ஏசாயா
20 சர்கோன் என்ற அசீரிய ராஜா, தர்தானை* அஸ்தோத்துக்கு+ அனுப்பினார். அவன் அதற்கு எதிராகப் போர் செய்து அதைக் கைப்பற்றினான்.+ 2 அந்த வருஷத்தில், ஆமோத்சின் மகனான ஏசாயாவிடம் யெகோவா,+ “நீ போய், உன் இடுப்பில் கட்டியிருக்கும் துக்கத் துணியையும்,* காலில் போட்டிருக்கும் செருப்பையும் கழற்றிவிடு” என்று சொன்னார். ஏசாயா அப்படியே செய்தார்; வெற்று உடம்போடும்* வெறுங்காலோடும் நடமாடிக்கொண்டிருந்தார்.
3 பின்பு யெகோவா, “என் ஊழியனான ஏசாயா மூன்று வருஷங்களுக்கு வெற்று உடம்போடும் வெறுங்காலோடும் நடமாடிவந்தான். எகிப்துக்கும் எத்தியோப்பியாவுக்கும் ஒரு எச்சரிக்கையாகவும்+ அடையாளமாகவும் இருப்பதற்காக+ அப்படிச் செய்துவந்தான். 4 அதுபோலவே, அசீரிய ராஜா எகிப்திலும்+ எத்தியோப்பியாவிலும் உள்ள சிறுவர்களையும் கிழவர்களையும் வெற்று உடம்போடும் வெறுங்காலோடும் மூடப்படாத பிட்டத்தோடும் சிறைபிடித்துக்கொண்டு போவான். அவர்களுடைய நிர்வாணக் கோலம் எகிப்துக்கு மானக்கேடாக இருக்கும். 5 எத்தியோப்பியாவை மலைபோல் நம்பியிருந்தவர்களும் எகிப்தைப் பார்த்துப் பெருமைப்பட்டவர்களும் வெட்கப்பட்டுப்போவார்கள், கதிகலங்கிப்போவார்கள். 6 அந்த நாளில், கடலோரத்தில் குடியிருக்கிறவர்கள், ‘எகிப்து நம்மை அசீரிய ராஜாவிடமிருந்து காப்பாற்றும் என்று நம்பி அங்கு ஓடிப்போனோமே; இப்போது அதற்கு வந்த நிலைமையைப் பாருங்கள்! இனி நாம் எப்படித் தப்பிப்போம்?’ என்று பேசிக்கொள்வார்கள்” என்று சொன்னார்.