எரேமியா
34 பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரும், அவனுடைய எல்லா படைவீரர்களும், அவனுடைய ஆட்சியின் கீழ் இருந்த எல்லா தேசங்களும், எல்லா ஜனங்களும் எருசலேமுக்கு எதிராகவும் அதன் நகரங்களுக்கு எதிராகவும் போர் செய்துகொண்டிருந்த சமயத்தில் எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து கிடைத்த செய்தி இதுதான்:+
2 “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவிடம்+ போய் இப்படிச் சொல்: “யெகோவா ஒரு செய்தியைச் சொல்லச் சொல்லியிருக்கிறார். ‘இதோ, நான் இந்த நகரத்தை பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கப்போகிறேன். அவன் அதைத் தீ வைத்துக் கொளுத்திவிடுவான்.+ 3 நீ கண்டிப்பாக அவனுடைய கையில் பிடித்துக் கொடுக்கப்படுவாய். உன்னால் தப்பிக்கவே முடியாது.+ நீ அவனை நேருக்குநேர் பார்ப்பாய். அவனும் உன்னிடம் நேருக்குநேர் பேசுவான். நீ பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படுவாய்’+ என்று அவர் சொல்லியிருக்கிறார். 4 ஆனாலும், யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவே, யெகோவாவின் செய்தியைக் கேள்: ‘உன்னைப் பற்றி யெகோவா இப்படிச் சொல்கிறார்: “நீ வாளால் சாக மாட்டாய். 5 உனக்கு இயற்கையான மரணம்தான் வரும்.+ உனக்கு முன்பு வாழ்ந்த ராஜாக்கள் இறந்தபோது வாசனைப் பொருள்கள் எரிக்கப்பட்டதைப் போலவே உனக்கும் எரிக்கப்படும். அப்போது ஜனங்கள், ‘ஐயோ, எங்கள் ராஜாவே!’ என்று அழுது புலம்புவார்கள். ‘இதை நானே சொல்லியிருக்கிறேன்’ என்று யெகோவா சொல்கிறார்.”’”’”
6 எரேமியா தீர்க்கதரிசி எருசலேமுக்குப் போய் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவிடம் இந்த எல்லா விஷயங்களையும் சொன்னார். 7 அப்போது, பாபிலோன் ராஜாவின் படைவீரர்கள் எருசலேமுக்கு எதிராகவும், யூதாவின் மதில் சூழ்ந்த நகரங்களில் மீதியிருந்த+ இரண்டே நகரங்களான லாகீஸ்+ மற்றும் அசெக்காவுக்கு+ எதிராகவும் போர் செய்துகொண்டிருந்தார்கள்.
8 எருசலேம் ஜனங்கள் எல்லாரும் அவரவர் அடிமைகளை விடுதலை செய்ய வேண்டுமென்று சிதேக்கியா ராஜா ஒப்பந்தம் செய்த பின்பு, எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது.+ 9 எருசலேம் ஜனங்கள் தங்களுடைய எபிரெய அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும், யாருமே யூத ஆண்களையோ பெண்களையோ அடிமைகளாக வைத்திருக்கக் கூடாது என்றும் சிதேக்கியா சொல்லியிருந்தார். 10 எல்லா அதிகாரிகளும் ஜனங்களும் அவருக்குக் கீழ்ப்படிந்தார்கள். ஆண் அடிமைகளையும் பெண் அடிமைகளையும் விடுதலை செய்து அனுப்பிவிட வேண்டும் என்ற ஒப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டு, அந்த அடிமைகளை அனுப்பினார்கள். 11 ஆனால் கொஞ்சக் காலம் கழித்து, அதே ஆண் அடிமைகளையும் பெண் அடிமைகளையும் மறுபடியும் கூட்டிக்கொண்டு வந்து அடிமைப்படுத்தினார்கள். 12 அதனால், யெகோவா எரேமியாவிடம் மறுபடியும் பேசினார். யெகோவா அவரிடம்,
13 “இஸ்ரவேலின் கடவுளான யெகோவா சொல்வது இதுதான்: ‘எகிப்தில் அடிமைகளாக இருந்த+ உங்கள் முன்னோர்களை நான் கூட்டிக்கொண்டு வந்தபோது அவர்களோடு ஒரு ஒப்பந்தம் செய்தேன்.+ அவர்களிடம், 14 “ஒவ்வொரு ஏழாம் வருஷத்தின் முடிவிலும், உங்களிடம் விற்கப்பட்ட உங்கள் சகோதரர்களாகிய எபிரெயர்களை நீங்கள் விடுதலை செய்ய வேண்டும். உங்களிடம் ஆறு வருஷங்களாக வேலை செய்த அடிமைகளை அனுப்பிவிட வேண்டும்”+ என்று சொன்னேன். உங்கள் முன்னோர்கள் நான் சொன்னதைக் காதில் வாங்கவே இல்லை. 15 ஆனால் நீங்கள், சமீபத்தில் மனம் திருந்தி, அடிமைப்பட்டிருந்த சகோதரர்களை விடுதலை செய்து எனக்குப் பிரியமாக நடந்துகொண்டீர்கள். என் பெயர் தாங்கிய ஆலயத்தில் என்முன் ஒப்பந்தம் செய்தீர்கள். 16 உங்களுடைய ஆண் அடிமைகளும் பெண் அடிமைகளும் விரும்பியபடியே அவர்களை அனுப்பி வைத்தீர்கள். ஆனால் மறுபடியும் மனம் மாறி, அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்து அடிமைப்படுத்தி, என் பெயரின் பரிசுத்தத்தைக் கெடுத்தீர்கள்.’+
17 அதனால் யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் சொன்னபடி நீங்கள் உங்களுடைய சகோதரர்களுக்கு விடுதலை கொடுக்கவில்லை.+ அதனால், வாளினாலும் கொள்ளைநோயினாலும் பஞ்சத்தினாலும்+ உங்களைத் தாக்கி இந்த உலகத்திலிருந்தே உங்களுக்கு விடுதலை கொடுக்கப்போகிறேன்.’ யெகோவா சொல்வது இதுதான்: ‘உங்களுக்கு வந்த கோர முடிவைப் பார்த்து உலகமே கதிகலங்கும்.+ 18 கன்றுக்குட்டியை இரண்டாக வெட்டி, அதன் நடுவே நடந்துபோய், என்முன் ஒப்பந்தம் செய்துவிட்டு,+ பின்பு அதை மீறிய 19 யூதாவின் அதிகாரிகள், எருசலேமின் அதிகாரிகள், அரண்மனை அதிகாரிகள், குருமார்கள், ஜனங்கள் ஆகிய எல்லாருக்கும் வரப்போகிற கதி இதுதான்: 20 அவர்களைக் கொல்லத் துடிக்கிற எதிரிகளின் கையில் நான் அவர்களைக் கொடுத்துவிடுவேன். வானத்திலுள்ள பறவைகளும் பூமியிலுள்ள மிருகங்களும் அவர்களுடைய பிணங்களைத் தின்றுதீர்க்கும்.+ 21 அவர்களைக் கொல்லத் துடிக்கிற எதிரிகளின் கையிலும்+ பின்வாங்கிப் போகிற பாபிலோன் ராஜாவின் படைவீரர்களுடைய கையிலும் நான் சிதேக்கியா ராஜாவையும் அவனுடைய அதிகாரிகளையும் கொடுத்துவிடுவேன்.’+
22 யெகோவா சொல்வது இதுதான்: ‘பின்வாங்கிப் போகிறவர்களுக்கு நான் கட்டளை கொடுப்பேன். அவர்கள் மறுபடியும் வந்து போர் செய்து இந்த நகரத்தைக் கைப்பற்றி, அதைத் தீ வைத்துக் கொளுத்துவார்கள்.+ யூதாவின் நகரங்களை நான் பாழாக்குவேன். அங்கே இனி யாரும் குடியிருக்க மாட்டார்கள்’”+ என்று சொன்னார்.