சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; கித்தீத்* இசையில்; தாவீதின் சங்கீதம்.
8 எங்கள் எஜமானாகிய யெகோவாவே, உங்கள் பெயர் பூமியெங்கும் எவ்வளவு மகத்தானது!
உங்களுடைய மேன்மையை வானத்துக்கும் மேலாக உயர்த்தியிருக்கிறீர்கள்!*+
2 உங்களுடைய விரோதிகளை அடக்குவதற்காக,
எதிரியையும் பழிவாங்குபவனையும் அடக்குவதற்காக,
பிள்ளைகளின் வாயினாலும் குழந்தைகளின் வாயினாலும்+ உங்கள் பலத்தைக் காட்டியிருக்கிறீர்கள்.
3 உங்கள் கைகளால்* படைக்கப்பட்ட வானத்தைப் பார்க்கும்போது,
நீங்கள் உண்டாக்கிய சந்திரனையும் நட்சத்திரங்களையும் பார்க்கும்போது,+
4 அற்ப மனுஷனை நீங்கள் ஞாபகம் வைப்பதற்கோ
மனிதகுமாரனை அக்கறையோடு கவனித்துக்கொள்வதற்கோ
அவன் யார் என்று நினைக்கத் தோன்றுகிறது.+
5 தேவதூதர்களைவிட* அவனைக் கொஞ்சம் தாழ்ந்தவனாக ஆக்கினீர்கள்.
மகிமையையும் மேன்மையையும் அவனுக்குக் கிரீடமாகச் சூட்டினீர்கள்.
6 உங்கள் கைகளால் படைத்தவற்றின்மேல் அவனுக்கு அதிகாரத்தைக் கொடுத்தீர்கள்.+
எல்லாவற்றையும் அவனுடைய காலடியின் கீழ் கொண்டுவந்தீர்கள்.
7 ஆடுகளையும் மாடுகளையும்
காட்டு மிருகங்களையும்+
8 வானத்துப் பறவைகளையும் கடல் மீன்களையும்
கடலில் நீந்துகிற மற்ற எல்லா உயிரினங்களையும் அவனுடைய கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தீர்கள்.
9 எங்கள் எஜமானாகிய யெகோவாவே, உங்கள் பெயர் பூமியெங்கும் எவ்வளவு மகத்தானது!