ரோமருக்குக் கடிதம்
11 அப்படியானால் நான் கேட்கிறேன், கடவுள் தன்னுடைய மக்களை ஒதுக்கித்தள்ளிவிட்டாரா?+ இல்லவே இல்லை! நானும் ஓர் இஸ்ரவேலன், ஆபிரகாமின் சந்ததியில் வந்தவன், பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். 2 கடவுள் முதன்முதலில் தேர்ந்தெடுத்த தன்னுடைய மக்களை ஒதுக்கித்தள்ளவில்லை.+ இஸ்ரவேலர்களுக்கு எதிராக அவரிடம் எலியா முறையிட்டதைப் பற்றி வேதவசனம் என்ன சொல்கிறது என்று உங்களுக்குத் தெரியாதா? 3 “யெகோவாவே,* அவர்கள் உங்களுடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றுவிட்டார்கள், உங்களுடைய பலிபீடங்களை இடித்துப் போட்டுவிட்டார்கள். நான் ஒருவன் மட்டும்தான் மீதியாக இருக்கிறேன். இப்போது, என் உயிரையும் பறிக்கப் பார்க்கிறார்கள்” என்று அவர் சொன்னார்.+ 4 இருந்தாலும், அவருக்குக் கடவுள் என்ன சொன்னார்? “பாகால்முன் மண்டிபோடாத 7,000 பேர் இன்னும் எனக்காக இருக்கிறார்கள்” என்று சொன்னார்.+ 5 அதேபோல், அளவற்ற கருணையால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சிலர் இந்தக் காலத்திலும் மீதியாக இருக்கிறார்கள்.+ 6 அதனால், மக்கள் அளவற்ற கருணையால்+ தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்றால், இனியும் செயல்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை+ என்பது தெளிவாகிறது. அப்படிச் செயல்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால், அளவற்ற கருணைக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.
7 அப்படியானால் என்ன சொல்வோம்? இஸ்ரவேலர்கள் எதைப் பெறுவதற்காக ஊக்கமாக முயற்சி செய்கிறார்களோ அதை அவர்கள் பெறவில்லை, ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அதைப் பெற்றார்கள்.+ மற்றவர்களுடைய மனம் மழுங்கிப்போனது.+ 8 ஏனென்றால், “இன்றுவரை கடவுள் அவர்களுக்கு ஆழ்ந்த தூக்கத்தைக் கொடுத்திருக்கிறார்,+ பார்க்க முடியாத கண்களைக் கொடுத்திருக்கிறார், கேட்க முடியாத காதுகளைக் கொடுத்திருக்கிறார்” என்று எழுதப்பட்டிருக்கிறது.+ 9 அதோடு, “அவர்களுடைய விருந்தே* அவர்களுக்குக் கண்ணியாகவும் வலையாகவும் முட்டுக்கட்டையாகவும் தண்டனையாகவும் ஆகட்டும். 10 பார்க்க முடியாதபடி அவர்களுடைய கண்கள் இருண்டு போகட்டும், அவர்களுடைய முதுகு நிமிர முடியாதபடி எப்போதும் குனிந்திருக்கட்டும்” என்று தாவீதும் சொல்லியிருக்கிறார்.+
11 அதனால் நான் கேட்கிறேன், கால் தடுக்கியதால் அவர்கள் ஒரேயடியாக விழுந்துவிட்டார்களா? இல்லவே இல்லை! அவர்கள் தவறு செய்ததால் மீட்புப் பெறும் வாய்ப்பு மற்ற தேசத்து மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. இதனால், அவர்களுக்குப் பொறாமை உண்டாகியிருக்கிறது.+ 12 அவர்கள் தவறு செய்து எண்ணிக்கையில் குறைந்துபோனது உலக மக்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கிறதென்றால்,+ அவர்கள் எண்ணிக்கையில் நிறைவுபெறுவது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதமாக இருக்கும்!
13 மற்ற தேசத்து மக்களாகிய உங்களிடம் இப்போது நான் பேசிக்கொண்டிருக்கிறேன். மற்ற தேசத்து மக்களுக்கு நான் ஓர் அப்போஸ்தலனாக+ இருப்பதால் என் ஊழியத்தை மகிமைப்படுத்துகிறேன்.+ 14 இதன் மூலம் என் சொந்த மக்களுடைய மனதில் பொறாமையை உண்டாக்கி அவர்களில் சிலரையாவது மீட்க முயற்சி செய்கிறேன். 15 அவர்கள் ஒதுக்கித்தள்ளப்பட்டது+ உலக மக்கள் கடவுளோடு சமரசமாவதற்கு வழிசெய்கிறது என்றால், அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவது செத்த நிலையிலிருந்து அவர்கள் உயிர்பெறுவதற்கு நிச்சயம் வழிசெய்யும், இல்லையா? 16 பிசைந்த மாவில் முதலில் ஒரு பிடி மாவை எடுத்து கடவுளுக்கு அர்ப்பணித்து பரிசுத்தமாக்கினால், முழு மாவும் பரிசுத்தமாகிறது. அதேபோல், மரத்தின் வேர் பரிசுத்தமாக இருந்தால் அதன் கிளைகளும் பரிசுத்தமாகின்றன.
17 இருந்தாலும், ஒலிவ மரத்திலுள்ள சில கிளைகள் வெட்டப்பட்ட பின்பு, காட்டு ஒலிவ மரக் கிளைகளாகிய நீங்கள் அவற்றின் இடத்தில் ஒட்ட வைக்கப்பட்டு ஒலிவ மரத்தின் செழுமையான வேரிலிருந்து ஊட்டம் பெறுகிறீர்கள் என்றால், 18 வெட்டப்பட்ட அந்தக் கிளைகளிடம் நீங்கள் ஆணவமாக நடந்துகொள்ளாதீர்கள்.* அப்படி ஆணவமாக நடந்துகொண்டால்,*+ நீங்கள் அந்த வேரைத் தாங்காமல் அந்த வேர்தான் உங்களைத் தாங்குகிறது என்பதை ஞாபகத்தில் வையுங்கள். 19 “நாங்கள் ஒட்ட வைக்கப்படுவதற்காகத்தான் அந்தக் கிளைகள் வெட்டப்பட்டன”+ என்று நீங்கள் சொல்லலாம். 20 உண்மைதான்! விசுவாசம் இல்லாததால்தான் அவை வெட்டப்பட்டன!+ நீங்களோ விசுவாசம் வைத்ததால் நிலைத்திருக்கிறீர்கள்.+ அதனால், தலைக்கனத்தை விட்டுவிட்டு பயத்தோடு நடந்துகொள்ளுங்கள். 21 இயற்கையாக வளர்ந்த கிளைகளையே கடவுள் வெட்டிவிட்டார் என்றால், உங்களையும் வெட்டிவிட மாட்டாரா? 22 அதனால், கடவுளுடைய கருணையையும்+ கண்டிப்பையும் பற்றி யோசித்துப் பாருங்கள். தவறு செய்தவர்களிடம் அவர் கண்டிப்பைக் காட்டுகிறார்,+ உங்களிடமோ கருணையைக் காட்டுகிறார். ஆனால், அவருடைய கருணையைப் பெறுவதற்கு எப்போதும் தகுதியுள்ளவர்களாக இருந்தால் மட்டும்தான் உங்களிடம் கருணை காட்டுவார். இல்லையென்றால் நீங்களும் வெட்டப்படுவீர்கள். 23 அவர்கள் விசுவாசமில்லாமல் நடப்பதை விட்டுவிட்டு விசுவாசம் வைக்க ஆரம்பித்தால் அவர்களும் ஒட்ட வைக்கப்படுவார்கள்;+ அவர்களைக் கடவுளால் மறுபடியும் ஒட்ட வைக்க முடியும். 24 காட்டு ஒலிவ மரத்திலிருந்த நீங்களே வெட்டப்பட்டு, தோட்டத்து ஒலிவ மரத்தில் இயற்கைக்கு மாறாக ஒட்ட வைக்கப்பட்டீர்கள் என்றால், இயற்கையாக வளர்ந்த கிளைகளாகிய அவர்கள் தங்களுடைய மரத்திலேயே ஒட்ட வைக்கப்படுவது எவ்வளவு நிச்சயம்!
25 சகோதரர்களே, உங்களை நீங்களே ஞானிகள் என்று நினைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக இந்தப் பரிசுத்த ரகசியத்தை+ உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன்: இஸ்ரவேலர்களில் ஒரு பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மனம் மழுங்கிவிட்டதால் அவர்களுடைய எண்ணிக்கை மற்ற தேசத்து மக்களால் பூர்த்தி செய்யப்படும். 26 இப்படி இஸ்ரவேலர்கள் எல்லாரும்+ மீட்புப் பெறுவார்கள். “விடுவிக்கிறவர்* சீயோனிலிருந்து வந்து,+ கடவுள்பக்தியற்ற செயல்களை யாக்கோபைவிட்டு நீக்குவார். 27 நான் அவர்களுடைய பாவங்களைப் போக்கும்போது,+ அவர்களோடு இந்த ஒப்பந்தத்தைச் செய்வேன்”+ என்று எழுதப்பட்டிருக்கிறது. 28 உண்மைதான், நல்ல செய்தியை ஏற்றுக்கொள்ளாததால் அவர்கள் உங்களுடைய நன்மைக்காகக் கடவுளுக்கு எதிரிகளாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய முன்னோர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை முன்னிட்டு அவர்களில் சிலரைக் கடவுள் தேர்ந்தெடுத்திருப்பதால் அவருக்கு அன்பானவர்களாக இருக்கிறார்கள்.+ 29 தான் கொடுக்கிற அன்பளிப்புகளையும் அழைப்புகளையும் நினைத்து கடவுள் வருத்தப்பட மாட்டார். 30 ஒருகாலத்தில் நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தாலும்,+ இஸ்ரவேலர்கள் கீழ்ப்படியாமல் போனதால்+ இப்போது உங்களுக்கு இரக்கம் கிடைத்திருக்கிறது.+ 31 இப்போது அவர்கள் கீழ்ப்படியாமல் இருப்பதால் உங்களுக்கு இரக்கம் கிடைத்திருப்பதைப் போல் அவர்களுக்கும் இரக்கம் கிடைக்கும். 32 அவர்கள் எல்லாருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவே+ அவர்கள் எல்லாரையும் கீழ்ப்படியாமை என்ற சிறையில் கடவுள் விட்டுவிட்டார்.+
33 ஆ! கடவுளுடைய ஆசீர்வாதங்கள்* எவ்வளவு மகத்தானவை! அவருடைய ஞானமும் அறிவும் எவ்வளவு ஆழமானவை! அவருடைய நீதித்தீர்ப்புகள் ஆராய முடியாதவை! அவருடைய வழிகள் கண்டறிய முடியாதவை! 34 “யெகோவாவின்* சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு அறிவுரை கொடுப்பவன் யார்?”+ 35 அல்லது, “அவர் கைமாறு செய்யும்படி அவருக்கு முன்னதாகவே எதையாவது கொடுத்தவன் யார்?”+ 36 எல்லாம் அவரிடமிருந்துதான் வந்தன; அவரால்தான் இருக்கின்றன; அவருக்காகத்தான் இருக்கின்றன. அவருக்கே என்றென்றும் புகழ் உண்டாவதாக. ஆமென்.*