யெகோவாவை அவருடைய வார்த்தையின்மூலம் அறியுங்கள்
“உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பின இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவை எடுத்துக்கொள்வதே நித்தியஜீவன்.”—யோவான் 17:3, NW.
1, 2. (அ) வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறப்பிரகாரம், “அறிதல்,” “அறிவு” என்றால் என்ன? (ஆ) என்ன உதாரணங்கள் இந்த அர்த்தத்தைத் தெளிவுபடுத்துகின்றன?
ஒருவரைப்பற்றி வெறுமனே தெரிந்திருப்பது அல்லது ஏதோவொரு காரியத்தைப்பற்றி மேலோட்டமாக மட்டும் அறிந்திருப்பது, வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள “அறிதல்”, “அறிவு” என்ற வார்த்தைகளின் அர்த்தத்தைப் பூர்த்திசெய்வதில்லை. பைபிளில் இது, “நபர்களுக்கிடையே உள்ள நம்பிக்கையான உறவை” வெளிக்காட்டும் ஓர் அறிவை, “அனுபவத்தால் அறிந்து கொள்வதை” உட்படுத்துகிறது. (தி நியூ இன்டர்நேஷனல் டிக்ஸ்னரி ஆஃப் நியூ டெஸ்டமென்ட் தியாலஜி) இது யெகோவாவை அவருடைய விசேஷித்த செயல்களை மனதில் கொள்வதன்மூலமாக அறிவதை, உதாரணமாக எசேக்கியேல் புத்தகத்தில் பல தடவைகள் கடவுள் ‘அப்பொழுது நான் (யெகோவா, NW) கர்த்தர் என்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள்’ என்று அறிவித்து, தவறுசெய்தவர்களுக்கு எதிராக நியாயத்தீர்ப்புகளைச் செய்த செயல்களைப்பற்றி அறிவதை உட்படுத்தும்.—எசேக்கியேல் 38:23.
2 “அறிதல்,” “அறிவு” ஆகியவற்றைப் பயன்படுத்தக்கூடிய வித்தியாசமான வழிகள் ஒருசில உதாரணங்கள்மூலம் தெளிவாக்கப்படலாம். அவருடைய நாமத்தின்பேரில் செயல்பட்டதாக உரிமைப்பாராட்டினவர்களிடம் இயேசு, “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை” என்று சொன்னார்; அவர்களோடு இவருக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதையே இவர் அர்த்தப்படுத்தினார். (மத்தேயு 7:23) கிறிஸ்து ‘பாவம் அறியாதவர்’ என்று 2 கொரிந்தியர் 5:21 சொல்கிறது. இது அவருக்குப் பாவத்தைப்பற்றித் தெரியவேத்தெரியாது என்று அர்த்தப்படுத்துவதில்லை, ஆனால், மாறாக, அதில் அவர் தனிப்பட்ட ஈடுபாடு கொண்டில்லை என்பதைக் குறிக்கிறது. இதைப்போலவே இயேசு: “உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பின இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவை எடுத்துக்கொள்வதே நித்தியஜீவன்” என்று சொன்னபோது அது கடவுளையும் கிறிஸ்துவையும்பற்றி வெறுமனே சிறிது அறிவதைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்தியது.—மத்தேயு 7:21-ஐ ஒப்பிட்டுப்பாருங்கள்.
3. உண்மையான கடவுளுக்குரிய ஓர் அடையாளச் சின்னத்தை யெகோவா காண்பிக்கிறார் என்பதை எது நிரூபிக்கிறது?
3 யெகோவாவின் குணங்களில் அநேகம், அவருடைய வார்த்தையாகிய பைபிளிலிருந்து அறியப்படலாம். இவற்றில் ஒன்று துல்லியமாகத் தீர்க்கதரிசனம் சொல்லும் திறமை. இந்தத் திறமை, உண்மையான கடவுளின் அடையாளச் சின்னமாகக் குறிக்கப்படுகிறது: “அவர்கள் அவைகளைக் கொண்டுவந்து, சம்பவிக்கப்போகிறவைகளை நமக்குத் தெரிவிக்கட்டும்; அவைகளில் முந்தி சம்பவிப்பவைகள் இன்னவைகளென்று சொல்லி, நாம் நம்முடைய மனதை அவைகளின்மேல் வைக்கும்படிக்கும், பிந்தி சம்பவிப்பவைகளையும் நாம் அறியும்படிக்கும் நமக்குத் தெரிவிக்கட்டும்; வருங்காரியங்களை நமக்கு அறிவிக்கட்டும். பின்வரும் காரியங்களை எங்களுக்குத் தெரிவியுங்கள்; அப்பொழுது நீங்கள் தேவர்கள் என்று அறிவோம்.” (ஏசாயா 41:22, 23) யெகோவா தம்முடைய வார்த்தையிலே முதன்முதலாகப் பூமியையும் அதன்மேல் உயிரையும் படைப்பதைப்பற்றிச் சொல்கிறார். நடக்கவிருந்தக் காரியங்களை யெகோவா அதிகக் காலத்திற்கும் முன்பே சொன்னார், அவை நிறைவேறவும் செய்தன. மேலும் இப்போதும், அவர் ‘வருங்காரியங்களையும் நாம் அறியும்படிச் செய்கிறார்’ விசேஷமாக இந்தக் “கடைசிநாட்களில்” நடக்கப்போகும் காரியங்களைப்பற்றி அறிவிக்கிறார்.—2 தீமோத்தேயு 3:1-5, 13; ஆதியாகமம் 1:1-30; ஏசாயா 53:1-12; தானியேல் 8:3-12, 20-25; மத்தேயு 24:3-21; வெளிப்படுத்துதல் 6:1-8; 11:18.
4. யெகோவா தம்முடைய பண்பாகிய வல்லமையை எவ்வாறு பயன்படுத்தியிருக்கிறார், இன்னும் எவ்வாறு அவர் அதைப் பயன்படுத்துவார்?
4 யெகோவாவின் மற்றொரு பண்பு, வல்லமை ஆகும். இது வானங்களில் நட்சத்திரங்கள், மகா கூட்டிணைப்பு உலைகளாகச் செயல்பட்டு வெளிச்சத்தையும் வெப்பத்தையும் வெளியிடுவதிலிருந்து தெளிவாய்க் காணப்படுகிறது. கலகத்தனமான மனிதர்களோ தேவதூதர்களோ யெகோவாவின் பேரரசுரிமையைச் சவாலிடும்போது, அவர் தம்முடைய நல்ல பெயருக்காகவும் நீதியான தராதரங்களுக்காகவும் தம்முடைய வல்லமையை “ஆண்மைமிக்க போர்வீரனைப்” போல் பயன்படுத்துகிறார். நோவாவினுடைய நாளின் ஜலப்பிரளயத்தில், சோதோம் கொமோரா அழிக்கப்பட்டதில், செங்கடல் வழியாக இஸ்ரவேலர் பாதுகாக்கப்படுதல் போன்றவற்றில் காண்பித்ததுபோல, இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், தம் வல்லமையை அழிவுண்டாக்கும் விதமாக வெளிப்படுத்த தயங்கமாட்டார். (யாத்திராகமம் 15:3-7; ஆதியாகமம் 7:11, 12, 24; 19:24, 25) கடவுள் அவருடைய வல்லமையைப் பயன்படுத்தி சீக்கிரமாய்ச் “சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்.”—ரோமர் 16:20.
5. அவருடைய வல்லமையோடு, என்ன பண்பையும் யெகோவா உடையவராயிருக்கிறார்?
5 எனினும், இந்த வரம்பற்ற வல்லமையோடுகூட அங்கு மனத்தாழ்மை இருக்கிறது. சங்கீதம் 18:35, 36 சொல்கிறது: “உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும். . . . நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.” கடவுளுடைய மனத்தாழ்மை அவரை ‘வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படித் தாழ்த்துகிறது. அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.’—சங்கீதம் 113:6, 7.
6. யெகோவாவின் என்ன குணம் உயிர்க்காப்பதாக இருக்கிறது?
6 மனிதனோடு செயல்தொடர்புகொள்வதில் யெகோவாவின் இரக்கம் உயிர்க்காப்பதாய் இருக்கிறது. மனாசே கொடூரமான அட்டூழியங்களைச் செய்திருந்தபோதிலும் என்னே ஓர் இரக்கவுணர்வு அவருக்குக் காண்பிக்கப்பட்டது! யெகோவா சொல்கிறார்: “பின்னும் சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லும்போது, அவன் தன் பாவத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியுஞ்செய்[தால்], அவன் செய்த அவனுடைய எல்லாப் பாவங்களும் அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை; அவன் நியாயமும் நீதியும் செய்தான், பிழைக்கவே பிழைப்பான்.” (எசேக்கியேல் 33:14, 16; 2 நாளாகமம் 33:1-6, 10-13) இயேசு 77 தடவைகள், ஏன் ஒரேநாளில் ஏழுதரமும்கூட மன்னிக்கும்படி உற்சாகப்படுத்தியபோது யெகோவாவைப் பிரதிபலித்தாரே!—சங்கீதம் 103:8-14; மத்தேயு 18:21, 22; லூக்கா 17:4.
உணர்ச்சிகள் உடைய கடவுள்
7. கிரேக்க கடவுட்களிலிருந்து, யெகோவா எப்படி வித்தியாசமாக இருக்கிறார், நமக்கு என்ன மதிப்புமிக்க சிலாக்கியம் காத்திருக்கிறது?
7 கிரேக்க தத்துவ ஞானிகள், எபிக்கூரியர்கள் போன்றவர்கள், கடவுட்கள் இருக்கிறார்கள் என்று நம்பினர், ஆனால் மனிதன்மேல் அக்கறை செலுத்த முடியாதபடி, அல்லது மனிதனுடைய உணர்ச்சிகளினால் பாதிக்கப்படாமல் அதிகத் தொலைவில் இருப்பது போலத் தங்களைக் கருதினர். யெகோவாவுக்கும் அவருடைய உண்மையுள்ள சாட்சிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது! “கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறார்.” (சங்கீதம் 149:4) ஜலப்பிரளயத்திற்கு முன்னிருந்த பொல்லாதவர்கள் அவரை மனஸ்தாபப்படுத்தி, ‘அவருடைய இருதயத்தை விசனப்படுத்தினர்.’ இஸ்ரவேலர் தங்களுடைய உண்மையற்றப் போக்கினால் யெகோவாவிற்கு மனத்துன்பத்தையும் வருத்தத்தையும் கொடுத்தனர். கிறிஸ்தவர்கள் தங்களுடைய கீழ்ப்படியாமையால் யெகோவாவின் ஆவியை வருத்தப்படுத்தமுடியும்; ஆனால், தங்களுடைய உண்மைத்தன்மையினால் அவருக்குச் சந்தோஷத்தையும் தர முடியும். பூமியிலுள்ள அற்ப மனுஷன் சர்வலோகச் சிருஷ்டிகரை வருத்தப்படுத்தவோ சந்தோஷப்படுத்தவோ முடியுமென்பதை நினைத்துப்பார்ப்பது எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது! அவர் நமக்குச் செய்கிற எல்லாக் காரியங்களைப் பார்த்தால், நாம் அவருக்கு மகிழ்ச்சியைத் தரும் அருமையான சிலாக்கியத்தைப் பெற்றிருப்பது எவ்வளவு ஆச்சரியம்!—ஆதியாகமம் 6:6; சங்கீதம் 78:40, 41; நீதிமொழிகள் 27:11; ஏசாயா 63:10; எபேசியர் 4:30.
8. யெகோவாவிடம் ஆபிரகாம் தன்னுடைய பேச்சுச் சுயாதீனத்தை எப்படிப் பயன்படுத்தினார்?
8 யெகோவாவின் அன்பு நாம் அதிக ‘தைரியத்தோடு பேச’ அனுமதிக்கிறது என்று கடவுளுடைய வார்த்தைக் காண்பிக்கிறது. (1 யோவான் 4:17, NW) யெகோவா சோதோமை அழிக்க வந்தபோது ஆபிரகாமின் விஷயத்தில் என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள். ஆபிரகாம் யெகோவாவிடம் சொன்னார்: “துன்மார்க்கனோடே நீதிமானையும் உண்மையில் நீர் அழிக்கப்போகிறீரோ? நகருக்குள் ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருக்கின்றனர் என்று வைத்துக்கொள்வோம். அப்போது நீர், அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள்நிமித்தம் அவர்களை மன்னித்துவிட்டுவிடாமல், அவர்களை அழிப்பீரோ? . . . அது உமக்கு உகந்ததன்று. பூமியனைத்திற்கும் நீதிபதியானவர் நீதிசெய்யாதிருப்பாரோ?” கடவுளிடம் சொல்கிற வார்த்தைகளா இவை! எனினும் சோதோமில் ஐம்பது நீதிமான்கள் இருந்தால் அதை அழிக்காமல் விடுவதாக ஒத்துக்கொண்டார். ஆபிரகாமோ தொடர்ந்துபேசி, எண்ணிக்கையை 50-லிருந்து 20-வரை குறைத்துவிட்டார். அவர், தான் ஒருவேளை அதிகமாக நச்சரிக்கிறோமோ என்று பயமடைய ஆரம்பித்தார். அவர் சொன்னார்: “யெகோவாவே, தயவுசெய்து கோபத்தினால் ஆவேசப்படாதிருப்பீராக, இந்த முறை மட்டும் என்னை பேச அனுமதியும்: ஒருவேளை பத்துபேர் அங்கே காணப்பட்டால்.” மறுபடியும் யெகோவா சலுகையளித்துச் சொன்னார்: “பத்துபேரின் நிமித்தம் அதை அழிப்பதில்லை.”—ஆதியாகமம் 18:23-33, NW.
9. ஆபிரகாமை யெகோவா ஏன் அவ்வாறு பேச அனுமதித்தார், இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
9 யெகோவா ஆபிரகாமை ஏன் இப்படிப் பேச்சுச் சுயாதீனத்தோடு பேசும்படி அனுமதித்தார்? ஒரு காரணம், யெகோவா ஆபிரகாமின் கடும்வேதனைமிக்க உணர்வுகளை அறிந்திருந்தார். ஆபிரகாமின் உடன்பிறந்தார் மகன் லோத்து சோதோமில் வாழ்ந்தார், இவருடைய பாதுகாப்பைப்பற்றி அக்கறையுள்ளவராக ஆபிரகாம் இருந்தார். மேலுமாக, ஆபிரகாம் கடவுளுடைய நண்பனாக இருந்தார். (யாக்கோபு 2:23) யாரேனும், விசேஷமாக அவர் ஏதோவொரு வகையான உணர்ச்சி அழுத்தத்தில் இருக்கும் நண்பனாயிருந்து, நம்மோடு கடுப்புடன் பேசினால், அவருடைய வார்த்தைக்குப் பின்னால் இருக்கும் ஒருவகை உணர்ச்சி அழுத்தங்களை நாம் புரிந்துகொண்டு, அவரைத் தணியச் செய்யும் சூழ்நிலைக்கு வழிவகுக்கிறோமா? யெகோவா, ஆபிரகாமோடு இருந்ததுபோல, நாம் பேச்சுச் சுயாதீனத்தைப் பயன்படுத்துவதை அவர் புரிந்துகொள்வார் என்று காண்பது ஆறுதலாக இருக்கிறதல்லவா?
10. ஜெபத்தில் பேச்சுச் சுயாதீனம் எவ்வாறு நமக்கு உதவிசெய்கிறது?
10 நாம் அதிக மனம்நொந்து, உணர்ச்சிப்பூர்வமாக குழப்பமடைந்தநிலையில் இருக்கும்போது; முக்கியமாக, நம் ‘ஜெபத்தைக் கேட்கிறவராக’ நாம் அவரைத் தேடும்போது இந்தப் பேச்சுச் சுயாதீனம் நம் ஆத்துமாவை அவரிடம் மனந்திறந்துபேசும்படிச் செய்வதற்கு ஆர்வத்துடன் நாடுகிறோமா. (சங்கீதம் 51:17; 65:2, 3) அப்படிப்பட்ட சமயங்களில் வார்த்தைகள் வெளிவராமலிருந்தாலும், “வார்த்தையில் சொல்லமுடியாத பெருமூச்சுகளோடு நமக்காக ஆவிதானே பரிந்துபேசுகிறது,” யெகோவாவும் செவிசாய்க்கிறார். அவர் நம் எண்ணங்களை அறிய முடியும்: “என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர். என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.” ஆனாலும், நாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டும், தேடிக்கொண்டும், தட்டிக்கொண்டும் இருக்கவேண்டும்.—ரோமர் 8:26, NW; சங்கீதம் 139:2, 4; மத்தேயு 7:7, 8.
11. யெகோவா நம்மைப்பற்றி உண்மையிலேயே அக்கறைகொள்கிறார் என்பது எவ்வாறு காண்பிக்கப்படுகிறது?
11 யெகோவா அக்கறைகொள்கிறார். அவர் படைத்த உயிர்வகைகளைப் போஷித்துக் காக்கிறார். “எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு ஆகாரங்கொடுக்கிறீர். நீர் உமது கைகளைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.” (சங்கீதம் 145:15, 16) புதர்களில் வாழும் பறவைகளுக்கு அவர் எப்படி ஆகாரம்கொடுக்கிறார் என்பதைப் பார்க்கும்படி நாம் அழைக்கப்படுகிறோம். வயல்வெளி மலர்களைப் பாருங்கள், அவர் எவ்வளவு அழகாக அவற்றிற்கு உடுத்துவிக்கிறார். அவற்றிற்கு செய்வதைப்போலவும், அதைவிட அதிகமாகவும் கடவுள் செய்வார் என்றும் இயேசு தொடர்ந்து சொன்னார். ஆகவே, நாம் ஏன் கவலைப்படவேண்டும்? (உபாகமம் 32:10; மத்தேயு 6:26-32; 10:29-31) நீங்கள் “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” என்று 1 பேதுரு 5:7 சொல்கிறது.
‘அவருடைய தன்மையின் சொரூபம்’
12, 13. யெகோவாவை, அவருடைய படைப்பின்மூலமும், பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள அவருடைய செயல்கள்மூலமும் காண்பதோடு, வேறெந்தெந்த வகையிலும் நாம் அவரைக் காணவும் அவருக்குச் செவிகொடுக்கவும் முடியும்?
12 யெகோவா தேவனை நாம் அவருடைய படைப்பின்மூலம் காண முடியும்; பைபிளிலுள்ள அவருடைய செயல்களைப் படிப்பதன்மூலம் நாம் அவரைக் காண முடியும்; இயேசு கிறிஸ்துவைப்பற்றிப் பதிவுசெய்யப்பட்டுள்ள வார்த்தைகள், செயல்கள் மூலமுங்கூட நாம் அவரைக் காண முடியும். யோவான் 12:45-ல் இயேசுவே அவ்விதமாகச் சொல்கிறார்: “என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்.” மறுபடியும், யோவான் 14:9-ல் (NW): “என்னைக் கண்டவன் பிதாவையும் கண்டான்.” கொலோசெயர் 1:15, ‘[இயேசு] அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம்,’ என்று சொல்கிறது. எபிரெயர் 1:3 அறிவிக்கிறது: ‘[இயேசு] அவருடைய [கடவுளுடைய] மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருக்கிறார்.’
13 யெகோவா தம்முடைய குமாரனை, மீட்கும் பொருளை அளிப்பதற்கு மட்டுமல்ல, வார்த்தையிலும் செயலிலும் பின்பற்றப்படவேண்டிய முன்மாதிரியாயும் இருக்கும்படி அனுப்பினார். இயேசு கடவுளுடைய வார்த்தைகளைப் பேசினார். அவர் யோவான் 12:50-ல் சொன்னார்: “நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன்.” தான் இஷ்டப்பட்டக் காரியங்களை அவர் செய்யவில்லை, ஆனால் கடவுள் என்ன செய்யச் சொன்னாரோ அவற்றைச் செய்தார். யோவான் 5:30-ல்: “நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை,” என்று அவர் சொன்னார்.—யோவான் 6:38.
14. (அ) என்ன காட்சிகள் இயேசுவை இரக்கமடையும்படித் தூண்டியது? (ஆ) இயேசுவின் பேச்சு முறை, அவர் சொல்வதைக் கேட்க மக்களைத் திரண்டுவரச் செய்தது ஏன்?
14 குஷ்டரோகிகள், ஊனமுற்றோர், செவிடர்கள், குருடர்கள், பிசாசு பிடித்தவர்கள், தங்களுக்குரியவர்கள் மரித்ததினால் அழுகிறவர்கள் ஆகியோராய் இருந்த மக்களை இயேசு சந்தித்தார். இரக்கத்தினால் உந்துவிக்கப்பட்டு, நோய்வாய்ப்பட்டவர்களைச் சுகப்படுத்தினார், இறந்தவர்களை உயிர்த்தெழுப்பினார். மக்கள் கூட்டம் ஆவிக்குரிய வகையில் கொள்ளையடிக்கப்பட்டு, முரட்டுத்தனமாக நடத்தப்படுபவர்கள்போல் இருப்பதாக அவர் கண்டார், அவர் அவர்களுக்கு அநேகக் காரியங்களைக் கற்பிக்க ஆரம்பித்தார். அவர் சரியான வார்த்தைகளை மட்டுமல்ல, மற்றவர்களின் இருதயத்திற்குள் நேரடியாக சென்றெட்டிய அவருடைய இருதயத்திலிருந்து வந்தக் கவர்ந்திழுக்கும் வார்த்தைகளாலும் போதித்தார், இது அவர்களை அவரிடமாகக் கவர்ந்திழுக்கவும், முன்கூட்டியே ஆலயத்திற்கு வரவும், அவரையே தொற்றிக்கொண்டிருக்கவும், மகிழ்ச்சியாக அவர் சொல்வதற்கு செவிசாய்க்கும்படியும் செய்தது. ‘இவரைப்போல எந்த மனுஷனும் ஒருக்காலும் பேசினதில்லை’ என்றும் உறுதியாகக் கூறி, அவர் சொல்வதைக் கேட்க கூட்டங்கூட்டமாக வந்தனர். அவருடைய போதனையினால் திகைத்துப்போனார்கள். (யோவான் 7:46; மத்தேயு 7:28, 29; மாற்கு 11:18; 12:37; லூக்கா 4:22; 19:48; 21:38) மேலும் அவருடைய எதிரிகள், அவரைக் கேள்விகளினால் மடக்க நினைத்தப்போது, நிலைமையை முற்றிலுமாக மாற்றி, அவர்களைப் பேசமுடியாமலிருக்கும்படிச் செய்தார்.—மத்தேயு 22:41-46; மாற்கு 12:34; லூக்கா 20:40.
15. இயேசுவின் பிரசங்கத்தின் மையப் பொருளாயிருந்தது என்ன? இதைப் பரப்புவதில் எவ்வளவு தூரத்திற்கு மற்றவர்களை அவர் உட்படுத்தினார்?
15 “பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்று அவர் அறிவித்து கேட்பவர்கள் ‘முதலாவது அந்த ராஜ்யத்தைத் தேடிக்கொண்டே’ இருக்கும்படி உற்சாகப்படுத்தினார். “பூமியின் கடைசிபரியந்தமும்,” கிறிஸ்துவின் சாட்சிகளாக இருக்கும்படி, “பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்று பிரசங்கித்து, ‘சகல ஜனங்களையும் சீஷராக்கும்படி’ மற்றவர்களை அவர் அனுப்பினார். இன்று கிட்டத்தட்ட 45 லட்சம் யெகோவாவின் சாட்சிகள் அவருடைய அடிச்சுவடுகளில் நடந்து, இவற்றைச் செய்துவருகின்றனர்.—மத்தேயு 4:17; 6:33; 10:7; 28:19; அப்போஸ்தலர் 1:8.
16. யெகோவாவின் பண்பாகிய அன்பு எவ்வாறு ஒரு கடும்சோதனைக்கு உட்படுத்தப்பட்டது, அது மனிதகுலத்துக்கு எதைச் சாதித்தது?
16 “தேவன் அன்பாகவே இருக்கிறார்,” என்று 1 யோவான் 4:8-ல் நாம் சொல்லப்படுகிறோம். இந்த அவருடைய பிரதான பண்பு, அவருடைய ஒரேபேறான குமாரனை பூமியில் மரிக்கும்படி அனுப்பியபோது, அதிக வேதனைக்குரிய சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. கடும்சோதனையின்கீழ் யெகோவாவிற்கு உத்தமத்தன்மையை உறுதியாகக் காத்துக்கொள்ளும் மக்களை பூமியில் அவர் கொண்டிருக்க முடியாது என்ற சாத்தானுடைய சவாலை இயேசு பொய்யென்று நிரூபித்தாலும், இந்தப் பிரியமுள்ள மகன் பட்ட மரண வேதனையும், இவருடைய பரலோகத் தகப்பனிடம் இவர் ஏறெடுத்த வேண்டுதல்களும் யெகோவாவிற்கு வேதனையையும் புண்படுத்துதலையும் தந்தன. இயேசுவினுடைய பலியின் மதிப்பையும் நாம் போற்றவேண்டும், ஏனென்றால் கடவுள் அவரை நமக்காக மரிக்கும்படி இங்கு அனுப்பினார். (யோவான் 3:16) இது ஓர் எளிதான, உடனே நிகழ்ந்த சாவல்ல. கடவுளும் இயேசுவும் செய்த தியாகத்தின் மதிப்பைப் போற்றி, அதன்மூலமாக நமக்காக அவர்கள் செய்த பெரும் தியாகத்தை உணர்வதற்கு, நாம் நடைபெற்ற காரியங்களின் பைபிள் பதிவை ஆராய்ந்துபார்க்கலாம்.
17-19. இயேசு தமக்கு முன்பிருந்த கடும்துன்பத்தை எவ்வாறு விளக்கினார்?
17 இயேசு, தம்முடைய அப்போஸ்தலர்களிடம் என்ன நடக்கப்போகிறது என்பதைக் குறைந்தது நான்கு தடவைகளாவது விளக்கினார். இது நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான், அவர் சொன்னார்: “இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறத்தேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள். அவர்கள் அவரைப் பரியாசம்பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர் மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்.”—மாற்கு 10:33, 34.
18 ரோம சாட்டையடிச் சித்திரவதை முறையின் கொடூரங்களை அறிந்தவராக, இயேசு தமக்கு முன் இருந்த காரியத்தைக்குறித்து நெருக்கப்பட்டார். சவுக்கடி கொடுக்க பயன்படுத்தப்படும் தோல் வார் சாட்டை, உலோகத் துண்டுகளையும் ஆட்டு எலும்புகளையும் அதனுள் பதிக்கப்பெற்றிருந்தன; ஆகவே அடிக்கப்படும்போது, முதுகும் கால்களும் இரத்தம் கசியும் முட்பிளவுகளாக மாறும். சீக்கிரத்தில் வரப்போகும் கடும்சோதனை அவருக்கு உண்டாக்கும் உணர்ச்சி சம்பந்தமான அழுத்தத்தை மாதங்களுக்கு முன்பே இயேசு, லூக்கா 12:50-ல் நாம் வாசிப்பதுபோல் குறிப்பிட்டார்: “ஆகிலும், நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.”
19 காலம் நெருங்கி வரவர அழுத்த உணர்வும் அதிகரித்தது. இதைப்பற்றி அவர், அவருடைய பரலோக தகப்பனிடம் பேசினார்: “இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.” (யோவான் 12:27) தம்முடைய ஒரேபேறான குமாரனிடமிருந்து இந்த வேண்டுதலைப் பெறுவது, யெகோவாவை எவ்வளவு மனம் வருந்தச் செய்திருக்கவேண்டும்! கெத்செமனேயில், அவருடைய மரணத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்புதானே அவர் கடுந்துயரடைந்து, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரிடம் சொன்னார்: “என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது.” இதற்குப்பின் சில நிமிடங்கள் கழித்து, இதன் சம்பந்தமாகத் தம்முடைய இறுதி ஜெபத்தை யெகோவாவிடம் சப்தமாக ஏறெடுத்தார்: “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது . . . அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.” (மத்தேயு 26:38; லூக்கா 22:42, 44) இது மருத்துவத்தில் ஹீமெட்டெட்ரோசஸ் என்று அழைக்கப்படுவதாக இருக்கலாம். இது அரிதாக வருகிறது, ஆனால் மிக உச்சகரமான உணர்ச்சி அழுத்தத்தில் வரக்கூடும்.
20. இயேசு தம்முடைய கடும்துன்பத்தை மேற்கொள்ள எது உதவிசெய்தது?
20 கெத்செமனேயில் இந்த நேரத்தில் நடந்ததைப்பற்றி, எபிரெயர் 5:7 சொல்கிறது: ‘அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் சாதகமாகக் கேட்கப்பட்டார்.’ ‘மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரினால்’ அவர் மரணம் அடையாமல் காப்பாற்றப்படாதபோது, அவருடைய ஜெபம் ‘சாதகமாகக் கேட்கப்பட்டது’ என்பது எந்த அர்த்தத்தில்? லூக்கா 23:43 பதிலளிக்கிறது: “அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.” கடும்துன்பத்தைச் சகிக்கும்படி இயேசுவைப் பலப்படுத்துவதற்கு, கடவுள் ஒரு தூதனை அனுப்பியபோது அந்த ஜெபம் பதிலளிக்கப்பட்டது.
21. (அ) கடும்துன்பத்தை வெற்றியோடு மேற்கொண்டார் என்பதை எது காண்பிக்கிறது? (ஆ) நம்முடைய சோதனைகள் கடுமையாகும்போது, நாம் எவ்வாறு பதில்கொடுக்க முடிந்தவர்களாக இருக்க விரும்புவோம்?
21 நடந்ததிலிருந்து இது தெளிவாயிருக்கிறது. அவருடைய உள் போராட்டம் முடிந்தபோது, இயேசு எழுந்து, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரிடம் திரும்பிப்போய் “எழுந்திருங்கள், போவோம்,” என்று சொன்னார். (மாற்கு 14:42) உண்மையில் அவர் இவ்வாறு சொல்லிக்கொண்டிருந்தார், ‘நான் ஒரு முத்தத்தோடு காட்டிக்கொடுக்கப்பட்டு, ஒரு கும்பலினால் கைதுசெய்யப்பட்டு, சட்டவிரோதமாக நடத்தப்பட்டு, தவறாகக் குற்றம்சாட்டப்பட்டுப்போக அனுமதியுங்கள். நான் இகழப்பட்டு, துப்பப்பட்டு, வாரினால் அடிக்கப்பட்டு, வேதனையின் கழுமரத்தில் அறையப்பட்டுப்போக அனுமதியுங்கள்.’ பயங்கரவேதனையில், இறுதிவரை பொறுத்துக்கொண்டவராக, ஆறு மணி நேரங்கள் அவர் அங்குத் தொங்க வைக்கப்பட்டார். அவர் மரிக்கும்போது, வெற்றியுணர்வோடு சப்தமாகக் கூக்குரலிட்டார்: “அது நிறைவேற்றப்பட்டது!” (யோவான் 19:30, NW) அவர் உறுதியாக இருந்து, யெகோவாவின் பேரரசுரிமையை மேம்படுத்திக் காட்டுவதில் தம்முடைய உத்தமத்தன்மையை நிரூபித்தார். யெகோவா என்னென்ன செய்யவேண்டும் என்று அவரை அனுப்பினாரோ, அவையெல்லாம் அவர் நிறைவேற்றினார். நாம் சாகும்போதோ, அர்மகெதோன் வரும்போதோ, யெகோவாவிடமிருந்து பெறப்பட்ட நம்முடைய பொறுப்பைக்குறித்து, “அது நிறைவேற்றப்பட்டது,” என்று நாம் சொல்ல முடியுமா?
22. யெகோவாவைப்பற்றிய அறிவு பரவியிருக்கும் அளவை எது காண்பிக்கிறது?
22 எந்தச் சூழ்நிலையிலும், யெகோவாவினுடைய விரைவில் வரும் நியமிக்கப்பட்ட நேரத்தில், “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருப்பதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்,” என்று நாம் நிச்சயமாயிருக்கலாம்.—ஏசாயா 11:9.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ அறிவது, அறிவைப்பெற்றிருப்பது என்றால் என்ன?
◻ யெகோவாவின் இரக்கமும் மன்னிக்கும் தன்மையும் அவருடைய வார்த்தையில் நமக்கு எவ்வாறு எடுத்துக்காட்டப்படுகிறது?
◻ யெகோவாவிடம் ஆபிரகாம் எப்படிப் பேச்சுச் சுயாதீனத்தைப் பயன்படுத்திக்கொண்டார்?
◻ நாம் ஏன் இயேசுவைப் பார்த்து, அவருக்குள் யெகோவாவின் குணங்களை காண முடிகிறது?