ஏசாயா
வந்து உங்கள் வழக்கைச் சொல்லுங்கள்.+
என் தீர்ப்பைக் கேட்க வாருங்கள்.
2 கிழக்கிலிருந்து ஒருவரை வர வைப்பது யார்?+
நீதியை நிறைவேற்ற அவரைக் கூப்பிடுவது யார்?
தேசங்களை அவர் கையில் கொடுப்பது யார்?
ராஜாக்களை அவர் முன்னால் தோற்கடிப்பது யார்?+
அவருடைய வாளுக்கு முன்னால் அவர்களைத் தூசிபோல் ஆக்குவது யார்?
அவருடைய அம்புக்கு முன்னால் அவர்களைப் பறந்துபோகும் பதரைப் போல் ஆக்குவது யார்?
3 எந்தத் தடையும் இல்லாமல் அவர்களை அவர் துரத்திக்கொண்டு போகிறார்.
இதுவரை போகாத வழியில் போகிறார்.
4 இதையெல்லாம் செய்து முடித்தது யார்?
ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு தலைமுறையையும் கூப்பிட்டது யார்?
முதலிலிருந்தே இருப்பவர் யெகோவாவாகிய நான்தான்.+
தலைமுறைகள் வந்து போகலாம்; ஆனால், கடைசி வரைக்கும் மாறாமல் இருக்கப்போகிறவர் நான்தான்.”+
5 தீவுகள் அதைப் பார்த்து கதிகலங்குகின்றன.
பூமியெங்கும் இருக்கிறவர்கள் நடுநடுங்குகிறார்கள்.
எல்லாரும் ஒன்றாகக் கூடி வருகிறார்கள்.
6 அவர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து,
“தைரியமாக இருங்கள்” என்று சொல்கிறார்கள்.
7 கைத்தொழிலாளி தங்க ஆசாரியை+ உற்சாகப்படுத்துகிறான்.
தங்கத்தைச் சுத்தியால் அடித்து தட்டையாக்குகிறவனோ,
அதைப் பட்டறைக்கல் மேல் வைத்து வடிவமைக்கிறவனை உற்சாகப்படுத்துகிறான்.
பற்ற வைக்கிற வேலை முடிந்ததும், “அருமையாக இருக்கிறது” என்று சொல்கிறான்.
பின்பு, சிலை விழாமல் இருப்பதற்காக ஆணிகளை வைத்து அடிக்கிறான்.
நான் தேர்ந்தெடுத்த யாக்கோபே,+
என் நண்பனான ஆபிரகாமின் சந்ததியே,+
9 பூமியின் எல்லைகளிலிருந்து உன்னை நான் கூட்டிக்கொண்டு வந்தேன்.+
ரொம்பத் தூரத்திலிருக்கிற தேசங்களிலிருந்து வர வைத்தேன்.
நான் உன்னிடம், ‘நீ என்னுடைய ஊழியன்.+
நான் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்; நான் உன்னை வெறுத்து ஒதுக்கவில்லை.+
10 பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.+
கவலைப்படாதே, நான் உன் கடவுள்.+
நான் உன்னைப் பலப்படுத்துவேன், உனக்கு உதவி செய்வேன்.+
என்னுடைய நீதியான வலது கையால் உன்னைத் தாங்குவேன்’ என்று சொன்னேன்.
11 உன்மேல் எரிச்சலாக இருக்கிறவர்கள் வெட்கப்பட்டும் கேவலப்பட்டும் போவார்கள்.+
உன்னோடு சண்டை போடுகிறவர்கள் அடியோடு அழிந்துபோவார்கள்.+
12 உன்னை எதிர்க்கிறவர்களை நீ தேடிப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது.
உன்னோடு போர் செய்கிறவர்கள் ஒன்றுமில்லாமல் ஆவார்கள், ஒழிந்துபோவார்கள்.+
13 ஏனென்றால், யெகோவாவாகிய நான் உன்னுடைய வலது கையைப் பிடித்திருக்கிறேன்.
‘பயப்படாதே, நான் உனக்கு உதவி செய்வேன்’+ என்று சொல்கிறேன்.
14 புழுவைப் போல்* இருக்கிற யாக்கோபே,+ பயப்படாதே.
இஸ்ரவேலே, நான் உனக்கு உதவி செய்வேன்” என்று உன்னை விடுவிக்கிறவரும்+ இஸ்ரவேலின் பரிசுத்த கடவுளுமான யெகோவா சொல்கிறார்.
15 “இதோ, போரடிக்கும் புது பலகையாக உன்னை ஆக்கியிருக்கிறேன்.+
கூர்மையான பற்களுள்ள போரடிக்கும் பலகையாக ஆக்கியிருக்கிறேன்.
நீ மலைகளை மிதித்து நொறுக்குவாய்.
குன்றுகளைத் தவிடுபொடியாக ஆக்கிவிடுவாய்.
16 உன்னுடைய எதிரிகளைத் தானியம் போலப் புடைப்பாய்.
அவர்கள் பதர் போலப் பறந்துபோவார்கள்.
புயல்காற்று அவர்களைச் சிதறிப்போக வைக்கும்.
அப்போது நீ யெகோவாவை நினைத்து சந்தோஷப்படுவாய்.+
இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளை நினைத்துப் பெருமைப்படுவாய்.”+
17 “ஏழை எளியவர்கள் தண்ணீருக்காகத் தேடி அலைகிறார்கள், ஆனால் தண்ணீர் கிடைப்பதில்லை.
அவர்களுடைய நாவு தாகத்தால் வறண்டுபோகிறது.+
யெகோவாவாகிய நான் அவர்களுக்கு உதவுவேன்.+
இஸ்ரவேலின் கடவுளான நான் அவர்களைக் கைவிட மாட்டேன்.+
வனாந்தரத்தை நாணற்புல் நிறைந்த குளமாக மாற்றுவேன்.
தண்ணீர் இல்லாத தேசத்தை நீரூற்றுகள் நிறைந்த இடமாக்குவேன்.+
19 பாலைவனத்தில் தேவதாரு மரங்களையும்,
வேல மரங்களையும், குழிநாவல் மரங்களையும், எண்ணெய்* மரங்களையும் நடுவேன்.+
பாலைநிலத்தில் ஆபால் மரங்களையும்,
சாம்பல் மரங்களையும், ஊசியிலை மரங்களையும் நடுவேன்.+
20 அப்போது, யெகோவாவே அதைச் செய்தார் என்றும்,
இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளே அதை உருவாக்கினார் என்றும்,
ஜனங்கள் எல்லாரும் பார்த்துத் தெரிந்துகொள்வார்கள்.
அதைக் கவனித்துப் புரிந்துகொள்வார்கள்.”+
21 “உங்கள் வழக்கைக் கொண்டுவாருங்கள்” என்று யெகோவா சொல்கிறார்.
“உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் எடுத்துச் சொல்லுங்கள்” என்று யாக்கோபின் ராஜா சொல்கிறார்.
22 “சிலைகளே, ஆதாரங்களைக் காட்டுங்கள்; எதிர்காலத்தில் நடக்கப்போவதைச் சொல்லுங்கள்.
ஆரம்பக் காலத்தில் நடந்த விஷயங்களை எங்களுக்குச் சொல்லுங்கள்.
அதைப் பற்றியும் அதனுடைய விளைவுகளைப் பற்றியும் நாங்கள் யோசித்துப் பார்த்துத் தெரிந்துகொள்கிறோம்.
இல்லையென்றால், நடக்கப்போவதை எங்களுக்குச் சொல்லுங்கள்.+
23 எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்லுங்கள்.
அப்போதுதான், நீங்கள் எல்லாரும் தெய்வங்கள் என்று நாங்கள் ஒத்துக்கொள்வோம்.+
நாங்கள் பார்த்து ஆச்சரியப்படுகிறபடி
நல்லதையோ கெட்டதையோ செய்து காட்டுங்கள்.+
உங்களை வணங்குகிறவர்கள் அருவருப்பானவர்கள்.+
25 நான் வடக்கிலிருந்து ஒருவரைப் புறப்பட வைப்பேன், அவர் வருவார்.+
சூரியன் உதிக்கும் திசையிலிருந்து வருகிறவர்+ என் பெயரை மகிமைப்படுத்துவார்.
26 இதையெல்லாம் ஆரம்பத்திலிருந்தே யாராவது சொன்னார்களா?
அப்படிச் சொல்லியிருந்தால், ‘சரியாகச் சொன்னார்கள்’ என்று நாங்கள் ஒத்துக்கொண்டு இருப்போமே!+
ஆனால், எந்தத் தெய்வமும் அதைச் சொல்லவில்லையே!
எதையுமே அறிவிக்கவில்லையே!
நீங்கள் யாருமே வாய் திறக்கவில்லையே!”+
27 “இதோ, நடக்கப்போவதைப் பாருங்கள்!” என்று சீயோனுக்கு முதன்முதலில் சொன்னது நான்தான்.+
எருசலேமுக்கு நல்ல செய்தி சொல்ல நான் ஒருவரை அனுப்புவேன்.+
28 என்னுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கும் அறிவுரை சொல்வதற்கும்
யாராவது இருக்கிறார்களா என்று தேடினேன்.
ஆனால், ஒருவர்கூட இல்லை.
29 ஏனென்றால், அவர்கள் எல்லாருமே வெறும் கற்பனைதான்.
மனுஷனுடைய கைவேலைகள் வீணானவை.
அவனுடைய உலோகச் சிலைகள் வெறும் காற்றுதான், வெறுமையானவைதான்.+