2 ராஜாக்கள்
22 யோசியா+ ராஜாவானபோது அவருக்கு எட்டு வயது; அவர் 31 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+ அவருடைய அம்மா பெயர் எதிதாள். அவள் போஸ்காத்தைச்+ சேர்ந்த அதாயாவின் மகள். 2 யெகோவாவுக்குப் பிரியமான காரியங்களை யோசியா செய்தார். தன்னுடைய மூதாதையான தாவீதின் வழியில் நடந்தார்.+ அதிலிருந்து வலது பக்கமோ இடது பக்கமோ விலகவில்லை.
3 யோசியா ராஜா தான் ஆட்சி செய்த 18-ஆம் வருஷத்தில், மெசுல்லாமின் மகனான அத்சலியாவின் மகனும் செயலாளருமான சாப்பானை யெகோவாவின் ஆலயத்துக்கு அனுப்பினார்;+ அப்போது சாப்பானிடம், 4 “நீங்கள் போய் தலைமைக் குரு இல்க்கியாவைப்+ பாருங்கள்; யெகோவாவின் ஆலயத்துக்கென்று காணிக்கையாக மக்கள் கொண்டுவந்த எல்லா பணத்தையும் வாயிற்காவலர்கள் வாங்கி வைத்திருப்பார்கள்.+ அதை அவர்களிடமிருந்து வாங்கிக்கொள்ளும்படி இல்க்கியாவிடம் சொல்லுங்கள்.+ 5 யெகோவாவின் ஆலய வேலையை மேற்பார்வை செய்கிறவர்களிடம் அந்தப் பணத்தைக் கொடுக்க வேண்டும். மேற்பார்வையாளர்கள் அந்தப் பணத்தை யெகோவாவின் ஆலயத்தை* பழுதுபார்க்கிறவர்களுக்குக் கொடுக்க வேண்டும்;+ 6 அதாவது கைத்தொழிலாளிகள், கட்டிடக் கலைஞர்கள், கொத்தனார்கள் ஆகியோருக்குக் கொடுக்க வேண்டும். அதோடு, ஆலயத்தைப் பழுதுபார்க்கத் தேவையான மரங்களையும் செதுக்கிய கற்களையும் வாங்குவதற்கும் அந்தப் பணத்தைப் பயன்படுத்த வேண்டும்.+ 7 அவர்களிடம் கொடுத்த பணத்துக்குக் கணக்குக் கேட்க வேண்டாம், அவர்கள் நம்பகமான ஆட்கள்”+ என்று ராஜா சொன்னார்.
8 பிற்பாடு, தலைமைக் குருவாகிய இல்க்கியா செயலாளர் சாப்பானிடம்,+ “இந்தத் திருச்சட்ட புத்தகத்தை+ யெகோவாவின் ஆலயத்தில் கண்டெடுத்தேன்” என்று சொல்லி அதை அவரிடம் கொடுத்தார், அவர் அதைப் படிக்க ஆரம்பித்தார்.+ 9 பின்பு சாப்பான் ராஜாவிடம் போய், “உங்களுடைய ஊழியர்கள் ஆலயத்தின் காணிக்கை பெட்டியிலிருந்த எல்லா பணத்தையும் எடுத்து, யெகோவாவின் ஆலய வேலையை மேற்பார்வை செய்கிறவர்களிடம் கொடுத்துவிட்டார்கள்”+ என்று சொன்னார். 10 அதோடு, “குருவாகிய இல்க்கியா என்னிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்”+ என்றும் சொன்னார். பின்பு, ராஜாவின் முன்னால் சாப்பான் அதை வாசிக்க ஆரம்பித்தார்.
11 திருச்சட்ட புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த விஷயங்களைக் கேட்டவுடனே, ராஜா தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டார்.+ 12 பின்பு குருவாகிய இல்க்கியா, சாப்பானின் மகன் அகிக்காம்,+ மிகாயாவின் மகன் அக்போர், செயலாளர் சாப்பான், ராஜாவின் ஊழியர் அசாயா ஆகியோரிடம் ராஜா பேசினார். 13 “நீங்கள் போய் எனக்காகவும் மக்களுக்காகவும் யூதா மக்கள் எல்லாருக்காகவும் யெகோவாவிடம் விசாரியுங்கள். இப்போது கண்டெடுக்கப்பட்ட இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற விஷயங்களைப் பற்றி அவரிடம் கேளுங்கள். நாம் பின்பற்ற வேண்டிய கட்டளைகளெல்லாம் இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், நம் முன்னோர்கள் அவை எல்லாவற்றையும் கடைப்பிடிக்கவில்லை, அவற்றுக்குக் கீழ்ப்படியவில்லை. அதனால், யெகோவாவின் கடும் கோபம் நம்மீது பற்றியெரிகிறது”+ என்று சொன்னார்.
14 அப்போது குருவாகிய இல்க்கியா, அகிக்காம், அக்போர், சாப்பான், அசாயா ஆகியோர் உல்தாள் என்ற பெண் தீர்க்கதரிசியிடம்+ போனார்கள்; அவள் அர்காசின் பேரனும் திக்வாவின் மகனுமான சல்லூமின் மனைவி; அவளுடைய கணவர்தான் துணிமணி அறைக்குப் பொறுப்பாளராக இருந்தார். எருசலேமின் புதிய பகுதியில் உல்தாள் குடியிருந்தாள். ராஜா அனுப்பிய இந்த ஆட்கள் எல்லாரும் அங்கே போய் அவளைச் சந்தித்தார்கள்.+ 15 அவள் அவர்களிடம், “இஸ்ரவேலின் கடவுளான யெகோவா சொல்வது இதுதான். ‘என்னிடம் உங்களை அனுப்பியவரிடம் போய் இதைச் சொல்லுங்கள்: 16 “யெகோவா சொல்வது என்னவென்றால், ‘இந்த இடத்தையும் இங்கே குடியிருப்பவர்களையும் அழிக்கப்போகிறேன். யூதா ராஜா வாசித்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லாவற்றையும் செய்வேன்.+ 17 ஏனென்றால், இந்த மக்கள் என்னை விட்டுவிட்டு, மற்ற தெய்வங்களுக்கு முன்னால் பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்கிறார்கள்.+ அவர்களுடைய கைவேலைகள் எல்லாவற்றாலும் என்னைப் புண்படுத்துகிறார்கள்.+ அதனால், இந்த இடத்தின் மீது என்னுடைய கடும் கோபம் கொழுந்துவிட்டு எரியும், அது அணையவே அணையாது.’”+ 18 ஆனால், யெகோவாவிடம் விசாரிக்கச் சொல்லி உங்களை அனுப்பிய யூதா ராஜாவிடம் போய் இதைச் சொல்லுங்கள்: “நீ கேட்ட வார்த்தைகளைப் பற்றி இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: 19 ‘இந்த இடத்துக்கும் இந்தக் குடிமக்களுக்கும் எதிராக நான் சொன்னதைக் கேட்டு நீ மனம் வருந்தினாய்;* இந்தத் தேசம் கோரமாய்க் கிடக்கும், இந்த மக்கள் சபிக்கப்பட்டவர்களாய் இருப்பார்கள் என்று நான் சொன்னதைக் கேட்டு யெகோவாவுக்கு முன்னால் தாழ்மையாக நடந்துகொண்டாய்.+ உன் உடையைக் கிழித்துக்கொண்டு+ என் முன்னால் அழுதாய். அதனால், நானும் உன்னுடைய மன்றாட்டைக் கேட்டேன் என்று யெகோவா சொல்கிறார். 20 நீ இறந்துபோனதும்* நல்லடக்கம் செய்யப்படுவாய். நான் இந்த இடத்துக்குக் கொண்டுவரப்போகிற அழிவை நீ பார்க்க மாட்டாய்’”’” என்று சொன்னாள். அவள் சொன்னதை ராஜாவிடம் போய் அவர்கள் சொன்னார்கள்.