2 ராஜாக்கள்
25 சிதேக்கியா ஆட்சி செய்த ஒன்பதாம் வருஷம் 10-ஆம் மாதம் 10-ஆம் தேதியில், பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார்+ தன்னுடைய படை முழுவதையும் திரட்டிக்கொண்டு எருசலேமுடன் போர் செய்ய வந்தான்.+ நகரத்துக்கு எதிராக முகாம்போட்டு, அதைச் சுற்றிலும் முற்றுகைச் சுவர் எழுப்பினான்.+ 2 சிதேக்கியா ராஜா ஆட்சி செய்த 11-ஆம் வருஷம்வரை முற்றுகை நீடித்தது. 3 நான்காம் மாதம் ஒன்பதாம் தேதியில், நகரத்தில் பஞ்சம் மிகக் கடுமையாக இருந்தது;+ குடிமக்களுக்குக் கொஞ்சம்கூட உணவு கிடைக்கவில்லை.+ 4 நகரத்தின் மதில் உடைக்கப்பட்டது;+ கல்தேயர்கள் நகரத்தைச் சுற்றிவளைத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது, எல்லா வீரர்களும் ராஜாவின் தோட்டத்துக்குப் பக்கத்தில் இரண்டு மதில்களுக்கு இடையிலிருந்த நுழைவாசல் வழியாக ராத்திரியில் தப்பித்து ஓடினார்கள். அரபா வழியாக ராஜா தப்பித்துப் போனார்.+ 5 ஆனால், கல்தேய வீரர்கள் அவரைத் துரத்திக்கொண்டுபோய், எரிகோ பாலைநிலத்தில் பிடித்தார்கள்; அவருடைய வீரர்கள் எல்லாரும் அவரைவிட்டு சிதறி ஓடினார்கள். 6 கல்தேய வீரர்கள் ராஜாவைப் பிடித்து,+ ரிப்லாவில் இருந்த பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோனார்கள். அங்கே அவருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 7 சிதேக்கியாவின் கண் முன்னாலேயே அவருடைய மகன்களைப் படுகொலை செய்தார்கள். பின்பு, நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவருக்குச் செம்பு விலங்குகளை மாட்டி அவரை பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.+
8 ஐந்தாம் மாதம் ஏழாம் தேதியில், அதாவது பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் ஆட்சி செய்த 19-ஆம் வருஷத்தில், நேபுசராதான்+ எருசலேமுக்கு வந்தான்;+ இவன் காவலாளிகளின் தலைவன், பாபிலோன் ராஜாவின் ஊழியன். 9 யெகோவாவின் ஆலயத்தையும் ராஜாவின் அரண்மனையையும்+ எருசலேமிலிருந்த எல்லா வீடுகளையும்+ அவன் தீ வைத்துக் கொளுத்தினான்.+ பிரமுகர்கள் எல்லாருடைய வீடுகளையும் எரித்துப்போட்டான்.+ 10 காவலாளிகளின் தலைவனோடு இருந்த கல்தேய வீரர்கள் எல்லாரும் சேர்ந்து எருசலேமைச் சுற்றியிருந்த மதில்களை இடித்துப்போட்டார்கள்.+ 11 நகரத்தில் மிச்சமிருந்த மக்களையும், பாபிலோன் ராஜாவிடம் சரணடைந்தவர்களையும், மற்ற மக்களையும் காவலாளிகளின் தலைவன் நேபுசராதான் சிறைபிடித்துக்கொண்டு போனான்.+ 12 ஆனால், திராட்சைத் தோட்டங்களிலும் வயல்களிலும் கட்டாய வேலை செய்வதற்காக பரம ஏழைகள் சிலரை அங்கேயே விட்டுவிட்டுப் போனான்.+ 13 கல்தேயர்கள் யெகோவாவின் ஆலயத்திலிருந்த செம்புத் தூண்களையும்+ யெகோவாவின் ஆலயத்திலிருந்த தள்ளுவண்டிகளையும்+ ‘செம்புக் கடல்’ தொட்டியையும்+ உடைத்து, அவற்றின் செம்பை பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.+ 14 சட்டிகள், சாம்பல் அள்ளும் கரண்டிகள், திரி வெட்டும் கருவிகள், கோப்பைகள் ஆகியவற்றையும், ஆலயத்தில் பயன்படுத்தப்பட்ட எல்லா செம்புப் பாத்திரங்களையும் எடுத்துக்கொண்டு போனார்கள். 15 சொக்கத்தங்கத்திலும் வெள்ளியிலும் செய்யப்பட்ட தணல் அள்ளும் கரண்டிகளையும் கிண்ணங்களையும்+ காவலாளிகளின் தலைவன் கொண்டுபோனான். 16 யெகோவாவின் ஆலயத்தில் சாலொமோன் செய்து வைத்த இரண்டு தூண்கள், ‘செம்புக் கடல்’ தொட்டி, தள்ளுவண்டிகள் ஆகியவற்றின் செம்பு எடைபோட முடியாதளவுக்கு மிக அதிகமாக இருந்தது.+ 17 ஒவ்வொரு தூணும் 18 முழ* உயரமாக இருந்தது.+ அதன் மேலிருந்த கும்பம் செம்பினால் செய்யப்பட்டிருந்தது. அந்தக் கும்பத்தின் உயரம் மூன்று முழம். கும்பத்தைச் சுற்றியிருந்த வலைப்பின்னலும் மாதுளம்பழ வடிவங்களும் செம்பினால் செய்யப்பட்டிருந்தன.+ மற்றொரு தூணும் இதேபோல் இருந்தது.
18 முதன்மை குரு செராயாவையும்,+ இரண்டாம் குரு செப்பனியாவையும்,+ காவலாளிகள் மூன்று பேரையும் நேபுசராதான் பிடித்துக்கொண்டு போனான்.+ 19 போர்வீரர்களுக்குத் தலைவரான அரண்மனை அதிகாரி ஒருவரையும், நகரத்தில் இருந்த ராஜாவின் நெருங்கிய நண்பர்கள் ஐந்து பேரையும், போருக்கு ஆட்களைத் திரட்டுகிற படைத் தளபதியின் செயலாளரையும், நகரத்தில் மிச்சமிருந்த பாமர மக்களில் 60 ஆண்களையும் பிடித்துக்கொண்டு போனான். 20 காவலாளிகளின் தலைவன் நேபுசராதான்+ இவர்களைப் பிடித்து ரிப்லாவில் இருந்த பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோனான்.+ 21 காமாத் பகுதியிலிருந்த+ ரிப்லாவில் பாபிலோன் ராஜா இவர்களை வெட்டிக் கொன்றான். இப்படி, யூதா மக்கள் தங்களுடைய தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள்.+
22 பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார், யூதா தேசத்தில் தான் விட்டுவைத்திருந்த மக்களுக்கு அதிகாரியாக கெதலியாவை+ நியமித்தான்;+ இவர் அகிக்காமின்+ மகன், சாப்பானின்+ பேரன். 23 கெதலியாவை பாபிலோன் ராஜா அதிகாரியாக நியமித்த விஷயத்தை படைத் தலைவர்கள் எல்லாரும் அவர்களுடைய ஆட்களும் கேள்விப்பட்டவுடனே, மிஸ்பாவிலிருந்த கெதலியாவிடம் வந்தார்கள். அதாவது, நெத்தனியாவின் மகன் இஸ்மவேல், கரேயாவின் மகன் யோகனான், நெத்தோபாத்தியனான தன்கூமேத்தின் மகன் செராயா, மாகாத்தியன் ஒருவனுடைய மகன் யசினியா ஆகியோரும் அவர்களுடைய ஆட்களும் வந்தார்கள்.+ 24 அப்போது, கெதலியா அவர்களுக்கும் அவர்களுடைய ஆட்களுக்கும் உறுதிமொழி கொடுத்தார்; “கல்தேயர்களுக்குச் சேவை செய்ய பயப்படாதீர்கள். இந்தத் தேசத்திலேயே தங்கி, பாபிலோன் ராஜாவுக்குச் சேவை செய்யுங்கள். அப்போது எந்தக் கஷ்டமும் இல்லாமல் வாழ்வீர்கள்”+ என்று சொன்னார்.
25 எலிஷாமாவின் பேரனும் நெத்தனியாவின் மகனும் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவனுமான இஸ்மவேல்,+ ஏழாம் மாதத்தில் பத்து ஆட்களைக் கூட்டிக்கொண்டு வந்தான்; அவர்கள் எல்லாரும் சேர்ந்து கெதலியாவை வெட்டிக் கொன்றார்கள். மிஸ்பாவில் அவருடன் இருந்த யூதர்களையும் கல்தேயர்களையும் கொன்றுபோட்டார்கள்.+ 26 அதன் பின்பு, படைத் தலைவர்கள் உட்பட மக்கள் எல்லாரும், அதாவது சிறியவர்கள், பெரியவர்கள் எல்லாரும், கல்தேயர்களுக்குப் பயந்து+ எகிப்துக்கு ஓடிப்போனார்கள்.+
27 ஏவில்-மெரொதாக் என்பவன் பாபிலோனின் ராஜாவான வருஷத்தில், யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச்+ சிறையிலிருந்து விடுதலை செய்தான்;+ அது, யோயாக்கீன் பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போன 37-ஆம் வருஷம், 12-ஆம் மாதம், 27-ஆம் நாள். 28 யோயாக்கீனிடம் ஏவில்-மெரொதாக் அன்பாகப் பேசினான். பாபிலோனில் தன்னோடு இருந்த மற்ற ராஜாக்களைவிட அவருக்கு உயர்ந்த ஸ்தானத்தைக் கொடுத்தான்.* 29 அதன் பின்பு, யோயாக்கீன் கைதி உடையைப் போட்டுக்கொள்ளவில்லை; வாழ்நாள் முழுக்க ராஜாவுடன் சேர்ந்து சாப்பிட்டார். 30 ராஜாவின் கட்டளைப்படியே, யோயாக்கீன் உயிரோடு இருந்த நாளெல்லாம் தினமும் அவருக்கு உணவுப் பொருள்கள் கொடுக்கப்பட்டன.