எசேக்கியேல்
3 பின்பு அவர் என்னிடம், “மனிதகுமாரனே, உன் முன்னால் இருக்கிற இந்தச் சுருளைச் சாப்பிட்டுவிட்டு, இஸ்ரவேல் ஜனங்களிடம் போய்ப் பேசு”+ என்று சொன்னார்.
2 அதனால் நான் என் வாயைத் திறந்தேன். அப்போது, அவர் அந்தச் சுருளைச் சாப்பிடக் கொடுத்தார். 3 பின்பு என்னிடம், “மனிதகுமாரனே, நான் கொடுக்கிற இந்தச் சுருளைச் சாப்பிட்டு உன் வயிற்றை நிரப்பு” என்றார். நானும் அதைச் சாப்பிட ஆரம்பித்தேன். அது என் வாய்க்குத் தேன்போல் இனிப்பாக இருந்தது.+
4 அப்போது அவர் என்னிடம், “மனிதகுமாரனே, இஸ்ரவேல் ஜனங்களிடம் போய் என்னுடைய வார்த்தைகளைச் சொல். 5 புரியாத அல்லது தெரியாத பாஷையைப் பேசுகிற ஜனங்களிடம் நான் உன்னை அனுப்பவில்லை, இஸ்ரவேல் ஜனங்களிடம்தான் அனுப்புகிறேன். 6 உனக்குப் புரியாத அல்லது தெரியாத பாஷையைப் பேசுகிற மற்ற தேசத்து ஜனங்களிடம் நான் உன்னை அனுப்பவில்லை. அப்படிப்பட்ட ஆட்களிடம் அனுப்பினால்கூட அவர்கள் நீ சொல்வதைக் கேட்பார்கள்.+ 7 ஆனால், இஸ்ரவேல் ஜனங்கள் நீ சொல்வதைக் கேட்க மாட்டார்கள். ஏனென்றால், நான் சொல்வதைக் கேட்க அவர்களுக்கு இஷ்டம் இல்லை.+ இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாருமே வீம்பும் பிடிவாதமும் பிடித்தவர்கள்.+ 8 நான் உன்னுடைய முகத்தை அவர்களுடைய முகத்தைப் போலவும் உன்னுடைய நெற்றியை அவர்களுடைய நெற்றியைப் போலவும் கடினமாக்குவேன்.+ 9 நான் உன்னுடைய நெற்றியை வைரம் போலக் கடினமாக்கியிருக்கிறேன்; கருங்கல்லைவிட* உறுதியாக்கியிருக்கிறேன்.+ நீ அவர்களை நினைத்துப் பயப்படாதே, அவர்களுடைய முகத்தைப் பார்த்துத் திகிலடையாதே.+ அவர்கள் அடங்காத ஜனங்கள்” என்று சொன்னார்.
10 பின்பு அவர் என்னிடம், “மனிதகுமாரனே, நான் உன்னிடம் சொல்வதையெல்லாம் நன்றாகக் கேட்டு உன் நெஞ்சில் பதிய வைத்துக்கொள். 11 சிறைபிடிக்கப்பட்ட உன் ஜனங்களிடம்+ போய்ப் பேசு. அவர்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி,+ ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா இதைச் சொல்கிறார்’ என்று சொல்” என்றார்.
12 பின்பு, கடவுளுடைய சக்தி என்னைத் தூக்கிக்கொண்டு போனது.*+ அப்போது, இடியோசை போலப் பெரிய சத்தம் கேட்டது. “யெகோவாவின் சன்னிதியில் அவருடைய மகிமைக்குப் புகழ் உண்டாகட்டும்” என்ற குரலும் கேட்டது. 13 நான்கு ஜீவன்களுடைய சிறகுகள் ஒன்றோடொன்று உரசிக்கொள்கிற சத்தமும்,+ அவற்றுக்குப் பக்கத்தில் இருந்த சக்கரங்களின் சத்தமும்,+ இடியோசை போன்ற சத்தமும் கேட்டது. 14 அதன்பின், கடவுளுடைய சக்தி என்னைத் தூக்கிக்கொண்டு போனது. அப்போது, நான் விரக்தியோடும் பயங்கர கோபத்தோடும் இருந்தேன். பின்பு, யெகோவாவின் சக்தியால் முழுமையாக நிரப்பப்பட்டேன்.* 15 கேபார் ஆற்றுக்குப்+ பக்கத்தில் தெல்-ஆபீப் என்ற இடத்திலிருந்த சிறைபிடிக்கப்பட்ட ஜனங்களிடம் நான் போனேன். அவர்கள் குடியிருந்த இடத்தில் தங்கினேன். ஏழு நாட்களுக்கு ஏதோ பிரமைபிடித்தவன்போல் இருந்தேன்.+
16 ஏழு நாட்களுக்குப் பின்பு யெகோவா என்னிடம்,
17 “மனிதகுமாரனே, இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் உன்னைக் காவல்காரனாக நியமித்திருக்கிறேன்.+ என்னிடமிருந்து எச்சரிப்பு செய்தியைக் கேட்டதும் நீ அதை அவர்களிடம் சொல்ல வேண்டும்.+ 18 பொல்லாதவன் ஒருவன் கண்டிப்பாகச் சாவான் என்று நான் சொல்லும்போது, கெட்ட வழியைவிட்டு அவன் திருந்தி உயிர் பிழைக்கும்படி நீ அவனை எச்சரிக்க வேண்டும்.+ நீ அவனை எச்சரிக்காவிட்டால், அவன் செய்த குற்றத்துக்காக அவன் செத்தாலும்+ அவனுடைய சாவுக்கு உன்னைத்தான் பொறுப்பாளி ஆக்குவேன்.*+ 19 நீ பொல்லாதவனை எச்சரித்தும், அவன் தன்னுடைய அக்கிரமத்தையும் கெட்ட வழியையும்விட்டுத் திருந்தவில்லை என்றால், அவன் செய்த குற்றத்துக்காக அவன் சாவான். ஆனால், உன்னுடைய உயிரை நீ காப்பாற்றிக்கொள்வாய்.+ 20 நீதிமான் ஒருவன் நீதியாக நடப்பதை விட்டுவிட்டு கெட்டது செய்தால் நான் அவனுக்கு முன்னால் தடைக்கல்லை வைப்பேன், அவன் செத்துப்போவான்.+ நீ அவனை எச்சரிக்காவிட்டால், அவன் செய்த பாவத்துக்காக அவன் செத்துப்போவான். அவன் செய்த நீதியான காரியங்களை நான் நினைத்துப் பார்க்க மாட்டேன். ஆனால், அவனுடைய சாவுக்கு உன்னைத்தான் பொறுப்பாளி ஆக்குவேன்.+ 21 பாவம் செய்யக் கூடாதென்று நீதிமானை நீ எச்சரித்த பின்பு அவன் பாவம் செய்யாமல் இருந்தால், கண்டிப்பாக அவன் உயிர்தப்புவான்.+ நீ அவனை எச்சரித்ததால் நீயும் உன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வாய்” என்று சொன்னார்.
22 அங்கே யெகோவாவின் சக்தியால் நான் நிரப்பப்பட்டேன்.* அவர் என்னிடம், “நீ எழுந்து சமவெளிக்குப் போ. அங்கே நான் உன்னிடம் பேசுவேன்” என்றார். 23 அதனால் நான் எழுந்து சமவெளிக்குப் போனேன். கேபார் ஆற்றுக்குப்+ பக்கத்தில் பார்த்தது போல இங்கேயும் யெகோவாவின் மகிமையைப் பார்த்தேன்.+ உடனே சாஷ்டாங்கமாக விழுந்தேன். 24 அப்போது கடவுளுடைய சக்தி எனக்குள் வந்து என்னை எழுந்து நிற்க வைத்தது.+ பின்பு அவர் என்னிடம்,
“நீ உன்னுடைய வீட்டுக்குள் போய்க் கதவை அடைத்துக்கொள். 25 மனிதகுமாரனே, நீ அவர்களிடம் போக முடியாதபடி அவர்கள் உன்னைக் கயிறுகளால் கட்டுவார்கள். 26 நான் உன்னுடைய நாவை மேல்வாயோடு ஒட்டிக்கொள்ள வைப்பேன். நீ அவர்களைக் கண்டிக்காதபடி உன்னை மவுனமாக்குவேன். ஏனென்றால், அவர்கள் அடங்காத ஜனங்கள். 27 ஆனால், நான் உன்னோடு பேசும்போது உன் வாயைத் திறப்பேன். நீ அவர்களிடம்,+ ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா இதைச் சொல்கிறார்’ என்று சொல்ல வேண்டும். கேட்கிறவர்கள் கேட்கட்டும்.+ கேட்காதவர்கள் கேட்காமல் போகட்டும். அவர்கள் அடங்காத ஜனங்கள்”+ என்று சொன்னார்.