அப்போஸ்தலரின் செயல்கள்
18 இதற்குப் பின்பு, அவர் அத்தேனே நகரத்தைவிட்டு கொரிந்துவுக்கு வந்தார். 2 அங்கே பொந்து மாகாணத்தைச் சேர்ந்த ஆக்கில்லா+ என்ற யூதரையும் அவருடைய மனைவி பிரிஸ்கில்லாளையும் சந்தித்து, அவர்களுடைய வீட்டுக்குப் போனார். யூதர்கள் எல்லாரையும் ரோமைவிட்டுப் போகச் சொல்லி கிலவுதியு அரசன் கட்டளை கொடுத்திருந்ததால், அந்தத் தம்பதி சமீபத்தில்தான் இத்தாலியிலிருந்து அங்கே வந்திருந்தார்கள். 3 அவர்கள் கூடாரத் தொழில் செய்பவர்கள். பவுலும் அதே தொழில் செய்கிறவராக இருந்ததால் அவர்களுடைய வீட்டில் தங்கி அவர்களோடு வேலை பார்த்தார்.+ 4 அவர் ஒவ்வொரு ஓய்வுநாளிலும்+ ஜெபக்கூடத்துக்குப் போய்,+ யூதர்களும் கிரேக்கர்களும் நம்பிக்கை வைக்கும் அளவுக்குப் பக்குவமாகப் பேசிவந்தார்.
5 சீலாவும்+ தீமோத்தேயுவும்+ மக்கெதோனியாவிலிருந்து வந்த பின்பு, யூதர்களிடம் பவுல் கடவுளுடைய வார்த்தையை முழு மூச்சோடு பிரசங்கிக்கவும், இயேசுவே கிறிஸ்து என்று நிரூபிப்பதற்காகச் சாட்சி கொடுக்கவும் ஆரம்பித்தார்.+ 6 ஆனால், யூதர்கள் தொடர்ந்து எதிர்த்துக்கொண்டும் பழித்துக்கொண்டும் இருந்தார்கள். அதனால், அவர் தன்னுடைய உடையை உதறி,+ “இனி உங்களுக்கு என்ன நடந்தாலும் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு,+ நான் பொறுப்பல்ல.*+ இனி நான் மற்ற தேசத்து மக்களிடம் போகிறேன்”+ என்று சொன்னார். 7 பின்பு, அவர் அந்த இடத்தைவிட்டு,* கடவுளை வணங்கிவந்த தீத்தியு யுஸ்து என்பவருடைய வீட்டுக்குப் போனார். இவருடைய வீடு ஜெபக்கூடத்தை ஒட்டியிருந்தது. 8 அந்த ஜெபக்கூடத்தின் தலைவரான கிறிஸ்பு+ என்பவரும் அவருடைய வீட்டிலிருந்த எல்லாரும் எஜமானின் சீஷர்களானார்கள். நல்ல செய்தியைக் கேட்ட கொரிந்து நகர மக்கள் பலரும் எஜமான்மேல் விசுவாசம் வைத்து ஞானஸ்நானம் எடுத்தார்கள். 9 ராத்திரி நேரத்தில் பவுலுக்கு எஜமான் தரிசனமாகி, “பயப்படாதே, பேசிக்கொண்டே இரு, அமைதியாகிவிடாதே. 10 நான் உன்னோடு இருக்கிறேன்,+ யாரும் உன்னைத் தாக்க மாட்டார்கள். இந்த நகரத்தில் என்னுடைய மக்கள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்” என்று சொன்னார். 11 அதனால் பவுல் அங்கே ஒன்றரை வருஷம் தங்கியிருந்து, கடவுளுடைய வார்த்தையை அவர்களுக்குக் கற்பித்துவந்தார்.
12 கல்லியோன் என்பவர் அகாயாவில் மாநில ஆளுநராக* இருந்தபோது பவுலுக்கு எதிராக யூதர்கள் ஒன்றுதிரண்டு, அவரை நியாயத்தீர்ப்பு மேடைக்குக் கொண்டுபோய், 13 “சட்டத்துக்கு முரணான விதத்தில் கடவுளை வணங்கச் சொல்லி இந்த ஆள் மக்களைத் தூண்டுகிறான்” என்று சொன்னார்கள். 14 பவுல் பேச வாயெடுத்தபோது, கல்லியோன் அந்த யூதர்களிடம், “யூதர்களே, ஏதாவது தவறோ பெரிய குற்றமோ நடந்திருந்தால் நீங்கள் சொல்வதை நான் பொறுமையோடு கேட்பது நியாயமாக இருக்கும். 15 ஆனால், இது வார்த்தைகளையும் பெயர்களையும் உங்களுடைய சட்டங்களையும் பற்றிய சர்ச்சையாக+ இருப்பதால், இப்படிப்பட்ட விஷயங்களை விசாரிக்க எனக்கு விருப்பமில்லை, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லி, 16 அவர்களை நியாயத்தீர்ப்பு மேடையிலிருந்து துரத்திவிட்டார். 17 அதனால், அவர்கள் எல்லாரும் ஜெபக்கூடத் தலைவரான சொஸ்தேனேயைப்+ பிடித்து நியாயத்தீர்ப்பு மேடைக்கு முன்னால் அடிக்க ஆரம்பித்தார்கள். ஆனால், அவர்கள் செய்ததை கல்லியோன் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை.
18 பவுல் அங்கே பல நாட்கள் தங்கிய பின்பு சகோதரர்களிடமிருந்து விடைபெற்று, பிரிஸ்கில்லாளுடனும் ஆக்கில்லாவுடனும் சீரியாவுக்குக் கப்பல் ஏறினார். நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அவர் கெங்கிரேயாவில்+ தலைமுடியை ஒட்ட வெட்டிக்கொண்டார். 19 அவர்கள் எபேசு நகரத்துக்கு வந்தபோது, அவர் அவர்களை விட்டுவிட்டு ஜெபக்கூடத்துக்குப் போய் யூதர்களிடம் நியாயங்காட்டிப் பேசினார்.+ 20 இன்னும் கொஞ்சக் காலம் தங்களோடு இருக்கும்படி அவர்கள் திரும்பத் திரும்பக் கேட்டார்கள், ஆனால் அவர் சம்மதிக்கவில்லை. 21 “யெகோவாவுக்கு* விருப்பம்* இருந்தால் மறுபடியும் உங்களிடம் வருவேன்” என்று அவர்களிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டார். பின்பு எபேசுவிலிருந்து கப்பல் ஏறி, 22 செசரியாவுக்குப் போனார். அதன் பின்பு, மேலே* போய் சபையில் இருந்தவர்களைச் சந்தித்து வாழ்த்துச் சொல்லிவிட்டு, அந்தியோகியாவுக்குப் போனார்.+
23 அங்கே கொஞ்சக் காலம் தங்கியிருந்த பின்பு, கலாத்தியா, பிரிகியா பகுதிகள் முழுவதும் ஒவ்வொரு இடமாகப் போய்,+ சீஷர்கள் எல்லாரையும் பலப்படுத்தினார்.+
24 அலெக்சந்திரியாவைச் சேர்ந்த அப்பொல்லோ+ என்ற ஒரு யூதர் எபேசுவுக்கு வந்தார். அவர் திறமையாகப் பேசுபவராக இருந்தார், வேதவசனங்களை நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார். 25 யெகோவாவின்* வழியைப் பற்றி அவருக்குக் கற்பிக்கப்பட்டிருந்தது. அவர் கடவுளுடைய சக்தியினால் நிறைந்து ஆர்வத்துடிப்போடு இயேசுவைப் பற்றிய விஷயங்களைப் பேசிக்கொண்டும், திருத்தமாகக் கற்பித்துக்கொண்டும் இருந்தார். ஆனால், யோவான் பிரசங்கித்த ஞானஸ்நானத்தைப் பற்றி மட்டுமே அவருக்குத் தெரிந்திருந்தது. 26 ஜெபக்கூடத்திலும் அவர் தைரியமாகப் பேச ஆரம்பித்தார். அவர் பேசியதை பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும்+ கேட்டபோது, அவரைத் தங்களோடு கூட்டிக்கொண்டுபோய், கடவுளுடைய வழிகளைப் பற்றி இன்னும் திருத்தமாக அவருக்கு விளக்கினார்கள். 27 அவர் அகாயாவுக்குப் போக விரும்பியதால், அவரை அன்போடு வரவேற்கும்படி அங்கிருந்த சீஷர்களுக்கு எபேசுவிலிருந்த சகோதரர்கள் கடிதம் எழுதினார்கள்; அவர் அங்கே போனபோது, கடவுளுடைய அளவற்ற கருணையால் சீஷர்களானவர்களுக்கு அதிக உதவியாக இருந்தார். 28 எப்படியென்றால், இயேசுவே கிறிஸ்து என்று வேதவசனங்களிலிருந்து எடுத்துக் காட்டி,+ யூதர்களுடைய போதனைகள் தவறென்று முழுமையாகவும் வெளிப்படையாகவும் மிகத் தீவிரமாகவும் நிரூபித்துவந்தார்.