கொரிந்தியருக்கு இரண்டாம் கடிதம்
2 நான் மறுபடியும் வரும்போது உங்களை வருத்தப்படுத்திவிடக் கூடாதென்று தீர்மானித்திருக்கிறேன். 2 நான் உங்களுக்கு வருத்தம் உண்டாக்கினால், என்னைச் சந்தோஷப்படுத்த யார் இருக்கிறார்கள்? என்னால் வருத்தமடைந்த நீங்கள்தானே? 3 நான் வரும்போது எனக்குச் சந்தோஷம் கொடுக்க வேண்டிய உங்களால் எனக்கு வருத்தம் உண்டாகிவிடக் கூடாது என்பதற்காகவே அதை உங்களுக்கு எழுதினேன். எனக்கு எது சந்தோஷத்தைத் தருகிறதோ அதுதான் உங்கள் எல்லாருக்கும் சந்தோஷத்தைத் தரும் என்று உறுதியாக நம்புகிறேன். 4 உங்களை வருத்தப்படுத்துவதற்காக நான் அதை எழுதவில்லை. உங்கள்மேல் நான் வைத்திருக்கும் அளவுகடந்த அன்பை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே மிகுந்த துயரத்தோடும் மனவேதனையோடும் கண்ணீரோடும் எழுதினேன்.+
5 ஒருவன் வருத்தப்படுத்தியிருந்தால்,+ அவன் என்னை மட்டுமல்ல, ஓரளவு உங்கள் எல்லாரையுமே வருத்தப்படுத்தியிருக்கிறான்—நான் கடுமையான வார்த்தைகளில் பேசுவதாக நினைக்க வேண்டாம். 6 அவனை உங்களில் பெரும்பான்மையோர் கண்டித்திருப்பதே போதும். 7 அவன் ஒரேயடியாகச் சோகத்தில் மூழ்கிவிடாதபடி+ இப்போது நீங்கள் அவனை மனதார மன்னித்து ஆறுதல்படுத்த வேண்டும்.+ 8 அதனால், நீங்கள் அவன்மேல் அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டும்படி உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.+ 9 நீங்கள் எல்லாவற்றிலும் கீழ்ப்படிகிறீர்களா என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். 10 ஒருவன் செய்கிற தவறை நீங்கள் மன்னித்தால் நானும் அதை மன்னிக்கிறேன். சொல்லப்போனால், நான் யாரையாவது மன்னித்திருந்தால் அதை உங்களுக்காக மன்னித்திருக்கிறேன், கிறிஸ்துவின் முன்னிலையில் மன்னித்திருக்கிறேன். 11 இல்லையென்றால், சாத்தான் நம்மைத் தந்திரமாக ஏமாற்றிவிடலாம்,+ அதற்கு நாம் இடம்கொடுக்கக் கூடாது. அவனுடைய சதித்திட்டங்கள் நமக்குத் தெரிந்தவைதானே.+
12 கிறிஸ்துவைப் பற்றிய நல்ல செய்தியைச் சொல்ல துரோவாவுக்கு+ வந்தபோது, நம் எஜமானுக்குச் சேவை செய்வதற்கான வாய்ப்பு என்ற கதவு எனக்குத் திறக்கப்பட்டது. 13 ஆனால், என் சகோதரனான தீத்துவைப்+ பார்க்காததால் நிம்மதி இல்லாமல் இருந்தேன். அதனால், அங்கிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப் போனேன்.+
14 கடவுள் நம்மை எப்போதும் கிறிஸ்துவோடு வெற்றி ஊர்வலத்தில் நடத்திக்கொண்டு போவதற்காகவும், தன்னைப் பற்றிய அறிவின் வாசனையை நம் மூலமாக எல்லா இடங்களிலும் பரப்புவதற்காகவும் அவருக்கு நன்றி சொல்கிறேன். 15 மீட்பின் வழியில் போகிறவர்களுக்கும் அழிவின் வழியில் போகிறவர்களுக்கும் நாம் கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லும்போது, கடவுளுக்கு முன்னால் இனிய வாசனையாக இருக்கிறோம். 16 அழிவின் வழியில் போகிறவர்களுக்கு, மரணத்துக்கு வழிநடத்துகிற மரண வாசனையாகவும்+ மீட்பின் வழியில் போகிறவர்களுக்கு, வாழ்வுக்கு வழிநடத்துகிற வாழ்வின் வாசனையாகவும் இருக்கிறோம். இப்படிப்பட்ட சேவைக்குப் போதிய தகுதி பெற்றவர்கள் யார்? 17 நாங்கள்தான். ஏனென்றால், நிறைய பேரைப் போல நாங்கள் கடவுளுடைய வார்த்தையை வைத்துப் பணம் சம்பாதிப்பதில்லை.*+ கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்ற முறையில், அவருடைய முன்னிலையில், கிறிஸ்துவோடு ஒன்றுபட்டு உண்மை மனதோடு பிரசங்கிக்கிறோம்.