பைபிள்—அதை உண்மையில் உள்ளவாறே ஏற்றுக்கொள்ளுங்கள்
“நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது.”—1 தெசலோனிக்கேயர் 2:13.
1. பைபிளில் உள்ள எந்தவிதமான தகவல் அப்புத்தகத்தை உண்மையிலேயே முக்கியமானதாக ஆக்குகிறது?
பரிசுத்த பைபிள் மிக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டு, உலகிலேயே அதிக விரிவாக விநியோகிக்கப்பட்டிருக்கும் ஒரு புத்தகம். அது மிகச் சிறந்த இலக்கியப்படைப்புகளில் ஒன்று என எவ்வித தயக்கமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. என்றபோதிலும், அதிமுக்கியமாக, ஒவ்வொரு தேசத்தையும், ஒவ்வொரு இனத்தையும் சேர்ந்த ஜனங்களுக்கு, தொழில் அல்லது வாழ்க்கையில் அவர்களுடைய நிலை எதுவாக இருப்பினும், அவர்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் வழிநடத்துதலை பைபிள் அளிக்கிறது. (வெளிப்படுத்துதல் 14:6, 7) மனதையும் இருதயத்தையும் திருப்திப்படுத்தும் வகையில், பைபிள் இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில்களை அளிக்கிறது: மனித வாழ்க்கையின் நோக்கம் என்ன? (ஆதியாகமம் 1:28; வெளிப்படுத்துதல் 4:11) மனிதவர்க்க அரசாங்கங்கள் ஏன் நிரந்தரமான சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவர முடியவில்லை? (எரேமியா 10:23; வெளிப்படுத்துதல் 13:1, 2) ஜனங்கள் ஏன் மரிக்கின்றனர்? (ஆதியாகமம் 2:15-17; 3:1-6; ரோமர் 5:12) இந்தக் குழப்பமிக்க உலகின் மத்தியில், வாழ்க்கையின் பிரச்சினைகளை நாம் எவ்வாறு வெற்றிகரமாக சமாளிக்கமுடியும்? (சங்கீதம் 119:105; நீதிமொழிகள் 3:5, 6) எதிர்காலம் நமக்காக எதைக் கொண்டிருக்கிறது?—தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 21:3-5.
2. பைபிள் ஏன் நம்முடைய கேள்விகளுக்கு முழுவதும் நம்பத்தக்க பதில்களைக் கொடுக்கிறது?
2 இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பைபிள் ஏன் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கிறது? ஏனென்றால் அது கடவுளுடைய வார்த்தை. அவர் அதை எழுதுவதற்கு மனிதர்களை உபயோகித்தார், ஆனால் 2 தீமோத்தேயு 3:16-ல் (NW) தெளிவாகக் குறிப்பிட்டுள்ளபடி, “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் ஏவப்பட்டெழுதப்பட்டிருக்கிறது.” அது மனித சம்பவங்களுக்குத் தனிப்பட்டவிதமாக விளக்கம் கொடுத்ததனால் ஏற்பட்ட விளைவு அல்ல. “தீர்க்கதரிசனமானது [வரப்போகும் காரியங்களைப் பற்றிய அறிவிப்புகள், தெய்வீக கட்டளைகள், பைபிளின் ஒழுக்க தராதரம்] ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.”—2 பேதுரு 1:21.
3. (அ) பல்வேறு தேசங்களிலுள்ள மக்களால் பைபிள் எவ்வளவு உயர்வாக மதிப்பிடப்படுகிறது என்பதைக் காண்பிக்கும் உதாரணங்களைக் கொடுங்கள். (ஆ) வேதாகமத்தை வாசிப்பதற்கென்று தனிப்பட்ட நபர்கள் ஏன் தங்கள் உயிர்களை ஆபத்துக்குள்ளாக்க விரும்பினர்?
3 பைபிளின் மதிப்பைப் போற்றி, அநேகர் அதைச் சொந்தமாக தங்களுக்கென்று வைத்துப் படிப்பதற்காக சிறைவாசம், ஏன் மரணத்தையும்கூட எதிர்ப்பட்டிருக்கின்றனர். கடந்த வருடங்களில் கத்தோலிக்க ஸ்பெய்னில் அது உண்மையாக இருந்தது, ஜனங்கள் தங்கள் சொந்த மொழியில் பைபிளைப் படித்தால் தங்களின் செல்வாக்குக் கெடுக்கப்படும் என்று குருமார் பயந்தனர்; அது அல்பேனியாவிலும் உண்மையாக இருந்தது, எல்லா மதசம்பந்தமான செல்வாக்கையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அங்கு ஒரு நாத்திக ஆட்சியின்கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இருந்தபோதிலும், கடவுள்-பயமுள்ள தனிப்பட்ட நபர்கள் வேதாகமத்தின் பிரதிகளை மிகவும் மதிப்புள்ளதாகக் கருதி, அவற்றை வாசித்து, ஒருவரோடொருவர் பகிர்ந்துகொண்டனர். இரண்டாம் உலக யுத்தத்தின்போது, சாக்சன்ஹாசன் சித்திரவதை முகாமில், ஒரு பைபிள் கவனமாக ஒரு சிறை அறையிலிருந்து மற்றொன்றுக்கு அனுப்பப்பட்டது (இது தடை செய்யப்பட்டிருந்தபோதிலும்கூட), அதைப் பெற்றுக்கொள்ள முடிந்தவர்கள், மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதற்காக சில பகுதிகளை மனப்பாடம் செய்தனர். 1950-களின் போது, அப்போதிருந்த கம்யூனிஸ கிழக்கு ஜெர்மனியில், தங்களுடைய விசுவாசத்துக்காக சிறையிலடைக்கப்பட்டிருந்த யெகோவாவின் சாட்சிகள், பைபிளின் சிறு பகுதிகளை இரவில் படிப்பதற்காக ஒரு சிறைவாசியிடமிருந்து மற்றொரு சிறைவாசியிடம் கொடுத்தபோது நீண்டகாலம் தனியாக சிறையில் அடைத்து வைக்கப்படும் அபாயத்தை எதிர்ப்பட்டனர். அதை அவர்கள் ஏன் செய்தனர்? ஏனென்றால் அவர்கள் பைபிளை கடவுளுடைய வார்த்தையாக ஏற்றுக்கொண்டனர், “மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல” ஆனால் “கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். (உபாகமம் 8:3) அந்தச் சாட்சிகள் நம்பமுடியாத கொடூரத்தை அனுபவித்தபோதிலும், ஆவிக்குரியப்பிரகாரமாய் உயிரோடிருப்பதற்கு பைபிளில் பதிவுசெய்து வைக்கப்பட்டிருந்த இப்படிப்பட்ட கருத்துக்கள் அவர்களுக்கு உதவின.
4. பைபிள் நம்முடைய வாழ்க்கையில் எந்த இடத்தை வகிக்க வேண்டும்?
4 பைபிள், எப்போதாவது எடுத்துப் படிப்பதற்கென்று புத்தக அலமாரியில் வெறுமனே வைக்கவேண்டிய ஒரு புத்தகமல்ல. உடன்விசுவாசிகள் வணக்கத்துக்காக ஒன்றுகூடும்போது மட்டும் உபயோகிப்பதற்கென்று அது கொடுக்கப்பட்டில்லை. நாம் எதிர்ப்படும் சூழ்நிலைமைகளைப் புரிந்துகொள்வதற்கும் நாம் நடப்பதற்கு சரியான வழியைக் காண்பிப்பதற்கும் அது ஒவ்வொரு நாளும் பயன்படுத்தப்பட வேண்டும்.—சங்கீதம் 25:4, 5.
வாசித்து புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு கொடுக்கப்பட்டது
5. (அ) கூடுமானவரை, நாம் ஒவ்வொருவரும் எதைக் கொண்டிருக்க வேண்டும்? (ஆ) வேதாகமத்தில் அடங்கியிருந்தவற்றை பண்டைய இஸ்ரவேல் ஜனங்கள் எவ்வாறு கண்டுபிடித்தனர்? (இ) சங்கீதம் 19:7-11 பைபிள் வாசிப்பினிடமாக உங்களுடைய மனநிலையை எவ்வாறு பாதிக்கிறது?
5 நம்முடைய நாளில் பைபிளின் பிரதிகள் அநேக தேசங்களில் உடனடியாக கிடைக்கின்றன, காவற்கோபுர பத்திரிகையின் ஒவ்வொரு வாசகரும் ஒரு பிரதியை வைத்திருக்கும்படி நாங்கள் ஊக்குவிக்கிறோம். பைபிள் எழுதப்பட்ட காலத்தில், அச்சு இயந்திரங்கள் இல்லை. ஜனங்கள் பொதுவாக தனிப்பட்ட பிரதிகளைக் கொண்டில்லை. ஆனால் யெகோவா தம்முடைய ஊழியர்கள், எழுதப்பட்டிருந்தவற்றைக் கேட்பதற்கு ஏற்பாடு செய்தார். இவ்வாறு யெகோவா கட்டளையிட்டபடி எழுதி முடித்த பின்பு, மோசே “உடன்படிக்கையின் புஸ்தகத்தை எடுத்து, ஜனங்களின் காது கேட்க வாசித்தான்” என்று யாத்திராகமம் 24:7 அறிக்கை செய்கிறது. சீனாய் மலையில் இயற்கைக்கு அப்பாற்பட்ட காட்சிகளைக் கண்ட சாட்சிகளாய் இருந்தபடியால், மோசே அவர்களுக்கு வாசித்துக் காட்டியவை கடவுளிடமிருந்து வந்தவை என்பதையும், இந்தத் தகவலை அவர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்பதையும் கண்டுணர்ந்தனர். (யாத்திராகமம் 19:9, 16-19; 20:22) நாமும்கூட கடவுளுடைய வார்த்தையில் பதிவு செய்து வைத்திருப்பவற்றை அறிந்துகொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது.—சங்கீதம் 19:7-11.
6. (அ) இஸ்ரவேல் தேசத்தார் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசிப்பதற்கு முன்பு, மோசே என்ன செய்தார்? (ஆ) நாம் எவ்வாறு மோசேயின் முன்மாதிரியைப் பின்பற்றலாம்?
6 இஸ்ரவேல் தேசத்தார் வனாந்தரத்தில் தங்கள் நாடோடி வாழ்க்கையை விட்டு, யோர்தான் நதியைக் கடந்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசிக்க தயாரான போது, யெகோவாவின் சட்டங்களையும், அவர் அவர்களோடு கொண்டிருந்த செயல் தொடர்புகளையும் பற்றி மறுபடியும் சிந்திப்பது அவர்களுக்குப் பொருத்தமானதாய் இருந்தது. கடவுளுடைய ஆவியினால் உந்துவிக்கப்பட்டவராய், மோசே நியாயப்பிரமாணத்தை அவர்களோடு மறுபடியும் சிந்தித்தார். நியாயப்பிரமாணத்தின் விவரங்களை அவர் அவர்களுக்கு நினைப்பூட்டினார். மேலும், யெகோவாவோடு கொண்டுள்ள தங்கள் உறவில் செல்வாக்குச் செலுத்த வேண்டிய அடிப்படையான நியமங்களையும் மனநிலைகளையும்கூட அவர் சிறப்பித்துக் காட்டினார். (உபாகமம் 4:10, 35; 7:7, 8; 8:10-14, 16; 10:12, 13) இன்று நாம் புதிய நியமிப்புகளை ஏற்றுக்கொள்ளும் போதோ அல்லது வாழ்க்கையில் புதிய சூழ்நிலைமைகளை எதிர்ப்படும் போதோ, எவ்வாறு வேதாகமத்தில் உள்ள புத்திமதி நாம் செய்துகொண்டிருப்பவற்றின் பேரில் செல்வாக்குச் செலுத்த வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்ப்பது நமக்கு பயனளிப்பதாய் இருக்கும்.
7. இஸ்ரவேலர் யோர்தானைக் கடந்து சிறிது காலத்திற்குப் பின்பு, அவர்களுடைய மனங்களிலும் இருதயங்களிலும் யெகோவாவின் சட்டத்தைப் பதிய வைப்பதற்கு என்ன செய்யப்பட்டது?
7 இஸ்ரவேலர் யோர்தான் நதியைக் கடந்து சிறிது காலத்திற்குப் பின்பு, மோசேயின் மூலமாய் யெகோவா அவர்களிடம் சொல்லியிருந்தவற்றை மறுபடியும் சிந்திப்பதற்கு ஜனங்கள் மறுபடியும் ஒன்றுகூடினர். அத்தேசம் எருசலேமுக்கு வடக்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் ஒன்றுகூடியது. கோத்திரங்களில் பாதிப்பேர் ஏபால் மலைக்கு எதிர்புறமாகவும், பாதிப்பேர் கெரிசீம் மலைக்கு எதிர்புறமாகவும் நின்றனர். அங்கு யோசுவா நியாயப்பிரமாணத்தில் சொல்லிய ஆசீர்வாதமும் சாபமுமாகிய சகல வார்த்தைகளையும் வாசித்தான்.” இவ்வாறு ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், அந்நியர்களும்கூட, காலத்திற்குப் பொருத்தமாக நியாயப்பிரமாண சட்டங்கள் மீண்டும் எடுத்துரைக்கப்படுவதைக் கேட்டனர், யெகோவாவின் அங்கீகாரத்தை இழப்பதில் விளைவடையும் நடத்தையைக் கட்டுப்படுத்தும் சட்டங்களும், யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தால் அவர்கள் பெற்றுக்கொள்ளப்போகும் ஆசீர்வாதங்களைப் பற்றிய சட்டங்களும் அதில் அடங்கியிருந்தன. (யோசுவா 8:34, 35) யெகோவாவின் நோக்குநிலையிலிருந்து எது நல்லது எது கெட்டது என்பதை அவர்கள் மனதில் தெளிவாய் வைத்திருக்க வேண்டிய அவசியமிருந்தது. கூடுதலாக, இன்று நம்மில் ஒவ்வொருவரும் செய்வது போல, நன்மையானதை நேசித்து, தீமையை வெறுக்க வேண்டும் என்பதை அவர்கள் தங்கள் இருதயங்களில் பதிய வைக்க வேண்டிய அவசியம் இருந்தது.—சங்கீதம் 97:10; 119:103, 104; ஆமோஸ் 5:15.
8. இஸ்ரவேலில் நடந்த சில தேசிய மாநாடுகளில் கடவுளுடைய வார்த்தை திரும்பத் திரும்ப வாசிக்கப்பட்டதனால் என்ன பயன் ஏற்பட்டது?
8 அப்படிப்பட்ட வரலாற்றுப் புகழ்பெற்ற சமயங்களின்போது நியாயப்பிரமாணம் வாசிக்கப்படுவதோடுகூட, கடவுளுடைய வார்த்தையை ஒழுங்காக வாசிப்பதற்கு ஒரு ஏற்பாடு உபாகமம் 31:10-12-ல் சுருக்கமாகக் கூறப்பட்டது. ஒவ்வொரு ஏழாவது ஆண்டும் கடவுளுடைய வார்த்தை வாசிக்கப்படுவதைக் கேட்பதற்கு முழு தேசமும் ஒன்றுகூடி வரவேண்டும். இது அவர்களுக்கு ஆவிக்குரிய உணவை அளித்தது. இது வித்தைப் பற்றிய வாக்குகளை அவர்களுடைய மனங்களிலும் இருதயங்களிலும் மங்காமல் தொடர்ந்து இருக்கும்படி செய்தது, இவ்வாறு உண்மையுள்ள நபர்களை மேசியாவிடமாக வழிநடத்துவதற்கு உதவியது. இஸ்ரவேல் தேசம் வனாந்தரத்தில் இருந்தபோது ஆவிக்குரிய உணவளிப்பதற்காக நிறுவப்பட்டிருந்த ஏற்பாடுகள், அவர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசித்தபோது நின்றுவிடவில்லை. (1 கொரிந்தியர் 10:3, 4) மாறாக, தீர்க்கதரிசிகளின் கூடுதலான வெளிப்படுத்துதல்களை சேர்த்துக்கொள்வதன் மூலம் கடவுளுடைய வார்த்தையின் மதிப்பு உயர்த்தப்பட்டது.
9. (அ) இஸ்ரவேலர் பெரும் தொகுதிகளாக ஒன்றுகூடியபோது மட்டுமே அவர்கள் வேதாகமத்தை வாசித்தார்களா? விளக்குங்கள். (ஆ) வேதாகமத்திலுள்ள போதனைகள் எவ்வாறு தனிப்பட்ட குடும்பங்களுக்குள் கொடுக்கப்பட்டன, என்ன நோக்கத்துடன்?
9 ஜனங்கள் ஒரு பெரும் தொகுதியாக ஒன்றுகூடிய சமயங்களில் மட்டும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து புத்திமதி மறுபடியும் சிந்திக்கப்பட வேண்டும் என்று வரையறுக்கப்படவில்லை. கடவுளுடைய வார்த்தையின் பகுதிகளும் அதில் அடங்கியிருக்கும் நியமங்களும் ஒவ்வொரு நாளும் கலந்தாலோசிக்கப்பட வேண்டியிருந்தது. (உபாகமம் 6:4-9) இன்று அநேக இடங்களில் இளம் நபர்கள் பைபிளின் தனிப்பட்ட பிரதியைக் கொண்டிருக்க முடிகிறது, அதை அவர்கள் கொண்டிருப்பது அவர்களுக்கு அதிக நன்மையளிப்பதாய் இருக்கிறது. ஆனால் பண்டைய இஸ்ரவேலில் நிலைமை அவ்வாறில்லை. அந்தச் சமயத்தில் கடவுளுடைய வார்த்தையிலிருந்து பெற்றோர் போதனை அளிக்கையில், தாங்கள் மனப்பாடம் செய்து வைத்திருந்ததன் பேரிலும், தங்கள் இருதயங்களில் வாஞ்சையோடு போற்றி வைத்திருந்த சத்தியங்களின் பேரிலும், அதோடுகூட தாங்கள் தனிப்பட்ட விதமாய் எழுதி வைத்திருந்த ஏதாவது சிறிய பகுதிகளின் பேரிலும் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. திரும்பத் திரும்ப அடிக்கடி சொல்வதன் மூலம், யெகோவாவிலும் அவருடைய வழிகளிலும் தங்கள் பிள்ளைகள் அன்பை வளர்த்துக்கொள்ள அவர்கள் முயற்சி செய்வர். யெகோவாவிலும் அவருடைய வார்த்தையிலும் அன்பை வெளிப்படுத்திக் காண்பிக்கும் வகையில் ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரும் வாழ்வதற்கு உதவி செய்வதே அதன் குறிக்கோளாக இருந்ததே தவிர, வெறுமனே ஏட்டறிவைக் கொண்டிருப்பதற்காக அல்ல.—உபாகமம் 11:19, 20, 22, 23.
ஜெப ஆலயங்களில் வேதாகம வாசிப்பு
10, 11. ஜெப ஆலயங்களில் என்ன வேத வாசிப்பு நிகழ்ச்சிநிரல் பின்பற்றப்பட்டது, இப்படிப்பட்ட சமயங்களை இயேசு எவ்வாறு கருதினார்?
10 யூதர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டு சில காலத்துக்குப் பின்பு, ஜெப ஆலயங்கள் வணக்க ஸ்தலங்களாக நிறுவப்பட்டன. இப்படிப்பட்ட கூடும் இடங்களில் கடவுளுடைய வார்த்தையை வாசித்து கலந்தாலோசிப்பதற்காக, வேதாகமத்தின் கூடுதலான நகல்கள் எடுக்கப்பட்டன. எபிரெய வேதாகமத்தின் சில பகுதிகளைக் கொண்ட சுமார் 6,000 பண்டையகால கையெழுத்துப் பிரதிகள் அழியாது தொடர்ந்து நிலைத்திருந்ததற்கான காரணங்களில் இது ஒன்று.
11 டோராவை வாசிப்பது ஜெப ஆலய வணக்கத்தின் ஒரு முக்கிய பாகமாயிருந்தது, அது நவீன-நாளைய பைபிள்களின் முதல் ஐந்து புத்தகங்களுக்கு ஒப்பாயிருந்தது. பொ.ச. முதல் நூற்றாண்டில் அப்படிப்பட்ட வாசிப்பு ஒவ்வொரு ஓய்வுநாளிலும் செய்யப்பட்டது என்று அப்போஸ்தலர் 15:21 அறிக்கை செய்கிறது, வாரத்தின் இரண்டாம் மற்றும் ஐந்தாம் நாட்களில் டோரா வாசிப்புகளும்கூட இருந்தன என்று மிஷ்னா காண்பிக்கிறது. அநேக தனிப்பட்ட நபர்கள் நியமிக்கப்பட்ட பகுதிகளை வாசிப்பதில் ஒருவருக்குப் பின் ஒருவர் அடுத்தடுத்து பகிர்ந்து கொண்டனர். முழு டோராவையும் ஒவ்வொரு வருடமும் வாசித்து முடிப்பது பாபிலோனில் வாழ்ந்து வந்த யூதர்களின் பழக்கமாயிருந்தது; மூன்று வருட காலப்பகுதிக்குள் வாசித்து முடிக்கும்படி அட்டவணையிடப்படுவது பாலஸ்தீனாவில் வாழ்ந்துவந்தவர்களின் பழக்கமாயிருந்தது. தீர்க்கதரிசிகள் எழுதியவற்றைக் கொண்டிருக்கும் பைபிளின் பகுதியும்கூட வாசிக்கப்பட்டு விளக்கப்பட்டது. இயேசு, தாம் வசித்து வந்த இடத்தில் நடைபெற்ற ஓய்வுநாள் பைபிள்-வாசிப்பு நிகழ்ச்சிநிரல்களுக்கு ஆஜராயிருப்பது அவருடைய பழக்கமாயிருந்தது.—லூக்கா 4:16-21.
தனிப்பட்ட பிரதிபலிப்பும் பொருத்தமும்
12. (அ) மோசே ஜனங்களிடம் நியாயப்பிரமாண சட்டத்தை வாசித்தபோது, ஜனங்கள் எவ்வாறு பயனடைந்தனர்? (ஆ) ஜனங்கள் எவ்வாறு பிரதிபலித்தனர்?
12 ஏவப்பட்டெழுதப்பட்ட வேதாகமத்தை வாசிப்பது வெறும் ஒரு சம்பிரதாயமாக செய்யப்பட வேண்டிய காரியமாக கருதப்படவில்லை. ஜனங்களின் அறிந்துகொள்ளும் ஆர்வத்தை வெறுமனே திருப்தி செய்வதற்கென்று அது செய்யப்படவில்லை. சீனாய் மலையை நோக்கியவண்ணம் அமைந்திருந்த சமவெளியில் மோசே “உடன்படிக்கையின் புஸ்தகத்தை” இஸ்ரவேலருக்கு வாசித்துக்காட்டிய போது, கடவுளிடமாக அவர்களுக்கிருந்த உத்தரவாதங்களை அறிந்துகொண்டு அவற்றை நிறைவேற்றுவார்கள் என்பதற்காக அவர் அதைச் செய்தார். அவர்கள் அதைச் செய்வார்களா? அந்த வாசிப்பு, மறுமொழி கூறுவதைத் தேவைப்படுத்தியது. ஜனங்கள் அதைக் கண்டுணர்ந்து பின்வருமாறு சொல்வதன் மூலம் அதைத் தெரியப்படுத்தினர்: “கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம்.”—யாத்திராகமம் 24:7; ஒப்பிடுக: யாத்திராகமம் 19:8; 24:3.
13. கீழ்ப்படியாமற்போனால் விளையும் சாபங்களை யோசுவா வாசித்தபோது, ஜனங்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது, என்ன நோக்கத்தோடு?
13 பின்னர், யோசுவா வாக்களிக்கப்பட்டிருந்த ஆசீர்வாதங்களையும் சாபங்களையும் தேசத்தாரிடம் வாசித்தபோது, அவர்கள் மறுமொழி கொடுக்கும்படி கேட்கப்பட்டது. சாபங்கள் ஒவ்வொன்றாக சொல்லப்பட்ட பின்பு, பின்வரும் கட்டளை கொடுக்கப்பட்டது: “ஜனங்களெல்லாரும் பிரதியுத்தரமாக ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.” (உபாகமம் 27:4-26) ஒன்றன் பின் ஒன்றாக குறிப்புகளைச் சிந்தித்த பிறகு, யெகோவா கண்டனம் செய்யும் தவறுகளை எடுத்துக்கூறியபோது, அவர்கள் அதை ஒப்புக்கொள்வதாக கூறினர். முழு தேசமும் அதன் உடன்பாட்டை பெரும் சப்தத்தோடு தெரிவித்தபோது, அது எப்படி மனதில் ஆழ்ந்து பதியத்தக்க சம்பவமாய் இருந்திருக்க வேண்டும்!
14. நெகேமியாவின் நாட்களில் நியாயப்பிரமாணத்தை பொதுவில் வாசித்ததானது ஏன் விசேஷித்த விதத்தில் பயனுள்ளதாக நிரூபித்தது?
14 நெகேமியாவின் நாட்களில் நியாயப்பிரமாண சட்டத்தைக் கேட்பதற்கு எல்லா ஜனங்களும் எருசலேமில் ஒன்றுகூடியபோது, அதில் எழுதப்பட்டிருந்த போதனைகளை அவர்கள் முழுவதுமாக கடைப்பிடிக்கவில்லை என்பதை அவர்கள் கண்டனர். அந்தச் சமயத்தில் அவர்கள் கற்றுக்கொண்டதை உடனடியாக பொருத்தினர். அதன் விளைவு என்னவாக இருந்தது? “மிகுந்த சந்தோஷமுண்டாயிருந்தது.” (நெகேமியா 8:13-17) பண்டிகையின்போது தினமும் பைபிளை ஒரு வாரம் வாசித்த பிறகு, இன்னும் அதிகம் தேவைப்பட்டது என்பதை அவர்கள் உணர்ந்தனர். ஆபிரகாமின் நாட்களிலிருந்து யெகோவா தம் ஜனங்களோடு கொண்டிருந்த செயல் தொடர்புகளைப் பற்றிய சரித்திரத்தை அவர்கள் ஜெபசிந்தையோடு மறுபடியும் சிந்தித்தனர். இவையனைத்தும் அவர்கள் நியாயப்பிரமாணத்தின் தேவைகளுக்கு இணங்கிப் போவதற்கு ஆணைக்குட்படும்படியும், அந்நியரோடு கலப்புமணம் செய்வதிலிருந்து விலகியிருக்கும்படியும், ஆலயத்தையும் அதன் சேவையையும் பராமரிப்பதற்காக பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும்படியும் அவர்களை உந்துவித்தன.—நெகேமியா, அதிகாரங்கள் 8-10.
15. குடும்பங்களில் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கொடுக்கப்படும் போதனை வெறும் சம்பிரதாயத்தைப் போல் இருக்கக்கூடாது என்பதை உபாகமம் 6:6-9-ல் உள்ள கட்டளைகள் எவ்வாறு காண்பிக்கின்றன?
15 அதே போல் குடும்பத்துக்குள் வேதாகமத்தை கற்பிப்பது வெறும் ஒரு சம்பிரதாயமாக செய்யப்படும் காரியமாகக் கருதப்படவில்லை. ஏற்கெனவே பார்த்தபடி, உபாகமம் 6:6-9-ல் அடையாள பதங்களில், ‘கடவுளுடைய வார்த்தைகளை தங்கள் கையின் மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்ள வேண்டும்’ என்று ஜனங்களுக்கு சொல்லப்பட்டது—இவ்வாறு யெகோவாவின் வழிகளின் பேரில் அவர்களுக்கிருந்த அன்பை உதாரணத்தின் மூலமும் செயலின் மூலமும் வெளிப்படுத்திக் காட்டினர். மேலும் அவர்கள் கடவுளுடைய வார்த்தைகளை ‘கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய்’ வைக்க வேண்டியதாய் இருந்தது—இவ்வாறு வேதாகமத்தில் அடங்கியுள்ள நியமங்களை எப்போதும் கவனத்தில் வைத்து, அவற்றை தங்களுடைய தீர்மானங்களுக்கு அடிப்படையாக உபயோகித்தனர். (யாத்திராகமம் 13:9, 14-16-ல் உபயோகித்திருக்கும் மொழிநடையை ஒப்பிடுக.) அவர்கள் ‘அவற்றை வீட்டுநிலைகளிலும், வாசல்களிலும் எழுத வேண்டும்’—இவ்வாறு அவர்களுடைய வீடுகளையும் சமுதாயங்களையும் கடவுளுடைய வார்த்தை மதிக்கப்பட்டு பொருத்தப்படும் இடங்களாக வேறுபடுத்திக் காட்டினர். வேறு வார்த்தைகளில் சொன்னால், அவர்கள் யெகோவாவின் நீதியான கட்டளைகளை நேசித்து பொருத்தினர் என்பதை அவர்களுடைய வாழ்க்கை மிகுதியாக சாட்சி கொடுக்க வேண்டியிருந்தது. அது எவ்வளவு பயனளிக்கக்கூடியதாய் இருக்கும்! நம்முடைய குடும்பங்களின் அன்றாடக வாழ்க்கையில் கடவுளுடைய வார்த்தை அப்படிப்பட்ட முக்கியத்துவமுடையதாய் இருக்கிறதா? விசனகரமாக, யூதர்கள் இவையனைத்தையும் வெறும் சம்பிரதாயமாக மாற்றினர், வேதாகமப்பகுதிகள்-அடங்கிய சிறு பெட்டிகளை அவர்கள் தாயத்து போல் அணிந்திருந்தனர். அவர்களுடைய வணக்கம் இருதயத்திலிருந்து வராமல் நின்றுவிட்டது, யெகோவாவால் நிராகரிக்கப்பட்டது.—ஏசாயா 29:13, 14; மத்தேயு 15:7-9.
கண்காணிப்பு செய்யும் ஸ்தானங்களில் இருப்பவர்களின் உத்தரவாதம்
16. ஒழுங்காக வேதாகமத்தை வாசிப்பது ஏன் யோசுவாவுக்கு முக்கியமானதாய் இருந்தது?
16 வேதாகமத்தை வாசிக்கும் விஷயத்தில், தேசத்தில் கண்காணிகளாய் இருந்தவர்களுக்கு விசேஷ கவனம் செலுத்தப்பட்டது. யோசுவாவிடம் யெகோவா சொன்னார்: “நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிரு.” அந்த உத்தரவாதத்தை நிறைவேற்றும் நோக்கத்துக்காக அவரிடம் இவ்வாறு சொல்லப்பட்டது: “நீ இரவும் பகலும் அதைத் தாழ்ந்த குரலில் வாசிக்க வேண்டும்; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.” (யோசுவா 1:7, 8, NW) இன்று எந்தவொரு கிறிஸ்தவ கண்காணியின் விஷயத்திலும் உண்மையாயிருக்கிறபடி, யோசுவா வேதாகமத்தை ஒழுங்காக வாசித்ததானது, யெகோவா தம் ஜனங்களுக்குக் கொடுத்திருந்த திட்டவட்டமான கட்டளைகளை மனதில் தெளிவாக வைத்திருக்க அவருக்கு உதவும். யெகோவா எவ்வாறு தம் ஊழியர்களைப் பல்வேறு சூழ்நிலைமைகளின்கீழ் கையாண்டார் என்பதையும்கூட யோசுவா புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. அவர் கடவுளுடைய நோக்கத்தைப் பற்றிய கூற்றுகளை வாசிக்கையில், அந்த நோக்கத்தின் சம்பந்தமாக தன்னுடைய சொந்த உத்தரவாதத்தைக் குறித்து சிந்திப்பது அவருக்கு முக்கியமானதாய் இருந்தது.
17. (அ) யெகோவா சொன்னவிதமாக வேதாகமத்தை வாசிப்பதிலிருந்து ராஜாக்கள் பயனடைவதற்கு, வாசிப்போடுகூட அவர்களுக்கு என்ன தேவைப்பட்டது? (ஆ) ஒழுங்காக பைபிளை வாசிப்பதும் தியானிப்பதும் கிறிஸ்தவ மூப்பர்களுக்கு ஏன் அதிமுக்கியமானது?
17 தம் ஜனங்கள்மீது ராஜாவாக சேவிக்கிற எவரும், தன்னுடைய ஆட்சியின் ஆரம்பத்தில், ஆசாரியர்கள் வைத்திருக்கிற பிரதியை அடிப்படையாக வைத்து கடவுளுடைய சட்டத்தின் நகல் ஒன்றை எடுக்க வேண்டும் என்று யெகோவா கட்டளையிட்டிருந்தார். பின்பு அவர் ‘தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்க வேண்டும்.’ அதன் பொருளடக்கத்தை வெறுமனே மனப்பாடம் செய்வது அதன் குறிக்கோளாக இருக்கவில்லை. மாறாக, ‘தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்ளும்பொருட்டும்,’ “அவனுடைய இருதயம் அவன் சகோதரர்பேரில் மேட்டிமைகொள்ளாமலும்” இருப்பதற்காக செய்யப்பட்டது. (உபாகமம் 17:18-20) அவர் வாசித்துக் கொண்டிருந்தவற்றை ஆழமாக தியானிப்பதை இது தேவைப்படுத்தியது. நிர்வாகம் சம்பந்தப்பட்ட பணிகளை அதிகமாக செய்ய வேண்டியிருந்ததால் அதைச் செய்வது கடினம் என சில ராஜாக்கள் யோசித்ததாக தெரிகிறது, அவர்கள் அசட்டையாக இருந்ததன் விளைவாக முழு தேசமும் துன்புற்றது. கிறிஸ்தவ சபையில் மூப்பர்கள் வகிக்கும் பங்கு நிச்சயமாகவே ராஜாக்களுடையதைப் போல் இல்லை. இருந்தபோதிலும், ராஜாக்களின் விஷயத்தில் உண்மையாய் இருந்ததுபோல, மூப்பர்கள் கடவுளுடைய வார்த்தையை வாசித்து, தியானம் செய்வது முக்கியமானதாய் இருக்கிறது. அவர்களுடைய கவனிப்பில் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பவர்களைப் பற்றி சரியான நோக்குநிலையைக் காத்துக்கொள்வதற்கு அவ்வாறு செய்வது அவர்களுக்கு உதவி செய்யும். கடவுளைக் கனப்படுத்தி, உடன் கிறிஸ்தவர்களை ஆவிக்குரியவிதத்தில் பலப்படுத்தும் வகையில் போதகர்களாக அவர்களுடைய உத்தரவாதத்தை நிறைவேற்றுவதற்கும்கூட அவர்களுக்கு உதவி செய்யும்.—தீத்து 1:9; யோவான் 7:16-18-ஐ ஒப்பிடுக; 1 தீமோத்தேயு 1:6, 7-ன் வேறுபாட்டைக் காண்க.
18 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ கண்காணியாகிய அப்போஸ்தலனாகிய பவுல் ஏவப்பட்ட வேதாகமத்தை நன்கு அறிந்திருந்தார். பண்டைய தெசலோனிக்கேயாவில் இருந்த ஜனங்களிடம் அவர் சாட்சி கொடுக்கையில், வேதாகமத்திலிருந்து அவர்களோடு திறம்பட்டவிதத்தில் நியாயங்காட்டிப் பேசவும், அதன் அர்த்தத்தை புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவி செய்யவும் அவரால் முடிந்தது. (அப்போஸ்தலர் 17:1-4) உண்மை மனதோடு செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தவர்களின் இருதயங்களை அவர் எட்டினார். இவ்வாறு, அவருக்குச் செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தவர்களில் அநேகர் விசுவாசிகளாக ஆனார்கள். (1 தெசலோனிக்கேயர் 2:13) உங்களுடைய பைபிள் வாசிப்பு மற்றும் படிப்பு திட்டத்தின் விளைவாக, வேதாகமத்திலிருந்து திறம்பட்ட விதத்தில் உங்களால் நியாயங்காட்டிப் பேச முடிகிறதா? பைபிள் வாசிப்பு உங்கள் வாழ்க்கையில் வகிக்கும் ஸ்தானமும், அதை நீங்கள் செய்யும் விதமும் கடவுளுடைய வார்த்தையை கைவசம் வைத்திருப்பதன் அர்த்தமென்ன என்பதை உண்மையிலேயே போற்றுகிறீர்கள் என்பதற்கு அத்தாட்சி அளிக்கிறதா? அதிக வேலைகள் நிரம்பிய அட்டவணைகளை உடையவர்கள்கூட, இப்படிப்பட்ட கேள்விகளுக்கு எவ்வாறு ஒரு உடன்பாடான பதிலைக் கொடுக்கலாம் என்பதை நாம் அடுத்த கட்டுரையில் சிந்திக்கலாம்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ பைபிளை வாசிப்பதற்கென்று ஜனங்கள் ஏன் தங்கள் உயிரையும் சுயாதீனத்தையும் ஆபத்தில் வைக்க மனமுள்ளவர்களாயிருந்திருக்கின்றனர்?
◻ கடவுளுடைய வார்த்தையைக் கேட்பதற்கென்று பண்டைய இஸ்ரவேலருக்கு அளிக்கப்பட்டிருந்த ஏற்பாடுகளை மறுபடியுமாக சிந்திப்பதன் மூலம் நாம் எவ்வாறு பயனடைகிறோம்?
◻ பைபிளில் நாம் வாசிக்கும் விஷயங்களைக் குறித்து நாம் என்ன செய்ய வேண்டும்?
◻ பைபிள் வாசிப்பும் தியானிப்பும் ஏன் விசேஷமாக கிறிஸ்தவ மூப்பர்களுக்கு முக்கியமானவையாய் இருக்கின்றன?
18. பைபிளை ஒழுங்காக வாசித்து படிப்பதானது அப்போஸ்தலனாகிய பவுல் வைத்த என்ன முன்மாதிரியைப் பின்பற்ற நமக்கு உதவும்?
[பக்கம் 9-ன் படம்]
யெகோவா யோசுவாவிடம் சொன்னார்: “நீ இரவும் பகலும் அதைத் தாழ்ந்த குரலில் வாசிக்க வேண்டும்”