யெகோவாவின் “வசனம்” உங்களைக் காப்பதாக
சரித்திரப் புகழ்பெற்ற மாரத்தான் போர் பொ.ச.மு. 490-ல் நடந்தது. அப்போது பத்தாயிரத்திலிருந்து இருபதாயிரம் வரையான ஏதன்ஸ் படைவீரர்கள் ஒரு லட்சம் பெர்சிய படைவீரர்களைப் போர்க்களத்தில் சந்தித்தார்கள். கிரேக்க படைகளில் முக்கியமானது செறிவுமிக்க காலாட்படையாகும், அதாவது நெருக்க நெருக்கமாக நடந்து செல்லும் படைவீரர்களின் ஒரு நீண்ட அணிவரிசையாகும். சேர்ந்தாற்போல் பிடித்திருந்த அவர்களுடைய கேடயங்கள் ஒரு மதில் போல் அமைந்திருந்தன; அதிலிருந்து ஈட்டிகள் நீட்டிக்கொண்டிருந்தன. இந்தக் காலாட்படையினர், தங்களைவிடவும் எண்ணிக்கையில் அதிகமாயிருந்த பெர்சிய படையினரை வென்று ஏதன்ஸுக்குப் பெரும் புகழ் சேர்ந்தார்கள்.
உண்மை கிறிஸ்தவர்கள் ஆன்மீகப் போரில் ஈடுபட்டிருக்கிறார்கள். வலிமை வாய்ந்த எதிரிகளோடு, அதாவது இந்தத் துன்மார்க்க உலகின் காணக்கூடாத அதிபதிகளோடு, அவர்கள் போரிடுகிறார்கள். இவர்களை, ‘இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகள், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகள்’ என்பதாக பைபிள் குறிப்பிடுகிறது. (எபேசியர் 6:12; 1 யோவான் 5:19) இப்போரில், கடவுளுடைய ஜனங்கள் தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறார்கள், ஆனால் அவர்களுடைய சொந்த பலத்தால் அல்ல. எனவே, அவர்களைப் பாதுகாத்து போதிக்கிற யெகோவாவுக்கே அதற்கான எல்லாப் புகழும் போய்ச்சேருகிறது. சங்கீதம் 18:30-ல் (திருத்திய மொழிபெயர்ப்பு) குறிப்பிட்டுள்ளபடி, “யெகோவாவின் வசனம் புடமிடப்பட்டது; தம்மில் அடைக்கலம் புகும் அனைவருக்கும் அவரே கேடகம்.”
ஆம், பரிசுத்த பைபிளில் உள்ள தம்முடைய புடமிடப்பட்ட ‘வசனங்களின்’ மூலம், யெகோவா தம் உண்மை ஊழியர்களுக்கு ஆன்மீக ரீதியில் எவ்வித தீங்கும் ஏற்படாதவாறு பாதுகாக்கிறார். (சங்கீதம் 19:7-11; 119:93) கடவுளுடைய வார்த்தையில் காணப்படுகிற ஞானத்தைக் குறித்து சாலொமோன் இவ்வாறு எழுதினார்: “அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.” (நீதிமொழிகள் 4:6; பிரசங்கி 7:12) தேவ ஞானம் தீங்கிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாக்கும்? பூர்வ இஸ்ரவேலரின் உதாரணத்தைச் சிந்தித்துப் பாருங்கள்.
தேவ ஞானத்தால் பாதுகாக்கப்பட்ட ஒரு ஜனம்
யெகோவாவின் சட்டம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் இஸ்ரவேலரைப் பாதுகாத்து வழிநடத்தியது. உதாரணமாக: உணவு, உடல்நலம், தொற்று நோயாளிகளைத் தனியாக வைத்தல் ஆகியவற்றின் பேரிலான கட்டளைகள், மற்ற ஜனத்தாரைச் சீரழித்த பல நோய்களிலிருந்து அவர்களைப் பாதுகாத்தன. ஆனால் விஞ்ஞானமோ, 19-வது நூற்றாண்டில் பாக்டீரியாவைக் கண்டுபிடித்தப் பிறகே கடவுளுடைய சட்டத்தின் தரத்தை எட்டிப்பிடிக்க ஆரம்பித்தது. நிலச் சொத்துரிமை பெறுதல், மீட்டுக்கொள்ளுதல், கடனிலிருந்து விடுவித்தல், வட்டி வாங்குதல் ஆகியவற்றின் பேரிலான சட்டங்கள் நிலையான சமுதாயத்தையும் நியாயமான பொருளாதார நிலையையும் ஏற்படுத்தின; இதனால் இஸ்ரவேலர் எல்லாருமே நன்மை அடைந்தார்கள். (உபாகமம் 7:12, 15; 15:4, 5) இஸ்ரவேலருடைய நிலத்தின் மண் வளத்தைப் பாதுகாப்பதற்கும்கூட யெகோவாவின் சட்டம் உதவியது. (யாத்திராகமம் 23:10, 11) பொய் வணக்கத்திற்கு எதிராகக் கொடுக்கப்பட்ட கட்டளைகள் ஆன்மீக ரீதியில் அந்த ஜனத்தைப் பாதுகாத்தன. அக்கட்டளைகள், உயிரற்ற விக்கிரகங்களை வணங்கும் மோசமான பழக்கவழக்கத்திலிருந்து மட்டுமல்ல, பேய்த் தொல்லை, குழந்தை நரபலி ஆகியவற்றிலிருந்தும் வேறு பல தீங்குகளிலிருந்தும் அவர்களைப் பாதுகாத்தன.—யாத்திராகமம் 20:3-5; சங்கீதம் 115:4-8.
உண்மையிலேயே, யெகோவாவின் “வசனம்” இஸ்ரவேலருக்கு ‘வியர்த்தமாக’ அதாவது, வீண் வார்த்தையாக ஆகிவிடவில்லை, மாறாக, அதற்குச் செவிகொடுத்தோருக்கு அது ஜீவனையும் நீடித்த நாட்களையும் தந்தது. (உபாகமம் 32:47) கிறிஸ்தவர்கள் நியாயப்பிரமாண உடன்படிக்கைக்கு உட்பட்டவர்களாக இல்லாவிட்டாலும், இன்று யெகோவாவின் ஞானமான வசனங்களைக் கைக்கொள்வோருக்கும் இது பொருந்துகிறது. (கலாத்தியர் 3:24, 25; எபிரெயர் 8:8) சொல்லப்போனால், கிறிஸ்தவர்களை வழிநடத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் ஒரு சட்டத் தொகுப்புக்குப் பதிலாக, வித்தியாசப்பட்ட பைபிள் நியமங்கள் இருக்கின்றன.
நியமங்களால் பாதுகாக்கப்படும் ஒரு ஜனம்
சட்டங்கள் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளுக்கு மட்டுமே பொருந்துவதாக இருக்கலாம், அதோடு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கலாம். ஆனால் பைபிள் நியமங்களோ அடிப்படை சத்தியங்களாக இருப்பதால், பொதுவாக அவை பல சூழ்நிலைகளுக்குப் பொருந்துகின்றன, எக்காலத்திற்கும் பொருந்துகின்றன. உதாரணமாக, யாக்கோபு 3:17-ல் உள்ள நியமத்தைக் கவனியுங்கள், அதன் ஒரு பகுதி இவ்வாறு சொல்கிறது: ‘பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும் [“கற்புள்ளதாயும்,” NW], பின்பு சமாதானமுள்ளதாயும்’ இருக்கிறது. இந்த அடிப்படை சத்தியம் எவ்வாறு இன்று கடவுளுடைய ஜனங்களைப் பாதுகாக்கிறது?
கற்புள்ளவர்களாய் இருப்பது ஒழுக்க ரீதியில் சுத்தமாக இருப்பதை அர்த்தப்படுத்துகிறது. ஆகவே, இதை மதிப்பவர்கள், ஒழுக்கக்கேட்டை தவிர்ப்பதோடு அதற்கு வழிநடத்தும் விஷயங்களையும் தவிர்க்க பிரயாசப்படுகிறார்கள்; பாலியல் சம்பந்தமாகக் கற்பனை செய்வதையும், ஆபாசத்தைப் பார்ப்பதையும் தவிர்க்கிறார்கள். (மத்தேயு 5:28) அவ்வாறே, யாக்கோபு 3:17-லுள்ள நியமத்தை மனதில் பதித்திருக்கும் காதலர்கள், தன்னடக்கத்தை இழக்குமளவுக்கு நெருங்கிப் பழகுவதைத் தவிர்க்கிறார்கள். கடவுளுடைய சட்டத்தை மீறாத வரை தாங்கள் எப்படி நடந்துகொண்டாலும் யெகோவா அதை ஏற்றுக்கொள்வார் என நினைத்துக்கொண்டு கற்பற்ற நடத்தையில் அவர்கள் ஈடுபட மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் பைபிள் நியமங்களை விரும்புகிறார்கள். யெகோவா ‘இருதயத்தைப் பார்த்து’ அதற்கேற்ப செயல்படுபவர் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (1 சாமுவேல் 16:7; 2 நாளாகமம் 16:9) இப்படி ஞானத்துடன் நடந்துகொள்பவர்கள், இன்று பேரளவில் பெருகியிருக்கும் பாலியல் நோய்கள் பலவற்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்கிறார்கள், அதோடு தங்கள் மனதையும் உணர்ச்சியையும் கெடுக்காமல் காத்துக்கொள்கிறார்கள்.
தேவ ஞானம் ‘சமாதானமுள்ளதாய்’ இருப்பதாகவும் யாக்கோபு 3:17 குறிப்பிடுகிறது. மோசமான புத்தகங்கள், திரைப்படங்கள், இசை, கம்ப்யூட்டர் கேம்ஸ் ஆகியவற்றின் வாயிலாக நம் இருதயங்களில் ஓரளவு மூர்க்க குணத்தை விதைப்பதன் மூலம் யெகோவாவிடமிருந்து நம்மை விலக்க சாத்தான் முயற்சி செய்கிறான் என்று அறிந்திருக்கிறோம். கம்ப்யூட்டர் கேம்ஸுகளில் சில, நினைத்துப் பார்க்க முடியாதளவு கொடூரத்தையும் கொலையையும் தூண்டிவிடுகின்றன. (சங்கீதம் 11:5) பெருகிவரும் படுபயங்கர குற்றச்செயல்கள் சாத்தான் தொடர்ந்து வெற்றியடைவதைத் தெளிவாகக் காட்டுகின்றன. அத்தகைய குற்றச்செயல்களைப் பற்றி சொல்கையில், சில ஆண்டுகளுக்கு முன் த சிட்னி மார்னிங் ஹெரல்ட் என்ற ஆஸ்திரேலிய செய்தித்தாள் ராபர்ட் ரெஸ்லர் என்பவருடைய வார்த்தைகளைக் குறிப்பிட்டது. “தொடர் கொலையாளி” என்ற பதத்தை உருவாக்கியவர் அவர்தான். 1970-களில் அவர் பேட்டிக் கண்ட கொலையாளிகள், ஆபாசப் புத்தகங்களால் தூண்டப்பட்டிருந்தார்கள், “ஆனால், அவை இன்றைய ஆபாசப் புத்தகங்களின் அளவுக்குக் கீழ்த்தரமானவையாக இருக்கவில்லை” என்று அவர் சொன்னார். எனவே, ‘எதிர்காலத்தைப் பற்றிய தன்னுடைய நம்பிக்கையற்ற கருத்தை,’ அதாவது ‘புதிய நூற்றாண்டில் ஏகப்பட்ட கொலையாளிகள் பெருகுவார்கள்’ என்ற கருத்தைத் தெரிவித்தார்.
சொல்லப்போனால், அந்தச் செய்தி வெளியான சில மாதங்களிலேயே, ஸ்காட்லாந்தில் டன்ப்ளேன் நகரைச் சேர்ந்த கிண்டர்கார்டன் பள்ளியிலுள்ள 16 சிறுவர்களையும் அவர்களுடைய ஆசிரியையையும் ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றான். பின்பு தன்னையும் சுட்டுக்கொண்டான். அதற்கு அடுத்த மாதத்தில் ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி ஏந்திய வெறிபிடித்த ஒருவன், டாஸ்மேனியாவிலுள்ள அமைதி தவழும் நகரமாகிய போர்ட் ஆர்த்தரில் 32 பேரைக் கொன்று குவித்தான். சமீப ஆண்டுகளில் அமெரிக்க பள்ளிகளில் நடந்திருக்கும் படுகொலைகள் அந்நாட்டையே உலுக்கி, ஏன் இப்படி நடக்கின்றன? என்று கேட்கும்படி அங்குள்ள மக்களைத் தூண்டியுள்ளன. ஜூன் 2001-ல், ஜப்பானில், பித்துப்பிடித்த ஒருவன் பள்ளி ஒன்றில் நுழைந்து 1-ஆம், 2-ஆம் வகுப்புகளில் படிக்கும் 8 பிள்ளைகளைக் கத்தியால் குத்திக் கொன்றான், 15 பேரைக் குத்திக் குதறினான்; இந்தச் செய்தி உலகெங்கும் வெளியானது. இத்தகைய மோசமான செயல்களுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், மீடியாக்களில் காட்டப்படும் வன்முறையே இந்த மோசமான செயல்களுக்குக் காரணமென அதிகமதிகமானோர் கருதுகிறார்கள். “60 நொடிகளில் காட்டப்படும் விளம்பரத்தால் மார்கெட் விற்பனையை பேரளவாக அதிகரிக்க முடியுமென்றால், லட்சக்கணக்கில் செலவுசெய்து எடுக்கப்படும் இரண்டு மணிநேர மெகா திரைப்படத்தால் நிச்சயமாகவே ஜனங்களுடைய மனப்பான்மைகளை மாற்றிவிட முடியும்” என எழுதினார் ஆஸ்திரேலிய இதழாசிரியர் ஃபிலிப் ஆடம்ஸ். ஆர்வத்திற்குரிய விஷயம் என்னவெனில், போர்ட் ஆர்த்தரைச் சேர்ந்த அந்தக் கொலைகாரனின் வீட்டிலிருந்து, வன்முறை காட்சிகளையும் ஆபாசக் காட்சிகளையும் சித்தரிக்கிற 2,000 வீடியோ காஸட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தார்கள்.
பைபிள் நியமங்களைக் கடைப்பிடிப்பவர்கள், வன்முறை ஆசையை மனதில் தூண்டிவிடும் எல்லா வகையான பொழுதுபோக்கிலிருந்தும் தங்கள் மனதையும் இருதயத்தையும் பாதுகாத்துக்கொள்கிறார்கள். ஆகவே, ‘உலகத்தின் ஆவி’ தங்களுடைய சிந்தையிலும் விருப்பங்களிலும் செல்வாக்கு செலுத்த அவர்கள் இடமளிக்காதிருக்கிறார்கள். அதற்குப் பதிலாக, அவர்கள் கடவுளுடைய ‘பரிசுத்த ஆவியால் போதிக்கப்படுகிறார்கள்.’ அதன் கனியை நெஞ்சார நேசிக்க பிரயாசப்படுகிறார்கள், அந்தக் கனியில் சமாதானமும் அடங்கியுள்ளது. (1 கொரிந்தியர் 2:12, 13; கலாத்தியர் 5:22, 23) தவறாமல் பைபிள் படிப்பது, ஜெபிப்பது, பயனுள்ள விதத்தில் தியானிப்பது ஆகியவற்றின் மூலம் அந்தக் கனியை அவர்கள் நெஞ்சார நேசிக்கிறார்கள். வன்முறையில் ஆர்வம் காட்டுபவர்களுடன் சகவாசம் வைத்துக்கொள்வதைத் தவிர்க்கிறார்கள். அதற்குப் பதிலாக, யெகோவா தரவிருக்கும் சமாதானமான புதிய உலகில் வாழ தங்களைப் போல் ஆவலோடு இருப்பவர்களுடன் சகவாசம்கொள்ள விரும்புகிறார்கள். (சங்கீதம் 1:1-3; நீதிமொழிகள் 16:29) ஆம், தேவ ஞானம் எப்பேர்ப்பட்ட பாதுகாப்பை அளிக்கிறது!
யெகோவாவின் “வசனம்” உங்கள் இருதயத்தைப் பாதுகாப்பதாக
வனாந்தரத்தில் இயேசு சோதிக்கப்பட்டபோது, கடவுளுடைய வார்த்தையைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் சாத்தானுடைய முயற்சிகளை முறியடித்தார். (லூக்கா 4:1-13) என்றாலும், யாருக்கு அறிவுத்திறன் அதிகமுள்ளது என்று காட்டுவதற்காக அவனுடன் அவர் வாதிடவில்லை. தம்முடைய வாதத்திற்கு வேதவசனங்களை ஆதாரமாகப் பயன்படுத்துவதன் மூலம் தம் இருதயத்திலிருந்து பேசினார். அதனால்தான் ஏதேனில் சாத்தான் திறமையாகக் கையாண்ட சூழ்ச்சி, இயேசுவிடம் பலிக்காமல் போனது. நம்முடைய இருதயத்தை யெகோவாவின் வசனங்களால் நிரப்புவோமானால் நம்மிடம்கூட அவனுடைய தந்திரங்கள் பலிக்காது. இதைவிட முக்கியமான காரியம் வேறு எதுவுமே இருக்க முடியாது. ஏனெனில், “அதனிடத்தினின்று [இருதயத்திலிருந்து] ஜீவ ஊற்று புறப்படும்.”—நீதிமொழிகள் 4:23.
மேலுமாக, நாம் எப்போதும் நம் இருதயத்தைப் பாதுகாக்க வேண்டும். வனாந்தரத்தில் சாத்தானுக்கு வெற்றி கிடைக்காதபோதிலும், இயேசுவை சோதிப்பதை அவன் நிறுத்திவிடவில்லை. (லூக்கா 4:13) உத்தமத்தைவிட்டு நம்மை விலக்குவதற்கும்கூட அவன் தொடர்ந்து பலவித சூழ்ச்சிகளைப் பயன்படுத்துவான். (வெளிப்படுத்துதல் 12:17) ஆகவே, கடவுளுடைய வார்த்தையின்பேரில் ஆழ்ந்த அன்பை வளர்ப்பதன் மூலம் இயேசுவின் மாதிரியைப் பின்பற்றுவோமாக. அதே சமயத்தில் பரிசுத்த ஆவிக்காகவும் ஞானத்திற்காகவும் இடைவிடாமல் ஜெபிப்போமாக. (1 தெசலோனிக்கேயர் 5:17; எபிரெயர் 5:7) அப்படிச் செய்யும்போது, யெகோவாவிடம் அடைக்கலம் புகுவதற்காக ஓடிவருகிற எவருக்கும் ஆன்மீக ரீதியில் எந்தத் தீங்கும் வந்துவிடாதபடி பாதுகாப்பதாக அவர் வாக்குக் கொடுக்கிறார்.—சங்கீதம் 91:1-10; நீதிமொழிகள் 1:33.
கடவுளுடைய வார்த்தை சபையைப் பாதுகாக்கிறது
‘திரள் கூட்டத்தார்,’ மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பிப்பிழைப்பதை சாத்தானால் தடுக்க முடியாது. (வெளிப்படுத்துதல் 7:9, 14) இருந்தாலும், கிறிஸ்தவர்களில் சிலரையாவது யெகோவாவின் தயவை இழந்துவிடும்படி செய்ய அவன் கடினமாகப் பிரயாசப்படுகிறான். இந்தச் சூழ்ச்சி பூர்வ இஸ்ரவேலரிடம் பலித்தது, அதனால் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழையவிருந்த சமயத்தில் 24,000 பேர் மாண்டார்கள். (எண்ணாகமம் 25:1-9) தவறு செய்த கிறிஸ்தவர்கள் உண்மையான மனந்திரும்புதலைக் காட்டும்போது மீண்டும் ஆன்மீக ரீதியில் நல்ல நிலைக்குத் திரும்புவதற்கு அன்பான உதவியைப் பெறுகிறார்கள். ஆனால், பூர்வ காலத்தில் வாழ்ந்த சிம்ரியைப் போன்ற மனந்திரும்பாத பாவிகள் ஒழுக்க ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் பிறரைக் கெடுக்கிறார்கள். (எண்ணாகமம் 25:14) செறிவுமிக்க காலாட்படை அணிவரிசை ஒன்றில் தங்கள் கேடயங்களை எறிந்துபோட்டவர்களைப் போல், அவர்கள் தங்களுக்கு மட்டுமல்ல, தங்கள் தோழர்களுக்கும் தீங்கு நேருவதற்கு அனுமதிக்கிறார்கள்.
அதனால்தான், பைபிள் இவ்வாறு கட்டளையிடுகிறது: “சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது. . . . அந்த பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்.” (1 கொரிந்தியர் 5:11, 13) இந்த ஞானமான “வசனம்” கிறிஸ்தவ சபையை ஒழுக்க ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறதென்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள், அல்லவா?
இன்றுள்ள மோசமான நடத்தைகளைக் கண்டித்துப் பேசும் பைபிள் வசனங்களைப் பழம்பாணி என்று அநேக சர்ச் அங்கத்தினர்களும், விசுவாசதுரோகிகளும் கருதுகிறார்கள். ஆகவே, மத குருமாரும்கூட அப்படிப்பட்ட படுமோசமான எல்லாவித பாவங்களையும் செய்யும்போது, அதைச் சரியென அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள். (2 தீமோத்தேயு 4:3, 4) நீதிமொழிகள் 30:5 யெகோவாவின் கேடயம் போன்ற ‘வசனத்தைப்’ பற்றி குறிப்பிடுகிறது; ஆனால் 6-வது வசனத்திலுள்ள கட்டளையைக் கவனியுங்கள்: “அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய்.” ஆம், பைபிளில் மாற்றம் செய்கிறவர்கள் உண்மையில் ஆன்மீகப் பொய்யர்கள் ஆவர்—எல்லாரிலும் மிக அதிக கண்டனத்திற்குரிய பொய்யர்கள் ஆவர். (மத்தேயு 15:6-9) அப்படியானால், கடவுளுடைய வார்த்தைக்கு மிகுந்த மதிப்பு கொடுக்கிற ஓர் அமைப்பில் இருப்பதற்கு நாம் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாய் இருப்போமாக.
‘நல்வாசனையால்’ பாதுகாக்கப்படுதல்
கடவுளுடைய ஜனங்கள் பைபிளை உறுதியாய்க் கடைப்பிடித்து, அதன் ஆறுதலளிக்கும் செய்தியை மற்றவர்களிடம் சொல்வதால், தூபவர்க்கம் போன்ற ஜீவனுக்குரிய ‘நல்வாசனையை’ எங்கும் பரவச் செய்கிறார்கள்; இது யெகோவாவின் மனதை மகிழ்விக்கிறது. ஆனால் அநியாயம் செய்கிறவர்களுக்கு அந்தச் செய்தி, ‘மரணத்திற்கேதுவான மரண வாசனையாக’ இருக்கிறது. ஆம், அந்தப் பொல்லாதவர்களின் அடையாள அர்த்தமுள்ள முகரும் திறன் சாத்தானின் உலகத்தால் அந்தளவு பாதிக்கப்பட்டிருப்பதால், இந்த வாசனையைப் பரவச் செய்யும்போது அவர்களால் சகித்துக்கொள்ள முடிவதில்லை; ஏன், ‘கிறிஸ்துவின் நல்வாசனையைப்’ பரப்புவோரிடம் கோபத்தில் எரிந்துவிழவும் ஆரம்பித்துவிடுகிறார்கள். மறுபட்சத்தில், நற்செய்தியை ஆர்வத்துடன் பரவச் செய்கிறவர்கள், ‘இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள் கிறிஸ்துவின் நற்கந்தமாய் [அதாவது, நல்வாசனையாய்] இருக்கிறார்கள்.’ (2 கொரிந்தியர் 2:14-16) இத்தகைய நல்மனமுள்ளவர்கள் பொய் மதத்தின் பாசாங்குத்தனத்தையும் பொய்களையும் கண்டு வெறுப்படைகிறார்கள். ஆகவே, பைபிளிலிருந்து ராஜ்ய செய்தியை அவர்களிடம் சொல்கையில், கிறிஸ்துவிடம் கவரப்படுகிறார்கள், அதிகம் கற்றுக்கொள்ளவும் விரும்புகிறார்கள்.—யோவான் 6:44.
எனவே, சிலர் ராஜ்ய செய்தியைக் கேட்க மறுக்கும்போது சோர்வடைந்து விடாதீர்கள். மாறாக ‘கிறிஸ்துவின் நல்வாசனையை,’ நல்மனமுள்ளோரைக் கவர்ந்திழுக்கும் ஒன்றாகக் கருதுங்கள், அதோடு தீங்கு விளைவிக்கும் எண்ணமுள்ள அநேகரை கடவுளுடைய மக்களின் ஆன்மீகத் தேசத்திலிருந்து விரட்டி, ஆன்மீகப் பாதுகாப்பு தரும் ஒன்றாகவும் அதைக் கருதுங்கள்.—ஏசாயா 35:8, 9.
மாரத்தானில் கிரேக்க போர்வீரர்கள் முழு பலத்தோடு தங்கள் கேடயங்களைப் பிடித்துக்கொண்டு நெருக்க நெருக்கமாக நடந்ததால், கடினமான சூழ்நிலைகளிலும் வெற்றிப் பெற்றார்கள். யெகோவாவின் உண்மையுள்ள சாட்சிகளும்கூட அவ்வாறே நடந்துகொள்ளும்போது ஆன்மீகப் போரில் அவர்களுக்குப் பூரண வெற்றி கிடைக்குமென உறுதி அளிக்கப்படுகிறது. ஏனெனில் அது அவர்களுடைய ‘சுதந்தரமாயிருக்கிறது.’ (ஏசாயா 54:17) ஆகவே, நாம் ஒவ்வொருவரும் “ஜீவ வசனத்தை உறுதியாய்ப் பிடித்துக்கொண்டு” யெகோவாவில் தொடர்ந்து அடைக்கலம் புகுவோமாக.—பிலிப்பியர் 2:16, NW.
[பக்கம் 31-ன் படங்கள்]
‘பரத்திலிருந்து வரும் ஞானம் கற்புள்ளது, பின்பு சமாதானமுள்ளது’