எசேக்கியேல்
6 யெகோவா மறுபடியும் என்னிடம், 2 “மனிதகுமாரனே, இஸ்ரவேலின் மலைகளுக்கு நேராக உன்னுடைய முகத்தைத் திருப்பிக்கொண்டு, அவற்றுக்கு எதிராக இப்படித் தீர்க்கதரிசனம் சொல்: 3 ‘இஸ்ரவேலின் மலைகளே, உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்லும் செய்தியைக் கேளுங்கள். உன்னதப் பேரரசராகிய யெகோவா மலைகளுக்கும் குன்றுகளுக்கும் ஓடைகளுக்கும் பள்ளத்தாக்குகளுக்கும் சொல்வது இதுதான்: “இதோ, நான் உங்களுக்கு எதிராக ஒரு வாளை அனுப்புவேன். உங்களுடைய ஆராதனை மேடுகளை அழிப்பேன். 4 உங்கள் பலிபீடங்கள் இடிக்கப்படும், உங்களுடைய தூபபீடங்கள் உடைக்கப்படும்.+ கொல்லப்பட்ட ஜனங்களுடைய பிணங்களை உங்களுடைய அருவருப்பான* சிலைகளுக்குமுன் வீசியெறிவேன்.+ 5 இஸ்ரவேலர்களின் பிணங்களை அவர்களுடைய அருவருப்பான சிலைகளுக்குமுன் தூக்கி வீசுவேன். உங்கள் பலிபீடங்களைச் சுற்றி உங்களுடைய எலும்புகளைச் சிதறடிப்பேன்.+ 6 உங்களுடைய எல்லா நகரங்களும் ஆராதனை மேடுகளும் சின்னாபின்னமாகும்.+ உங்களுடைய பலிபீடங்கள் இடித்து நொறுக்கப்படும். உங்களுடைய அருவருப்பான சிலைகள் நாசமாகும். உங்களுடைய தூபபீடங்கள் உடைக்கப்படும். உங்கள் கைகளால் செய்த எல்லாமே அழிந்துபோகும். 7 ஜனங்கள் உங்கள் நடுவே வெட்டிச் சாய்க்கப்படுவார்கள்.+ அப்போது, நான் யெகோவா என்று நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.+
8 ஆனால், கொஞ்சம் பேரை நான் விட்டுவைப்பேன். சிலர் வாளுக்குத் தப்பி மற்ற தேசங்களுக்குச் சிதறிப்போவார்கள்.+ 9 தப்பிக்கிறவர்கள் தாங்கள் பிடித்துச் செல்லப்பட்ட தேசங்களில் என்னை நினைத்துப் பார்ப்பார்கள்.+ அவர்கள் எனக்குத் துரோகம் செய்தபோதும்* அருவருப்பான சிலைகளை ஆசையோடு வணங்கியபோதும்+ என் நெஞ்சம் எந்தளவுக்கு வேதனைப்பட்டிருக்கும் என்று புரிந்துகொள்வார்கள்.+ தாங்கள் செய்த எல்லா அக்கிரமங்களையும் அருவருப்புகளையும் நினைத்து வெட்கப்படுவார்கள், தங்களையே வெறுப்பார்கள்.+ 10 அப்போது, நான் யெகோவா என்றும், இந்தத் தண்டனைகளைப் பற்றி நான் அவர்களை எச்சரித்தது பொய் அல்ல என்றும் அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.”’+
11 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘உன்னுடைய கைகளை அடித்து, காலைத் தரையில் ஓங்கித் தட்டி, இஸ்ரவேல் ஜனங்கள் செய்த எல்லா அக்கிரமங்களுக்காகவும் அருவருப்புகளுக்காகவும் அழுது புலம்பு. அவர்கள் வாளினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும் சாவார்கள்.+ 12 தூரத்தில் இருக்கிறவர்கள் கொள்ளைநோயினால் சாவார்கள், பக்கத்தில் இருக்கிறவர்கள் வாளால் சாவார்கள். இவற்றிலிருந்து தப்பிக்கிறவர்கள் பஞ்சத்துக்குப் பலியாவார்கள். நான் அவர்கள்மேல் என் கோபத்தைக் கொட்டித் தீர்ப்பேன்.+ 13 கொல்லப்பட்டவர்களுடைய பிணங்கள் அவர்களுடைய அருவருப்பான சிலைகளுக்கு முன்பாகக் கிடக்கும். பலிபீடங்களைச் சுற்றிலும், உயர்ந்த குன்றுகளிலும், மலை உச்சிகளிலும், அடர்த்தியான மரங்களின் கீழும், பெரிய மரங்களின் கீழும், அருவருப்பான சிலைகளைப் பிரியப்படுத்துவதற்காக வாசனையுள்ள பலிகளை+ அவர்கள் செலுத்திய மற்ற எல்லா இடங்களிலும் பிணங்கள் கிடக்கும்.+ அதைப் பார்க்கும்போது நான் யெகோவா என்று தெரிந்துகொள்வார்கள்.+ 14 நான் அவர்களைத் தண்டித்து அவர்களுடைய தேசத்தைப் பாழாக்குவேன். அவர்கள் குடியிருக்கிற எல்லா இடங்களும் திப்லாவுக்குப் பக்கத்தில் இருக்கிற வனாந்தரத்தைவிட வெறுமையாக ஆகிவிடும். அப்போது, நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்’” என்று சொன்னார்.