எசேக்கியேல்
17 யெகோவா மறுபடியும் என்னிடம், 2 “மனிதகுமாரனே, இஸ்ரவேல் ஜனங்களைப் பற்றி ஒரு உவமையைப் புதிர் போலச் சொல்.+ 3 நீ அவர்களிடம், ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “பெரிய இறக்கைகளும் நீளமான வண்ண வண்ண சிறகுகளும் உள்ள மிகப் பெரிய கழுகு+ லீபனோனுக்குப்+ பறந்து வந்து, தேவதாரு மர உச்சியில் இருக்கிற நுனிக்கிளையைப் பிடித்துக்கொண்டது.+ 4 அதன் தளிரைக் கிள்ளியெடுத்து, வியாபாரிகளின் தேசத்துக்கு* கொண்டுபோய் வியாபாரிகளின் நகரத்தில் நட்டு வைத்தது.+ 5 பின்பு, அந்தத் தேசத்திலிருந்த விதைகளில் ஒன்றை எடுத்து+ வளமான நிலத்தில் விதைத்தது. ஆற்றோர மரத்தை* போல வளருவதற்காக நிறைய தண்ணீர் உள்ள இடத்தில் அதை விதைத்தது. 6 அது துளிர்த்து, அதன் பாத்திக்குள்ளேயே தாழ்வாகப் படர்ந்தது.+ அதன் வேர் நிலத்துக்குக் கீழே சென்றது. அது கிளைகள்விட்டு, ஒரு திராட்சைக் கொடியாக ஆனது.+
7 பின்பு, பெரிய இறக்கைகளும் சிறகுகளும் உள்ள+ இன்னொரு பெரிய கழுகு வந்தது.+ அப்போது அந்தத் திராட்சைக் கொடி அதன் பாத்தியைவிட்டு, அந்தக் கழுகின் பக்கமாக ஆசையோடு வேர்விட ஆரம்பித்தது. அந்தக் கழுகு தனக்குத் தண்ணீர் பாய்ச்சும் என்று நினைத்து அதன் பக்கமாகக் கிளைகள்விட்டுப் படர்ந்தது.+ 8 ஆனால், ஆற்றோரமாக உள்ள நல்ல நிலத்தில்தான் அது ஏற்கெனவே விதைக்கப்பட்டிருந்தது; கிளைகள்விட்டு, கனிகள் தந்து, பெரிய திராட்சைக் கொடியாய் வளருவதற்காக அங்கு விதைக்கப்பட்டிருந்தது”+ என்று சொல்.’
9 நீ அவர்களிடம், ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “அந்தத் திராட்சைக் கொடி செழிப்பாக வளருமா? ஒருவன் அதன் வேர்களைப் பிடுங்கிப்போட மாட்டானா?+ அப்போது அதன் பழங்கள் அழுகி, அதன் துளிர்கள் பட்டுப்போகாதா?+ அந்தக் கொடி அடியோடு காய்ந்துபோகப் போவதால் அதை வேரோடு பிடுங்குவதற்குப் பலமும் தேவையில்லை, நிறைய ஆட்களும் தேவையில்லை. 10 அதைப் பிடுங்கி இன்னொரு இடத்தில் நட்டு வைத்தாலும் அது வளருமா? கிழக்குக் காற்று அடிக்கும்போது அது காய்ந்து கருகிப் போகாதா? துளிர்விட்ட பாத்திக்குள்ளேயே அது கண்டிப்பாகப் பட்டுப்போகும்”’ என்று சொல்” என்றார்.
11 யெகோவா மறுபடியும் என்னிடம் இப்படிச் சொன்னார்: 12 “எனக்கு அடங்காத இந்த ஜனங்களிடம், ‘இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று உங்களுக்குப் புரிகிறதா?’ என்று கேள். பின்பு அவர்களிடம், ‘பாபிலோன் ராஜா எருசலேமுக்கு வந்து அதன் ராஜாவையும் அதிகாரிகளையும் பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனான்.+ 13 அதன்பின், ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஒருவனோடு+ ஒப்பந்தம் செய்து, அவனிடம் உறுதிமொழி வாங்கிக்கொண்டான்.+ அங்கிருந்த முக்கியமான ஆட்களையும் சிறைபிடித்துக்கொண்டு போனான்.+ 14 ஏனென்றால், அந்த ராஜ்யம் மறுபடியும் உயர்ந்துவிடாதபடி அதை அடக்கிவிட வேண்டும் என்றும், தன்னுடைய ஒப்பந்தத்தை மீறினால் அதை அழித்துவிட வேண்டும் என்றும் நினைத்தான்.+ 15 ஆனால் ராஜா* கடைசியில் அவனுடைய* ஒப்பந்தத்தை மீறினான்.+ குதிரைகளையும்+ பெரிய படையையும் தனக்குக் கொடுத்து உதவும்படி கேட்டு எகிப்துக்கு ஆட்களை அனுப்பினான்.+ அவனுடைய திட்டம் கைகூடுமா? இப்படியெல்லாம் செய்கிறவன் தண்டனையிலிருந்து தப்புவானா? ஒப்பந்தத்தை மீறுகிறவன் உயிர்தப்புவானா?’+ என்று கேள்.
16 ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* அவனுக்கு* ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்த ராஜாவின்* தேசமான பாபிலோனில் அவன் சாவான். அந்த ராஜாவுக்குக் கொடுத்த உறுதிமொழியை அவன் மதிக்காமல், ஒப்பந்தத்தை மீறினான்.+ 17 அவனுடைய ஜனங்களைக் கொன்று குவிப்பதற்காக பாபிலோனின் வீரர்கள் முற்றுகைச் சுவர்களையும் மண்மேடுகளையும் எழுப்புவார்கள். அப்போது, பார்வோனுடைய மாபெரும் படைகளால் அவனுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது.+ 18 அவன் அந்த உறுதிமொழியை மதிக்காமல், ஒப்பந்தத்தை மீறினான். கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் இதையெல்லாம் செய்தான். அதனால், தப்பிக்கவே மாட்டான்.”’
19 ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* எனக்குக் கொடுத்த உறுதிமொழியையும்+ என்னோடு செய்த ஒப்பந்தத்தையும் மீறியதற்கான விளைவுகளை அவன் அனுபவிக்கும்படி செய்வேன். 20 அவன்மேல் என் வலையை விரிப்பேன். அவன் அதில் சிக்கிக்கொள்வான்.+ அவனை பாபிலோனுக்குக் கொண்டுபோய் அவனோடு வழக்காடுவேன். ஏனென்றால், அவன் எனக்குத் துரோகம் செய்தான்.+ 21 அவனோடு தப்பித்து ஓடுகிற படைவீரர்கள் எல்லாரும் வெட்டிச் சாய்க்கப்படுவார்கள். மிச்சமிருக்கிறவர்கள் நாலாபக்கமும் சிதறி ஓடுவார்கள்.+ அப்போது, யெகோவாவாகிய நான்தான் இதைச் சொன்னேன் என்று நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.”’+
22 ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “உயரமான தேவதாரு மர உச்சியிலுள்ள+ கிளையின் கொழுந்தைக் கிள்ளி,+ மாபெரும் மலைமேல் நட்டு வைப்பேன்.+ 23 இஸ்ரவேலில் இருக்கிற உயரமான மலைமேல் அதை நட்டு வைப்பேன். அது கிளைகள்விட்டு, கனிகள் தந்து, கம்பீரமான தேவதாரு மரமாக வளரும். அதன்கீழ் எல்லா விதமான பறவைகளும் வாழும். அதனுடைய நிழலில் அவை தங்கியிருக்கும். 24 அப்போது, யெகோவாவாகிய நான்தான் உயரமான மரத்தைத் தாழ்த்தி, தாழ்வான மரத்தை உயர்த்தினேன்+ என்றும், பசுமையான மரத்தைப் பட்டுப்போக வைத்து, பட்டுப்போன மரத்தைப் பசுமையாக்கினேன்+ என்றும் காட்டிலுள்ள மரங்களெல்லாம் தெரிந்துகொள்ளும். இதை யெகோவாவாகிய நானே சொன்னேன், நானே செய்து முடித்தேன்.”’”