எண்ணாகமம்
35 எரிகோவுக்குப் பக்கத்தில் யோர்தானை ஒட்டியுள்ள மோவாப் பாலைநிலத்தில்+ யெகோவா மோசேயிடம், 2 “இஸ்ரவேலர்கள் தங்களுக்குக் கிடைக்கிற தேசத்தில் லேவியர்களுக்காகச் சில நகரங்களையும் அவற்றைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களையும் கொடுக்க வேண்டும்.+ 3 அந்த நகரங்களில் அவர்கள் குடியிருப்பார்கள். அந்த மேய்ச்சல் நிலங்களில் ஆடுமாடுகளையும் அவர்களுக்குச் சொந்தமானவற்றையும் மற்ற மிருகங்களையும் வைத்துக்கொள்வார்கள். 4 லேவியர்களுக்கு நீங்கள் கொடுக்கிற மேய்ச்சல் நிலங்கள், நகரத்தின் மதிலைச் சுற்றிலும் 1,000 முழ* தூரத்துக்கு இருக்க வேண்டும். 5 ஒவ்வொரு நகரத்தின் வெளிப்பக்கத்திலும் அதன் மேய்ச்சல் நிலத்துக்காக கிழக்கே 2,000 முழமும், தெற்கே 2,000 முழமும், மேற்கே 2,000 முழமும், வடக்கே 2,000 முழமும் ஒதுக்க வேண்டும்.
6 லேவியர்களுக்கு நீங்கள் கொடுக்கிற நகரங்களில் ஆறு நகரங்கள் அடைக்கல நகரங்களாக இருக்கும்.+ யாரையாவது கொலை செய்தவன் அங்கே தப்பியோடலாம்.+ அவற்றைத் தவிர, 42 நகரங்களையும் லேவியர்களுக்குக் கொடுக்க வேண்டும். 7 மேய்ச்சல் நிலங்களோடு, மொத்தம் 48 நகரங்களைக் கொடுக்க வேண்டும்.+ 8 இஸ்ரவேலர்களாகிய உங்களுக்குக் கிடைக்கிற தேசத்திலிருந்து இந்த நகரங்களைக் கொடுக்க வேண்டும்.+ ஒவ்வொரு கோத்திரத்திலும், நிறைய பேருள்ள தொகுதிகள் நிறைய நகரங்களைக் கொடுக்க வேண்டும், கொஞ்சம் பேருள்ள தொகுதிகள் கொஞ்சம் நகரங்களைக் கொடுக்க வேண்டும்.+ ஒவ்வொரு தொகுதியும் அதற்குக் கிடைக்கும் நகரங்களுக்குத் தகுந்தபடி லேவியர்களுக்குச் சில நகரங்களைக் கொடுக்க வேண்டும்” என்றார்.
9 பின்பு யெகோவா மோசேயிடம், 10 “இஸ்ரவேலர்களிடம் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நீங்கள் யோர்தானைக் கடந்து கானான் தேசத்துக்குப் போகப்போகிறீர்கள்.+ 11 உங்களுக்கு வசதியாக இருக்கும் இடங்களில் அடைக்கல நகரங்களை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான், உங்களில் யாராவது தெரியாத்தனமாகக் கொலை செய்துவிட்டால் அங்கே தப்பியோட முடியும்.+ 12 ஜனங்களின் பிரதிநிதிகளால் அந்தக் கொலையாளி விசாரிக்கப்படுவதற்கு முன்பு, பழிவாங்குபவனால்*+ கொல்லப்படாமல் இருப்பதற்காக அந்த நகரங்களில் அவன் அடைக்கலம் பெறலாம்.+ 13 நீங்கள் கொடுக்கிற ஆறு அடைக்கல நகரங்களும் இதுபோல் பாதுகாப்பு தரும். 14 யோர்தானுக்கு இந்தப் பக்கத்தில் மூன்று நகரங்களையும்+ கானான் தேசத்தில் மூன்று நகரங்களையும்+ அடைக்கல நகரங்களாக நீங்கள் கொடுக்க வேண்டும். 15 உங்களுக்கும், உங்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களுக்கும் இந்த ஆறு நகரங்கள் அடைக்கல நகரங்களாக இருக்கும்.+ யாரையாவது தெரியாத்தனமாகக் கொலை செய்பவன் இந்த நகரங்களுக்குத் தப்பியோடி அடைக்கலம் பெறலாம்.+
16 ஆனால், யாராவது ஒரு இரும்புக் கருவியை வைத்து ஒருவனைத் தாக்கியதால் அவன் இறந்துபோனால், தாக்கியவன் கொலைகாரன். அந்தக் கொலைகாரனுக்குக் கண்டிப்பாக மரண தண்டனை கொடுக்க வேண்டும்.+ 17 யாராவது ஒரு கல்லால்* ஒருவனைத் தாக்கியதால் அவன் இறந்துபோனால், தாக்கியவன் கொலைகாரன். அந்தக் கொலைகாரனுக்குக் கண்டிப்பாக மரண தண்டனை கொடுக்க வேண்டும். 18 யாராவது ஒரு மரக் கருவியை* வைத்து ஒருவனைத் தாக்கியதால் அவன் இறந்துபோனால், தாக்கியவன் கொலைகாரன். அந்தக் கொலைகாரனுக்குக் கண்டிப்பாக மரண தண்டனை கொடுக்க வேண்டும்.
19 பழிவாங்க* வேண்டியவன்தான் அந்தக் கொலைகாரனைக் கொல்ல வேண்டும். அவனைப் பார்த்தவுடனே கொன்றுபோடலாம். 20 யாராவது முன்விரோதத்தின் காரணமாக ஒருவனைக் கீழே தள்ளியதால் அவன் இறந்துபோனால், அல்லது கெட்ட எண்ணத்தோடு ஒருவன்மேல் எதையாவது வீசியதால் அவன் இறந்துபோனால்,+ 21 அல்லது முன்விரோதத்தின் காரணமாக ஒருவனைக் கையால் அடித்ததால் அவன் இறந்துபோனால், கொலை செய்தவனுக்கு நிச்சயம் மரண தண்டனை கொடுக்க வேண்டும். அவன் கொலைகாரன். பழிவாங்குபவன் அவனைப் பார்த்தவுடனே கொன்றுபோடலாம்.
22 ஆனால், முன்விரோதம் இல்லாமல் எதேச்சையாக ஒருவனைக் கீழே தள்ளியதால் அல்லது எந்தக் கெட்ட எண்ணமும் இல்லாமல் ஒருவன்மேல் எதையாவது வீசியதால்+ 23 அல்லது ஒருவன் இருப்பது தெரியாமல் அவன்மேல் ஒரு கல்லைப் போட்டதால் அல்லது அவனை எதிரியாகப் பார்க்காமலும் அவனுக்குக் கெடுதல் நினைக்காமலும் தெரியாத்தனமாகக் கல்லைப் போட்டதால் அவன் இறந்துபோனால், 24 அவனைக் கொலை செய்தவனுக்கும் பழிவாங்குபவனுக்கும் ஜனங்களின் பிரதிநிதிகள் இந்த நீதித்தீர்ப்புகளின்படி தீர்ப்பு வழங்க வேண்டும்.+ 25 இப்படி, பழிவாங்குபவனின் கையிலிருந்து கொலைகாரனை ஜனங்களின் பிரதிநிதிகள் காப்பாற்ற வேண்டும். அவன் தப்பியோடிய அடைக்கல நகரத்துக்கே அவனைத் திருப்பி அனுப்ப வேண்டும். பரிசுத்த தைலத்தால் அபிஷேகம் செய்யப்பட்ட தலைமைக் குரு+ சாகும்வரை அவன் அங்கேயே இருக்க வேண்டும்.
26 ஆனால், அடைக்கல நகரத்தின் எல்லையைத் தாண்டி அவன் வெளியே வந்தால், 27 பழிவாங்குபவன் அந்த அடைக்கல நகரத்தின் எல்லைக்கு வெளியே அவனைப் பார்த்துக் கொன்றுபோட்டால், பழிவாங்குபவன்மேல் கொலைப்பழி* வராது. 28 ஏனென்றால், கொலைகாரன் தலைமைக் குரு சாகும்வரை அடைக்கல நகரத்தில்தான் இருக்க வேண்டும். தலைமைக் குரு இறந்த பிறகு, அவன் தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்பிப் போகலாம்.+ 29 நீங்கள் எங்கே குடியிருந்தாலும் சரி, இதுதான் தலைமுறை தலைமுறைக்கும் உங்களுக்குச் சட்டமாக இருக்க வேண்டும்.
30 ஒருவன் இன்னொருவனைக் கொலை செய்தால், சாட்சிகளின் வாக்குமூலத்தை+ வைத்து அந்தக் கொலைகாரனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்.+ ஒரேவொரு சாட்சியின் வாக்குமூலத்தை வைத்து யாருக்கும் மரண தண்டனை கொடுக்கக் கூடாது. 31 மரண தண்டனை கொடுக்கப்பட்ட ஒரு கொலைகாரனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் மீட்புவிலை வாங்கக் கூடாது. அவனைக் கண்டிப்பாகக் கொன்றுபோட வேண்டும்.+ 32 அடைக்கல நகரத்துக்குத் தப்பியோடிய ஒருவன் தலைமைக் குரு இறப்பதற்கு முன்பே சொந்த ஊருக்குத் திரும்பிப்போக விரும்பினால், அவனுக்காக மீட்புவிலை வாங்கிக்கொண்டு அவனை அனுப்பி வைக்கக் கூடாது.
33 நீங்கள் குடியிருக்கிற தேசத்தைத் தீட்டுப்படுத்தக் கூடாது. இரத்தம் சிந்தினால் தேசம் தீட்டுப்படும்.+ இரத்தம் சிந்தியவனுடைய இரத்தத்தைச் சிந்துவதைத் தவிர, சிந்தப்பட்ட இரத்தத்துக்கு வேறெந்தப் பாவப் பரிகாரமும் இல்லை.+ 34 நீங்கள் வாழ்கிற தேசத்தைத் தீட்டுப்படுத்தக் கூடாது. ஏனென்றால், நான் அங்கே இருக்கிறேன். யெகோவாவாகிய நான் இஸ்ரவேலர்களின் நடுவில் இருக்கிறேன்’”+ என்றார்.