய ஒப்பந்தத்தை மீறி,+ 3 என் கட்டளைக்கு+ எதிராக மற்ற தெய்வங்களையோ சூரியனையோ சந்திரனையோ வானத்துப் படைகளையோ ஒருவேளை கும்பிடலாம்.+ 4 அதைப் பற்றி உங்களிடம் யாராவது சொன்னால் அல்லது உங்களுக்கே தெரியவந்தால், அதை நன்றாக விசாரிக்க வேண்டும். இந்த அருவருப்பான காரியம் இஸ்ரவேலில் நடந்தது உண்மை என்பது தெரியவந்தால்,+ 5 இந்தக் குற்றத்தைச் செய்த ஆணை அல்லது பெண்ணை நகரவாசலுக்குக் கொண்டுவர வேண்டும், பின்பு கல்லெறிந்து கொல்ல வேண்டும்.+ 6 இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தை வைத்துதான்+ மரண தண்டனை கொடுக்க வேண்டும். ஒரேவொரு சாட்சியின் வாக்குமூலத்தை வைத்து மரண தண்டனை கொடுக்கக் கூடாது.+ 7 அவனை அல்லது அவளைக் கொன்றுபோட அந்தச் சாட்சிகள்தான் முதலில் கல்லெறிய வேண்டும். அதற்குப் பின்பு மற்றவர்கள் கல்லெறிய வேண்டும். இப்படி, தீமையை உங்களிடமிருந்து ஒழித்துக்கட்ட வேண்டும்.+
8 உங்கள் நகரங்கள் ஒன்றில் உங்களால் தீர்க்க முடியாத சிக்கலான வழக்குகள் இருந்தால், அதாவது கொலைக்குற்றம்,+ உரிமைப் பிரச்சினை, வன்முறை, அல்லது வேறெதாவது சண்டை சச்சரவு சம்பந்தமான வழக்குகள் இருந்தால், உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்துக்குப் போக வேண்டும்.+ 9 அந்தச் சமயத்தில் பொறுப்பில் இருக்கிற லேவியர்களான குருமார்களிடமும் நியாயாதிபதிகளிடமும்+ போய் வழக்கைச் சொல்ல வேண்டும். அவர்கள் தீர்ப்பு கொடுப்பார்கள்.+ 10 யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்திலிருந்து அவர்கள் கொடுக்கிற தீர்ப்பின்படி நீங்கள் செய்ய வேண்டும். அவர்கள் கொடுக்கிற எல்லா கட்டளைகளையும் செய்யக் கவனமாக இருக்க வேண்டும். 11 அவர்கள் காட்டுகிற சட்டத்தின்படியும் கொடுக்கிற தீர்ப்பின்படியும் நீங்கள் செய்ய வேண்டும்.+ அவர்கள் சொல்கிற தீர்ப்புக்கு அப்படியே கீழ்ப்படிய வேண்டும்.+ 12 உங்களுடைய நியாயாதிபதி சொல்வதையோ உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குச் சேவை செய்கிற குருவானவர் சொல்வதையோ கேட்காமல் அகங்காரமாக* நடக்கிறவன் கொல்லப்பட வேண்டும்.+ இப்படி, நீங்கள் இஸ்ரவேலிலிருந்து தீமையை ஒழித்துக்கட்ட வேண்டும்.+ 13 அப்போதுதான் எல்லா ஜனங்களும் அதைக் கேள்விப்பட்டு பயப்படுவார்கள், அதன்பின் யாரும் அகங்காரமாக நடந்துகொள்ள மாட்டார்கள்.+
14 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்துக்கு நீங்கள் போய் அதில் குடியிருக்கும்போது, ‘சுற்றியுள்ள தேசத்தாரைப் போல நாமும் ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொள்வோம்’ என்று நீங்கள் சொன்னால்,+ 15 உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுக்கிற ராஜாவை மட்டும்தான் நீங்கள் நியமிக்க வேண்டும்.+ உங்கள் சகோதரர்களில் ஒருவரைத்தான் ராஜாவாக்க வேண்டும். வேறு தேசத்தைச் சேர்ந்தவனை ராஜாவாக்கக் கூடாது. 16 ராஜா தனக்காக ஏராளமான குதிரைகளை வைத்துக்கொள்ளக் கூடாது,+ அல்லது இன்னும் அதிக குதிரைகளை வாங்குவதற்காக ஜனங்களை எகிப்துக்கு அனுப்பக் கூடாது.+ ஏனென்றால், ‘இனி ஒருபோதும் நீங்கள் அந்தப் பக்கம் போகக் கூடாது’ என்று யெகோவா சொல்லியிருக்கிறார். 17 ராஜாவின் இதயம் கடவுளைவிட்டு விலகாமல் இருக்க வேண்டுமானால் அவர் நிறைய மனைவிகளை வைத்துக்கொள்ளக் கூடாது.+ வெள்ளியையும் தங்கத்தையும் ஏராளமாகக் குவித்து வைத்துக்கொள்ளக் கூடாது.+ 18 அவர் ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பிக்கும்போது, லேவியர்களான குருமார்களிடம் உள்ள திருச்சட்ட புத்தகத்தை*+ பார்த்து தனக்காக ஒரு நகலை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.
19 அதை அவர் எப்போதும் வைத்திருக்க வேண்டும். தன்னுடைய வாழ்நாளெல்லாம் அதை வாசிக்க வேண்டும்.+ அப்போதுதான், தன் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து நடக்கக் கற்றுக்கொள்வார், திருச்சட்டத்திலுள்ள எல்லா வார்த்தைகளையும் விதிமுறைகளையும் கடைப்பிடிப்பார்.+ 20 அதோடு, தன் சகோதரர்களைவிட தன்னைப் பெரியவனாகக் காட்டிக்கொண்டு தலைக்கனத்தோடு* நடக்க மாட்டார். கடவுளுடைய கட்டளைகளை அச்சுப்பிசகாமல் கடைப்பிடிப்பார். அப்போது, அவரும் அவருடைய மகன்களும் இஸ்ரவேலில் ரொம்பக் காலத்துக்கு ஆட்சி செய்வார்கள்” என்றார்.