2 ராஜாக்கள்
15 யெரொபெயாம்* ராஜா இஸ்ரவேலை ஆட்சி செய்த 27-ஆம் வருஷத்தில், அமத்சியா ராஜாவின்+ மகனான அசரியா*+ யூதாவின் ராஜாவானார்.+ 2 ராஜாவானபோது அவருக்கு 16 வயது; அவர் எருசலேமில் 52 வருஷங்கள் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் எக்கோலியாள், அவள் எருசலேமைச் சேர்ந்தவள். 3 அசரியா தன்னுடைய அப்பாவான அமத்சியாவைப் போலவே யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்துவந்தார்.+ 4 இருந்தாலும், ஆராதனை மேடுகள் அழிக்கப்படவில்லை.+ மக்கள் இன்னமும் அந்த இடங்களில் பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்துகொண்டிருந்தார்கள்.+ 5 அசரியா ராஜாவை யெகோவா தண்டித்ததால், சாகும்வரை அவர் தொழுநோயாளியாக இருந்தார்.+ ஒரு தனி வீட்டில் வாழ்ந்துவந்தார்.+ அந்தச் சமயத்தில், ராஜாவின் மகன் யோதாம்+ அரண்மனையைக் கவனித்துக்கொண்டு, தேசத்து மக்களுக்கு நீதி வழங்கிவந்தார்.+ 6 அசரியாவின்+ வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களைப் பற்றியும், அவர் செய்த எல்லாவற்றைப் பற்றியும் யூதா ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 7 பின்பு, அசரியா இறந்துபோனார்.*+ அவருடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட ‘தாவீதின் நகரத்தில்’ அடக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பிறகு, அவருடைய மகன் யோதாம் ராஜாவானார்.
8 அசரியா ராஜா+ யூதாவை ஆட்சி செய்த 38-ஆம் வருஷத்தில், யெரொபெயாமின் மகன் சகரியா+ இஸ்ரவேலின் ராஜாவானார். அவர் சமாரியாவில் ஆறு மாதங்கள் ஆட்சி செய்தார். 9 தன்னுடைய முன்னோர்களைப் போலவே, யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்துவந்தார்; இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டிய நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவ வழியைவிட்டு அவர் விலகவில்லை.+ 10 பின்பு, யாபேசின் மகன் சல்லூம் அவருக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டி அவரை இப்லெயாமில்+ வெட்டிக் கொன்றார்.+ அவரைக் கொன்றுபோட்ட பின்பு சல்லூம் ராஜாவானார். 11 சகரியாவின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்கள் எல்லாம் இஸ்ரவேல் ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 12 “உன் வாரிசுகள் நான்கு தலைமுறையாக+ இஸ்ரவேலின் சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆட்சி செய்வார்கள்”+ என்று யெகூவிடம் யெகோவா சொன்ன வார்த்தை இப்படி நிறைவேறியது. ஆம், அவர் சொன்னபடியே நடந்தது.
13 உசியா ராஜா+ யூதாவை ஆட்சி செய்த 39-ஆம் வருஷத்தில், யாபேசின் மகன் சல்லூம் சமாரியாவில் ராஜாவானார்; ஒரு மாதம் முழுவதும் ஆட்சி செய்தார். 14 அப்போது, காதியின் மகன் மெனாகேம் திர்சாவிலிருந்து+ சமாரியாவுக்கு வந்து, யாபேசின் மகன் சல்லூமை+ வெட்டிக் கொன்றார். அவரைக் கொன்றுபோட்ட பின்பு, மெனாகேம் ராஜாவானார். 15 சல்லூமின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்கள், அவர் தீட்டிய சதித்திட்டம் ஆகியவற்றைப் பற்றி இஸ்ரவேல் ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 16 மெனாகேம் திர்சாவிலிருந்து வந்து திப்சாவையும் அதைச் சுற்றியிருந்த பகுதியையும் தாக்கினார். திப்சாவில் குடியிருந்தவர்கள் எல்லாரையும் வெட்டிக் கொன்றார். நகரவாசலை அவர்கள் திறக்காததால் அந்த நகரத்தைத் தாக்கி, அங்கிருந்த கர்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்துப்போட்டார்.
17 அசரியா ராஜா யூதாவை ஆட்சி செய்த 39-ஆம் வருஷத்தில், காதியின் மகன் மெனாகேம் இஸ்ரவேலின் ராஜாவானார். அவர் சமாரியாவில் 10 வருஷங்கள் ஆட்சி செய்தார். 18 யெகோவா வெறுக்கிற காரியங்களை அவர் செய்துவந்தார்; இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டிய நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவ வழியைவிட்டு விலகவில்லை,+ காலமெல்லாம் அந்த வழியிலேயே நடந்தார். 19 அப்போது, அசீரியாவின் ராஜாவான பூல்+ இஸ்ரவேலை எதிர்த்துப் போர் செய்ய வந்தான். அவனுக்கு 1,000 தாலந்து* வெள்ளியைக் கொடுத்து அவனுடைய உதவியுடன் மெனாகேம் தன்னுடைய ஆட்சியை வலுப்படுத்தினார்.+ 20 இஸ்ரவேலில் இருந்த செல்வாக்குமிக்க பணக்காரர்களிடமிருந்து அந்த வெள்ளியை வசூலித்தார்.+ அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் 50 வெள்ளி சேக்கலை* வசூலித்து அசீரிய ராஜாவிடம் தந்தார். அப்போது, அசீரிய ராஜா இஸ்ரவேலைத் தாக்காமல் திரும்பிப் போனான். 21 மெனாகேமின்+ வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களைப் பற்றியும், அவர் செய்த எல்லாவற்றைப் பற்றியும் இஸ்ரவேல் ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 22 பின்பு, மெனாகேம் இறந்துபோனார்.* அவருக்குப் பிறகு, அவருடைய மகன் பெக்காகியா ராஜாவானார்.
23 அசரியா ராஜா யூதாவை ஆட்சி செய்த 50-ஆம் வருஷத்தில், மெனாகேமின் மகன் பெக்காகியா இஸ்ரவேலின் ராஜாவானார். அவர் சமாரியாவில் 2 வருஷங்கள் ஆட்சி செய்தார். 24 யெகோவா வெறுக்கிற காரியங்களை அவர் செய்துவந்தார்; இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டிய நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவ வழியைவிட்டு அவர் விலகவில்லை.+ 25 பின்பு, அவருடைய ஊழியரான ரெமலியாவின் மகனும் படை அதிகாரியுமான பெக்கா+ அவரைக் கொன்றுபோட சதித்திட்டம் தீட்டினார். சமாரியாவில் ராஜாவின் அரண்மனையில் இருந்த ஒரு கோபுரத்தில், அர்கோப்புடனும் ஆரியேவுடனும் சேர்ந்து அவரைக் கொன்றுபோட்டார். அப்போது, கீலேயாத்தைச் சேர்ந்த 50 ஆட்கள் அவருடன் இருந்தார்கள். பெக்காகியாவைக் கொன்றுபோட்ட பின்பு பெக்கா ராஜாவானார். 26 பெக்காகியாவின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களைப் பற்றியும், அவர் செய்த எல்லாவற்றைப் பற்றியும் இஸ்ரவேல் ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
27 அசரியா ராஜா யூதாவை ஆட்சி செய்த 52-ஆம் வருஷத்தில், ரெமலியாவின் மகன் பெக்கா+ இஸ்ரவேலின் ராஜாவானார். அவர் சமாரியாவில் 20 வருஷங்கள் ஆட்சி செய்தார். 28 யெகோவா வெறுக்கிற காரியங்களை அவர் செய்துவந்தார்; இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டிய நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவ வழியைவிட்டு விலகவில்லை.+ 29 பெக்கா ராஜா இஸ்ரவேலை ஆட்சி செய்த காலத்தில், ஈயோன், ஆபேல்-பெத்-மாக்கா,+ யநோகா, கேதேஸ்,+ ஆத்சோர், கீலேயாத்,+ கலிலேயா, அதாவது நப்தலி பகுதி+ முழுவதையும், அசீரிய ராஜாவான திகிலாத்-பிலேசர்+ முற்றுகையிட்டுக் கைப்பற்றினான். அதோடு, அங்கிருந்த மக்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனான்.+ 30 அதன் பின்பு, ரெமலியாவின் மகன் பெக்காவைத் தீர்த்துக்கட்ட ஏலாவின் மகன் ஓசெயா+ சதித்திட்டம் தீட்டினார்; அவரைக் கொன்றுவிட்டு, ஓசெயா ராஜாவானார். இது, உசியாவின் மகன் யோதாம்+ ராஜாவாகி 20-ஆம் வருஷத்தில் நடந்தது. 31 பெக்காவின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களைப் பற்றியும், அவர் செய்த எல்லாவற்றைப் பற்றியும் இஸ்ரவேல் ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
32 ரெமலியாவின் மகன் பெக்கா இஸ்ரவேலை ஆட்சி செய்த இரண்டாம் வருஷத்தில், உசியா+ ராஜாவின் மகன் யோதாம்+ யூதாவில் ராஜாவானார். 33 ராஜாவானபோது அவருக்கு 25 வயது. அவர் 16 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் எருசாள், இவள் சாதோக்கின் மகள்.+ 34 யோதாம் தன்னுடைய அப்பா உசியாவைப் போலவே யெகோவாவுக்குப் பிரியமாக நடந்துவந்தார்.+ 35 இருந்தாலும், ஆராதனை மேடுகள் அழிக்கப்படவில்லை. மக்கள் இன்னமும் அந்த இடங்களில் பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்துகொண்டிருந்தார்கள்.+ யெகோவாவுடைய ஆலயத்தின் ‘உயர்ந்த நுழைவாசலை’ இவர்தான் கட்டினார்.+ 36 யோதாமின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களைப் பற்றியும், அவர் செய்தவற்றைப் பற்றியும் யூதா ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 37 அந்தக் காலத்தில், யூதாவுடன் போர் செய்ய சீரியாவின் ராஜா ரேத்சீனையும் ரெமலியாவின் மகன் பெக்காவையும்+ யெகோவா அனுப்பத் தொடங்கினார்.+ 38 யோதாம் இறந்துபோனதும்,* அவருடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அவருடைய மூதாதையான ‘தாவீதின் நகரத்தில்,’ அடக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பிறகு, அவருடைய மகன் ஆகாஸ் ராஜாவானார்.