லூக்கா எழுதியது
12 இதற்கிடையே, நெரிசலில் மிதிபடும் அளவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தபோது, முதலில் அவர் தன்னுடைய சீஷர்களிடம், “பரிசேயர்களின் புளித்த மாவைக் குறித்து, அதாவது அவர்களுடைய வெளிவேஷத்தைக் குறித்து, எச்சரிக்கையாக இருங்கள்.+ 2 மறைத்து வைக்கப்படுகிற எதுவும் வெளியில் தெரியாமல் போகாது, ரகசியமாக வைக்கப்படுகிற எதுவும் வெட்டவெளிச்சமாகாமல் போகாது.+ 3 அதனால், நீங்கள் இருட்டில் சொல்லும் விஷயங்கள் வெளிச்சத்தில் கேட்கப்படும்; உள்ளறைகளில் காதோடு காதாகச் சொல்லும் விஷயங்கள் வீட்டு மாடிகளிலிருந்து பிரசங்கிக்கப்படும். 4 என் நண்பர்களே!+ நான் உங்களுக்குச் சொல்கிறேன், உடலைக் கொல்ல முடிந்தாலும் அதற்குமேல் எதுவும் செய்ய முடியாதவர்களைப் பார்த்துப் பயப்படாதீர்கள்.+ 5 ஆனால், நீங்கள் யாருக்குப் பயப்பட வேண்டும் என்று சொல்கிறேன் கேளுங்கள்: உங்களைக் கொன்று கெஹென்னாவுக்குள்* வீசியெறிய அதிகாரமுள்ளவருக்கே பயப்படுங்கள்.+ ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவருக்கே பயப்படுங்கள்.+ 6 குறைந்த மதிப்புள்ள இரண்டு காசுக்கு* ஐந்து சிட்டுக்குருவிகளை விற்கிறார்கள்தானே? ஆனால், அவற்றில் ஒன்றைக்கூட கடவுள் மறப்பதில்லை.*+ 7 உங்கள் தலையிலுள்ள முடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.+ பயப்படாதீர்கள்; சிட்டுக்குருவிகளைவிட நீங்கள் மதிப்புள்ளவர்கள்.+
8 அப்படியானால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனுஷர்கள் முன்னால் என்னை ஏற்றுக்கொள்கிறவனைக்+ கடவுளுடைய தூதர்கள் முன்னால் மனிதகுமாரனும் ஏற்றுக்கொள்வார்.+ 9 ஆனால், மனுஷர்கள் முன்னால் என்னை ஒதுக்கித்தள்ளுகிறவனைக் கடவுளுடைய தூதர்கள் முன்னால் மனிதகுமாரனும் ஒதுக்கித்தள்ளுவார்.+ 10 மனிதகுமாரனுக்கு விரோதமாக யாராவது ஒரு வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; ஆனால், கடவுளுடைய சக்திக்கு விரோதமாக நிந்தனை செய்கிறவனுக்கு மன்னிப்பே கிடையாது.+ 11 பொதுக் கூட்டங்களுக்கு* முன்பாகவும் அரசாங்க அதிகாரிகள், தலைவர்கள் முன்பாகவும் அவர்கள் உங்களைக் கொண்டுபோய் நிறுத்தும்போது எப்படிப் பதில் சொல்வோம், என்ன பதில் சொல்வோம், எதைப் பேசுவோம் என்று நினைத்துக் கவலைப்படாதீர்கள்.+ 12 ஏனென்றால், நீங்கள் பேச வேண்டியதையெல்லாம் அந்த நேரத்தில் கடவுளுடைய சக்தி உங்களுக்குச் சொல்லிக்கொடுக்கும்”+ என்றார்.
13 அப்போது, கூட்டத்திலிருந்த ஒருவன் அவரிடம், “போதகரே, சொத்தை எனக்குப் பிரித்துக் கொடுக்கும்படி என் சகோதரனுக்குச் சொல்லுங்கள்” என்றான். 14 அதற்கு அவர், “மனுஷனே, என்னை உங்கள் நடுவராகவோ உங்களுக்குப் பாகம் பிரித்துக் கொடுப்பவராகவோ நியமித்தது யார்?” என்று கேட்டார். 15 பின்பு அவர்களிடம், “விழித்திருங்கள், எல்லா விதமான பேராசையைக் குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள்;+ ஏனென்றால், ஒருவனுக்கு ஏராளமான சொத்து இருந்தாலும் அது அவனுக்கு வாழ்வைத் தராது”+ என்று சொன்னார். 16 அதன் பின்பு, ஓர் உவமையை அவர்களுக்குச் சொன்னார்; “பணக்காரன் ஒருவனுடைய நிலம் அமோக விளைச்சலைத் தந்தது. 17 அதனால் அவன், ‘என் விளைச்சலைச் சேர்த்து வைப்பதற்கு இடமில்லையே, இப்போது என்ன செய்வேன்?’ என்று யோசிக்க ஆரம்பித்தான். 18 ‘ஒன்று செய்வேன்:+ என் களஞ்சியங்களை இடித்துவிட்டு இன்னும் பெரிய களஞ்சியங்களைக் கட்டுவேன்; அவற்றில் என்னுடைய எல்லா தானியங்களையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன். 19 அதன் பிறகு என்னிடம் நானே, “பல வருஷங்களுக்குத் தேவையான நல்ல நல்ல பொருள்களை உனக்காகச் சேர்த்து வைத்திருக்கிறேன்; அதனால் நீ ஓய்வெடு, சாப்பிட்டுக் குடித்துச் சந்தோஷமாக இரு” என்று சொல்வேன்’ எனத் தனக்குள் சொல்லிக்கொண்டான். 20 ஆனால் கடவுள் அவனிடம், ‘புத்தியில்லாதவனே, இன்று ராத்திரி உன் உயிரை உன்னிடமிருந்து எடுத்துவிடுவார்கள், அப்போது நீ சேர்த்து வைத்திருப்பதெல்லாம் யாருக்குச் சொந்தமாகும்?’+ என்று கேட்டார். 21 கடவுளுடைய பார்வையில் பணக்காரனாக இல்லாமல் தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கிறவனுக்கு இப்படித்தான் நடக்கும்”+ என்றார்.
22 பின்பு, அவர் தன்னுடைய சீஷர்களிடம், “அதனால்தான் உங்களுக்குச் சொல்கிறேன், எதைச் சாப்பிடுவது என்று உங்கள் உயிருக்காகவும், எதை உடுத்திக்கொள்வது என்று உங்கள் உடலுக்காகவும் கவலைப்படுவதை நிறுத்துங்கள்.+ 23 உணவைவிட உங்கள் உயிரும் உடையைவிட உங்கள் உடலும் அதிக மதிப்புள்ளது. 24 அண்டங்காக்கைகளைப் பாருங்கள்; அவை விதைப்பதும் இல்லை, அறுவடை செய்வதும் இல்லை, அவற்றுக்குச் சேமிப்புக் கிடங்கும் இல்லை, களஞ்சியமும் இல்லை; ஆனாலும், கடவுள் அவற்றுக்கு உணவு கொடுக்கிறார்.+ பறவைகளைவிட நீங்கள் அதிக மதிப்புள்ளவர்கள், இல்லையா?+ 25 கவலைப்படுவதால் உங்களில் யாராவது தன்னுடைய வாழ்நாளில் ஒரு நொடியை* கூட்ட முடியுமா? 26 இந்தச் சின்ன விஷயத்தைக்கூட உங்களால் செய்ய முடியாதபோது, மற்ற விஷயங்களைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்?+ 27 காட்டுப் பூக்கள் வளருவதைப் பாருங்கள். அவை உழைப்பதும் இல்லை, நூல் நூற்பதும் இல்லை; ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், செல்வச்சீமானாக இருந்த சாலொமோன்கூட இந்தப் பூக்களில் ஒன்றைப் போல் உடுத்தியதில்லை.+ 28 விசுவாசத்தில் குறைவுபட்டவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு இல்லாமல்போகும்* காட்டுச் செடிகளுக்கே இவ்வளவு அழகான உடையைக் கடவுள் கொடுத்திருக்கிறார் என்றால், உங்களுக்கு இன்னும் எந்தளவு அதிகமாகக் கொடுப்பார்! 29 அதனால், எதைச் சாப்பிடுவோம், எதைக் குடிப்போம் என்று யோசித்துக்கொண்டிருப்பதை விட்டுவிடுங்கள், என்ன ஆகுமோ என்று அநாவசியமாகக் கவலைப்படுவதையும் விட்டுவிடுங்கள்.+ 30 இவற்றையெல்லாம் பெறுவதற்கு உலக மக்கள்தான் அலைந்து திரிகிறார்கள். இவையெல்லாம் உங்களுக்குத் தேவை என்று உங்கள் பரலோகத் தகப்பனுக்குத் தெரியும்.+ 31 அதனால், எப்போதுமே அவருடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுங்கள்; அப்போது, இவற்றை அவர் உங்களுக்குக் கொடுப்பார்.+
32 பயப்படாதே சிறுமந்தையே,+ உங்களிடம் தன் அரசாங்கத்தைக் கொடுக்க உங்கள் தகப்பன் பிரியமாக இருக்கிறார்.+ 33 உங்கள் சொத்துகளை விற்று தானதர்மம்* செய்யுங்கள்.+ இற்றுப்போகாத பணப் பைகளை உங்களுக்காகச் செய்துகொள்ளுங்கள்; அதாவது, ஒருபோதும் குறையாத பொக்கிஷத்தைப் பரலோகத்தில் சேர்த்து வையுங்கள்;+ அங்கே திருடனும் நெருங்க மாட்டான், பூச்சியும்* அரிக்காது. 34 உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கேதான் உங்கள் இதயமும் இருக்கும்.
35 இடுப்புப்பட்டையைக் கட்டிக்கொண்டு* தயாராயிருங்கள்,+ உங்கள் விளக்குகளை எரியவிடுங்கள்.+ 36 திருமண விருந்திலிருந்து தங்கள் எஜமான் திரும்பி வந்து+ கதவைத் தட்டியதும் அதைத் திறக்கக் காத்திருக்கிற ஆட்களைப் போல் இருங்கள்.+ 37 எஜமான் வரும்போது எந்த அடிமைகள் விழித்திருப்பதை அவர் பார்க்கிறாரோ அந்த அடிமைகளே சந்தோஷமானவர்கள்! உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், எஜமான் தன்னுடைய இடுப்புப்பட்டையைக் கட்டிக்கொண்டு,* அவர்களைச் சாப்பிட உட்கார வைத்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார். 38 அவர் இரண்டாம் ஜாமத்திலாவது* மூன்றாம் ஜாமத்திலாவது* வரும்போது யாரெல்லாம் தயாராக இருப்பதைப் பார்க்கிறாரோ அவர்களெல்லாம் சந்தோஷமானவர்கள்! 39 ஆனால், இந்த விஷயத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்: திருடன் எந்த நேரத்தில் வருவான் என்பது வீட்டு எஜமானுக்குத் தெரிந்திருந்தால், வீட்டுக்குள் திருடன் புகுந்துவிடாமல் அவர் பார்த்துக்கொள்வார்.+ 40 அதனால், நீங்களும் தயாராயிருங்கள்; ஏனென்றால், நீங்கள் நினைக்காத நேரத்தில் மனிதகுமாரன் வருவார்”+ என்று சொன்னார்.
41 அப்போது பேதுரு அவரிடம், “எஜமானே, இந்த உவமையை எங்களுக்கு மட்டும் சொல்கிறீர்களா அல்லது எல்லாருக்கும் சொல்கிறீர்களா?” என்று கேட்டார். 42 அதற்கு இயேசு, “தன் வீட்டுப் பணியாளர்களுக்கு* போதுமான உணவை ஏற்ற வேளையில் கொடுத்து வருவதற்காக எஜமான் நியமிக்கப்போகிற உண்மையும் விவேகமும்* உள்ள நிர்வாகி யார்?+ 43 எஜமான் வரும்போது அப்படிச் செய்துகொண்டிருக்கிற அடிமையே சந்தோஷமானவன்! 44 உண்மையிலேயே உங்களுக்குச் சொல்கிறேன், அவர் தன்னுடைய உடைமைகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள அவனை நியமிப்பார். 45 ஆனால் அந்த அடிமை, ‘என்னுடைய எஜமான் வரத் தாமதிக்கிறார்’ என்று தன் இதயத்தில் சொல்லிக்கொண்டு, வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், சாப்பிட்டுக் குடித்து வெறிக்கவும் ஆரம்பித்தால்,+ 46 அவன் எதிர்பார்க்காத நாளில், அவனுக்குத் தெரியாத நேரத்தில் அவனுடைய எஜமான் வந்து அவனை மிகக் கடுமையாகத் தண்டிப்பார்; உண்மையாக நடக்காதவர்களுக்கு ஏற்படும் அதே கதிதான் அவனுக்கும் ஏற்படும். 47 அடுத்ததாக, எஜமானுடைய விருப்பத்தைத் தெரிந்திருந்தும் தயாராக இல்லாமலோ அவர் சொன்னபடி* செய்யாமலோ இருக்கும் அடிமை பல அடிகள் வாங்குவான்.+ 48 அதேசமயத்தில், அவருடைய விருப்பம் என்ன என்பதைத் தெரியாமலிருந்து தண்டனைக்குரிய செயல்களைச் செய்கிறவனும் சில அடிகள் வாங்குவான். ஆம், எவனிடம் அதிகம் கொடுக்கப்பட்டதோ அவனிடம் அதிகம் கேட்கப்படும். எவனிடம் அதிக பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதோ அவனிடம் வழக்கத்துக்கு அதிகமாகவே கேட்கப்படும்.+
49 பூமியில் நான் தீ மூட்ட வந்தேன்; நான் மூட்டிய தீ இப்போது எரிந்துகொண்டிருப்பதால், அதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்? 50 ஆனாலும், நான் எடுக்க வேண்டிய ஒரு ஞானஸ்நானம் இருக்கிறது. அது முடிந்து தீரும்வரை எனக்கு எவ்வளவு மனவேதனை!+ 51 பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களா? இல்லை, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.+ 52 இதுமுதல் ஒரே வீட்டிலுள்ள ஐந்து பேரில், மூன்று பேர் இரண்டு பேருக்கு விரோதமாகவும், இரண்டு பேர் மூன்று பேருக்கு விரோதமாகவும் பிரிந்திருப்பார்கள். 53 அப்பாவுக்கு விரோதமாக மகனும், மகனுக்கு விரோதமாக அப்பாவும், மகளுக்கு விரோதமாக அம்மாவும், அம்மாவுக்கு விரோதமாக மகளும், மருமகளுக்கு விரோதமாக மாமியாரும், மாமியாருக்கு விரோதமாக மருமகளும் பிரிந்திருப்பார்கள்”+ என்று சொன்னார்.
54 பின்பு, அவர் அந்தக் கூட்டத்தாரிடம், “மேற்கில் மேகம் திரண்டு வருவதைப் பார்க்கும்போது, ‘புயல் அடிக்கும்’ என்று உடனடியாகச் சொல்கிறீர்கள்; அது அப்படியே நடக்கிறது. 55 தெற்கிலிருந்து காற்றடிப்பதைப் பார்க்கும்போது, ‘அனல்காற்று வீசும்’ என்று சொல்கிறீர்கள்; அதுவும் அப்படியே நடக்கிறது. 56 வெளிவேஷக்காரர்களே, பூமியையும் வானத்தையும் பார்த்து உங்களால் வானிலையைத் தெரிந்துகொள்ள முடிகிறதே, இந்தக் காலத்தில் நடக்கிற காரியங்களின் அர்த்தத்தை மட்டும் ஏன் தெரிந்துகொள்ள முடியவில்லை?+ 57 எது நீதியென்று நீங்களே ஏன் தீர்மானிக்காமல் இருக்கிறீர்கள்? 58 உதாரணமாக, உங்கள்மேல் வழக்கு போடுகிறவனோடு சேர்ந்து அதிகாரியிடம் போகும்போது, வழியிலேயே அவனோடு வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்; இல்லாவிட்டால், அவன் உங்களை நீதிபதியிடம் ஒப்படைப்பான், நீதிபதி உங்களைக் காவலரிடம் ஒப்படைப்பார், அந்தக் காவலர் உங்களைச் சிறையில் தள்ளுவார்.+ 59 நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் அங்கிருந்து வரும்போது சல்லிக்காசுகூட* உங்கள் கையில் மிஞ்சாது” என்று சொன்னார்.